அகத்தியப் படலம்

bookmark

ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

அகத்தியப் படலம்

(அகத்திய முனிவரின் தவச் சாலைக்கு இராமன் சீதை இலக்குவரோடு எழுந்தருளியதைக் கூறும் படலம். அகத்தியன் என்பதற்கு மலையை அடக்கியவன் என்ற பொருளுரைப்பர். சரபங்க முனிவர் அருநெறி அடைந்தபின் தம்பியோடும் மனைவியோடும், அகத்தியரின் தவச்சாலையை அடைந்து வில், அம்பு, வாள், தண்டு முதலியவற்றை அந்தப் பெரும் முனிவரிடமிருந்து பெறும் வரலாறு கூறும் படலம் இது. அதனால் தான் அகத்தியப் படலம் எனப்பட்டது)
சரபங்கமுனிவர், தம் அந்திம காலத்தில் அக்கினிப் பிரவேசம் செய்ததைக் கண்ட ஸ்ரீ ராம லக்ஷ்மணர் மிகவும் மனம் வருந்தினார்கள். அந்த வருத்தத்துடன் சீதையை அழைத்துக் கொண்டு பரிசுத்தமான அந்த முனிவரின் ஆசிரமத்தை விட்டுச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள், தாங்கள் செல்லும் வழி எங்கும் சோலைகளையும், மலைகளையும், ஆறுகளையும், தடாகங்களையும் ரசித்த படி சென்றார்கள்.
இவ்வாறு அம்மூவரும், தண்டகாரணியத்தை அடைந்தார்கள். அப்பொழுது, அங்கு தங்கி இருந்த முனிவர் பெருமக்கள் அனைவரும் ராமபிரானைக் கண்டவுடன் மிகவும் மகிழ்ந்தனர். பிறகு, அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இராமபிரானை வரவேற்க்கச் சென்றனர். தம்மை வரவேற்க வந்த ரிஷிகளையும், முனிவர்களையும் கண்ட ஸ்ரீ ராமர் அவர்களைத் தனித்தனியே வணங்க, அவர்களும் தனித்தனியே அவருக்கு ஆசி வழங்கினார்கள். பிறகு அந்த முனிவர்களே ஒன்று கூடி ராமபிரான், தனது தம்பி மற்றும் தர்மபத்தினியான சீதையுடன் தங்க ஒரு அமைதியான இடத்தில் பர்ணசாலையை அமைத்துக் கொடுத்தனர்.
பிறகு இராமபிரானிடம்," சக்கரவர்த்தித் திருமகனே! எங்களுக்கு நேர்ந்துள்ள துயரின் விளைவைக் கேட்டருள்வீராக" என்று கூற.
அது கேட்ட இராமபிரான் அம்முனிவர்களிடம்," மா முனிவர்களே, எனக்குத் தாங்கள் இப்பொழுது சொல்லும் கட்டளை என்ன?" என்று கேட்டார்.
அதற்கு அம்முனிவர்கள்," இவ்விடத்தில் அரக்கர்களின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது, அவர்கள் எங்களுக்கு மிகுந்த தொந்தரவுகளைச் செய்கிறார்கள். ஆகவே, எங்களால் எந்த ஒரு புண்ணிய காரியங்களையும் செய்ய முடிவதில்லை. அப்படியே நாங்கள் தவம், யாகம் இவைகளை செய்ய முற்பட்டாலும் கூட, அதற்குத் தண்டனையாக சில சமயம் எங்களை வதைத்து ஒழித்து விடுகிறார்கள். நாங்கள் இதனால் தவநெறியில் ஒழுகவில்லை. வேதங்களையும் சரிவர ஒத முடியவில்லை. புலிகள் திரியும் வனத்தில் உள்ள மான்கள் போல, இரவும் பகலும் மனம் நொந்து வருந்தி அரக்கர்கள் செய்யும் கொடுமைகளைப் பொறுக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். மறுபக்கம், எங்களுக்கு அபயம் அளிக்க வேண்டிய தேவேந்திரனோ, எங்களை கவனிப்பதில்லை. அரக்கர்களிடம் தோற்ற தேவேந்திரன், இப்போது அந்த அரக்கர்கள் தனக்குப் பணித்த கட்டளையை நிறைவேற்றி வருகிறான். இந்நிலையில், எங்கள் துன்பங்களைப் போக்குவதற்கு உம்மையன்றி வேறு யார் இருக்கின்றார்கள்? நாங்கள் முன்பு செய்த தவப்பயனாலேயே நீர் எங்களைக் காப்பதற்கு இங்கு எழுந்தருளியிருக்கின்றீர்! உம்மிடம் நாங்கள் அனைவரும் சரண் புகுந்தோம்! நீரே எங்களைக் காத்தருள வேண்டும்!" என்று உடனே இராமபிரானிடம் விண்ணப்பித்தார்கள்.
