இந்திரஜித்து வதைப் படலம்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

இந்திரஜித்து வதைப் படலம்

(இந்திரஜித்து இராவணனிடம் சென்று போரில் நடந்த விஷயங்களை எல்லாம் சொன்னான். பிறகு சீதையை விட்டு விடுமாறும் கேட்டுக் கொண்டான். அதற்கு இராவணன் இந்திரஜித்தை இழித்துக் கூறி தானே யுத்தம் செய்யப் புறப்பட்டுச் சென்றான். ஆனால், இந்திரஜித்தோ அவ்வாறு போருக்கு செல்லவிருந்த தந்தையை தடுத்து நிறுத்தி தானே மீண்டும் போருக்குச் சென்று லக்ஷ்மணனுடன் கடும் போர் செய்து இறுதியில் வீர மரணம் அடைகிறான். மறுபுறம், இந்திரஜித்தின் துண்டு பட்டத் தலையை அங்கதன் கொண்டு சென்று ஸ்ரீ இராமரின் கால்களில் சமர்ப்பிக்கிறான். அது கண்ட ஸ்ரீ இராமர், அங்கதன் மூலமாக நடந்ததை கேள்விப் பட்டு லக்ஷ்மணனை தழுவிக் கொள்கிறார். இவையே இப்படலத்தில் காணக் கிடைக்கும் செய்திகள் ஆகும்)
இராவணன், அவனுடைய மாளிகையில் இந்திரஜித்து வெற்றிகரமாக வேள்வியையும் முடித்து விட்டு அத்துடன் இராமலக்ஷ்மணர்களையும் வதைத்து விட்டு வருவான் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தான். ஆனால், அதற்கு மாறாக இந்திரஜித்து விபீஷணனின் தண்டத்தில் இருந்து தப்பித்து, லக்ஷ்மணன் அவன் மீது தொடுத்த எண்ணற்ற பாணங்களின் காரணமாக இரத்தக் காயங்களுடன் மணிமுடியும் இழந்த நிலையில் வந்து நின்றான்.
இந்திரஜித்தை அந்தக் கோலத்தில் கண்ட இராவணன் துடித்துப் போனான். அக்கணம் இந்திரஜித்திடம் இராவணன்," மகனே! நீ தொடங்கிய யாகம் முடியவில்லை என்பதை உன் கோலமே எனக்குக் காட்டுகிறது. உண்மையில் நடந்தது என்ன? உடனே சொல்?" என்று கேட்டான்.
அக்கணமே தந்தைக்கு பதில் சொல்லத் தொடங்கி இந்திரஜித்து, " நான் ஆராய்ந்து செய்த மாயச் செயல்களை எல்லாம் உன் தம்பியே பகைவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விட்டான். அதனால் அப்பகைவர்கள் தமது வானர சேனையுடன் நிகும்பலையில் புகுந்து, எனது யாகத்தைக் கெடுத்து விட்டார்கள். அது கண்ட நான் சினம் பொங்கினேன். உக்கிரமான போரைத் தொடங்கி, முத்தேவர்களின் அஸ்த்திரங்களையும் பகைவர்களின் மேல் தொடுத்து விட்டேன். ஆனால் என்ன? அவற்றை எல்லாம் அந்த லக்ஷ்மணன் கணப் பொழுதில் தடுத்து விட்டான். மேலும், நான் பிரயோகித்த நாராயண அஸ்த்திரமும் அந்த லக்ஷ்மணனை ஒன்றும் சேதப் படுத்தாமல் மூன்று முறை அவனை வலம் வந்து மறைந்தது. அதற்கு மேல் அவனை நான் எந்த அஸ்த்திரம் கொண்டு எதிர்ப்பது? ஐயனே, சீதையை தாங்கள் கவர்ந்து வந்த தீவினையால் வலிமையான பகைவர்களை தேடிக் கொண்டீர்கள். அதிலும், அந்த லக்ஷ்மணன் கோபம் கொண்டால் மூன்று உலகத்தையும் அவன் ஒருவனாக அழித்து விடுவான். நான் அவன் மீது தொடுத்த அனைத்து ஆயுதங்களையும் முறியடித்து கொஞ்சமும் சோர்வு அடையாமல் இன்னமும் கூடத் துணிவுடன் போர் செய்ய வலிமையுடன் என்னைக் கொல்வதற்காக களத்தில் நிற்கிறான். அதற்காக நான் பயந்து யுத்த களத்தில் இருந்து பின் வாங்கி வந்து விட்டதாக தாங்கள் நினைக்க வேண்டாம். நீர் மட்டும் சீதையிடம் கொண்டுள்ள ஆசையை விட்டு விடுவீரானால், இராமலக்ஷ்மணர் நம்மிடம் கொண்டுள்ள கோபத்தை விட்டு விடுவார்கள். போர் புரிந்து நம்மை கொல்லாது திரும்பியும் சென்று விடுவார்கள். நீர் அவர்களுக்கு செய்த தீங்கையும் பொறுத்துக் கொள்வார்கள். என் உயிரின் மீது கொண்டுள்ள ஆசையினாலோ, அது போய் விடப் போகின்றதே என்ற அச்சத்தினாலோ இப்படி எல்லாம் நான் சொல்லவில்லை. உம்மீது நான் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே இதனைச் சொன்னேன்!" என்று சொல்லி முடித்தான்.
