அணி வகுப்புப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
அணி வகுப்புப் படலம்
(மகுட மணிகளை இழந்த இராவணன் சோகத்தால் துயில் பெறாது மஞ்சத்தில் புரண்டான். அப்போது சார்த்தூலன் என்னும் ஒற்றன் நுழைந்தான். வானரப் படைகள் இலங்கையின் வாயில்கள் தோறும் முற்றுகைக்காகப் பகிர்ந்தனுப்பப்பட்டுள்ள
செய்தியை உரைத்தான் ஒற்றன். உடனே, இராவணன், அமைச்சர்களோடு ஆய்வு நிகழ்த்தினான். மாலியவான் மீண்டும் அறம் உரைத்தும் வீணாகிறது. இராவணன் தன் சேனைகளை அணிவகுத்து இன்னார் தலைமையில் இத்தனை வெள்ளம்
சேனையோடு, இந்த இந்தத் திசையில் நிற்க என்று ஆணையிடுகிறான். இந்நிகழ்ச்சிகளைக் கூறுகிறது இப்படலம்)
சூரிய மைந்தன் சுக்கிரீவனால் மகுட பங்கம் அடைந்த இராவணன், வளைந்த தாமரை போல் முகங்கள் கவிழ்ந்த வண்ணம் கோபுரத்தின் உச்சியை விட்டுக் கீழே இறங்கி, நேரே அரண்மனையின் உள்ளே நுழைந்தான். தனக்கு சுக்கிரீவனால் நேர்ந்த அவமானத்தின் காரணமாக அவனது மனம் எப்போதும் போல இசை, நாடகம் போன்ற கேளிக்கைகள் எதிலும் நாட்டம் கொள்ளவில்லை , அதே நேரத்தில் சஞ்சலம் கொண்டவனாக அவனது படுக்கை அறைக்குச் சென்று, அங்கு இருந்த தனது படுக்கையில் படுத்துக் கொண்டான். அப்போது தனக்கு அந்த நாளில் ஏற்பட்ட இழி நிலையை எண்ணி வருந்தியவனாக படுக்கையில் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தான்.
இராவணனின் நிலை இப்படி இருக்கையில், சார்த்தூலன் என்னும் அரக்க ஒற்றன் அப்போது இலங்கையின் அரண்மனை வாயில் கதவை அடைந்தான். அவனுடைய வரவை வாயில் காவலன் வந்து இராவணனுக்குத் தெரிவித்தான். அது கேட்ட இராவணன்," உடனே அவனை உள்ளே அனுப்பு!" என்று வாயில் காவலனுக்கு கட்டளை பிறப்பித்தான். வாயில் காவலன் விரைந்து சென்று சார்த்தூலனை உள்ளே அனுப்பினான்.
சார்த்தூலன் உள்ளே வந்து இராவணனை வணங்கியபடி நின்றான். அப்போது அவனைக் கண்ட இராவணன்," நீ கொண்டு வந்த செய்தியை உள்ளது உள்ளபடி கூறுவாயாக!" என்றான்.
உடனே சார்த்தூலன் பய பக்தியுடன் அவனை நோக்கி," மாமன்னா! அனுமன் பதினேழு வெள்ளம் சேனையுடன் விரைந்து சென்று, இலங்கையின் மேற்கு வாயிலேலே மதிலை வளைத்து முற்றுகை செய்யத் தொடங்கிவிட்டான். இராமன் சுக்கிரீவனை பதினேழு வெள்ளம் சேனையுடன் தன்னைப் பிரியாது தன்னுடன் இருக்குமாறு கட்டளை பிறப்பித்து உள்ளான். அங்கதன் பதினேழு வெள்ளம் சேனையுடன் தெற்கு வாயிலைச் சூழ்ந்து இருக்கிறான். நீலன் பதினேழு வெள்ளம் கொண்ட சேனையுடன் கிழக்கு வாயிலின் முன்பு போர் செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறான். மற்றபடி இரண்டு வெள்ளம் வானர சேனைகள், வானர வீரர்களின் பொருட்டு அவர்கள் உண்பதற்காக உலகம் முழுவதும் சுற்றித் திரிந்து காய் கனிகளை கொண்டு வரக் கிளம்பி உள்ளன. இராமன் தனது தம்பியுடன் வடக்கு வாயிலில் நிற்கிறான். விபீஷணன் ஒவ்வொரு வாயிலிலும் அவ்வப்போது நடக்கின்ற செயல்களை இராமனுக்குச் சொல்வதற்காகச் சுற்றிக் கொண்டு இருக்கிறான்!" என்று, தான் ஒற்று அறிந்து வந்த விவரத்தைக் கூறி முடித்தான்.
