இராவணன் வதைப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இராவணன் வதைப் படலம்

(இப்படலத்தின் மூலம் ஸ்ரீ இராமபிரான் இராவணனை வதைப்பதைக் காண முடிகிறது. அத்துடன் இராவணன் இறந்ததும் விபீஷணன் அழுவதும், மண்டோதரி அழுது புலம்புவதும் என இலங்கையின் சோகத்தை கம்பர் அப்படியே எடுத்துக் காட்டி இருக்கிறார்)

தேவேந்திரனின் தேரில் ஏறிக் கொண்ட இராமரை வாழ்த்தி, அனுமனின் தோளை மலர்கள் தூவித் தேவர்கள் துதித்தார்கள். பின்பு அந்தத் தேர் ஸ்ரீ இராமரை சுமந்து கொண்டு யுத்த களம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

மறுபக்கம், இராவணனும் போர்களத்துக்கு வந்து சேர்ந்தான், அவ்வாறு வந்து சேர்ந்த இராவணன், தேரை இராமர் இருக்கும் இடத்துக்கு ஓட்டும் படி தனது பாகனுக்குக் கட்டளை பிறப்பித்தான். அக்கணம் தேவர்களே ஸ்ரீ இராமருக்கு தேர் கொடுத்தால் அச்சம் நீங்கிய வானரப் படை, மீண்டும் ஓடி வந்து யுத்த களத்தில் அரக்கர்களை எதிர்த்து நின்றது. அத்துடன் மரங்களையும் கற்களையும் கொண்டு இராவணனுடைய சேனையைத் தாக்கினார்கள். அதனால் திசைகளுடனே இவ்வுலகவுருண்டை பிளந்து கொண்டதோ என்று சொல்லும்படியாகப் பெரும் ஒலி எழுந்தது. மற்றும் அவ்வொலியோடு போர் வீரர்கள் எழுப்பிய ஓசையும், இராவணனுடைய தேரின் ஓசையும், இராமருடைய தேரின் ஓசையும், கலந்து ஒலித்தன!

அப்போது ஸ்ரீ இராமர் மாதலி என்னும் தனது தேரோட்டியிடம்," தேரோட்டியே! இராவணன் செய்ய வேண்டியதை எல்லாம் செய்யட்டும். பிறகு, நான் சொல்லும் போது தேரை விரைந்து ஓட்டுவாய். இப்போது விரையாதே!" என்று கட்டளை பிறப்பித்தார்.

இராமபிரானின் கட்டளையை ஏற்ற மாதலி," வள்ளலே! உமது கருத்தையும், குதிரைகளின் எண்ணத்தையும், பகைவர்களின் மனத்தையும், கால நேரத்தையும், மேற்கொண்ட காரியத்தையும் ஆராய்ந்து அதற்குத் தக்கவாறு எனது தொழிலைச் செய்யாவிட்டால் , நான் கற்றுள்ள தேரோட்டும் வித்தை மிகக் குற்றமுடையதாகும்! இதனை நான் நன்கு உணர்வேன்!" என்று சொன்னான்.

குற்றமற்ற இராமபிரான்," சரி, நல்லது!" என்றார்.

அதே சமயம் இராவணனை நோக்கி மகோதரன்," தேவேந்திரனின் தேரிலே, இதோ இராமன் ஏறி வந்து இருக்கின்றான். எதிர் நிற்கும் உங்கள் இருவருக்கும் இப்போது போர் ஏற்பட்டு உள்ளது. உங்கள் இரண்டு பேருக்கும் நடுவே நான் ஒரு சாட்சியாக நிற்பது குற்றமாகும். ஆகையால், நான் தனியே சென்று போரிட எனக்கு விடை தருவீர்!" என்று கேட்டான்.

இராவணன் அதற்கு," நான் இந்த இராமனை அழித்து விடுவேன். நீ லக்ஷ்மணனைத் தடுத்து நின்றாயானால், எனக்கு நீ வெற்றியைத் தந்தவன் ஆவாய்!" என்றான்.

மகோதரன் இராவணனின் ஆணையின் படி லக்ஷ்மணன் இருக்கும் திசை நோக்கித் தேரை செலுத்தினான். அவன் அவ்வாறு லக்ஷ்மணனை நோக்கிச் செல்கையில், நடுவிலே ஸ்ரீ இராமருடைய வலிய தேர் குறுக்கிட்டது. அதுகண்டு மகோதரன் வெகுண்டெழுந்து தனது தேர் சாரதியைப் பார்த்து," இந்த இராமனின் தேரை, நமது தேரால் மோதி அழிப்பாய்!" என்று கட்டளை பிறப்பித்தான்.

மகோதரனின் தேர் சாரதி உடனே," பெருமையில் சிறந்த இராமனின் தோற்றத்தைக் கண்டால், இராவணனைப் போலக் கோடிக் கணக்கான இராவணர்கள் நெருங்கினாலும், இன்று இறந்து போவதன்றி உயிர் பிழைக்க மாட்டார்கள். ஆகவே, நாம் இவனை அணுகாமல் அப்பால் செல்வதே நலமாகும்!" என்று மகோதரனுக்குக் கூறினான்.

மகோதரன் அதுகேட்டு மிகவும் சினந்தான். அச்சினத்தோடு சாரதியை நோக்கி," அடா! எனது கட்டளைப் படி நடக்காத உன்னைத் தின்று விடுவேன். ஆனால், அப்படிச் செய்தால் சாரதியைத் தின்றான் என்ற பழி எனக்கு ஏற்படும்!" என்று கூறினான்.

மகோதரனின், மேற்கண்ட வார்த்தைகளை கேட்ட சாரதி மேலும் மகோதரனுக்குப் புத்தி சொல்ல விரும்பவில்லை. தேரை நேராக இராமரின் தேர் முன் செலுத்தினான்.

மகோதரன், தனது விதியின் வசத்தால் ஸ்ரீ இராமரை போருக்கு இழுத்தான். அக்கணமே, மகோதரனுக்கும், இராமனுக்கும் இடையே கொடிய போர் மூண்டது. மகோதரன் ஸ்ரீ இராமரின் மேல் உயிரைக் கொல்லக் கூடிய கொடிய கணைகளை தேர்ந்தெடுத்துத் தொடுத்தான். பல்வேறு விதமான ஆயுதங்களையும் ஏவினான். ஆனால், அவை அனைத்தையும் ஸ்ரீ இராமர் நொடியில் அழித்தார். பின்பு, மகோதரனுடைய வில்லை ஓர் அம்பாலும், கவசத்தை ஓர் அம்பாலும், கைகளை ஒவ்வொரு அம்பாலும், தோள்களை ஒவ்வொரு அம்பாலும், கழுத்தை ஓர் அம்பாலும், தோள்களை ஒவ்வொரு அம்பாலும், கழுத்தை ஓர் அம்பாலும் இராமர் சிதைத்தார். அக்கணம் மகோதரம் மாண்டு தரையிலே விழுந்தான்!