இந்திரஜித்தின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் தனது இருபது தோள்களும் குலுங்க சிரித்தான். பின்பு இந்திரஜித்திடம் ," மகனே! நீ மனிதனைக் கண்டு அச்சம் கொண்டு விட்டாய் போலும். விபீஷணனை யுத்த களத்தில் கண்ட மாத்திரத்தில் அவனது கோழைத்தனம் உன்னையும் பிடித்து விட்டது போலும். அஞ்சாதே. வருந்தாதே. நானே இந்த யுத்தத்தை சமாளித்துக் கொள்கிறேன். நீ இனிமேல் யுத்த களத்திற்குப் போக வேண்டாம். உங்களை எல்லாம் நம்பித் தான் நான் உள்ளேனா என்ன? எனது வலிமை எனக்குத் தெரியும். நீ மட்டும் இது போன்ற அறிவில்லாத உபதேசங்களை எனக்குச் செய்யாதே. நிச்சயம் என்னால் பகைவர்களை வெல்ல முடியும். அதை விடுத்து ஒரு போதும் சீதையை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். அது போல உயிருக்கு பயந்து அந்த மனிதர்களின் கால்களிலும் நான் விழ மாட்டேன். மேலும், இறப்பு என்பது நிச்சயம் வந்து தான் ஆகும். அது எல்லோருக்கும் பொதுவானதே. அது எப்படியும் இந்த உலகத்தில் பிறந்த யாரையும் விடப் போவதில்லை. அது என்னைப் பொறுத்த வரையில் வீர மரணமாக இருந்தால் நல்லது தான். அதனால், நானே யுத்தகளத்திற்குச் செல்கிறேன். நீ போருக்கு சென்று களைப்புடன் வந்து உள்ளாய். அதனால், நன்றாக ஓய்வெடுத்துக் கொள்" என்று சொல்லிவிட்டுத் , தான் உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்தான்.
பிறகு பக்கத்தில் நின்று இருந்த ஏவலர்களைப் பார்த்து," எனது தேரைக் கொண்டு வருக!" எனக் கட்டளை பிறப்பித்தான் இராவணன். உடனே தந்தையின் காலடிகளில் விழுந்து வணங்கி எழுந்து இந்திரஜித்து," தந்தையே! கோபம் தணிந்து அருள்க. நான் கூறிய வார்த்தைகளை அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்க. நான் இருக்கும் போது தாங்கள் யுத்த களத்திற்குச் செல்வது முறையாகாது. அதனால், தங்கள் ஆசிகளுடன் நானே யுத்த களம் புறப்பட்டுச் செல்கிறேன்" என்றான்.
பிறகு அவ்வாறு கூறிய இந்திரஜித்து தனது மற்றொரு திவ்விய ரதத்தில் ஏறிக் கொண்டு அரக்கிகள் பலர் கண்ணீர் வடிய வழி அனுப்ப, யுத்த களம் அடைந்தான்.
போரிலே இந்திரஜித்து தோற்று ஓடி மறைந்தது கண்ட லக்ஷ்மணன் விபீஷணனைப் பார்த்து ," விபீஷணா! தோற்று வானில் சென்று மறைந்த இந்திரஜித்து இதுவரை ஒன்றும் மாயத்தை செய்யக் காணோம். ஆகவே, அவன் இலங்கைக்கு ஓடிப் போய் இருக்க வேண்டும்!" என்றான்.
அதே சமயம் போர்களத்துக்குத் தெய்வத் தேரிலே இந்திரஜித்து மீண்டும் திரும்பி வந்து கொண்டு இருந்தான். அவனுடைய தேர் ஒலியை லக்ஷ்மணன் கேட்டான்.
