இராவணன் களங்கான் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இராவணன் களங்கான் படலம்

('மூலபலப்படை அழிந்தது உண்மை தானா?' என அறிய இராவணன் கோபுரத்தின் மீது ஏறி அரக்கர்படை அழிந்த அவலக்காட்சியைக் காணுகின்ற பகுதி. ஆதலால் , இது "இராவணன் களங்கான் படலம் " எனப் பெயர் படுகிறது)
தனது அரண்மனைக்கு வந்து சேர்ந்த இராவணன், தான் பெற்ற வெற்றியை நினைத்து மகிழ்ச்சியோடு இருந்தான். தனக்குப் போரில் அன்போடு உதவிய அரக்கர்களுக்கு எல்லாம் விருந்தளிக்க விரும்பினான். உடனே தேவர்களை விரைந்து அவன் வரவழைத்தான். வந்து சேர்ந்த தேவர்களை நோக்கி இராவணன்," உமது நாட்டில் உள்ள மிகச் சிறந்த போகத்தை இங்குள்ள வீரர்களுக்கு வழங்குவீர்! மாறாக குறைவு செய்தீர்களானால் கடுமையாக தண்டிக்கப் படுவீர்கள்!" என்று கட்டளை பிறப்பித்தான்.
வானவர்கள் இராவணனின் கட்டளைப்படியே கள்ளையும், மாமிசத்தையும், உண்பதற்கு ஏற்ற பிற பொருள்களையும், ஆடைகளையும், சந்தனத்தையும், மலர்களையும், குளிப்பதற்கு ஏற்ற குளிர்ந்த நீரையும், படுக்கையையும் கொண்டு வந்து அரண்மனையின் உள்ளும் புறமும் நிரப்பினார்கள். அரக்கர்கள் வானவர் கொண்டு வந்த வாசனைத் தைலத்தை நன்கு உடம்பிலே தேய்த்துக் கொண்டு, குளிர்ந்த நீரிலே குளித்தார்கள். பிறகு, மாமிசத்தையும் மற்ற உணவுப் பொருள்களையும் உண்டு கள்ளையும் குடித்தார்கள். அப்போது தெய்வப் பெண்கள் வந்து, அந்த அரக்கர்கள் தூங்குவதற்காக படுக்கைகளை விரித்துப் போட்டார்கள்.
தூக்கத்தை விரும்பாத அரக்கர்களுக்காகச் சில தேவலோகத்துக் கன்னியர்கள் பாடினார்கள்; சிலர் ஆடினார்கள்; அத்தெய்வப் பெண்களால் அரக்கர்களுக்குக் குறைவற்ற எல்லா இன்பங்களும் கிடைத்தன! அரச குலத்தில் பிறந்த அரக்கர்களும், அடிமையான அரக்கர்களும் தமக்குக் கிடைத்த இந்திர போகத்தை மனம் மகிழ்ந்து முழுவதுமாக அனுபவித்தார்கள்.
அப்போது இராவணனிடத்திலே வந்து தூதுவர்கள், மூலபலமும் மற்றும் அரக்கர் சேனைகளும் இராமரால் அழிந்துவிட்டதை, அவனுடைய காதில் இரகசியமாகக் கூறினார்கள். மேலும் அவர்கள் அவனிடம்," ஐயனே! நீர் போரிலே உமக்கு உதவி செய்த அரக்கர்களுக்கு எல்லாம் வர பலத்தினால், இந்திரபோகத்தை விருந்தாக அளித்தீர். அதற்கு இப்போது உரிய சமயம் இல்லை. மேலும், இவ்விந்திரபோகத்தை இராமரோடு போர் செய்த அரக்கர்களுக்கு எல்லாம் கொடுப்பதற்கு உம்மால் முடியாது. காரணம் அந்த அரக்கர்கள் எல்லோருமே யுத்த களத்தில் வீர மரணத்தை தழுவி விட்டார்கள். இந்த இலங்கையிலே, போருக்குச் செல்லாது இருந்தவர்களே, இப்போது இறந்து போகாமல் உயிரோடு இருக்கின்றார்கள்!" என்று கூறினார்கள்.