தனக்குப் போரில் துணையாக வந்த மகோதரன் இறந்ததைக் கண்டு இராவணன் அதிர்ச்சி அடைந்தான்; பெரும் துயரம் கொண்டான்; மயக்கமுற்றான். மறுவினாடியிலேயே அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு சாரதியிடம்," இராமனை நோக்கித் தேரைச் செலுத்து!" என்று ஆணையிட்டான்.

இராவணனுடைய தேர் இராமரை நெருங்குவதற்குள், தம்மை வந்து சூழ்ந்த அரக்கர் சேனையை இராமபிரான் தமது கணைகளினால் அழித்தார். அதே சமயம் இராவணனுடைய இடது பக்கத் தோள்கள் பத்தும் துடித்தன; உலகமெங்கும் குருதி மழை பெய்தது; வானத்தில் அதிர்ச்சியோடு கூடி இடித்த இடிகளால் பெருமலைகள் பொடிப் பொடியாகச் சிதறும் படி விழுந்தன; ஒளியற்ற சூரியனை பரிவேடமும் கலந்தது; இராவணனுடைய தேர்க்குதிரைகள் நடுங்கின; அவனது கொடிய விற்களின் நாண்கள் அறுபட்டன; அவனுடைய நாவும் வாயும் உலர்ந்தன; அவன் அணிந்துள்ள மலர் மாலைகளும் புலால் நாற்றம் பெற்று வீசின; தேரிலே கட்டியுள்ள அவனுடைய வீணைக் கொடியின் மேல் கழுகுகளும் காகங்களும் நெருங்கிப் பறந்தன; அவனது குதிரைகளின் கண்களில் இருந்து கண்ணீர்ப் பெருகிற்று; யானைகள் தமது வலிமையை இழந்தது போல் செயலற்று நின்றன!

அவ்வாறு தோன்றிய தீய சகுனங்களைக் கண்டு இராவணன் சிறிதும் அஞ்சவில்லை. அதனை அவன் பொருட்படுத்தவும் இல்லை. அப்படித் தீய சகுனங்கள் தோன்றிய போதிலும் இராவணன்,' மனிதனான இராமன் என்னை வென்று விடுவானோ?' என்று அலட்சியமாக நினைத்தான். அந்த நினைப்புடன் தனது தேரை இன்னும் விரைந்து இராமனை நோக்கிச் செலுத்துமாறு தனது தேர் சாரதிக்கு உத்தரவு பிறப்பித்தான். அவ்வாறே தேரும் விரைந்தது. அத்தேரின் வேகத்தைக் கண்ட தேவர்களும் கூட பயத்தால் உடல் நடுங்கினார்கள்.

இவ்வாறு தேவர்களுக்கும் கூட பயத்தைக் கிளப்பிய இராவணனின் தேரானது ஸ்ரீ இராமரின் முன்னே வந்து நின்றது. மறுவினாடி இருளும் ஒளியும் போலவும், மாயையும் ஞானமும் போலவும், பாவமும் புண்ணியமும் போலவும் இராவணனும் ஸ்ரீ இராமரும் எதிர் எதிரே நின்றார்கள்! அக்கணமே இருவருக்கும் யுத்தம் தொடங்கியது. மேலும், அப்போது அவர்கள் இருவரும் போர் புரிந்ததைப் பார்க்கும் போது இரண்டு திசை யானைகள் ஒன்றுடன், ஒன்று போட்டி இட்டது போல இருந்தது. இன்னும் சொல்லப் போனால் நரசிங்க மூர்த்தியும், இரணியகசிபுவும் கோபத்துடன் போரிடுவது போலவும் அவர்கள் தோன்றினார்கள்! 'யார் முதற்கடவுள்?' என்று, ஒரு காலத்தில் போரிட்ட சிவபெருமானைப் போலவும், திருமாலைப் போலவும் அவர்கள் அப்போது காணப்பட்டனர்.

அக்கணம் இலங்கை வேந்தன் தேவர்கள் நடுங்கவும், அண்டம் பிளவு படவும் இலங்கை வேந்தன் போரில் உற்சாகம் மூண்டு எழுவதற்காக, தனது வெற்றிச் சங்கத்தை எடுத்து ஊதினான். அச்சங்கத்திற்கு எதிராக உடனே ஸ்ரீ இராமபிரானின் சங்கம் முழங்கிற்று. அவ்வாறு ஸ்ரீ இராமபிரான் தனது சங்கில் ஒலியை ஏற்படுத்திய பொழுது மாதலியும் இந்திரனுடைய சங்கை திசைகள் நடுங்க ஊதினான்.

இராவணன் ஸ்ரீ இராமனை இந்திரனின் தேரில் வீற்று இருப்பதைப் பார்த்த மாத்திரத்தில் தேவேந்திரனின் மீது கடும் கோபம் கொண்டு ," இந்திரா! இந்தப் போர் முடியட்டும் உனக்கு எனது வலிமையை நான் காட்டுவேன்" என்று தனக்குள் கூறிக் கொண்டான். பிறகு ஸ்ரீ இராமபிரான் மீது கடுமையான பாணங்களை தேர்ந்தெடுத்துப் பிரயோகித்தான். அவைகள் அவருடைய மேனியில் பட்டுச் சிதறி விழுந்தன. அதைப் பார்த்த தேவர்கள்,' இராமரின் திருமேனியில் இராவணசரம் படுகின்றதே!" என்று எண்ணி வருந்தியவர்களாய், அவருடைய மேனியை பார்த்து நின்றார்கள். அப்படிப் பார்த்த கண்களுக்கு ஓர் அளவில்லை!