வானரர்களின் குடல் குலையும், திசை யானைகள் நிலை கெட்டு ஓடவும், கடல் கலங்கவும், உலகம் வருந்தவும், தரைக் குழி படவும் இந்திரஜித்தின் பெரிய தெய்வீகத் தேர் லக்ஷ்மணன் முன்னாள் வந்து நின்றது. இந்திரஜித்து அவ்வாறு மீண்டும் போருக்கு வந்ததைக் கண்ட அரக்கர்கள் வானரர்கள் நடுங்க ஆரவாரம் செய்தனர்.
அக்கணமே இந்திரஜித்து தனது யுத்தத்தை மீண்டும் தொடங்கினான். லக்ஷ்மணன் மீது சாரை, சாரையாக அம்புகளைப் பிரயோகித்தான். அக்கணமே, லக்ஷ்மணன் மீண்டும் தனது வில்லில் இருந்து அம்பு மழையைப் பொழிந்து இந்திரஜித்தின் அஸ்த்திரங்களை முறி அடித்தான். அவர்களுக்குள் யுத்தம் வெகு நேரம் நடந்தது. அதனால், வெற்றி தோல்வி யார் பக்கம் என்று அறியாமல் வானவர்களே திகைத்து நின்றனர்.
மறுபக்கம் அனுமான் இளையபெருமாளிடம் வந்து," ஐயனே! இந்திரஜித்து திவ்விய ரதத்தில் இருந்து கொண்டு யுத்தம் செய்ய தாங்கள் தரையிலே நின்று போர் செய்தல் கூடாது. அது சரி சமமான யுத்தம் இல்லை" என்று கூறி, தனது வலிய தோள்களில் லக்ஷ்மணனை ஏற்றிக் கொண்டான். அப்போது இன்னும் வசதியாக லக்ஷ்மணன் யுத்தத்தை மேற்கொண்டான்.
அப்போது விபீஷணன் சட்டென்று இளைய பெருமாளை நெருங்கி," இப்போது இந்திரஜித்தை விட்டு விட்டால், பிறகு அவனை வெல்வது கடினம். அது மட்டும் அல்ல, இந்திரஜித்தை பகலில் மட்டுமே கொல்ல இயலும். இன்னும் சிறிது நேரத்தில் சூரியன் உதயமாகிவிடுவான். அதனால், லக்ஷ்மணா இவன் எங்கும் தப்பித்துப் போகாதவாறு உடனே இவனைக் கொன்று விடு" என்றான்.
விபீஷணின் வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன் இன்னும் அதிக வேகத்துடன் இந்திரஜித்தை தாக்கினான். இந்திரஜித்தும் சளைக்காமல் பாணம் தொடுத்துக் கொண்டே முன்னேறினான். இவர்கள் இருவரது யுத்தத்திலும் எண்ணற்ற அரக்கர்களும், வானர வீரர்களும் இறந்தனர். லக்ஷ்மணன் விடுத்த பல அம்புகள் இந்திரஜித்தின் கவசத்தை உடைத்து ஊடுருவிச் சென்றது. அதனால், இந்திரஜித்து மிகவும் தளர்ந்தான். அவன் பதிலுக்கு எரிகின்ற கணைகளை லக்ஷ்மணன் மீது தொடுக்க அவை குறித்த இடத்திலே சென்று பாயாமல், இடை இடையே தளர்ந்து தரையில் விழுந்தன. அது கண்ட தேவர்கள் உவகையினால் பெரிதும் ஆரவாரம் செய்தார்கள்.
தனது வில்லின் வலிமை ஒடுங்கி விட்டதைக் கண்டதும் இந்திரஜித்து சற்றே தடுமாறிப் போனான். ஆயினும், அவன் அடுத்த வினாடியே மீண்டும் துணிவு கொண்டான். அப்போது பரமசிவன் அவனுக்குக் கொடுத்த வேலை ," விரைந்து சென்று லக்ஷ்மணனைக் கொன்று வா" என்று கூறி லக்ஷ்மணன் மீது ஏவினான். அதனையும் கூட தேவர்கள் வியக்கும் வண்ணம் ஈசனின் அஸ்த்திரம் கொண்டே லக்ஷ்மணன் முறியடித்தான். மேலும், தொடர்ந்து இந்திரஜித்தின் மீது எண்ணற்ற பாணங்களை லக்ஷ்மணன் தொடுத்தான். அதனால், இந்திரஜித்து தனது அம்புறாத் துணியை இழந்தான். பின்னர் தனது தேர் பாகனை இழந்தான். அவ்வாறு தேர் பாகனை இழந்த மாத்திரத்தில் இந்திரஜித்தின் தேர் தறிகெட்டு ஓடத் தொடங்கியது.
