அக்ககுமாரன் வதைப் படலம்

bookmark

சுந்தர காண்டம்

கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

அக்ககுமாரன் வதைப் படலம்

(இராவணனது இளைய மகனான அட்ச குமாரன் என்பவன், அனுமனோடு போர் செய்து மடிந்ததைப் பற்றிக் கூறிகிறது இந்தப் படலம்)

பருவத்தேவர்கள் மூலம் அனுமன், பஞ்சசேனாபதிகளையும் அவர்களுடன் சேர்த்து சதுரங்க சேனைகளையும் கொன்ற விவரத்தை அறிந்த இராவணன் மிகுந்த கோபம் கொண்டான். அதன் காரணமாக அவனது கண்களில் நெருப்புப் பொறி பறந்தன. உடனே, அவனே அனுமனுடன் போர் செய்ய விரும்பி தனது சிம்மாசனத்தை விட்டு எழுந்தான்.

அப்போது இராவணனின் அருகில் இருந்த அவனது மகனான அட்சகுமாரன் தந்தையின் உள்ளக் கருத்தை அறிந்தான். அந்தக் கணத்தில். தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கி,"தந்தையே! இந்த முறை வாய்ப்பை எனக்கு அளியுங்கள், நான் சென்று அந்தக் குரங்கை தங்கள் முன் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்துகிறேன். தாங்கள் இங்கே சுகமாயிருங்கள்.

மேலும், மும்மூர்த்திகளாகவோ, நந்திகேஸ்வரனாகவோ, ஆதிசேஷனாகவோ, இல்லை திருமாலின் கருடவாகனமாகவோ இருந்தால் தாங்கள் சென்று யுத்தம் செய்வது சரி. ஆனால் போயும், போயும் ஒரு குரங்கை அடக்க தாங்கள் செல்ல வேண்டுமா? அப்படிச் சென்றால் பெரும் வீரரான உங்களுக்கு அது தகுமோ? அதனால் தான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன் நான் போய் அந்தக் குரங்கை பிடித்து வருகிறேன். அக்குரங்கு ஒரு வேளை அந்த முக்கண் கொண்ட சிவனாகவே இருந்தாலும் சரி. என்னிடம் இருந்து அது தப்பிக்க முடியாது. நொடியில் அதனைப் பிடித்து தங்கள் முன்னாள் கொண்டு வந்து நிறுத்துகிறேன். அப்படி அந்தக் குரங்கைத் தங்களிடம் கொண்டு வந்து நிறுத்தாமல் போவேனாயின், அப்போதே தாங்கள் என்னைக் கடுமையாகத் தண்டியுங்கள்! ஆகவே, இப்போதே எனக்கு அக்குரங்கை வெல்வதற்கு விடை தாருங்கள்!" என்றான்.

மகன் அட்சகுமாரன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இராவணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். மகனை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். பிறகு அவனை ஆசிர்வதித்து விடை கொடுத்து அனுப்பினான்.

அரண்மனையின் வாசலிலே முன்பு நடந்த போரில் தேவேந்திரனால் கொடுக்கப்பட்டதும், விரைவில் செல்லக் கூடிய இருநூறு குதிரைகள் பூட்டப்பட்டதுமான வலிய தேர் தயாராக நின்று இருந்தது. அதன் மேல் தாவி ஏறி அமர்ந்தான் அட்சகுமாரன். அந்தக் க்ஷணமே அரக்கர்கள் வாழ்த்துக் கூற, முரசுகள் முழங்க, நாள் வகை சேனைகள் பின்தொடர அட்சகுமாரன் புறப்பட்டான்.

இந்த முறை இராவணன் இன்னும் கூடுதல் சேனையை அட்சகுமாரனுக்குத் துணையாக அனுப்பினான். அச்சேனைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. ஒரு வேளை உலகத்தில் உள்ள மொத்தக் கடல்களில் காணப்படும் ஒட்டுமொத்த மீன்களின் எண்ணிக்கையை எண்ண முடியும் என்றால், அப்போது அந்த சேனைகளின் எண்ணிக்கையையும் எண்ண முடிந்து விடும். அதுபோல், கடல்களில் மேன் மேலும், எழுகின்ற அலைகளை எண்ண முடியும் என்றால், அப்போது அச்சேனையில் காணப்படும் குதிரைகள், தேர்கள் மற்றும் யானைகளை எண்ணிவிட முடியும். அவ்வளவு பெரிய சேனை அட்சகுமாரனை பின்பற்றி சென்றது.