போர் நடந்து கொண்டு இருக்கையில், இராம இராவணத் தேர்களில் பூட்டப்பட்ட குதிரைகள் ஒன்றை, ஒன்று கொடிய சினத்துடன் கண்களில் நெருப்புப் பொறி பறக்கப் பார்த்துக் கொண்டன. அத்துடன் இருவரது தேர்க் கொடிகளும் கூட ஒன்றுடன் ஒன்று மோதியது. இராவணன் மீண்டும் தனது வில்லில் ஏழு உலகங்களும் நடுங்கும் படியாக நாணொலி செய்தான். அதற்குப் பதிலடி தருமாறு அதை விட ஸ்ரீ இராமபிரான் அதிகமான நாணொலியை தனது காண்டிபத்தில் ஏற்படச் செய்தார். ஸ்ரீ இராமபிரானின் நாணொலி கேட்டு அரக்கர்கள் திகைத்தார்கள், அத்துடன் அதனைக் கேட்ட மாத்திரத்தில் செயலற்று நின்றாகள்.

ஸ்ரீ இராமர் கண் இமைக்கும் நேரத்தில் தனது வில்லில் இருந்து ஏராளாமான கணைகளை இராவணன் மீது தொடுத்தார். இராவணனும் மிகவும் வலிமையான பாணங்களைத் தொடுத்து ஸ்ரீ இராமரின் அந்த பாணங்களை வானிலேயே வைத்து அழித்தான். அது கண்டு தேவர்களும் வியந்தார்கள். அத்துடன் இரவாணன் ஸ்ரீ இராமனுக்கு பதிலடி தரும் விதத்தில் கோடிக் கணக்கான அம்புகளை ஏவினான். அந்த அம்புகள் வானிலேயே மேலும் பல அம்புகளாகப் பெருகி அம்பு மழையென வானர வீரர்கள் மேல் பாய்ந்தன. அதனால், வானர சேனை சிதைந்தது. மேலும் இராவணன் எய்த எண்ணற்ற கோடி, கோடி பாணங்கள் கடலையும், மலைகளையும், வானத்தையும், பூமியையும் பேர்தன.

உடனே ஸ்ரீ இராமரும், இராவணனுக்கு இணையாக பாணங்களை எய்தார். அத்துடன் இராவணன் மேற்கொண்டு செலுத்திய அனைத்து பாணங்களையும் முறியடித்தார். தன் தவ வலிமையால் பெற்ற அனைத்து அஸ்த்திரங்களும், ஸ்ரீ இராமபிரானின் அஸ்த்திரங்களால் நொடியில் அழிக்கப் பட்டதைக் கண்ட இராவணன் செய்வது அறியாது தவித்தான். பின்பு, அம்புகளை விடுத்து பல வகையான ஆயுதங்களை ஸ்ரீ இராமனின் மீது பிரயோகித்தான். அந்த ஆயுதங்கள் அனைத்தும் கொடிய வேகத்தைக் கொண்டு இருந்தாலுமே கூட, அவை ஸ்ரீ இராம பாணத்தின் முன்னாள் எம்மாத்திரம்? அவைகளை ஸ்ரீ இராமர் எளிதில் அழித்து ஒழித்தார். அது கண்ட இராவணன் மிகுந்த சினம் கொண்டான். அதுவரையில் ஒரு கையிலே வில்லேந்தி போரிட்ட இராவணன், தனது பத்துக் கைகளிலும் விற்களை ஏந்திப் போரிடத் தொடங்கினான். மற்றும் ஸ்ரீ இராமரை எப்படியும் கொன்று விட வேண்டும் என்று ஆத்திரப்பட்டான். உடனே மாயப் போர் செய்வதற்கு இராவணனின் தேர் வானில் எழுந்தது. அப்போது வானில் நின்ற இராவணனின் தேர் சஞ்சீவி மலையைப் போலவும், மந்திர மலையைப் போலவும் காணப்பட்டது.

தேரோடு வானில் சென்ற இராவணன் ஸ்ரீ இராமர் சூதாரிப்பதற்க்குள் கோடிக் கணக்கான பாணங்களை வானரப் படைகள் மீது பிரயோகித்தான். அதனால், பெரும்பாலான வானர சேனை துடி,துடித்து இறந்தது. அது கண்டு ஸ்ரீ இராமர் மேலும் சீற்றம் அடைந்து முன்னை விட வலிமையாக இராவணன் மீது கடும் போரை செய்தார். அக்கணம், வான் மண்டலத்தில் இராவணனின் தேர் செல்லும் இடமெல்லாம் ஸ்ரீ இராமரின் தேரையும் சீற்றத்துடன் விரைவாக செலுத்தினான் அவரின் தேரோட்டியான மாதலி. அதுகண்ட தேவர்கள் மாதலியை பலவிதத்திலும் புகழ்ந்து பாராட்டினார்கள்.

அவ்வாறு வான் மணடலத்தில் இராவணனின் தேரும், ஸ்ரீ இராமரின் தேரும் சாரிகை திரிந்தன. அவைகளின் வேகத்தால் திசைகளும் நிலைகெட்டது; நட்சத்திரக் கூட்டங்கள் பொடிப் பொடியாக உதிர்ந்தன; மலைகளின் சிகரங்கள் சிதறின; மேலும் அந்த இரு தேர்களும் வலது புறமாகவும் பல சமயங்களில் இடது புறமாகவும் ஓடியது; மேலும் கீழுமாக சென்றது; வலதும் இடதுமாகச் சுற்றின; அதனால் குயவனுடைய சக்கரம் போல, கடலும் மலையும் அண்டங்களும் சூழன்றன.

அப்போது இராவணன் மேற்கொண்டு எண்ணற்ற கொடிய பாணங்களை வானில் இருந்த படி செலுத்தி ஸ்ரீ இராமரின் தேர்க் குதிரைகளுக்கு பெரும் காயங்களை ஏற்படுத்தினான். அத்துடன் நில்லாமல் இராவணன் மாதலியின் மார்பின் மீதும் பன்னிரண்டு கொடிய பாணங்களை பிரயோகித்தான். அதனால் மாதலி முன்பு, இராவணனின் வேல் பட்டு லக்ஷ்மணன் துடித்ததைப் போல இப்போது துடித்தான். அவ்வாறு கொடிய வேகத்துடன் அவனை தாக்கிய இராவணனின் பாணங்களால் பெரும் வருத்தத்தையும், வேதனையையும் அடைந்தான் மாதலி, இருந்தாலுமே மாதலி அந்த வலிகளை எல்லாம் தள்ளிவிட்டு ஸ்ரீ இராமருக்காக தான் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட பணியை திறம்படச் செய்தான்.

