இந்த மண் யாருக்கு

bookmark

இந்த மண் யாருக்குச்
சொந்தம் என்ற கேள்வி
எழும்வரைக்கும் பூகோளப்
படத்தில் அடித்தல்கள் இல்லை.
திருத்தல்கள் இல்லை.

வறுமை என்னும் ஒரு தத்துவம்
செயற்கையாகச்
சிருஷடிக்கப்படும்வரை
சரித்திரத்தின் முகத்தில்
தழும்புகள் இல்லை.

என்னுடையது என்னும்
வலிமையும்,
இல்லாமை என்னும் வெறுமையும்
வந்த பிறகுதான் மனிதகுலம்
யுத்தங்களைச் சந்தித்தது.

கனவுகள் உயிர்களின்
அனுபவங்கள். கிரகங்கள் கனாக்
காண்பதில்லை.
ஆனால், பூமி என்னும்
கிரகத்துக்கு மட்டும்
நிறைவேறாத
ஒரு நெடுங்கனவு உண்டு.

யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும்
சத்தங்களுக்கும் மத்தியில்
அந்த நெடுங்கனவு
நீண்டு கொண்டேயிருக்கிறது.

என்ன கனவு அது?
எப்பொருள் பற்றியது?

ஒரு திருடன் - ஒரு பிச்சைக்காரன் -
ஒரு விலைமகள் -ஒரு கொலைகாரன்
இந்த நால்வரும் அற்ற
சமுதாயம்தான் இந்த உலகம்
கடைவிழியில்
நீர்வடியக் கண்டுவரும் கனவு.

மனிதன் அந்தப் புதிய
பிரதேசத்துக்குத்தான் பூமி
என்னும் கிரகத்தைச் செலுத்த
விழைகிறான்.

அரசியல் - அரசுகள் -
மதங்கள் - அறிவியல்
கண்டுபிடிப்புகள் - எண்ணங்கள்
- இலக்கியங்கள் - கலைகள்
இவையெல்லாம் அந்தக் கனவுப்
பிரதேசத்துக்கு இந்தப்
பூமியை நகர்த்தும் உருளைகள்
என்றே அவன் இன்னும்
நம்புகிறான்.

ஆனால், பூமியென்னும்
கிரகத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய அந்த
உருளைகள் பல நேரங்களில்
நகராமலும் நகரவிடாமலும்
சுற்றிய இடத்திலேயே சுற்ற
வைக்கின்றன. சில நேரங்களில்
பின்னோக்கியும்
செலுத்திவிடுகின்றன.

எனவே களையப்பட வேண்டிய
திருடனும் பிச்சைக்காரனும்
விலைமகளும் கொலைகாரனும்
மாறுவேஷத்தில் வாழ்ந்து
கொண்டேயிருக்கிறார்கள்.

மனிதன் வெவ்வேறு வடிவங்களில்
திருடுகிறான். வெவ்வேறு
வடிவங்களில்
பிச்சையெடுக்கிறான்.
வெவ்வேறு வடிவங்களில்
விபசாரம் நடக்கிறது. வெவ்வேறு
வடிவங்களில் கொலையும்
விழுகிறது.

பூமி மட்டும்
சுற்றிக்கொண்டேயிருக்கிறது தன்
நிறைவேறாத கனவை
நெஞ்சில் சுமந்துகொண்டே.

அந்த நள்ளிரவில் கையும்
கஞ்சியுமாய்ப் பிடிபட்ட
சலீம், இசக்கியின் பிடியிலிருந்து
தன்னை இதமாய்
விடுவித்துக் கொண்டான்.

விழித்துக்கொண்டு சூழ்ந்தவர்கள்
அவனையே உற்று உற்றுப்
பார்த்தார்கள் உடைந்த
நிலாவெளிச்சத்தில்.

அவன் திருடன்போல் குனிந்து
நிற்கவில்லை.
தியாகிபோல் நிமிர்ந்து
நின்றான்.