அத்துடன் அட்சகுமாரனுடைய இனிய உயிர் நண்பர்களும், அரக்கர் குலத்தில் தோன்றிய மன்னர்களின் புதல்வர்களுமான பன்னிரெண்டாயிரம் குமாரர்கள் அவர், அவர்களின் தேர் மேல் ஏறிக் கொண்டு, இராவணனின் இளைய புதல்வனைச் சூழ்ந்த படி சென்றார்கள்! மற்றும் முன்பு இராவணனின் மந்திரிகளாக இருந்தவர்களின் பிள்ளைகளும், தற்போதைய அமைச்சர்களின் குமாரர்களும், இராவணனுக்கு தேவ மங்கையர்களிடம் பிறந்த குமாரர்களும், இன்னும் பல குமாரர்களும் தேரின் மீது ஏறிக் கொண்டு அட்ச குமாரனுக்குப் பாதுகாப்பாகச் சென்றனர். அவ்வாறு சென்ற அவர்களின் தொகை சுமார் நான்கு லட்சம் ஆகும்.

மேலும் அட்சகுமாரனை தொடர்ந்து சென்ற அரக்கர்கள் பல்வேறு ஆயுதங்களை தாங்கிச் சென்றார்கள். அந்த வலிமையான ஆயுதங்களைக் கண்டு காலனும் அஞ்சும் படி இருந்தது. அந்தப் பெரும்படை புழுதிப் படலத்தை கிளப்பிய படி சென்றது. அந்தப் புழுதிப் படலம் சூரியனை மறைக்கும் அளவுக்கு வானத்தை நோக்கிச் சென்றது. அதனால் பகலுக்கும், இரவுக்கும் வித்தியாசம் இல்லாதபடி காணப்பட்டது.

பெரிய தேர்களில் கட்டி இருந்த குதிரைகள் சோர்ந்து தூங்கி விழவும், வீரர்களின் தோள்களும் கண்களும் இடப்பக்கத்தில் துடிக்கவும்; மேகங்கள் இரத்த மழை பொழியவும், காக்கைகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யவும், மேகங்களே இல்லாமல் வானம் இடி இடிக்கவும், ஒரு வெள்ளம் அரக்க சேனை தொடர்ந்து வரவும், வானவர்கள் அஞ்சிக் கலங்கவும், யமன் புன்னகை கொள்ளவும், பேய்கள் தோள்களைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யவும் வருகின்ற அட்சகுமாரனையும், அவனது சேனைகளையும் அனுமன் கண்டான்.

அட்சகுமாரனைக் கண்ட அனுமான்," இப்போது நம்முடன் போர் செய்ய வருபவன், நிச்சயம் இராவணனாக இருக்க முடியாது. எனில் இந்திரஜித்தாக இருப்பானோ?" என்று சிந்தித்து உற்று நோக்கினான். பிறகு மீண்டும் அட்சகுமாரனை கண்ட அனுமான்," இவன் நிச்சயம் இந்திரஜித்தாகவும் இருக்க வாய்ப்பில்லை. காரணம் அவன் உறக்க நிலையில் இருந்தபோது, அவனை நான் மாளிகையில் ஒரு முறை பார்த்து உள்ளோம். அப்படி என்றால் இவன் யாராக இருக்க முடியும்?" என்று தனக்குள் கூறிக் கொண்டான். எனினும் அனுமனின் மனதில்," வந்திருப்பவன் சாதரணமானவன் இல்லை. பார்க்க இராவணனைப் போல உள்ளதால், இவன் நிச்சயம் இராவணனின் மகன்களுள் ஒருவனாகத் தான் இருப்பான்" என்று மீண்டும் தனக்குள் அனுமானித்துக் கொண்டான். அந்த அனுமானத்தால் மிகவும் மகிழ்ந்த அனுமான், ஸ்ரீ ராமர் இருக்கும் திசையை நோக்கி வணங்கி அட்சகுமாரனை தாக்க ஆயத்தமானான். மறுபுறம் அட்சகுமாரனும், அனுமனின் வடிவத்தைக் கண்டு தனக்குள் கேலியாக சிரித்துக் கொண்டான். பிறகு தனது சாரதியை நோக்கி," பெரிய அரக்கர் சேனைகளைக் கொன்று குவித்த அந்தச் சிறிய குரங்கு இது தானோ?" என்றான்.

அட்சகுமாரனின் கேலிப் பேச்சுக்களை செவி மடுத்த அவனது தேரோட்டி," ஐயனே! நான் சொல்வதையும் கொஞ்சம் செவி மடுத்துக் கேட்பீராக! உலகில் நடக்கும் செயல்களை இப்படித் தான் நடக்கும் என்று யாராலும் அனுமானித்துக் கூற முடியாது! அதுபோலவே வெறும் தோற்றத்தைக் கண்டு ஒருவரை மதிப்பிடுதல் கூடாது. நமது மாமன்னரை சிறைபிடித்துச் சென்ற வாலியும் ஒரு குரங்கு தானே? அதனால், இது குரங்கு என்று அலட்சியம் செய்யாமல் இதனை ஜாக்கிரதையாக அணுகி வெல்ல முயற்சி செய்யுங்கள்" என்றான்.