இவ்வாறாக இராமபிரானும், இராவணனும் சளைக்காமல் ஒருவர் மேல் ஒருவர் பாணங்களைப் பிரயோகித்துக் கொண்டு இருந்தார்கள். தேவர்களாலேயே 'யார் வெற்றி பெறுவார்கள்?' என்று சொல்ல முடியாத சூழ்நிலை உருவாகி இருந்தது. இராவணன் பிரயோகித்த கோடி, கோடி பாணங்கள் வான் முழுதும் காணப்பட்டதால் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்தை இமைக்காத கண்களைக் கொண்ட தேவர்களாலேயே சரியாக அறிய முடியாமல் இருந்தது. அப்படி இருக்க வானர வீரர்களைப் பற்றியும் சொல்லத் தான் வேண்டுமோ? வானர வீரர்கள் அனைவரும் போர்க்களத்தில் " நமது தலைவராகிய பெருமானைக் காண முடியவில்லையே!" என்று புலம்பித் தவித்தார்கள். அது கண்ட அரக்க வீரர்கள் கர்வம் கொண்டு ,” எங்கள் அரசரைப் போல திறமையானவர்களும் உலகத்தில் உண்டோ?” என்று கூறி மகிழ்ந்தார்கள்.

இது இவ்வாறு இருக்க ஸ்ரீ இராமர் தொடர்ந்து இராவணன் மீது ஏய்த பாணங்களால் இராவணன் தனது வீணைக் கொடியை இழந்தான். மீண்டும் ஸ்ரீ இராமன் செலுத்திய குறி தவறாத பாணங்களால் இராவணன் படு காயம் அடைந்தான். எண்ணற்ற இராம பாணங்கள் இராவணனின் கவசத்தை அறுத்து எறிந்தது. அத்துடன் அவனது மார்பில் பதிந்து பெரும் காயங்களை ஏற்படுத்தியது. மறுபுறம் ஸ்ரீ இராமரைப் போல இராவணனும் ஸ்ரீ இராமபிரானின் தேர்க்கொடியை அறுத்து விடுவானோ என்று எண்ணி அஞ்சிய தேவர்கள், அவரது கொடியில் கருட பகவான் தங்கி இருப்பதைக் கண்டதும், தாம் கொண்ட அச்சம் வீண் என்று நினைத்து மகிழ்ந்தார்கள்.

'சாதாரண கணைகளினால் ஒரு பொழுதும் இராமனை வெல்ல முடியாது!' என்று இராவணன் எண்ணினான். அதனால் தாமதாஸ்த்திரத்தை அவர் மேல் பிரயோகிக்க எண்ணி, அவ்வாறே அவன் செய்தான். அந்தத் தாமதாஸ்த்திரத்தில் இருந்து எண்ணற்ற அம்புகள் வெளிப்பட்டன. சில அம்புகள் நெருப்பைக் கக்கியது, இன்னும் சில பாம்பைப் போன்று விஷப் பற்களைக் கொண்டு காணப்பட்டது, இன்னும் சில அம்புகள் சூரியனுடன், சந்திரனையும் சேர்த்து விழுங்கும் படியாகக் காணப்பட்டன. அந்த அஸ்த்திரத்தின் சீற்றத்தால் பகலும், இரவும் ஒரே நேரத்தில் அப்போர்க்களத்தில் மாறி, மாறித் தோன்றியது. ஒரு திசையில் கண்களைக் கூசும் மின்னல் ஒளி ஏற்பட்டது, இன்னொரு திசையோ கல் மழையைப் பொழிந்தது. அது கண்டு அமரர்களும் கதறினார்கள். செய்வதறியாது திகைத்தார்கள்.

ஸ்ரீ இராமர் உடனே சிவாஸ்த்திரத்தைப் பிரயோகித்து, இராவணனின் தாமதாஸ்த்திரத்தை அழித்தார். அதனால் கோபம் கொண்ட இராவணன் மேலும் பலதரப்பட்ட பாணங்களை ஸ்ரீ இராமபிரான் மீது தொடுத்தான். அந்த பாணங்களும் குறி தவறாமல் ஸ்ரீ இராமரது உடலில் இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தியது. அதனால், வானில் நின்று இருந்த தேவர்கள் ஸ்ரீ இராமரின் நிலை கண்டு இரத்தக் கண்ணீர் வடித்துத் துடித்தார்கள்.

அத்துடன் இராவணன்," இன்றோடு என் குலம் அழித்த இந்த இராமனை அழித்தே தீருவேன்" என்று கூறியபடி ஆசுராஸ்திரத்தை இராமர் மேல் தொடுத்தான். அது இராமபிரானை நோக்கி விரைந்தது. உடனே இராமர் ஆக்னேய அஸ்த்திரம் கொண்டு அதனை வானிலேயே அழித்தார். பின்னர் பலதரப்பட்ட அம்புகளை ஸ்ரீ இராமர் மீது இராவணன் தொடுக்க, அவைகளை எல்லாம் ஸ்ரீ இராமர் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அழித்தார்.

தனது வர சித்திகள் எல்லாம் ஸ்ரீ இராமரின் கணைகளால் அழிவதைக் கண்டான் இராவணன். அதனால், மிகுந்த ஆத்திரம் அடைந்து அவர் மேல் பருவதாஸ்த்திரத்தை பிரயோகித்தான். அதனை ஸ்ரீ இராமபிரான் வாயுவாஸ்த்திரத்தால் அழித்தார். பின்பு இராவணன் தண்டாயுதத்தை அவர் மேல் எறிந்தான். இராமர் அப்பொழுது அமோகாஸ்த்திரத்தை எய்து, இராவணனின் தண்டாயுதத்தை அழித்தார். உடனே கடும் கோபம் கொண்ட இராவணன் மாயாஸ்த்திரத்தை ஸ்ரீ இராமர் மீது தொடுத்தான். அதன் சக்தியை அறிந்த அரக்க வீரர்கள் ஆர்பரித்தனர். அந்த மாயாஸ்த்திரத்தில் இருந்து வாசுகியைப் போன்ற கொடுமையான பேய்களும், பூதங்களும் தோன்றின. மற்றும் அந்த அஸ்த்திரத்தின் மாயையால், இறந்த அரக்கர்கள் எல்லோரும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தார்கள். அக்கணமே அவர்கள் ஆயுதங்கள் ஏந்தி போர் செய்யத் தொடங்கினார்கள். அது கண்ட தேவர்கள் திகைத்தார்கள். வானில் நின்ற சப்த ரிஷிகளும் செய்வதறியாது கைகளைப் பிசைந்தார்கள்.

