இராவணன் சோகப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இராவணன் சோகப் படலம்

(இந்திரஜித்த இறந்த சோகச் செய்தியை இராவணனிடம் ஒற்றர்கள் விரைந்து வந்து சொல்கின்றனர். அது கேட்ட இராவணன் மிகவும் கோபம் கொண்டு அவ்வாறு செய்தி பகிர்ந்த ஒற்றர்களை வாள் கொண்டு கொல்கிறான். பிறகு இந்திரஜித்தை போர்க்களத்தில் தேடிச் செல்கிறான். அங்கு தலை இல்லாத இந்திரஜித்தின் உடலைப் பார்த்துப் புலம்பித் தவிக்கிறான். பிறகு இந்திரஜித்தின் தலையை தேடியும் அது எங்கும் கிடைக்காத காரணத்தால் அவனது உடலை மட்டும் அரண்மனைக்கு எடுத்து வருகிறான். அது கண்டு மண்டோதரி உட்பட அனைத்து அரக்க மகளிரும் அழுது துடிக்கின்றனர். அக்கணம் இராவணன் சீதையைக் கொல்ல சித்தம் கொல்கிறான். ஆனால், அவனது சகாக்கள் அவனிடம்," அபலைப் பெண் ஒருத்தியிடம் வீரத்தைக் காட்டுவது அழகல்ல" என்று கூறி தடுத்து நிறுத்தி விடுகின்றனர். உடனே இராவணன் லக்ஷ்மணனை கொல்லும் வரையில் தனது மகனின் உடலை தகனம் செய்யப் போவதில்லை என்று கூறி, அதனை எண்ணெயில் பத்திரப்படுத்தி வைக்க உத்தரவு இடுகிறான். இவையே இப்படள்ளத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும்)
மாவீரன் இந்திரஜித்து இறந்துவிட்டான்! அந்தச் செய்தியை இராவணனுக்குத் தெரிவிக்க ஒற்றர்கள் ஓடினார்கள். இராவணன் முன்னே சென்று நின்ற அவர்கள் துக்கத்துடன், உடல் நடுங்க இந்திரஜித்து வீரமரணம் அடைந்த செய்தியை இராவணனிடம் கூறினார்கள். அது கேட்ட இராவணன் மிகுந்த கொதிப்படைந்தான். அதனால், வந்த ஆத்திரத்தில் செய்வது அறியாமல், செய்தி கொண்டு வந்த தூதர்களையே வெட்டிக் கொன்றான். அது கண்ட மற்ற அரக்கர்கள் "இலங்கேஸ்வரர் அருகில் இனி நாம் இருந்தால் அவர் நம்மையும் கொன்று விடுவார்" என்று தங்களுக்குள் கூறிக் கொண்டு ஓடிச் சென்று மறைந்து கொண்டனர்.
மறுகணம், இராவணனோ மகனுடைய இறப்பால் துக்கம் தாளாது கைகள் சோர்ந்திட தரையிலே ஓங்கி அடித்தான். அதனால், திரி கூட மலையின் ஒரு பாகம் உடைந்து விழுந்தது. அவனது மனதில் கொடிய சினம் உண்டானது. அவனது கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் எனக் கண்ணீர் பெருகியது. வெந்த புண்ணிலே வேல் பட்டது போல மிகவும் துன்பம் அடைந்து கதறி அழுதான். அவனது பத்து தலைகளிலும் இருந்த இருபது கண்களும் அருவி போல கண்ணீரைப் பெருக்கியது. துக்கம் தாங்காமல் " மகனே இந்திரஜித்து நீயும் போய்விட்டாயா?" என்று கூறி உரக்க அழுதான். அதனால் இலங்கை நகரமே அழுதது.