தனது சாரதி தன்னிடம் கூறிய இந்த வார்த்தைகளைக் கேட்ட அட்சகுமாரன் மிகுந்த கோபம் கொண்டான். உடனே தனது சாரதியைப் பார்த்து," நீர், எனது போர் திறனைப் பாரும்! இவ்வளவு அட்டகாசத்தை நமது இலங்கைக்கு வந்து நிறைவேற்றிய இந்த குரங்கை கொல்வதுடன் மட்டும் நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. மூவுலகத்தில் இருக்கும் வானர குலத்தையே நான் ஒரேடியாக அழித்து, வானர குலம் என்ற ஒன்றையே இந்தப் பூமியில் இல்லாதபடி செய்யப் போகிறேன்" என்றான்.

பிறகு அட்சகுமாரன் தன்னுடன் வந்த வீரர்களிடம் அனுமனை சூழ்ந்து பல திசைகளில் இருந்தும் தாக்குமாறு உத்தரவு பிறப்பித்தான். அதன்படி கொடிய அரக்கர்கள் எட்டு திசைகளிலும் சூழ்ந்து அனுமன் மீது தாங்கள் கொண்டு வந்த போர் ஆயுதங்களை பலத்துடன் வீசினர். அது கண்ட தேர்வர்களும் சற்றே பயம் கொண்டனர். ஆனால், வீர அனுமான் தீரத்துடன் அந்தச் சேனைகளை எதிர்த்தான். அனுமனைப் பொறுத்த வரையில் உண்மையில் அவன் போர் செய்யவில்லை, அந்த அரக்கர்களை பந்து போல ஆகாயத்துக்கும், பூமிக்கும் தூக்கி எறிந்து விளையாடி மகிழ்ந்தான். அது மட்டும் அல்லாமல், தன் மேல் அரக்கர்கள் விடுத்த ஆயுதங்களை எல்லாம் கைகளில் பந்து போலப் பிடித்து உடைத்து அந்த அரக்கர்கள் மீதே அதிக விசையுடன் எறிந்தான். அதனால் இறந்த அரக்கர்களின் எண்ணிக்கை ஏராளம். மேலும், பேர் உருவம் கொண்ட அனுமான் சளைக்காமல் ரதங்களையும், யானைகளையும் தூக்கி அரக்கர்கள் மீது வீசினான். அதனால், நொடிப் பொழுதில் அரக்க சேனை சின்னாபின்னமாகியது. மேலும், எல்லா இடங்களிலும் இரத்த ஆறு பெருகி ஓடியது. தன்னுடன் வந்த பல லட்சம் அரக்கர்களும் நொடிப் பொழுதில் மரணம் அடைந்ததை பார்த்த அட்ச குமாரன் மிகுந்த கோபம் கொண்டான். கோபத்தால் அவனது முகம் சிவந்தது. தனது தேருடன் அனுமனின் முன் நின்று கணைகளைத் தொடுத்தான். சுமார் பதினான்கு திவ்ய பாணங்களை அனுமன் மீது எய்தான். அனுமானோ, அந்தப் பலம் பொருந்திய அம்புகளை தமது கைகள் கொண்டே தடுத்தான். இவ்வாறு பலமுறை அட்ச குமாரன் பாணத்தை விடுவதும், அனுமன் அதனைத் தடுப்பதுமாக போரின் போக்கு போய்க் கொண்டு இருந்தது. பின்பு, அட்சகுமாரனுடன் அனுமன் விளையாடிய அந்த விளையாட்டு அவனுக்கு சலித்துப் போகவே, அனுமன் அட்சகுமாரனின் தேர் மீது பாய்ந்து, அவனின் வில்லை உடைத்து தனது வால் கொண்டு அட்சகுமாரனை கட்டி பூமியில் ஓங்கி அடிக்க, அந்த அடியில் பூமியும் பிளந்தது, அட்சகுமாரனின் மண்டையும் பிளந்தது.அடுத்த நொடி, அட்சகுமாரன் உயிர் விட்டான். தேவர்கள் அது கண்டு மகிழ்ந்தனர்.

அட்சகுமாரன் இறந்தக் காட்சியை பருவத் தேவர்கள் கண்டார்கள்! விரைந்து சென்று இலங்கை வேந்தன் இராவணனிடம் விவரத்தை சொன்னார்கள்.

அட்சகுமாரன் இறந்த செய்தியை இராவணன் கேட்டு துடி, துடித்துப் போனான். இராவணனை விட, அப்போது அவன் அருகில் இருந்த மண்டோதரி மகன் இறந்த செய்தி கேட்டு மிகுந்த சோகம் கொண்டாள். "மகனே! போவிட்டாயா?" என்று அலறித் துடித்தாள். இராவணனின் பாதங்களில் தனது தலையை முட்டிக் கொண்டு அழுதாள். கீழே விழுந்து, வயிற்றில் அடித்துக் கொண்டு கூந்தல் புரள கதறினாள்.