மாயாஸ்த்திரத்தினால் அனேக மாயைகள் நிகழ்ந்ததைக் கண்ட ஸ்ரீ இராமர் உடனே தனது சாரதியான மாதலியிடம் அந்த அஸ்த்திரம் பற்றிக் கேட்டார். அப்போது மாதலி ஸ்ரீ இராமரிடம்," ஐயனே! இராவணன் தொடுத்த இந்த அஸ்த்திரத்தின் பெயர் தான் மாயாஸ்த்திரம். இது இல்லாததை இருப்பதைப் போலவும், இருப்பதை இல்லாதது போலவும் காட்டும் இயல்புடையது. தாங்கள் இங்கு காணும் அனைத்துக் காட்சிகளும் மாயை தான். உண்மையில் இந்த இறந்த அரக்கர்கள் யாரும் உயிர் பிழைக்கவில்லை. உயிர் பிழைத்து போர் செய்வது போன்று ஒரு பிரமை உங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. அதற்கு இராவணன் விடுத்த இந்த அஸ்த்திரமே காரணம். மேலும், இந்த அஸ்த்திரம் உங்களது கண்களை மட்டும் அல்ல, வானர வீரர்களின் கண்களையும் கட்டி உள்ளது, அதனால் தான் நீங்கள் கண்ட காட்சிகளை அவர்களும் கண்டு. அதோ, இங்கும் அங்குமாக ஓடித்திரிகின்றனர். ஆனால் நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். இந்த அஸ்த்திரத்தை தாங்கள் ஞானாஸ்த்திரத்தை பிரயோகிப்பதால் அழித்து விடலாம்" என்றான்.

அவ்வாறே ஸ்ரீ இராமர் ஞானாஸ்த்திரத்தை பிரயோகித்து இராவணனின் மாயாஸ்த்திரத்தை அழித்தார். அதனால், ஸ்ரீ இராமரின் முன் காணப்பட்ட மாயக் காட்சிகள் எல்லாமே அழிந்தது. பழையபடி இறந்து எழுந்த அரக்கர்கள் எல்லாம் மண்ணில் மீண்டும் உயிரற்று சாய்ந்தனர். அந்த அஸ்த்திரத்தால் யுத்த களத்தில் காணப்பட்ட பேய்களும், பூதங்களும் வந்த சுவடு இல்லாமல் மறைந்தது. போர்க்களத்தில் வானரர்கள் கண்ட இருள் அகன்றது. அதனால், வானர வீரர்கள் பயம் நீங்கி மகிழ்ச்சியில் திளைத்து ஸ்ரீ இராமரை வணங்கினார்கள். தேவர்களும் மன சாந்தி அடைந்தார்கள்.

மறுபுறம் தனது மாயாஸ்த்திரம் அழிந்ததால் கோபம் கொண்ட இராவணன் தனது சூலாயுதத்தை இராமர் மேல் எறிந்தான். அதனையும் அழிக்குமாறு தேவர்கள் ஸ்ரீ இராமபிரானை வேண்டினார்கள். ஸ்ரீ இராமபிரானும் அவ்வாரே செய்தார். அதனால் தேவர்கள் மீண்டும் உயிர் வரப் பெற்றார்கள். அத்துடன் அச்சமும் நீங்கினார்கள்.

அவ்வாறு இராம பாணத்தால் தனது சூலமும் அழிந்ததைக் கண்ட இராவணன்," இந்த இராமன் எல்லோரும் சொல்வதைப் போல பரம்பொருளின் அவதாரமாக இருப்பானோ?" என்று தனக்குள் கூறிக் கொண்டான். எனினும் மீண்டும் அவனுக்குள் இருந்த கர்வம் தலை தூக்க, " இந்த இராமன் யாராக இருந்தால் தான் எனக்கென்ன? நான் இவனை நிச்சயம் வெற்றி கொள்வேன்" எனக் கூறிக் கொண்டான். பிறகு தென்திசைப் பாலகனது படையான நிருருதிப் படையை இராமர் மேல் தொடுத்தான். அது ஸ்ரீ இராமபிரானை நோக்கி வெகு வேகமாக வந்தது. ஆனால், ஸ்ரீ இராமர் அந்த பாணத்தையும் கருடாஸ்த்திரம் கொண்டு வெகு எளிதில் அழித்தார்.

அத்துடன் நிற்காது எண்ணற்ற பாணங்களை இராவணன் மீது எய்தார். அந்த பாணங்கள் அனைத்தும் குறி தவறாமல் சென்று இராவணனின் மார்பில் தைத்தது. அதனால், இராவணன் தளர்ந்தான். மேலும் ஸ்ரீ இராமர் தனது திவ்ய அஸ்த்திரம் ஒன்றைக் கொண்டு இராவணனின் பத்து தலைகளில் ஒன்று அறுத்துக் கடலில் எறிந்தார். ஆனால், இராவணனின் தவ பலத்தால் மீண்டும் அவன் இழந்த அந்தத் தலையை அடைந்தான். இவ்வாறு ஸ்ரீ இராமர் பல முறை இராவணனின் தலைகளைக் கொய்ய, அத்தலைகள் அவனது தபோ பலத்தால் மீண்டும், மீண்டும் அவனது உடலில் சேர்ந்து கொண்டே இருந்தது. அதுபோல, இராவணனின் கைகளை தனது பாணங்கள் கொண்டு ஸ்ரீ இராமர் எத்தனை முறை அறுத்து எறிந்தாலும், அவனுக்கு புதிதாக கைகள் வந்து கொண்டே இருந்தன. அதனால் ஸ்ரீ இராமர் மிகவும் சலித்துப் போனார். இருந்தாலும், ஸ்ரீ இராமர் ஓய்வின்றி தனது பாணங்களால் இராவணனின் தலைகளை அறுத்துக் கொண்டே இருந்தார். அந்த தலைகள் மலைகளில் போய் மோதியதால் மலைகள் யாவும் பிளவுபட்டன. மேலும் சில தலைகள் ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டதால் நக்ஷத்திரங்கள் அழிந்தன. மேலும், சில தலைகள் கடல்களில் விழுந்ததால் சுறா மீன்கள் மாண்டன! ஆனால், இராவணன் மட்டும் இறந்த பாடு இல்லை. அது கண்ட வானர வீரர்களும் நடுக்கம் கொண்டார்கள். செய்வதறியாது திகைத்தார்கள்.