உனக்கு மட்டுந்தான்
வயிறா? இல்லை உனக்கு
மட்டுந்தான் உயிரா? இத்தனை
பேரும் கும்பிகருகிக் குடல்
வெந்து கிடக்கையில் உனக்கு
மட்டும் எப்படித் திருடத்
தோன்றியது?
சொல் சலீம்.
சொல்....

திருடப் போனது
உண்மைதான். ஆனால், என்
பசிக்குத்
திருடவில்லை...

பிறகு யார் பசிக்கு..?

ஒருவேளை கடல்மீன்களின்
பசிபோக்கத்தான் கஞ்சிப்
பானைக்குள்
கைவிட்டாரோ?

இல்லை. ஓர் ஏழை
ஜீவனின் பசிக்கு.

இப்போது இந்தப்
படகிலுள்ள ஒவ்வொரு ஜீவனும்
ஏழை ஜீவன்தான்.

நம் பசியை நமக்குச்
சொல்லத் தெரிகிறது. நான்
திருடியது அதைச் சொல்லத்
தெரியாத
ஒரு ஜீவனுக்கு.

சொல்லத் தெரியாத
ஜீவனென்றால்..?

சுண்டெலிக்கு.

அவர்கள் ஒரே இடத்தில்
சிரிக்க ஆரம்பித்து வெவ்வேறு
இடத்தில் முடித்தார்கள்.

வெயிலடித்துக் கொண்டே மழை
பெய்தது மாதிரி இன்பம்,
துக்கம் இரண்டும் இழையோடிய
சிரிப்பு அது.

இங்கே மனிதனுக்கே
சோற்றைக் காணோம். நீ
சுண்டெலிக்குச்
சோறு வைக்கிறாயோ?

நம் தேவை பெரிது.
அதன் தேவை சிறிது.

அது இருக்கட்டும்.
நீ சுண்டெலிக்குத்தான் சோறு
திருடப் போனாய் என்பது
என்ன நிச்சயம்?

சரியான கேள்வி. சாட்சி
கிடைக்காத கேள்வி.

பட்டாசுத் திரியில்
முதன்முதலாய்த் தீ வைத்துவிட்டு
அது வெடிக்கும்வரை
பரபரக்கும் சிறுவனைப் போல
அவன் பதில் கேட்க
ஆவலானார்கள்
ஐந்து பேரும்.

சலீம் மோவாய் தடவி முகம்
கவிழ்ந்தான். யோசித்தான்.
பற்றிக் கொண்ட
தீக்குச்சிகளாய்ப் பளிச்சென்று
வெளிச்சம்
காட்டின கண்கள்.

நான் சுண்டெலியின் தினசரி
சிநேகிதன். நானும்
சுண்டெலிக்குச் சோறு
வைக்கிறேன். நீங்களும் சோறு
வையுங்கள். யார் வைத்த
கவளத்தைச் சுண்டெலி வந்து
உண்டு செல்கிறது
பார்ப்போம்.

அதையும் பார்ப்போம்.

சத்திய சோதனை
தொடங்கியது.

ஒரு கவளம்
சோறெடுத்து ஒவ்வொருவரும்
வெவ்வேறு இடத்தில்
வைத்தார்கள்.

சுண்டெலி தன் தலைமறைவு
வாழ்க்கையைவிட்டு
வெளியேறவில்லை.

எல்லா முகங்களிலும்
ஏமாற்றக் கோடுகள்.
சரி. சரி. இப்போது
நீ சோறு வை.

வைரங்களை எண்ணும் ஒரு
வியாபாரியைப் போல்
கவளத்தில் ஒரு பருக்கையும்
சிதறிவிடாமல் சேர்த்தெடுத்து,
கடுகுபுட்டியின் முடிமேல்
கவனமாய்
வைத்தான் சலீம்.

அடுத்த நிமிடம் அந்த அதிசயம்
நிகழ்ந்தது.

கண்ணுக்குத் தெரியாத ஒரு
சந்துவழி வந்து ஒரு க்ரீச்
வணக்கம் சொல்லி கவளத்தில்
வாய் வைத்தது சுண்டெலி.

