இராவணன் வானரத் தானை காண்படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இராவணன் வானரத் தானை காண்படலம்
(இராவணன், இலங்கைக் கோட்டைக் கோபுரத்தின் மீதேறி, தன் பரிவாரங்களுடன் நின்று, இராமனுடைய வானரத்தானையைக் கண்ணுறுவது பற்றிக் கூறும் பகுதி இப்படலம் ஆயிற்று. இராமனைக் கண்ணுற்றதும் இராவணன் அடைந்த மெய்ப்பாடுகளும், மற்றவர்கள் யார்? யார்? என இராவணன் வினாவலும் சாரன், அவனுக்கு இலக்குவன், வானரப்படை வீரர்கள் முதலியோர் பற்றி எடுத்துரைப்பதும் இப்படலத்துள் அமைந்துள்ள செய்திகளாகும்)
செம்பொன் கோபுரத்தின் உச்சியில் வந்து நின்ற இராவணன், தனது இருபது தோள்களும் தான் சீதையிடம் வைத்த ஆசையினால் மன்மதனது மலர்க்கணைகள் பதிந்த தழும்புகளை உடையவனாய் இருபது சிகரங்களையுடைய ஒரு மலையைப் போல் காணப்பட, தன்னைக் கட்டிய மரக்கிளையை முறித்திடும் படி மாறுபட்டுக் கோபிக்கின்ற ஆண் யானையைப் போன்று நின்று இருந்தான்!
பெரும் போர் தோன்றிவிட்டது என்றவுடனே, சீதையின் அழகால் அவளைக் காமுற்று மெலிந்த இராவணனது தோள்கள் வடமேருவைக் காட்டிலும் வலிமை பெற்று வளர்ந்து இருந்தன. போரில் அவன் சிந்தனை முழுவதும் பதிந்து போய் இருந்தது. மேலும், அப்போது அவன் நின்று இருந்த கோபுரம் மேரு மலையைப் போல் விளங்கிற்று. அக்கோபுரத்தின் மீதிருந்து கலசங்கள் அம்மலையின் சிகரங்களைப் போல் தோன்றிற்று. கோபுரத்தின் மீது நின்ற இராவணன், அம்மலையின் கொடு முடியைக் கவிந்த வாசுகியைப் போல் காணப்பட்டான்.
இராவணனுடைய விழிகள் அப்போது வானரர்கள் தங்கியுள்ள திசையை நோக்கின. அங்கே சுவேலமஅலையின் மீது நின்று இலங்கையின் அழகைப் பார்த்துக் கொண்டு நின்ற இராமபிரானை அவன் கண்டான். இராமரைக் கண்ட மாத்திரத்தில் கோபத்தால் உதட்டைக் கடித்தான். அவனது கண்களில் இருந்து கொழுந்து விட்டு ஒளிர்கின்ற அக்கினி தோன்றிச் சிறு சிறு பொறியாக வெளிப்பட்டது. அவனுடைய பற்கள் நறநறத்தன. அப்போது அதனால் எழுந்த பேரொலி வலிய திசையெங்கும் முட்டி மோதி எதிரொலித்தது. அவனது நெஞ்சமும் பற்றி எரிந்தது. தீய சகுனமாக அவனது இடது கண்களும் திரண்ட இடது தோள்களும் துடித்தன!
அவ்வாறு தீய சகுணங்கள் ஏற்பட இராவணன், அமாவாசையின் போது சந்திரனை விழுங்க அவனருகில் செல்லும் இராகுவைப் போல, இராமனைக் கண்டதால் மிகவும் நெஞ்சம் வெம்பிச் சீறினான். தனது அருகில் நின்று இருந்த சாரணனைச் சட்டென்று நோக்கி," சாரணனே! இதோ, என் கண்களுக்குத் தெரிகின்றவனே இராமன் என்பதை அவனுடைய மேனியே எனக்குச் சொல்கிறது, மற்றும் அவனைச் சூழ்ந்து உள்ளவர்களை இன்னார் என்று நான் அறிய முடியவில்லை. ஆகவே, அவனது வெற்றி பொருந்திய படையுடன் கூடிய சேனாவீரர்களைப் பற்றி அறிவிப்பாய்!" என்றான் இராவணன்.
உடனே சாரணன் இராவணனைப் பார்த்து, " ஐயனே அதோ இருப்பவன் உமது தங்கையின் மூக்கையும், காதுகளையும் அறுத்து எறிந்த லக்ஷ்மணனாவான். அவன் அறத்தின் இடத்தில் இல்லாமல் வேறு ஒரு இடத்தில் கண்களைச் செலுத்தாதவன், இராமனுக்கோ அவன் பெரும் துணையானவன். அதனால் தான் இராமன்," இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?" என்ற கர்வத்துடன் அங்கு காணப்படுகிறான். அது மட்டும் அல்ல, அந்த லக்ஷ்மணன் உறக்கத்தை துறந்தவன். பல ஆண்டுகளாக உறக்கம் இன்றி கண்களை இமை காப்பது போல, அண்ணனைக் காத்து நிற்கிறான். அவனை நாம் சாய்த்து விட்டாலே இராமனையும் வீழ்த்தி விடலாம். அந்த லக்ஷ்மணனின் கைகளைப் பற்றியபடி இருக்கிறானே அவன் தான் சூரிய குமாரன், கிஷ்கிந்தையின் தற்போதைய அரசன், முன்பு வானார அரசன் வாலிக்கு எதிராக நின்று, நேருக்கு நேராக பெரும் போர் புரிந்தவன். அவனே சுக்கிரீவன் எனப்படும் வானரன்.