மறுபுறம், அரக்க வீரர்களோ பெரும் ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரத்தால் மகிழ்ந்த இராவணன் தண்டாயுதங்கள் பலவற்றை தனது மாய சக்தியால் வரவழைத்து இராமனின் மீது ஏவிக் கொண்டே இருந்தான். ஸ்ரீ இராமரும் அந்த தண்டாயுதங்களை தனது பாணம் கொண்டு அழித்துக் கொண்டே இருந்தார். அப்போது ஸ்ரீ இராமர் கொடிய இராவணனை கொல்வதற்கு என்ன தான் வழி என்று யோசித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு அர்த்த சந்திர பாணத்தை இராவணன் மீது தொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அவ்வாரே, அந்த பாணத்தை இராவணன் மீது தொடுக்க, இராவணன் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான். அக்கணம் வானர சேனை அது கண்டு ஆர்பரித்தது.

ஆனால், ஸ்ரீ இராமரோ மூர்ச்சை அடைந்த இராவணன் மீது மேற்கொண்டு தனது பாணங்களை பிரயோகிக்க விரும்பவில்லை. அதனால், சற்றே போரை நிறுத்திக் கொண்டார். அது கண்ட மாதலி ஸ்ரீ இராமரிடம்," ஐயனே! இதுவே தக்க சமயம், இந்த இராவணனை கொன்று விடுங்கள்" என்று கூறினான்.

அது கேட்ட ஸ்ரீ இராமர் மாதலியிடம்," மாதலி! அவ்வாறு நான் செய்வது முறையற்ற செயல் ஆகும். தர்மத்தை காக்க வேண்டிய நானே, மூர்ச்சை அடைந்து விழுந்த ஒருவனைக் கொல்வது நியாயமாகுமா?" என்று கேட்க. மாதலி தனது தவறான பேச்சை உணர்ந்து அமைதியானான்.

அக்கணம் இராவணனின் தேரோட்டி, இராவணனை காக்கும் பொருட்டு வெகு வேகமாக இரதத்தை இலங்கையை நோக்கி செலுத்தினான். இராவணனின் தேர் இலங்கையின் அரண்மனையை அடையும் நேரம், இராவணன் சுய உணர்வு பெற்றான். அக்கணம் தேர் இலங்கையை நோக்கி திரும்பிச் செல்வதை உணர்ந்தான். அவ்வாறு தேரை செலுத்திக் கொண்டு இருந்த சாரதியின் செயலால் அவன் மிகுந்த கோபம் கொண்டான். உடனே மிகுந்த சினத்துடன் தனது சாரதியைப் பார்த்து," அடேய் ! என்ன காரியம் செய்து இருக்கிறாய்? நீ செய்த காரியத்தால் என்னை புறமுதுகு காட்டி ஓடியவன் என்றல்லவா உலகம் தூற்றும்? அத்துடன் இந்நேரம் நீ தேரை திருப்பியது கண்டு அந்த இராமனும், தேவர்களும், குரங்குக் கூட்டமும் என்னைப் பரிகசித்துக் கொண்டு அல்லவா இருப்பார்கள்? என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்ட உன்னை இப்போதே கொன்று விடுகிறேன் பார்" என்று கூறி தனது வாளை, உரையில் இருந்து உருவினான்.

அது கண்ட சாரதி, உடனே இராவணனுடைய கால்களில் விழுந்து," நான் சொல்வதைச் சற்றே கேட்டுச் சிந்தித்துப் பார்ப்பீர். இப்போதைக்குக் கோபம் தணிவீர்! ஐயனே! நீர் மயக்கம் அடைந்து விட்டீர். மேலும் அங்கே நாம் இருப்போமானால் உமது உயிருக்கு நிச்சயமாக கேடு விளைந்து இருக்கும். உமக்கு அத்துன்பம் நேராது இருப்பதற்காகவே, நான் தேரைத் திருப்பிச் செலுத்தினேன். ஆதலால், என்னைச் சினந்து வாளினால் கொல்வது முறையில்லை. இதனைத் தீர சிந்தித்துப் பார்ப்பீர்!" என்று வேண்டினான்.

இராவணன் சாரதியின் சொல்லைக் கேட்டு, அதன் உண்மையை உணர்ந்தான். அதன் காரணமாக நெஞ்சிலே இறக்கம் தோன்ற சாரதியை மன்னித்துவிட்டு இராவணன், " தேரைத் திருப்பி இராமன் முன் கொண்டு செல்க!" எனக் கட்டளைப் பிறப்பித்தான். சாரதியும் அவ்வாரே இலங்கேஸ்வரனின் தேரை யுத்தகளத்துக்கு மீண்டும் ஓட்டிச் சென்று இராமனின் முன்னாள் நிறுத்தினான். அக்கணம், மீண்டும் இராம, இராவண யுத்தம் தொடங்கியது .

இராவணன் வில்லை வளைத்தான். யமனைக் காட்டிலும் கொடூரமான கோடிக் கணக்கான அம்புகளை இராமர் மேல் தொடுத்தான். இராமர் அவற்றைத் தமது கணைகளினால் அழித்தார். பின்பு, ஸ்ரீ இராமர் எண்ணற்ற சரங்களை இராவணன் மீது தொடுத்து அவனது வில்லை உடைத்து எறிந்தார். தேவர்கள் அதனைப் பார்த்து மிகவும் ஆரவாரம் செய்தார்கள். இராவணன் மீண்டும் வேறொரு வில்லை எடுத்தான். ஸ்ரீ இராமர் அதனையும் தனது பாணம் கொண்டு முறித்து எறிந்தார். இவ்வாறு இராவணனிடம் இருந்த அனைத்து விற்களையும் ஸ்ரீ இராமர் தனது கணைகளால் உடைத்து எறிந்தார். அதனால், கொடும் கோபம் கொண்ட இராவணன் இறுதியாக இரும்புலக்கை ஒன்றை இராமர் மீது வீசி எறிந்தான். ஆனால், அதனையும் ஸ்ரீ இராமர் தனது பாணம் கொண்டு அழித்தார். அக்கணம் ஸ்ரீ இராமர்," இனியும் இராவணனை விட்டு வைக்கக் கூடாது" என்று முடிவு செய்தார்.