முனிவர்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட இராமபிரான்," கவலைப்படாதீர்கள் முனிவர் பெருமக்களே, உங்களுக்குத் துன்பம் அளிக்கும் அரக்கர்கள், எந்த இடத்தில் மறைந்தாலும், ஏன்? மும்மூர்த்திகளிடமே சரண்புகுந்தாலும், நான் அவர்களை விடப்போவதில்லை. நிச்சயம் எனது பாணம் கொண்டு நான் அந்த அரக்கர் கூட்டத்தை வதைப்பேன். இந்த மானிடப் பிறவி எடுத்ததற்கு எனக்கு இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்? அதனால் நீங்கள் இனி பயப்பட வேண்டாம்" என்று அவர்களுக்கு வாக்களித்தார்.
பின்னர் அந்த முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தண்டகாரணியத்திலேயே தங்க, ராமபிரான் சம்மதம் தெரிவித்தார்.
பத்தாண்டுகள் கழிந்தன!
ஒரு நாள், இராமபிரான் தான் அதிக ஆண்டுகள் தண்டகாரணியத்திலேயே கழித்ததன் காரணமாக, அவ்விடம் விட்டுப் புறப்பட எண்ணினார். உடனே அங்கு வாழ்ந்த முனிவர்களை அழைத்து, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது மனைவி மற்றும் தம்பி லக்ஷ்மணனுடன் புறப்பட்டுச் சென்றார். அவ்வாறு புறப்பட்டுச் சென்ற இராமபிரான், வெகு தூரம் நடந்து, பின்னர் சுதீஷ்ணமுனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்.
இராமபிரானைக் கண்ட சுதீஷ்ணர் ராமனின் வரவால் மகிழ்ந்தார், பின்னர் ராமனை வரவேற்று, அன்றைய பொழுதை அவருடன் கழிக்கும் படி வேண்டிக்கொண்டார். அதன்படி இராமபிரானும், சீதை, லக்ஷ்மணருடன் சுதீஷ்ணரின் ஆசிரமத்தில் அன்று இரவு தங்கினார். இராமபிரானை நல்லபடியாக கவனித்துக் கொண்டார் சுதீஷ்ணர். பின்னர் தான் செய்த தவத்தை எல்லாம் இராமனுக்கே தாரைவார்த்துக் கொடுத்தார் அம்முனிவர், ராமபிரானும் சுதீஷ்ணர் செய்த தவங்களை எல்லாம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் சுதீஷ்ணரிடம் அகத்தியரைக் காண வேண்டும் என்ற தனது வேண்டுகோளை முன் வைத்தார் ராமபிரான். உடனே சுதீஷ்ணர் அகத்தியர் ஆசிரமம் சென்று அடையும் மார்கத்தை ராமபிரானுக்கு எடுத்துச் சொன்னார். இவ்வாறாக, சுதீஷ்ணரின் ஆசிகளைப் பெற்ற இராமபிரான், தம்பி லக்ஷ்மணனும், சீதையும் பின் தொடர வெகுதூரம் கடந்து சென்று அகத்தியரின் ஆசிரமத்தை அடைந்தார்.