மற்றவர்களால் அடைய முடியாத மகிழ்ச்சியைத் தான் ஒருவனாகவே பெற்று இருந்த இராவணன், தூதுவர்களின் பேச்சைக் கேட்டுக் கோபத்துடனே அச்சமும் துன்பமும் கொண்டான். அவனுடைய செந்நிறக் கண்களில் இருந்து நெருப்புப் பொறிகள் தோன்றி வெளிப்பட்டன. அவனுடைய நாசியில் இருந்து நெடிய பெருமூச்சு ஒன்று புகையோடு வெளிப்பட்டுச் சென்றது. திகைத்துப் போய் இராவணன் அப்படியே எழுதி வைத்த சித்திரம் போலச் சமைந்தான்.
மீண்டும் இராவணன் சுயவுணர்வு பெற்ற போது அத்தூதுவர்களைப் பார்த்து," மூலபலமும் அவற்றோடு சென்ற வீரர்களும் என்னை விட மிகவும் வலிமை கொண்டவர்கள். அவர்கள் எப்போதுமே இறக்காத வரத்தையும் தன்மையையும் பெற்றவர்கள்! மனத்தால் எண்ணுவோம் என்றாலும், கடற்கரை மணலினும் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். அவர்களில் ஒருவருமே உயிர் பிழைக்காமல் இறந்தார்கள் என்று பொய்யாக இப்படிச் சொன்னீர் போலும்!" என்று இராவணன் அவர்களுடைய பேச்சை நம்பாது கூறினான்.
இராவணனுடைய பக்கத்திலே அப்போது நின்று இருந்த மாலியவான், அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு," மூலபலத்தோடு சென்ற அரக்கர்கள் எல்லோரும் இராமரால் மாண்டார்கள் என்பது ஒரு பெரிய செயலா? நடந்ததை ஓடி வந்த சொன்ன இந்தத் தூதுவர்கள் பொய் சொல்வார்களோ? இராமன் தான் அப்போதே பரம் பொருளின் ஸ்வரூபம் என்று சொன்னேனே! அவனால் கூடாத காரியம் தான் ஒன்று உலகத்தில் உண்டோ? விபீஷணனும் முன்பு இராமன் பாற்கடலில் துயில் உறங்கும் நாராயணன் என்று சாட்சியம் அளித்தானே. மேலும், முன்பு ஒரு சமயம் லக்ஷ்மணன் இந்திரஜித்தின் நாகாஸ்த்திரத்தால் தாக்கப் பட்டு மயங்கிக் கிடந்த போது, ஸ்ரீ இராமர் அழுது துடித்ததை தாங்க மாட்டாமல் கருடனே ஸ்ரீ இராமனின் சோகத்தை கண்டு ஓடோடி வந்து உதவி செய்தானே! இதனை நமது தூதுவர்கள் சொல்லக் கேட்டோமே. அப்படி இருக்க இனியும் ஸ்ரீ இராமனை மனிதனாக நினைப்பது சரியோ? மொத்தத்தில் இராவணா! நீ இதுவரையில் கண்ட அழிவுகள் யாவும் அந்த இராமனின் மனைவியான சீதையை நீ அபகரித்து வந்ததன் பலனே. அப்பலன் உன்னை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது பார்த்தாயா? உன்னால் உனது சுற்றமெல்லாம் கேடு அடைந்து விட்டது. இப்போதாவது சொல்வதைக் கேள் பேசாமல் சீதையை இராமனிடம் சேர்த்துவிட்டு நீயாவது பிழைத்துப் போ!" என்றான்.
மாலியவானுடைய வார்த்தை இராவணனுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அவன், " லக்ஷ்மணனை வேலால் கொன்று, அவனுடைய உயிரை யமனுக்குக் கொடுத்து விட்டேன். வானர சேனாதிபதிகள் அவனுக்கு உண்டான நிலையைக் கண்டு துன்பத்திலே ஆழ்ந்து இருக்கின்றார்கள். இராமன் அதனைப் பார்த்தால், நிச்சயமாக வருத்தம் தாங்காமல் இறந்து போவான். எனது மூலபலமும் துணைவர் சேனையும் அழிந்ததால் உண்டான துன்பம் என்னைச் சூழ்ந்தாலும் சூழட்டும். எப்படியும் வெற்றி என் பக்கத்தில் தான் இருக்கிறது!" என்றான்.