அப்போது தேர் பாகன் இல்லாமல் இந்திரஜித்தே அவனது தேரை செலுத்திக் கொண்டே யுத்தமும் செய்தான். அக்கணம் அவன் உடலில் பதிந்து இருந்த லக்ஷ்மணனின் பாணங்களை பிடுங்கி அங்கு இருந்த வானர வீரர்கள் மீதே அதனை எறிந்து கொன்றான்.
அக்கணம் இளையபெருமாளே இந்திரஜித்தின் ஆற்றலைக் கண்டு," இவன் வீரத்தின் விளை நிலம். பல கோடி அம்புகள் இவனது உடலைத் துளைத்த போதிலும். மிகுந்த துணிச்சலுடன் இவன் போர் செய்யும் விதத்தைக் காணும் போது இவனை என்னாலேயே பாராட்டாமல் இருக்க முடியவில்லையே!" என்று கூறி வியந்தான். அத்துடன் தனது உடம்பில் தைத்து இருந்த அம்புகளை இந்திரஜித்து பிடுங்கி எறியும் போது அவனது கைகள் சிறிதும் நடுங்காததைக் கண்டு தேவர்களும் வியந்தார்கள்.
அச்சமயத்தில் சூரியனும் வானத்தில் உதயமானான். பொழுது பளபளவென்று விடிந்தது. அதன் காரணமாக, அரக்கர்களின் ஆற்றல் மேலும் குறைந்தது அத்துடன் இந்திரஜித்தும் அதிகம் சோர்வு அடைந்தான். அதனால் தன்னையே அவன் நொந்தும் கொண்டான்.
அப்போது மீண்டும் விபீஷணன் லக்ஷ்மணனிடம்," சிவபெருமான் கொடுத்த தேரும், வில்லும் இவனது கைகளில் இருக்கும் வரையில் இவனை யாராலும் கொல்ல முடியாது" என்றான்.
விபீஷணனின் கூற்றைப் புரிந்து கொண்ட லக்ஷ்மணன், அக்கணமே சக்தி வாய்ந்த அஸ்த்திரம் ஒன்றைப் பயன் படுத்தி ஒரே சமயத்தில் இந்திரஜித்தின் ரதத்தையும், அவனது வில்லையும் உடைத்தான்.
தாம் தங்கியுள்ள மரம் கோடாலியினால் அடிப் பகுதி வெட்டப் பட்டு முழுவதும் அழிந்து போகவே சிதறிப் போகின்ற பறவையைப் போல, தேர் அழிந்தவுடனேயே அவனது ரதத்தில் இருந்த குதிரைகள் அனைத்தும் சிதறி ஓடியது.
தனது தேர் அழிந்தது கண்டதும் இந்திரஜித்து லக்ஷ்மணன் மீது மிகவும் கோபம் கொண்டான். அழிந்த தேரில் இருந்து எஞ்சிய ஆயுதங்களை எல்லாம் லக்ஷ்மணன் மீது வீசினான். அந்த ஆயுதங்கள் அனைத்தையும் லக்ஷ்மணன் எளிதில் தனது பாணம் கொண்டு முறி அடித்தான். இதற்கு மேலும், லக்ஷ்மணனை சமாளிக்க முடியாது என்று உணர்ந்த இந்திரஜித்து மாய யுத்தம் செய்ய சித்தம் கொண்டான். அக்கணமே, வானத்தில் சென்று மறைந்து கொண்டு பேரொலி எழும்ப சிரித்தான். அத்துடன் தனது மாயையினால் கல் மலையை வானரர்கள் மீது பொழிந்தான். அதனால் எண்ணற்ற வானர வீரர்கள் மாண்டனர். அத்துடன் எட்டுத் திசைகளிலும் தோன்றி மாயையினால் அவனுக்குக் கிடைத்த இன்னொரு வில்லைக் கொண்டு வானர வீரர்கள் மீது மழை போல அம்புகளைத் தொடுத்தான். அப்போது மேகக் கூட்டங்களுக்கு இடையில் இந்திரஜித்தின் குருதி வழியும் மேனியை கண்டான் லக்ஷ்மணன், அக்கணமே சீற்றம் கொண்டு திவ்விய அஸ்த்திரங்களை பிரயோகித்து இந்திரஜித்தின் வலது கையை துண்டித்தான்.