சார்த்தூலன் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு இராவணன் மிகுந்த கோபம் கொண்டான். அவன் கண்கள் சிவந்தது. பற்களை இடி போலக் கடித்தான். அவன் சார்த்தூலனை யுகாந்த காலத்தின் சாயல் தோன்றுமாறு உக்கிரமாகப் பார்த்து," அந்தப் பகைவர்களை நாளைக்கே கொல்வேன். அவர்கள் ரத்தத்தை பானம் எனப் பருகுவேன். நான் சொல்லும் இந்த நிலை தோன்றுவதை நீ பார்ப்பாய்!" என்று ஆவேசத்துடன் மொழிந்தான்.
பிறகு இராவணன் அரண்மனையை விட்டு வெளியேறி பளிங்கு மண்டபத்தை அடைந்து, அங்குள்ள பளிங்குமணிப் படுக்கையில் படுத்தான். தன் பக்கத்திலே அச்சமயம் வந்து நின்ற பணியாளர்களிடம்," மந்திரிகள் உட்பட முக்கியப் பிரமுகர்களை உடனே அழைத்து வாருங்கள்!" என்று கட்டளை பிறப்பித்தான்.
பணியாளர்கள் விரைந்து சென்று மந்திரிகளுக்கு இராவணனின் செய்தியைத் தெரிவித்தனர். அக்கணமே, இராவணனின் மந்திரிமார்கள் அனைவரும் விரைந்து இராவணனைக் காண வந்தார்கள். தனது முன்னே நின்ற அனைத்து மந்திரிகளையும் கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த இராவணன் அவர்களிடம், " மதி மிகு மந்திரிகளே! இலங்கையின் நான்கு வாயில்களையும் குரங்குப் படை சூழ்ந்து கொண்டது! அதனால் பெரும் போர் தொடங்கிவிட்டது! இனி அது நம்மை விடாது. நாமோ வருந்தி நிற்கிறோம். இப்போது நாம் செய்ய வேண்டிய செயல் தான் என்ன? விரைந்து சொல்லுங்கள்!" என்று கேட்டான்.
அப்போது, அங்கு கூடி இருந்த மந்திரிகளுள் நிகும்பன் என்பவன் மிகவும் கோபம் கொண்டான். அந்தக் கோபத்துடன் கண்களில் தீப் பொறி பறக்க இராவணனிடம் பேசத் தொடங்கினான்," அற்பமான குரங்குகள் எழுபது வெள்ளம் சேனையாகத் தான் இருக்கட்டுமே! அவை வந்து நமது நகர வாயில்களை முற்றுகையிட்டது என்பதற்காகச் செயலிழந்து விடுவீரோ? அப்படிப் பட்ட சேனை கடல் நமக்கு ஆயிரம் வெள்ளமன்றோ? பகைவர் உழிஞை சூடியிருக்கின்றார்கள். அதனைப் போக்க நமது வீரர்கள் நொச்சியைச் சூடி இருக்கின்றார்கள்! இப்படியிருக்க, நீர் பகைவரிடத்தில் அச்சம் கொள்வது தகுமோ? எழுவும் மழுவும் தண்டும் வேலும் வாளும் சூலமும் கொண்டு அரக்கர்கள் போருக்கு எழுந்த போது, தேவர்களே தங்களுடைய போர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு கை கூப்பிய வண்ணம் ஓடுவார்கள் என்றால், ஆயுதங்களே இல்லாத இந்தக் குரங்குகள் வந்து நம்மிடத்தில் என்ன செய்ய முடியும்?" என்று சொல்லி, நெருப்புப் பொறி பறக்க உக்கிரமாக விளித்து, இடிபோலப் பேரொளி தோன்றச் சிரித்து, பூமியில் அறைந்தான்.
அவ்வாறு நிகும்பன் சொன்னவுடனே மாதுலன், இராவணனை நோக்கி,"அரசே! வேதனை உண்டாக்கும் காமம் தான் இப்போது உங்களையும் வேரோடு சாய்க்கப் போகிறது. தேவர்கள் விஷயத்தில் நாம் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால், தங்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லக் கடமைப் பட்டு இருக்கிறேன், அன்று நமது இலங்கையை அனுமன் எரிக்கும் போதும், இன்று சுக்கிரீவன் தங்களைத் தாக்கிய போதும் அவர்களுக்கு எந்த ஆயுதம் தான் தேவைப்பட்டது? அதனால், தான் நான் சொல்கிறேன், ஜெயிப்பவர்கள் எல்லா நேரத்திலும் ஜெயித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள், அதுவும் நாம் அந்த வானரப் படையை குறைத்தே இது வரையில் மதிப்பிட்டு வந்து உள்ளோம். ஆனால் உண்மை யாதெனில், அவர்கள் நமக்கு சளைத்தவர்கள் இல்லை. தவிர, இராமனின் பானம் பற்றி நானும் அறிந்துள்ளேன். அது இலக்கை அழிக்காமல் இராமனிடம் திரும்பாது. அப்படிப் பட்ட பாணம் நம் அரக்கர் குலத்தின் மீது எய்யப் படாமல் இருக்க, உடனே சீதா பிராட்டியை, சகல மரியாதைகளுடன் இராமனிடம் ஒப்படைத்து விடுவதே நம் எல்லோருக்கும் நல்லது" என்று சொன்னான்.