இராவணன் அவ்வாறு ஆணவத்தோடு சொல்லி முடித்த போது, போர்க்களத்தில் இருந்து வந்த தூதுவர்கள் அவனை நெருங்கி," ஐயனே! மாருதி கொண்டு வந்த மூலிகையின் காற்று உடம்பில் பட்டவுடனே லக்ஷ்மணன் உயிர் பெற்று எழுந்து விட்டான். மேலும், அவன் முன்பை விட அதிக வீரியத்துடன் காணப்படுகிறான். இது உண்மை! வானர சேனாதிபதிகள் யாவரும் அது கண்டு மகிழ்ந்து, அன்போடு அவனைத் தழுவிக் கொண்டார்கள். சென்று இதனை நீரே நேரில் காண்பீர்!" என்று தெரிவித்தார்கள்.
தூதுவர்கள் கூறியது உண்மையாக இருக்கக் கூடும் என்றே இராவணன் அந்தக் கணத்தில் முடிவு கட்டினான். முன்பு நாகபாசத்தாலும் பிரம்மாஸ்த்திரத்தாலும் உயிரொழிந்த லக்ஷ்மணன், பின் உயிர் பெற்று எழவில்லையோ? ஆகவே அவன் இந்த முறையும் உயிர் பெற்று எழுந்ததில், அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் எழவில்லை. ஆனால், தனது ஆயிரம் வெள்ளம் அரக்கச் சேனையும் இறந்து விட்டது என்பதை மட்டும் அவனால் நம்பவே முடியவில்லை. அதனை முழுவதும் பார்த்துத் தெரிந்து கொள்வதற்காக, அவன் உடனே இராஜகோபுரத்தில் ஏறி நின்று போர்க்களத்தைக் கண்டான். அங்கே மாண்டு கிடக்கும் அரக்கர் சேனையைக் கண்டதும், உண்மையிலேயே வருத்தம் அடைந்தான். அதே சமயத்தில் மாண்ட அரக்கர்களின் மனைவிமார்கள் கதறி அழுகின்ற காட்சியையும் கண்டான். மீண்டும் அவன் போர்களத்தை உற்று நோக்கினான். அங்கே இறந்தவர்களின் புண்களில் இருந்து இரத்தம் வெளிப்பட்டு ஆறாகப் பெருக, அந்த இரத்த ஆறுகளில் மூழ்கிக் கழிக்கும் பேய்க் கூட்டங்களைக் கண்டான். நரிகளின் குரல் பாட்டு ராகமாக அமைய, பல பேய்கள் தாம் கற்றுப் பழகிய தாளத்தைக் கொட்டி நிற்க, கொடிய அரக்கரின் யாக்கைகள் இராமபாணத்தால் இறந்தது பற்றி மகிழ்ந்து நாட்டியம் ஆடுவதைக் கண்டான். மாண்ட தம் கணவரின் பிணங்களைக் கவர்கின்ற பேய்களைத் தண்டிக்க நினைத்து அரக்கியர் அவற்றைத் துரத்த, அவைகள் வானில் ஓட, அங்கும் தொடர்ந்து சென்று அப்பேய்களைப் பற்றி, அவற்றின் கண்களைத் தோண்டி எறிந்ததையும் கண்டான். கடலிலே சென்று அரக்கர்களின் குருதி வெள்ளம் கலப்பதையும் கண்டான். அவற்றை எல்லாம் பார்த்த இராவணனுடைய கண்கள் கண்ணீர் வெள்ளத்தைப் பெருக்கின! மேலும்! இராவணன் அப்படிப் பார்த்த போது போர்க்களத்தில் மிகுதியாக மகிழ்ந்து ஆரவாரித்துக் கொண்டு இருந்த வானர வீரர்களைக் கண்டான்; அச்சம் நீங்கித் தமது கண்களை நன்கு விழிக்கும் தேவர்களின் மகிழ்ச்சியைக் கண்டான்! அவற்றையும் கண்ட இராவணன் அதிகமான வருத்தம் கொண்டான். அந்த வருத்தத்துடனே கோபுரத்தை விட்டுக் கீழிறங்கி, இராவணன் நேரே அத்தாணி மண்டபத்தை அடைந்தான்.