இராவணனின் பத்து தலைகளிலும் ஒவ்வொரு தலையும் இந்திரஜித்தை நினைத்து வாய் விட்டு அழத் தொடங்கியது. அதில் ஒரு தலை, "ஐயனே போய் விட்டாயா ?" என்றது. இன்னொரு தலை, " மைந்தனே! மாமகனே என்னை விட்டு ஏன் போனாய்?" என்றது. இன்னொரு தலை," உனக்கு முன்பு பிறந்த நான் உயிருடன் இறக்க, எனக்குப் பிண்டம் வைக்க வேண்டிய உனக்கு, நான் பிண்டம் வைக்க என்ன பாவம் செய்தேன்?" என்றது. இன்னொரு தலை," இந்திரனை வெற்றி கொண்ட மகனே! நீ இறந்ததால் இப்போது இந்திரன் பயம் நீங்கி சுற்றித் திரிவானே?" என்றது. இன்னொரு தலை," இலங்கேஸ்வரா ! எனது கணவர் எங்கே என்று கேட்கும் உனது மனைவிகளுக்கும், உனது தாய்மார்களுக்கும் நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்?" என்று அழுதது. இன்னொரு தலை,"சுத்த வில் வீரனே! லக்ஷ்மணன் உன்னைக் கொன்று விட்ட செய்தியை நான் இப்போதும் நம்ப மாட்டேன். எங்காவது மான் புலியைக் கொன்ற வரலாறும் தான் உண்டோ?" என்றது.
இன்னொரு தலை," எண்ணற்ற யுத்தங்களில் நீ வென்று வெற்றி மாலையை சூடினாய். அந்த மாலையை காகங்களும், கழுகுகளும் சுற்றும் போர்க்களத்தில் சிதறிக் கிடப்பதை நான் காண்பேனோ?" என்றது. இன்னொரு தலை," யமனும் உனது உயிரைப் பறிக்க அஞ்சும் போது. உனக்கு எப்படி மரணம் நிகழ்ந்தது" என்றது. இன்னொரு தலை,"பாவி விபீஷணா ! உடன் இருந்தே கொல்லும் வியாதியாய் மாறி, இப்போது எனது அன்பு மகனையும் அழித்து விட்டாயே!" என்றது. இன்னொரு தலை," உன்னைப் போன்ற மகன் எனக்கு இனி கிடைப்பானோ!" என்றது. இவ்வாறு இராவணனின் பத்து தலைகளும் அழுதுக் கதறியது.
அவ்வாறு கதறிக் கொண்டு நின்ற இராவணன், தனது புதல்வனைப் பார்க்கும் ஆசையால் விரைந்து சென்று போர்க்களத்தில் புகுந்தான். அவனோடு அவனது ஏவலர்கள் சிலரும் சென்றனர்.
போர்க்களத்தில் இராவணனைக் கண்டதும் பேய்களும், கழுகு முதலான பறவைகளும், அவனிடத்திலே அன்பு உடையவை போல அழுதன. ஆனால், இராவணன் எதையும் பொருட்படுத்தாமல், தனது மகனின் உயிரற்ற சடலத்தைத் தேடும் முயற்ச்சியில் ஈடுபட்டான். பிண வாடை வீசி, எண்ணற்ற அரக்கர்களின் குடல்கள் சரிந்து கிடந்தது போர்க்களத்தில் ஆடுகின்ற பேய்களை கடிந்து கொண்டவனாக இறுதியில் இராவணன் இந்திரஜித்தின் உடலை கண்டு பிடித்தான். அக்கணம்," அய்யோ! இது என்ன கொடுமை? எனது மகனின் தலை எங்கே? எங்கே ?" என்று பல இடங்களில் தேடினான். இராவணனின் ஏவலர்களும் பல இடங்களில் இந்திரஜித்தின் தலையை தேடித் திரிந்தார்கள். ஆனால், அது எங்கும் கிடைக்கவில்லை. அதைத் தான் அங்கதன் எப்போதோ எடுத்துக் கொண்டு போய் விட்டானே! பிறகு எப்படிக் கிடைக்கும்?.
ஆனால், அதை அறியாத இராவணன் மேலும், மேலும் கண்ணீர் சொரிந்தான். அப்போது மகனின் துண்டுபட்ட வலது கையைக் கண்டான். அதனை முத்தம் இட்டுப், பித்துப் பிடித்தவன் போலத் தனது தலைகளில் தூக்கி வைத்துக் கொண்டான், பின்பு அதனைத் தனது மார்பிலே தழுவிக் கொண்டான், கழுத்திலே சுற்றிக் கொண்டான், கண்களிலே ஒற்றிக் கொண்டான்.