உயிர்த்தெழுந்த ஏசுநாதரைப்
பார்த்தவனைப்போல் வியந்து
நின்றான் இசக்கி.

அந்தத் துள்ளலென்ன.
அதன் மகிழ்ச்சியென்ன.
ஒரு சிற்றுயிரின்
ஜீவததும்பல் என்ன.

கலைவண்ணன் காதில்
தமிழ்ரோஜா முணுமுணுத்தாள்.
பசியாறும் ஒரு ஜீவனின்
சந்தோஷம் பார்த்தாலே
பசியாறிவிடும்
போலிருக்கிறதே.

பாரதீ. மகாகவி.
உன் செல்ல அனுமதியோடு
உன் கவிதையில் ஒரு
சின்னத் திருத்தம்.
அனுமதிப்பாயா?

வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
மனிதருக்கெல்லாம் என்றாய்.

அந்த ஆறாம் சீரில் மட்டும்
உனக்கு வருத்தம் வராமல் ஒரு
திருத்தம் செய்வோமா?

வயிற்றுக்குச் சோறிட
வேண்டும் - இங்கு வாழும்
உயிர்களுக்கெல்லாம்.

சம்மதமா?

ஓர விழி கசிந்தபடி ஓர்
ஓரமாய் நின்றான் சலீம்.

எங்களை மன்னித்துவிடு
சலீம்.
- ஐவர் மொழியை
ஒருவன் பேசினான்.

உறக்கம் துரத்தும் இரவுகள்.
உடம்பு எரிக்கும் பகல்கள்.
இரைப்பை சுருக்கும் பசி.
இதயம் அறுக்கும் வெறுமை.

முன்று டம்ளர் கஞ்சித் தண்ணீரில்
ஆறு ஜீவன்கள்.

படகைப் போலவே ஒரே
இடத்தில் நின்றுபோன
வாழ்க்கை.

நடக்கவும் சக்தியில்லாமல்
நலிந்து சாயத் தொடங்கிய
உடல்கள்.

ஒரே ஒரு படகுகூட இந்தக்
கடலில் வெள்ளைக்கோடு
கிழிக்காதா?

வங்காள விரிகுடாவில் கப்பல்
போகக் கூடாதென்று
கட்டளையா?

ஓர் ஆறு பேரைக் காணோம்
என்று தமிழ்நாட்டின்
ஜனத்தொகை இன்னும்
கவலைப்படவில்லையா?

விடியாத இரவைப் பார்த்து
சூரியன் செத்துவிட்டானா?
என்று தனிப்பாட்டில் ஒரு
தமிழச்சி புலம்பினாளே.
அப்படி அங்கே பூகம்பம்
நேர்ந்து பூமி புரண்டு
புதைந்துவிட்டதா?

ஒருவேளை சவப்பெட்டிக்கு
வாங்கிய மரத்தில்
இந்தப் படகு
தயாரிக்கப்பட்டுவிட்டதா?

அழுத பிள்ளைக்குத்தான்
பாலா?
அபயக்குரல் கொடுத்தால்தான்
உதவியா?

சரி. கத்துவோம்என்று
முடிவெடுத்தார்கள். பரதன்
ஏறினான் பாய்மரத் தட்டில்.

அய்யா உதவிக்கு
வருவீர்களா? படகு பழுது.
அய்யா உதவிக்கு வருவீர்களா?
படகு பழுது.

முன்றாம் முறை குரலெடுக்க
முடியவில்லை. தொண்டையின்
கடைசி ஈரம் வற்றிவிட்டது.

அடுத்து இசக்கி ஏறினான். ஒரு
கரத்தால் காதுபொத்தி
ஓங்கிக் கத்தினான்.
அதற்குமேல் அவனுக்கும் சக்தி
இல்லை. வயிற்றைப் பிடித்துக்
கொண்டு இறங்கிவிட்டான்.

சலீம். நீ போ அவன்
கத்திக் கத்திப் பார்த்தான்.
சத்தமே வரவில்லை. அவன்
நாவிலிருந்த எச்சிலைக்
கடற்காற்று குடித்துவிட்டுப்
போய்விட்டது.