உடனே பிரம்மாஸ்த்திரத்தை தனது வில்லில் ஆவாகனம் செய்தார். சூரியனின் ஒளிக் கிரணங்கள் பூமிக்கு வந்து இறங்கியது போல பிரம்மாஸ்த்திரம் ஒளி பெற்று ஸ்ரீ இராமனின் வில்லில் தோன்றியது. அந்தக் கணமே ஸ்ரீ இராமபிரான், இராவணனின் பத்து தலைகளையும் ஒரே சமயத்தில் கொய்து எறியுமாறு பிரம்மாஸ்த்திரத்திற்க்கு உத்தரவு பிறப்பித்து இராவணன் மீது எய்தார். அக்கணமே, இராவணனின் கழுத்தில் பட்ட பிரம்மாஸ்த்திரம், அவன் பெற்று இருந்த மூன்று கோடி ஆயுளையும், முயன்று செய்துள்ள பெருந்தவத்தையும், பிரம்மனால், 'முப்பது முக்கோடி தேவர்களில் யாராலும் கொல்லப்படமாட்டாய்' என்ற வரத்தையும். அத்துடன் அவனது தோள் வலிமையையும் அழித்து, அவனது பத்து சிரசையும் ஒரே நேரத்தில் கொய்து எறிந்தது. அடுத்த கணம், இராவணன் மண்ணில் சாய்ந்தான். தேவர்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கிய தசானந்தன் ஒரு பெண்ணின் மீது கொண்ட மோகத்தால் மண்ணில் சாய்ந்தான். அது கண்டு எஞ்சிய அரக்கர் சேனை சிதறி நாலாபுறமும் ஓடியது.

மறுபுறம், இராவணனின் உயிரைப் பறித்த பிரம்மாஸ்த்திரம் மீண்டும் ஸ்ரீ இராமபிரானிடம் பாற்கடலில் குளித்து முடித்து வந்து சேர்ந்தது. இராவணன் இறந்ததைக் கண்ட ஸ்ரீ இராமர், உடனே மாதலிக்கு," தேரைக் கீழே இறக்குவாய்!" எனக் கட்டளை பிறப்பித்தார்.

மாதலி மறுகணம் தேரைத் தரையிலே இறக்கினான். தேரில் இருந்து இராமர் இறங்கிக் கொண்டு மாதலிக்கு, " தேரை இராவணனிடம் கொண்டு செல்க!" என்று கட்டளை பிறப்பித்தார்.

பிறகு இராவணனை அருகில் நெருங்கி அவனது பூத உடலைக் கண்டார். அக்கணமே லக்ஷ்மணனும், அனுமான், சுக்கிரீவனுடன் வானர சேனையும், இராவணனின் உடலை அடைந்தது. அப்போது வானர சேனையில் உள்ள வீரர்கள், இராவணனின் உடல் மீது ஏறி குதுகலத்துடன் ஆடினார்கள்.

ஸ்ரீ இராமர் மேலும் இராவணனுடைய மேனியை உற்று நோக்கினார். அவனுடைய மார்பிலே பாய்ந்து இருந்த திக்கஜங்களின் தந்தங்கள் முதுகிலே வெளிப்பட்டு நிற்பதைக் கண்டார். அக்கணம் ஸ்ரீ இராமர், " இந்த வீரனான இராவணனை கொன்றேன், என்று பெருமைப் பட்டேன். ஆனால், திக்கஜங்களின் தந்தங்கள் இவனது முதுகிலே வெளிப்பட்டு நிற்பதைக் காணும் போது. இவன் போரிலே புறமுதுகு காட்டி ஓடியவன் என்பதை நான் புரிந்து கொண்டேன். இவனைப் போன்ற ஒருவனை நான் கொன்றதால் பழிப்பே என்னை வந்து சேரும். அதனை விடுத்து இவன் போன்றவனைக் கொன்றதால் எனக்கு எப்பொழுதும் புகழ் வந்து சேராது" என்றார்.

பெருமானின் அந்த வார்த்தைகளைக் கேட்ட விபீஷணன், அருவி போன்று கண்களிலே நீர் பெருக சுடுகின்ற பெருமூச்சுடனே அதிக இரக்கம் கொண்டு வாடுகின்ற மன வாட்டத்துடன்," செல்வரே! உண்மை இல்லாத சொற்களைச் சொல்லாதீர்!" என்று சொல்லி, உயிர் ஓடுங்கினாற் போலானான்.

பிறகு மீண்டும் அவன் இராமபிரானை நோக்கி," ஐயனே! வாலியும், கார்த்தவீர்யார்சுனனும் முன்பு இவனை தோற்கடித்தது தேவர்கள் இவனுக்கு அளித்த சாபத்தினால் ஏற்பட்டது. இது உண்மை. இவன் மட்டும் தாயின் ஸ்தானத்தில் உள்ள சீதா பிராட்டியின் மீது மோகம் கொள்ளாமல் இருந்து இருந்தால், உமது கோபத்துக்கும் ஆளாகி இருக்கமாட்டன். இப்படி மடிந்தும் இருக்க மாட்டான். அப்போது இவனைக் கொல்வதற்கும் மற்றவர்கள் துணிந்தும் இருக்க மாட்டார்கள். அத்துடன் என்றும் சிரஞ்சீவியாகவும் இவன் இருந்திருப்பான். ஆனால், என்ன செய்ய? இவன் விஷயத்தில் இவனுடைய விதியானது, இவன் பெற்ற வரத்தைக் காட்டிலும் வலிமையுடன் இருந்து விட்டதே! மேலும், ஸ்ரீ இராமா தங்களிடம் இன்னொன்றையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன், எனது அண்ணன் இராவணன் ஒரு பொழுதும் இதுவரையில் யாரிடமும் புறமுதுகு காட்டி ஓடியவன் அல்ல. முன்னொருகாலத்தில் அண்ணன் இராவணன் திசைகளின் எல்லை வரைச் சென்று பகைவர்களை எல்லாம் அழித்து ஒழித்தான். இவனுக்குப் பகைவர்களே இல்லை என்கிற நிலையில் திக்கஜங்களுடன் இவன் போரிட்டான். அவ்வாறு இவன் போரிடும் பொழுது அந்த யானைகளின் தந்தங்கள் இவனுடைய மார்பிலே பதிந்தன. அதனால், உண்டானவையே இவனுடைய முதுகில் காணப்படும் இந்தத் தழும்புகள். இப்படி திக்கஜங்களின் தந்தங்கள் இன்றிப் பகைவர்களின் மற்ற ஆயுதங்கள், இவனது மார்பிலே பாய்ந்து முதுகின் வழியாக வெளிப்பட்டு விடுமோ? இந்தத் தந்தங்கள் யாவும் திசை யானைகளால் பிடுங்க முடியாமல் முறிந்து போனவை. இது நாள் வரையில் இவனுடைய மார்புக்கு ஆபரணமாக இருந்தன. அவ்வாறு கிடந்த தந்தங்கள் போரில் எதிர்த்த யமனுடைய வலிமையும் உறுதியும் பொருந்திய அம்புகளின் வேகத்தாலும், அனுமனுடைய கொடிய குத்தினாலும் முதுகுப் பக்கம் போய் விட்டன. இது தான் உண்மை. அதனால் ஸ்ரீ இராமா சிறந்த வீரன் ஒருவனையே தாங்கள் போர்க்களத்தில் வதைத்து இருக்கின்றீர்கள். அத்துடன் அதனால் பெருமையும் பெற்றீர்கள்" என்று கூறி முடித்தான்.