அது கேட்ட இராவணன் அவனை நோக்கி," எனக்கு வலிய பழியைத் தருவாய் போலும்! உனது அச்சத்தினால் உறுதி நிலை கெட்டு இருக்கின்றாய். அதனால் உனது கருத்து தெளிவாக இல்லை. ஆதலால், தகுதியும் முறையும் இல்லாத சொற்களைச் சொல்லாதே!" என்றான்.
இராவணன் அவ்வாறு சொல்லவும், மாதுலன் அதற்கு மேல் பேசாமல் மௌனமானான்.
பின்பு, இராவணன் தனது படைத் தலைவர்களை எல்லாம் நோக்கினான். சற்று நேரம் கழித்து அவன் பிரகத்தனைப் பார்த்து," சேனைத் தலைவனே! ஆராய்ந்து தேர்ந்த அரக்கச் சேனை இருநூறு வெள்ளங் கொண்டு, உனது சுற்றத்துடனே இலங்கையின் கீழ்த்திசை வாயிலுக்குச் சென்று போருக்கு நிற்பாய்!" என்று ஆணையிட்டான்.
அதன் பிறகு மகோதரனைப் பார்த்து," காளையே! போர்பித்துக் கொண்டவனும் மகா வீரனுமான மகாபாரிசுவனுடனே இருநூறு வெள்ளம் அரக்கச் சேனையையும் அழைத்துக் கொண்டு, நீ தெற்கு வாயிலுக்குச் செல்! அங்கே வந்து இருக்கும் குரங்குகளை எல்லாம் கொன்று வெற்றி கொள்!" என்றான்.
பின்னர் இந்திரஜித்திடம்," என்னிடம் உனது மேன்மையைப் பற்றிச் சொல்வதில் என்ன சிறப்பு இருக்கின்றது? இந்திரஜித்தே! அப்போது அனுமனின் வீரத்தை நீ கண் கூடாகக் கண்டு இருக்கிறாய்! வீரனே! அதனால் நீ உடனே உனது இருநூறு வெள்ளம் கொண்ட சேனையுடன் மேற்கு வாயிலுக்கு சென்று சேருவாயாக!" என்றான் இராவணன்.
பிறகு இராவணன் விரூபாட்சனிடம், " விரூபாட்சனே! நெடுங்காலமாக நீ தேவர்களுக்குத் துன்பத்தை கொடுத்துக் கொண்டு வந்தாய். அப்படிப் பட்ட நீ அற்பக் குரங்கின் படை மீது போருக்குச் செல்வது உனக்கு இழிவைத் தருவதாகும். அதனால் உனக்கு புகழுமில்லை. எனவே, கணக்கற்ற மூலபலத்தோடும் அமைச்சர்களோடும் நீ இந்தப் பழைய நெடிய நகரைக் காப்பாய்! " என்று ஆணையிட்டான்.
இவ்வாறு இராவணன் தனது படைத் தளபதிகள் மற்றும் மந்திரிகளுடன் போருக்கான வியூகத்தை அமைத்து முடித்தான். அப்போது மெல்ல, மெல்ல இருள் விலகியது. சூரியன் உதயமானான். அது சீதைக்கும், தேவர்களுக்கும், இராமலக்ஷ்மணனுக்கும், வானர சேனைக்கும் ஒரு புதிய விடியலாகவே காணப்பட்டது.
அப்போது முன்பே போட்ட திட்டத்தின் படி வானர சேனைத் தலைவர்கள் யாவரும், தமது படை வீரர்களுடன் இலங்கையின் நான்கு வாயில்களையும் அதன் மதில்களையும் சூழ்ந்து முற்றுகையிட்டார்கள்.
வானரர்கள் அனைவரும் மதிலை வளைத்துக் கொண்டு ஆரவாரம் செய்ய, சுக்கிரீவனும் இளைய பெருமாளும் முன்னே சென்றார்கள். இந்திரன் அச்சமயத்தில் வந்து இராமபிரானைத் தொழுது நின்றான். ஸ்ரீ இராமர் தன்னிடத்தை விட்டு எழுந்து சென்றார்.
வாயிற் புறத்திலும் மதிற் புறத்திலும் வந்து சூழ்ந்து அரக்க சேனைகளும் வானர சேனைகளும் ஒன்றை, ஒன்று வளைத்துக் கொண்டன!