இராம-இலக்குமணர்கள் பிறத்தல்

இந்திரனின் நண்பரும், அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட கோசல நாட்டின் இச்வாகு குல மன்னருமான தசரதனின் மூன்று மனைவியர் கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயி ஆவார். இவ்விணையர்களுக்கு நீண்டகாலமாகப் பிள்ளைப்பேறு இல்லாததால், தன் குல குருவான விசிஷ்டரின் ஆலோசனையின் படி, விபாண்டக முனிவரின் மகன் ரிஷ்யசிருங்கரைக் கொண்டு, பிள்ளைவரம் வேண்டிச்செய்த பெரும் வேள்வியில் கிடைத்த பாயாசத்தை, தசரதன், தம் மூன்று மனைவியர்களுக்கு உண்ணக் கொடுத்தான். அதன் காரணமாகவே கௌசல்யாவிற்கு இராமனும், சுமித்திரைக்கு இலக்குமணன் மற்றும் சத்துருக்கனன் எனும் இரட்டையரும், கைகேயிக்கு பரதனும் பிறந்தனர்.
இராமர் பிறந்த நாளை இந்துக்கள் இராம நவமி விழாவாகக் கொண்டாடுகின்றனர். மேலும் இராமர் பிறந்த அயோத்தியை ராம ஜென்ம பூமியாக வழிபடுகின்றனர்.
குல குருவான வசிட்டரிடம் இராமன் முதலானவர்கள் அனைத்துக் கல்விகளையும் கற்றனர். இந்நிலையில் தசரதனின் அரசவைக்கு வந்த விசுவாமித்திரரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், குல குரு வசிட்டரின் அறிவுரையின் படியும், விசுவாமித்திரரின் வேள்வியைக் காக்க இராமரையும், இலக்குமணனையும், விசுவாமித்திரருடன் காட்டிற்கு அனுப்புகிறார் தசரதன்.