இராமபிரானைக் கண்ட அகத்தியர், மேலும் சில முனிவர்கள் தன்னைப் பின் தொடர தானே நேரில் வந்து இராமபிரானை வரவேற்றார். இராமபிரான், அகத்தியரை வணங்கினார். அகத்தியர் ராமபிரானை ஆசிர்வதித்து பின் அன்புடன் தழுவிக் கொண்டார். பின்னர் அம்முனிவர் இராமபிரானிடம்," நீர் தண்டகாரணியத்தில் இருப்பதையறிந்து, நீர் இங்கே வருவீர் என்று நினைத்து மிகவும் மகிழ்ந்திருந்தேன். அதன்படியே வந்து அருள் புரிந்தீர். இனி நீர் இங்கேயே இருந்தால், எங்கள் தவம் தடையில்லாமல் நிறைவேறும். எமது தவத்துக்கு இடையுறு புரியும் அரக்கர்கள் வந்தால், அவர்களைப் போர் செய்து அழித்து, எமது மனத்துயரைப் போக்கியருள்வீர். அதனால் தாங்கள், இந்த அடியேனின் வேண்டுதலை ஏற்று இங்கேயே இருக்க வேண்டும்" என்று வேண்டினார்.
"தவத்தில் சிறந்த முனிவரே! உமது விருப்பப்படி அரக்கரின் கொடுமை ஒழித்து, அவர்களின் செருக்கு ஒழியும் படி அவர்களைக் கொல்ல இப்பொழுதே நான் சித்தமாக இருக்கிறேன். ஆயினும் இங்கே தங்கி அவர்களைக் கொன்றால், ஆசிரமத்தின் தூய்மை அதனால் கெட்டு விடும். ஆகையால், அவர்கள் வரும் தென்திசையில் முன் சென்று நான் தங்கியிருப்பது நலம் என்று நினைக்கிறேன். உமது விருப்பம் என்ன?" என்று உடனே பதில் மொழிந்தார் இராமபிரான்.
அதுகேட்ட அகத்தியர்," நல்ல வார்த்தைச் சொன்னீர்! இதோ, இந்த வில் முற்காலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வைத்துக் கொண்டு இருந்தது. மூவுலகமும் நாமும் வணங்கிப் பூஜை செய்யும் படி இருப்பது. இத்துடன் இரண்டு அம்பறாத்தூணிகளையும் பெற்றுக் கொள்வீர்! இதில் பாணங்கள் குறையாது, எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும். உலகம் எல்லாவற்றையும் ஒரு தட்டில் வைத்தால் அவற்றுக்கெல்லாம் ஒப்பாக வல்ல இந்த வாளையும், சிவன் திரிபுரங்களை அழிக்க உபயோகித்த இந்த அம்பையும் கூட சேர்த்துப் பெற்றுக் கொள்வீர்!" என்று சொல்லி, அவற்றை எடுத்து இராமபிரானுக்குக் கொடுத்தார்.
மேலும் அவர்," சக்கரவர்த்தித் திருமகனே! அகண்ட கோதாவரிக் கரையில் பஞ்சவடி என்னும் இடம் அமைந்துள்ளது. அவ்விடம் வாழ்க்கைக்குத் தேவையான சகல வசதிகளையும் கொண்டது. உணவுக்கும், நீருக்கும் அங்கு பஞ்சமில்லை. அது மட்டும் அல்ல, பிராட்டியார் பொழுது போக்க அங்கு அன்னப்பறவைகளும் நிறைய உள்ளது. அதனால், பஞ்சவடி என்னும் அவ்விடம் சென்று தங்குவீராக" என்றார் அகத்தியார்.
அகத்தியர் கூறியதைக் கேட்டு இராமபிரான் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் வணங்கி விடைபெற்ற பின், தம்பி லக்ஷ்மணனும், சீதா தேவியும் பின்னே வர, பஞ்சவடியை நோக்கிப் புறப்பட்டார் ராமபிரான்.