சுக்கிரீவனின் பக்கத்தில் இளம் சிங்கத்தைப் போல நிற்பவன் தான் அங்கதன். வாலியின் குமாரன். இவனுடைய தந்தையாகிய வாலியே முன்பு பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்று தேவர்களுக்கு அளித்தான். அதோ அவனுடன் பேசி மகிழ்ந்து கொண்டு இருப்பவன், சூரியனிடம் சகல சாஸ்த்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவன். திருமாலை ஒத்தவன். இன்னும் அவனைப் பற்றிப் புரியும் படிச் சொல்ல வேண்டும் எனில் , கடல் கடந்து பறந்து வந்து இலங்கையில் தீயை வைத்தவன். தங்கள் அன்பு மகன் அட்சகுமாரனை வதைத்தவன். அவனே அனுமன் என்னும் நாமம் கொண்ட மகா பலசாலி வானரன். அந்த அனுமனுக்கு ஆஞ்சநேயன், மாருதி, பஜிரங்க பலி, வாயு புத்திரன் போன்ற பலப் பெயர்கள் உண்டு.
அந்த அனுமனின் அருகில் நிற்பவனே அக்கினி தேவனின் புதல்வனான நீலன் என்பவன். அவனிடம் சூலம், கயிறு போன்ற ஆயுதங்களோ அல்லது நஞ்சு போன்ற நிறமோ இல்லாமல் இருந்தாலும். அவனது வீரத்தைக் கண்ட உலகத்தவர் அவனை காலன் என்றும், கால தூதன் ( யம தூதன்) என்றும் அழைக்கின்றனர். அவ்வளவு பயங்கரமாகப் போர் தொழில் புரிபவன். மறுபுறம், இதோ அங்கு யாவரினும் வேறுபாடு தோன்ற நிற்பவன் தான் நளன் என்ற பலசாலி வானரன். பரந்து விரிந்த கடலில் சேதுவைக் கட்டி வானர சேனைகள் அனைத்தும் இலங்கையை அடைய வழிவகை செய்தவன். மேலும், அதோ நிற்பவன் முக்காலத்துச் செய்திகளையும் தனது நிறைந்த அறிவினால் முறையாக உணர வல்லவன். தேவர்கள் பாற் கடலைக் கடைந்த காலத்திலும் இருந்தவன். அது போல, திருமால் வாமன அவதாரம் எடுத்து உலகம் முழுவதும் வியாபித்து நின்ற போது பதினேழு முறை இந்த உலகத்தை சுற்றி வந்தவன். இவன், பிரம்மனின் அவதாரம் என்று பலரால் போற்றப்படும் ஜாம்பவான் ஆவான். ஆபத்தானவன் அதிக பலசாலியும் கூட.
அது தவிர அதோ தூரத்தில் தெரிகின்றானே அவன் தான் குமுதன் என்பவன்! அதோ நிற்பவன் குமுதாட்சனாவான். அவனுக்குப் பக்கத்தில் நிற்பவன் கவயனாவான். அதோ துள்ளிக் குதிப்பவன் கவயாட்சன். அதோ அனுமனின் அருகே அவனைப் பாசத்துடன் தொட்டுக் கொண்டு நிற்பவன் தான் கேசரி. இந்தக் கேசரி, அஞ்சனையின் கணவன். இவ்விருவருக்கும் மகனாகப் பிறந்தவன் தான் அனுமான் என்னும் இலங்கையை அன்று எரித்த ஆஞ்சநேயன். மேலும், கூறிய நகங்களுடனும், கோபம் கொண்ட முகத்துடனும் நிற்கிறானே அவன் தான் முரபன் என்னும் பலசாலியான வானரன். அவனது அருகில் இருப்பவன் சரபன், மலைகளை நொடிப் பொழுதில் பெயர்த்து எறிபவன். அவனுக்கு முன் நிற்பவன் சதவலி என்னும் பெயர் கொண்ட சற்றே முதிர்ந்த அனுபவமும், மதிநுட்பமும் நிறைந்த வானரன். சுக்கிரீவனுக்கு இடப்பக்கத்தில் காளை போல நிற்பவன் ததிமுகன்! அதோ சிங்கம் போல நிற்கிறானே அவன் தான் சங்கன் என்னும் பெயர் கொண்ட வானரன். மிகவும் பலசாலியானவன்.
இவர்களே மிக முக்கியமான வானரத் தலைவர்கள். யுத்தம் ஏற்பட்டால் நமக்கு சவாலாக விளங்கக் கூடியவர்கள். மற்றபடி இந்த வானர சேனையின் எண்ணிக்கையை நான் அறியேன். இவர்களை எண்ணுவதை விட சுலபமாக கடல் மணல்களின் எண்ணிக்கையையும் வானில் உள்ள நக்ஷத்திரங்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு விடலாம்" என்று சாரணன் இராவணனிடம் கூறி முடித்தான்.
சாரணன் கூறியதைக் கேட்டதும் இராவணன் மிக்க கோபம் அடைந்தான். அந்தக் கோபத்தின் நடுவே அவன் கடைவாயில் ஓர் இகழ்ச்சிப் புன்னகை தோன்றி மறைந்தது. இராவணன் கேலித் ததும்பும் குரலில் சாரணனைப் பார்த்து," கொல்லையில் திரிகின்ற இழிவான தலையையுடைய குரங்குகளைப் புகல்வாய் போலும்! காடுகள் தோறும் படர்ந்துள்ள மலைகள் தோறும் திரிகின்ற மானின் கூட்டங்கள் மிகப் பலவாயிருப்பினும், அவைகளால் ஒரு சிங்கத்தை என்ன செய்யமுடியும்?" என்றான்.