இராமர் தேர் ஏறு படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இராமர் தேர் ஏறு படலம்
(சிவபெருமான் ஏவ, இந்திரன் தேர் அனுப்பினான்; அவனுடைய தேரோட்டியாகிய மாதலி தேர் கொண்டு வந்தான். தேரின் சிறப்பைக் கவிக்கூற்றால் உணர்கிறோம். அரக்கர் மாயையால் வந்த தேரோ என முதலில் இராமன் ஐயப்பட்டான். பின்னர் உண்மை தெரிந்து, தேவர் அனுப்பிய தேரில் ஏறினான் பெருமான். ஆக, இவையே இப்படலம் கூறும் செய்திகள் ஆகும்)
வானர சேனை இராவணனைக் கண்டு அஞ்சி நின்ற போது, தேவர்களுக்காக பாற்கடலில் இருந்து துயில் நீங்கி எழுந்த திருமாலைப் போல ஸ்ரீ இராமபிரான் விரைந்து எழுந்து, " பயப்படாதீர்கள்!" என்று அபயம் அளித்தார். பின்பு, அவர் இடையின் வலப்புறத்திலே வாளை எடுத்துக் கட்டிக் கொண்டு," இன்றே சீதையின் துயரத்துக்கும், தேவர்களின் துன்பக் கடலுக்கும் முடிவு காலமாகும்!" என்றார்.
தமது மார்பிலே இராமர் கவசம் அணிந்தார். இரண்டு பக்கமும் முதுகிலே இரண்டு அம்பறாத் தூணிகளைக் கட்டிக் கொண்டார். கையுறையை அணிந்து கொண்டார். வில்லையும் எடுத்துக் கொண்டார். அவ்வாறு போருக்கு தயாராகி விட்டார் ஸ்ரீ இராமர்.
அப்போது சிவபெருமான் தேவர்களிடம்," தேவர்களே! இப்போது தொடங்கியுள்ள இந்தப் போர் இத்துடன் முடிந்து விடும். இனி வெற்றி ஸ்ரீ ராமருடையதே! இது உண்மை. இனி நீங்கள் அச்சம் நீங்குவீர்களாக! உடனே இராமபிரான் ஏறிப் போர் செய்வதற்குப் பொன்மயமான தேரை அவருக்குக் கொடுத்தருளுங்கள்!" என்று கட்டளை பிறப்பித்தான்.
தேவர்கள் அதற்கு உடன்பட்டு இந்திரனைப் பார்த்து," இது செய்யத் தக்கதே!" என்று கூறினார்கள்.
இந்திரன் உடனே மாதலி என்பவனை நோக்கி," மூவுலகத்தையும் முந்தும் தன்மை பெற்ற சிறந்த இரதத்தை ஒரு கணத்தில் இராமபிரானுக்குக் கோவிலாகச் செய்வேன். விரைந்து தேரை அலங்கரித்துக் கொண்டு வருவாய்!" என்று கட்டளை பிறப்பித்தான்.
மறுகணத்தில் மாதலி பூலோகமே எழுந்து படர்ந்தது போன்று அமைந்த பொன்னாலான தேரைக் கொண்டு வந்தான் அத்தேர் சூரிய சந்திர மண்டலங்களும் தனது அடிப்பகுதி என்று சொல்லும் படியாக வானத்தில் படிந்து நின்றது. குலமலைகளின் வலிமையைக் கொண்டு செய்த சிறந்த கொடிஞ்சும், பூமியின் வலிமை உள்ள சக்கரங்களுடனே அச்சும் கொண்டது அத்தேர். மேலும், கொடிய கோபமுள்ள அஷ்டமகாநாகங்களையும் வலிமை உள்ள கயிறாகக் கொண்டு கட்டப் பெற்றது; விலை மதிக்க முடியாத ரத்தினங்களைக் கொண்டது; திசைகளையே தனது சுவர்களாகக் கொண்டது; மேகக் கூட்டங்களையே கொடியாகப் பெற்றது; அழியாத பஞ்ச பூதங்களின் வலிமையைக் கொண்டு திகழ்வது; யுகாந்த காலத்துக் கடல் பொங்கி எழுந்தது போன்ற பேரொலியை உடையது; பிரமன் தோன்றிய தாமரை மொட்டைப் போன்ற மொட்டை உடையது; அகலத்தில் ஆதிசேஷனைப் போன்றது; நான்கு வேதங்களையும், நிறைந்த வேள்விகளையும்; ஏழு கடல்களையும்; ஏழு மலைகளையும்; ஏழு உலகங்களையும்; மூன்று அக்கினிகளையும், மாதவத்தையும், ஐம்புலன்களையும், ஐந்து இந்திரியங்களையும்,நான்கு திசைகளையும்; மூன்று மதில்களையும், தசவாயுக்களையும்; பகலையும், இரவையும் போன்று; அழியாத தன்மையையும்; மிக்க வலிமையையும், மிக்க வளர்ச்சியையும், சலிப்பற்ற வேகத்தையும் கொண்ட குதிரைகள் பூட்டப் பெற்றது!