பிறகு " மகனே உன்னை இனி எந்த ஜென்மத்தில் பார்க்கப் போகின்றேன்?" என்று கூறி மரணப் பெருமூச்சை வெளியேற்றினான். பிறகு இந்திரஜித்தின் உடல் எங்கும் காணப் பட்ட லக்ஷ்மணனின் பாணங்களை பார்த்தான். அதனை, மெல்ல இந்திரஜித்தின் உடலில் இருந்து எடுத்து எறிந்தான். அதனால் கோபம் கொண்டான். பிறகு கண நேரத்தில் சோர்ந்து போனான். கண்களில் கண்ணீர் வற்றிய நிலையில், மகனின் உடலை அழுத படி சுமந்து கொண்டு இலங்கையின் மாளிகைக்கு தள்ளாடி வந்தான்.
அப்போது அவனை அந்த நிலையில் கண்ட இலங்கை மாநகரத்தின் அரக்கிகள் துடித்துப் போனார்கள், பதறினார்கள் பின்னர் அழுது புலம்பினார்கள் . இலங்கையே அதனால் சோகமயமாகக் காட்சி அளித்தது.
தான் பெற்ற அருமை மைந்தன் போரிலே இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டதும் அவனது தாய் மண்டோதரி துடித்துப் போனாள். அத்துடன் திடிக்கிட்டாள், திகைத்தாள், தடுமாறினாள், தனது மார்பிலே அடித்துக் கொண்டாள், தரையிலே புரண்டு கண்ணீர் வடிய அழுதாள். அப்போது இந்திரஜித்தின் உடல் வைக்கப் பட்டு இருந்த அரச மாளிகைக்கு தலை விரி கோளமாக ஓடிவந்தாள். அக்கணம் தலை இல்லாத இந்திரஜித்தின் உடலின் மீது விழுந்து புலம்பித் தவித்தாள். அக்கணமே மயங்கி விழுந்தாள். பிறகு, மயக்கம் தெளிந்து எழுந்தாள் கோபத்துடன் இராவணனைப் பார்த்தாள்," இதெற்கெல்லாம் நீரே காரணம்" என்று கூறி சினந்தாள். பேச வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு, அத்துடன் நா தளர்ந்தது. மீண்டும் இந்திரஜித்தின் உடலை நோக்கி," அய்யோ மகனே! வளர்கின்ற இளம் பருவத்திலேயே நீ உனது வில்லின் ஆற்றலால் இந்திரனை வென்றவன் ஆயிற்றே! உனக்கா இந்த நிலை? உனது குழந்தைப் பருவத்திலேயே சந்திரனுக்குள் இருக்கும் களங்கத்தை முயல் என்று நினைத்து பிடிக்கக் போனாயே! அப்போது உன் மீது கொண்ட பயத்தால் சந்திரினே வலிய உனது கைகளில் வந்து சேர்ந்து உன்னை மகிழ்வித்தானே! அப்படிப் பட்ட உனக்கா இந்த நிலை? அது மட்டுமா, தவழ்கின்ற இளம் பருவத்திலே காட்டில் இருந்து நீ இரண்டு சிங்கங்களைப் பிடித்து வந்து ஒன்றுடன், ஒன்று மோதச் செய்து அதனைக் கண்டு ரசித்தாயே! அந்த அழகை நான் இனி எப்போது காண்பேனோ?
மகனே இந்திரஜித்து! மாவீரனே ஒரு முறை நீ இந்த அன்னைக்காக எழுந்திருக்கக் கூடாதா? இப்போதும் கூட நீ இறந்து விட்டாய், என்று எனக்குத் தோன்றவில்லை. போர்க்களத்தில் அலுத்து வந்து உறங்கிக் கொண்டு தானே உள்ளாய்? எழுந்து விடு மகனே" என்று கூறி கதறி அழுதாள்.
பின்பு அதீத துக்கத்தின் காரணமாக மூர்ச்சை அடைந்து எழுந்த மண்டோதரி ," எனது மகன் மானிடன் ஒருவனின் தாக்குதலால் இறந்தானா? மேரு மலையை அணு உதைத்து சிதறடித்தது போல் அல்லவா இது இருக்கிறது! பஞ்சிலே தீப்பற்றியது போல, மானிடர்களால் அரக்கரின் சேனைக் கடல் அழிந்ததாம். போருக்குச் சென்ற அரக்கர் படையோ திரும்பவில்லை. அதனால் நான் மிகவும் அஞ்சினேன்... அஞ்சினேன்! அந்தச் சீதையாகிய அமுதத்தில் தோய்ந்த நஞ்சினாலே இலங்கேஸ்வரனும் நாளைக்கு இது போல் இறந்து போனவர் ஆவாரோ?" என்றெல்லாம் சொல்லி, மண்டோதரி புத்திர சோகத்தால் பெரிதும் புலம்பினாள். பித்துப் பிடித்தவள் போல செய்வது அறியாது திகைத்தாள்.