விபீஷணன் சொன்னதைக் கேட்ட ஸ்ரீ இராமர்," அப்படியா?" என்று கூறி தனது சந்தேகம் நீங்கப் பெற்றார். பிறகு," இராவணன் போன்ற சுத்த வீரனைத் தான் இன்று போரில் கொன்று உள்ளேன்" என்று தனக்குள் கூறித், தன்னையே பெருமை பாராட்டிக் கொண்டார். பிறகு விபீஷணனை நோக்கி," விபீஷணா! இறந்த உனது தமையன் மீது நீ இன்னமும் பகைமை பாராட்டுவது முறை அல்ல. உடனே நீ இராவணனுக்கு செய்ய வேண்டிய நீர் கடனை முறைப்படி செய்வாயாக" என்று கூறினார். அவ்வாறு கூறிய பிறகு, ஸ்ரீ இராமர் மெல்ல அவ்விடம் விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.

இராமபிரான் சென்றதும் விபீஷணன் மிகவும் துயரம் கொண்டான். சகோதர பாசம் அவனை மென்மேலும் துயரம் அடையும் படிச் செய்தது. அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. கதறினான். இராவணனின் உடல் மீது விழுந்து," அண்ணாவே! அண்ணாவே! அசுரர்களுக்குப் பிரளயம் போன்றவனே! தேவர்களுக்கு கூற்றுவன் போன்றவனே! நஞ்சு கூட உட்கொண்டால் தான் மரணத்தை விளைவிக்கும், ஆனால் நீ ஜானகி என்ற கற்ப்புக்கரசியின் மீது கொண்ட, மோகம் என்ற பார்வை கொண்ட நஞ்சோ, நீ பார்த்த மாத்திரத்தில் கொன்று விட்டதே! நான் அப்போதே உன்னிடம் சொன்னனே முன்னாள் நீ தீண்டி தீக்குளித்த வேதவதி தான் சீதையாகப் பிறந்து இருக்கிறாள் என்று. ஆனால், நீ எனது சொல்லை கேட்கத் தவறிவிட்டாயே! இன்று அதனால் உனக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தாயோ!" என்று கூறிக் கதறி அழுதான் விபீஷணன். அக்கணம் ஜாம்பாவான் விபீஷணனை நெருங்கி அவனுக்கு ஆறுதல் கூறித் தேற்றினான்.

மறுபுறம் இராவணன் இறந்த செய்தியைக் கேட்டு மயனுடைய மகளான மண்டோதரி எண்ணற்ற அரக்கியர்கள் தன்னைப் பின் தொடர, போர்களத்துக்கு ஓடி வந்தாள். அங்ஙனம் ஓடி வந்தவள் இராவணனின் உயிர் அற்ற உடலை நோக்கி," ஐயனே! உம்மை இந்த நிலையிலா நான் காணவேண்டும்? நான் அப்போதே ஜானகியை விட்டு விடுமாறு கூறினேனே! நீர் கேட்டீரோ! உமக்கு முன்னாள் நான் போவேன் என்று நினைத்து இருந்தேனே! இப்போது தாங்கள் போய், நான் இருக்கும் படி நேர்ந்ததே! உமது உயிரை எமனும் கொண்டு செல்ல அஞ்சுவானே! அப்படி இருக்க நீர் எவ்வாறு உயிர் இழந்தீர்! தேவர்களையே அச்சம் கொள்ளும் படிச் செய்தவர் தாங்கள், இப்போது மனிதனின் கைகளால் மாண்டு போய் உள்ளீர்களே!" என்று கூறி இராவணன் மீது விழுந்து புரண்டு அழுதாள். அக்கணமே, கற்ப்புக்கரசியான மண்டோதரியும் இராவணன் இறந்த சோகம் தாங்காமல் உயிரை விட்டாள்.

அவ்வாறு இறந்த மண்டோதரியின் சிறந்த கற்பின் தன்மையைக் கண்டு தேவமங்கையர்களும், விஞ்சை மகளிர்களும், பாதாள லோகத்துப் பெண்களும், மனித குலப் பெண்களும் அவளை மிகவும் கொண்டாடினார்கள்.

பிறகு விபீஷணன் மனதில் துக்கத்துடன் பழைய பகையை எல்லாம் மறந்து முறைப்படி அண்ணன் இராவணனுக்கும், அண்ணி மண்டோதரிக்கும் செய்ய வேண்டிய ஈமக் காரியங்களை எல்லாம் முறைப்படி செய்து முடித்தான். பிறகு அவர்களின் சிதையில் தீ மூட்டி அழுதபடி நின்றான். ஒருவாறு, எல்லாக் காரியங்களையும் சாஸ்த்திர முறைப்படி முடித்தான் விபீஷணன். எல்லாம் முடிந்ததும் மீண்டும் விபீஷணன் ஸ்ரீ இராமரின் திருப்பாதங்களில் வந்து அவரை விழுந்து வணங்கினான்.

அக்கணம் ஸ்ரீ இராமபிரான் விபீஷணனை நோக்கி," அன்பனே! இந்த உலகை விட்டுப் போனவர்கள் மீளப் போவதில்லை, இதனை அறிந்த நீ துக்கம் கொள்ளலாமோ? அதனால் மன அமைதி பெறுவாய், இனி ஆகவேடிய காரியங்களைப் பற்றிச் சிந்திப்பாயாக" என்று ஆறுதல் கூறினார். அக்கணமே விபீஷணனும் சற்றே ஆறுதல் அடைந்தான்.