அப்போது இந்திரஜித்தின் வலக் கை பூமியில் வந்து விழுந்தது. அது கண்ட அரக்க சேனை கலக்கம் கொண்டு செய்வது அறியாது நின்றது. மறுபுறம் வானர வீரர்களோ இந்திரஜித்தின் துண்டிக்கப் பட்ட வலது கையை பார்த்து குதுகலத்துடன் காணப்பட்டனர். அந்தக் குதுகலத்தில் எண்ணற்ற அரக்க வீரர்களை மலைகளாலும், மரங்களாலும் அடித்தே வானர வீரர்கள் கொன்றார்கள். அதனால், அரக்கர்களின் பிண மலை போர்க்களம் முழுக்கக் காணப்பட்டது.
அப்போது இந்திரஜித்து மிகுந்த கோபத்துடன் ஈசன் கொடுத்த சூலாயுதத்தை தனது இடது கையில் ஏந்திக் கொண்டு லக்ஷ்மணன் முன்னாள் தோன்றி," லக்ஷ்மணா! நான் உன்னைக் கொல்லாமல் இறக்க மாட்டேன்" என்று கூறிய படி லக்ஷ்மணன் மீது வீசினான். அப்போது சிவனின் அந்தச் சூலம் நெருப்பை உமிழ்ந்து கொண்டு லக்ஷ்மணன் மீது வேகமாக வந்தது. அக்கணமே லக்ஷ்மணன் 'இனி இவனது தலையை துண்டிக்கும் காலம் வந்து விட்டது' எனக் கூறிக் கொண்டான். பிறகு தெய்வ அஸ்த்திரம் ஒன்றை கணப் பொழுதில் தனது வில்லில் ஆவாகனம் செய்து ," இராமபிரானே பரம் பொருள் என்றால் இந்திரஜித்தைக் கொல்க" எனக் கூறி, அந்த ஆவாகனம் செய்யப்பட்ட திவ்ய அஸ்த்திரத்தை இந்திரஜித்தின் கழுத்தை நோக்கி செலுத்தினான் .அவ்வாறு லக்ஷ்மணனால் பிரயோகிக்கப் பட்டு விரைந்து வந்த அந்த திவ்விய அஸ்த்திரம் சிவனின் அந்த சூலாயுதத்தையே தாக்கி அழித்துவிட்டு, மேலும் அதீத சீற்றத்துடன் வந்து இந்திரஜித்தின் தலையை துண்டித்துப் போட்டது. அத்துடன் அவனது உடலும் தரையிலே விழுந்தது.
இந்திரஜித்தின் தலை துண்டிக்கப் பட்டு பூமியில் வந்து விழுந்ததைக் கண்ட எஞ்சிய அரக்கர்கள் சிதறி ஓடினார்கள். அவர்களை வானர வீரர்கள் துரத்தி, துரத்தி வேட்டை ஆடினார்கள். அக்கணம் இந்திரஜித்தை வதைத்த லக்ஷ்மணன் மீது தேவர்கள் வானில் இருந்த படி பூக்களை பொழிந்தனர்.
அப்போது அங்கதன் விரைந்து வந்தான், இந்திரஜித்தின் துண்டிக்கப் பட்ட தலையை கைகளில் எடுத்துக் கொண்டான். வானர வீரர்கள் தொடர அந்தத் தலையை ஸ்ரீ இராமர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து சென்று அவரது காலடியில் சமர்பித்து நடந்த விவரத்தைக் கூறினான். அவ்வாறு அங்கதன் நடந்த விவரங்கள் அனைத்தையும் ஸ்ரீ இராமரிடத்தில் கூறி முடித்த பொழுது லக்ஷ்மணனும், அனுமான் மற்றும் விபீஷணனுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
அங்கதன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ இராமர். லக்ஷ்மணனை பெருமையுடன் பார்த்து, அவனை கட்டித் தழுவிக் கொண்டார். பிறகு விபீஷணனை அருகில் அழைத்து அங்கு நின்று இருந்த அனைவரிடமும் ," நீங்கள் அனைவருமே இன்று யுத்த களத்தில் சிறப்புடன் போர் புரிந்தீர்கள். அதனை நான் மறுக்கவில்லை. ஆனால், இந்த யுத்தத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் இதோ நிற்கும் இந்த விபீஷணன் தான்" எனக் கூறி விபீஷணனை பெருமை படுத்தினார். அதனால் விபீஷணன் மிகவும் மகிழ்ந்து, ஸ்ரீ இராமரை வணங்கி நின்றான்