அப்போது இராவணன்,' இத்துன்பம் சீதையினாலே வந்தது' என்று எண்ணி," இப்போதே சீதையை வாளால் கொன்று, பகைவர்களுக்கு நான் தீங்கை விளைவிப்பேன்!" என்று சொல்லிவிட்டு, கொடிய வாளுடன் சீதை இருக்கும் அசோகவனத்தை நோக்கி ஓடினான்.
அவ்வாறு சீதையை வாளால் வெட்ட ஓடிய இராவணனை, உடனே அவனருகே இருந்த மகோதரன் தடுத்து நிறுத்தி, அவனுடைய திருவடிகளிலே விழுந்து வணங்கி," அரசே! நீர் சீதையை இப்போது கொன்று விட்டால் உமக்குப் பழி தான் வந்து சேரும். மேலும், காலகேயரின் தலைகளை குலத்துடன் வெட்டி எரிந்து, எண்ணற்ற வெற்றியை அடைந்த உமது வாள் போயும், போயும் ஒரு அபலைப் பெண்ணை வெட்டுவது சரியோ? அது கேள்விப்பட்டால் தேவர்களும், மும்மூர்த்திகளும் கூட உம்மைக் கண்டு வெட்கம் அடைவாரே ! அது மட்டுமா," இவன் அரக்கர் குலத்திற்கு ஏற்றவன் தானோ? அற்பன்" என்றல்லவா உம்மைக் கண்டு மாமுனிவர்களும் பரிகசிப்பர். ஆகவே, விஸ்ரவஸ் முனிவருக்கு மகனாகப் பிறந்து, பிரம்மனின் கொல்லுப் பேரனுக்கும் கொல்லுப் பேரனான நீர் சீதையைக் கொல்லும் இழிச் செயலை செய்து இறவாப் பழியைப் பெறுவது தகாது.
மேலும், நீர் இப்போது சீதையைக் கொன்றால், இராமன் மனம் வருந்தி, 'சீதையே இறந்து விட்டால், இனி ஏன் நான் யுத்தம் செய்ய வேண்டும்?' என்று நினைத்து லக்ஷ்மணனுடன் அயோத்தியைக்கு சென்று விட்டால், நீர் பிறகு எப்படி இந்திரஜித்தைக் கொன்ற லக்ஷ்மணனையும் உடன் அந்த இராமனையும் கொல்வாய்? அந்த இரு மனிதர்களையும் போர்க்களத்தில் கொள்வது அல்லவோ வீரம்? மேலும்,ஒருவேளை நீர் சீதையைக் கொன்றால், பின் யுத்த களத்தில் அந்த இராமனைக் கொன்ற பிறகு நீர் இலங்கைக்கு திரும்பி வந்து யாரை சேர்வீர்கள்? எனக்கு சொல்வீர்!" என்று கேட்டான்.
மகோதரனின் பேச்சைக் கேட்டதும், இராவணன் சீதையைக் கொல்லும் எண்ணத்தைக் கை விட்டான். மாறாக கோபத்துடன், " எனது புதல்வனின் தலையையும் பகைவர்களின் தலைகளையும் கொண்டு வராமல், நான் இலங்கைக்குத் திரும்ப மாட்டேன்! அந்த துஷ்டர்களின் தலையை கொண்டு வந்த பிறகே நான் எனது மகன் இந்திரஜித்துக்கு செய்ய வேண்டிய கரும காரியங்களைச் செய்வேன். அப்படி நான் வரும் வரையில், என் மகனின் இந்த உடம்பைப் பத்திரமாக மூலிகை கொண்ட எண்ணெய்த் தோணியில் கெடாமல் இட்டு வையுங்கள்!" என்று, இராவணன் ஏவலுருக்கு ஆணை பிறப்பித்தான்.