மாதலி கொண்டு வந்த தேரை தேவர்கள் வணங்கி," வலியவனே! எங்கள் வேந்தனாகிய இந்திரனது கட்டளையினால், நீ இங்கே வந்து இருக்கின்றார். இராமருக்கு வெற்றியைத் தந்து, அதனால் எங்களுக்கு அருள் செய்வாய்!" என்று கூறி, பூக்களைத் தூவினார்கள்.
தேவர்கள் வழிபட்டு முடித்ததும், மாதலி இராமபிரானை நோக்கி தேரை விரைந்து செலுத்தினான். இமைப்பதற்கு முன்பாகவே அத்தேர் ஸ்ரீ இராமரின் முன்னே வந்து நின்றது. அத்தேரைக் கண்ட இராமபிரான்,' சூரியனுடைய ஒற்றைச் சக்கரங்கள் கொண்ட தேரோ என்றால், இதற்குப் பல சக்கரங்கள் உள்ளதே! ஆதலால் இது சூரியனுடைய தேர் இல்லை! யுகமுடிவில் தோன்றுகின்ற ஊழித்தீயின் ஒளியும் இது இல்லை. இது ஓரிடத்தில் நிற்காமல் சஞ்சரிப்பதால், நெடிய மேருமலையும் இல்லை. ஒருவேளை இது மும்மூர்த்திகளின் விமானமாக இருக்கலாமோ?' என்று வியப்புற்றார்.
தாம் கொண்ட வியப்புடன் அவர் மாதளியைப் பார்த்து," யார் சொல்ல இத்தேரை நீ கொண்டு வந்தாய்?" என்று கேட்டார்.
அதற்கு மாதலி," தாயின் கருணை கொண்டவரே! இந்தத் தேர் மும்மூர்த்திகளின் அருள் ஒரு சேர உருவானது. இது ஆயிரம் கோடி சூரியன்களுக்கு ஒப்பானது. ஊழிக் காலத்திலும் அழியாத தன்மை உடையது இத்தேர். உமது அம்பை விட மிக வேகமாகச் செல்லக் கூடியது. எல்லா இடத்திலும் அது காற்றுள்ள இடமோ? இல்லை கடலோ? இல்லை ஆகாயமோ? இல்லை பூமியோ எங்கு வேண்டினும் அதீத வேகத்தில் செல்லக் கூடிய இயல்பைக் கொண்டது. இதனை ஈசன் உமக்கு அளிக்குமாறு இந்திரனிடம் சொல்ல, இந்திரனின் ஆணைப் படி நான் இங்கே வந்து உள்ளேன்!" என்று பதில் உரைத்தான்.
மாதலியின் பேச்சைக் கேட்டதும் ஸ்ரீ இராமர்," இதுவும் கூட அரக்கர்களின் மாயச் செயலாக இருக்குமோ?" என்று சற்றே தனது மனதில் சந்தேகம் கொண்டார். அப்போது தமது அருகில் வந்து நின்ற மாருதியையும், லக்ஷ்மணனையும் நோக்கி இராமர், " இந்தத் திருத் தேர் பற்றி உங்களுடைய அவிப்பிராயம் என்ன?" என்று கேட்டார்.
அவரது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட லக்ஷ்மணனும், மாருதியும் ஸ்ரீ இராமபிரானை வணங்கி விட்டு," ஐயனே! இத்தேர் தேவேந்திரனின் தேர் தான். அதில் தங்களுக்கு ஐயம் வேண்டாம்" என்றார்கள்.
அதனால் சந்தேகம் தெளிந்த ஸ்ரீ இராமர், மீண்டும் ஜாம்பவானிடமும் அந்தத் தேர் பற்றிய அவிப்ராயம் கேட்டார். ஜாம்பவானும் அத்தர் இந்திரனுடைய தேர் தான் என்று தனது அவிப்பிராயத்தை முன் வைத்தான். அதனால், இராமர் மேலும் அதிகமாகத் தெளிந்து மாதலியைப் பார்த்து," உனது பெயரைச் சொல்க!" என்று கேட்டார்.
"மாதலி என்று என்னைச் சொல்வார்கள்!" என்று உடனே சொல்லி மாதலி, அவரை வணங்கினான். பிறகு அவனுக்கு பதில் வணக்கத்தை தெரிவித்து விட்டு ஸ்ரீ இராமர் நல்வினை மகிழ்ந்து துள்ளவும், தேவர்களும், முனிவர்களும் கைகூப்பி வணங்கவும் இனிதாக தேவேந்திரன் தனக்குக் கொடுத்து அனுப்பிய தேரில் ஏறிக் கொண்டார். பிற்பாடு, ஸ்ரீ இராமபிரானுக்கு தேவர்கள் அனைவரும் மலர் தூவி விடை கொடுக்க அந்தத் தேர் யுத்தகளம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.