அடுத்து பலங்கொண்ட மட்டும்
பாண்டி கத்தினான். எந்தத்
திசையிலும் எதிரொலியில்லை.

போங்கள். உயிருக்கு குரல்
கொடுங்கள் - தமிழ்
கலைவண்ணனை அனுப்பினாள்.
கலைவண்ணனும் கத்திப்
பார்த்தான். அவன் குரல்
காற்றில் குதித்துத் தற்கொலை
செய்ததுதான் மிச்சம்.

தமிழ். நீ வா.

வேண்டாம். தங்கை கத்த
வேண்டாம் - பாண்டி
தடுத்தான்.

ஏன்?

சேவல் கூவி விடியாத
பொழுது குயில் கூவியா விடியப்
போகிறது?

தமிழ் சினந்தாள்.
இல்லை. இது எனக்கு
நீங்கள் காட்டும்
சலுகையில்லை.
அவமரியாதை. நானும்
கத்துவேன்.

தட்டுத் தடுமாறி ஏறினாள்.
பாய்மரத்தையும் வயிற்றையும்
பிடித்துக் கொண்டு கத்தினாள்.

அந்தக் குரல் படகைக்கூடத்
தாண்டவில்லை.

கலைவண்ணன் அவளைக்
கைத்தாங்கலாய் இறக்கினான்.

கத்திய களைப்பு. வறண்ட
தொண்டை. அன்றைய பங்கைப்
பிரித்துக் கொள்ள
அவசரமானார்கள். கஞ்சிப்
பானையில் கூடினார்கள்.

கஞ்சிப் பானை திறந்து
கிடந்தது.

ஏன்? எப்படி?

சுண்டெலிக்குச் சோறு வைத்த
பரபரப்பில் அதை முடிவைப்பது
மறந்துவிட்டது.

உள்ளே பார்த்தால் -
அவர்களின் அமுதத்தில் இரண்டு
கரப்பான் பூச்சிகள்
இறந்துகிடந்தன.

அது -
அவர்கள் வயிற்றில் விழுந்த
கடைசி இடி.

பீப்பாய் திறந்தார்கள்.

அவர்கள் தாகத்தின் கடைசித்
தவணை ஆளுக்கு அரை
டம்ளராய் ஆழத்தில் சிரித்தது.

இரவு.

எலிகடித்த ரொட்டியாய்
வடிவிழந்த
நிலா.
நாலா திசையிலும்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரப்
பருக்கைகள்.

மீனவர் நால்வரும் தூங்கிப்
போயினர். மீன்விழி மங்கை
தூங்கவில்லை.

உறங்கிவிட்டீர்களா?
இல்லை. கண்கள் இமைத்துக்
கொண்டிருக்கும்போது உறங்க
முடியுமா?

புரியவில்லை.

என் கண்ணே நீதானே. நீ
விழித்துக் கிடக்கையில் என்னால்
எப்படி உறங்க முடியும்?

நாளைக்கு மரணமென்றாலும்
இன்றுவரைக்கும் கவிதை
பேசுவீர்கள்
போலிருக்கிறதே.

ஆமாம் மரணத்தை வரவேற்கக் கவிதைகள்
வேண்டாமா?

போதும். போதும். நாளைப்பொழுதாவது நம்
பொழுதாக விடியுமா?

நாளைப் பொழுது நம் பொழுதோ இல்லையோ
ஆனால் உன்பொழுது.

என் பொழுதா?
ஆமாம் விடிந்தால் உன் பிறந்த நாள்.

அப்படியா. என்று ஆச்சரியம் காட்டியவள்,
நான் தேதி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்றாள்.

ஏன்? என்றான்.

கோமாவில் கிடப்பவனுக்குத் தேதி எதற்கு?

அவநம்பிக்கை அடையாதே. நாளை
உன் பிறந்தநாள். ஒரு நல்ல சேதி வரலாம்

வருமா?

வராவிட்டாலும் பரவாயில்லை. நீ பூமிக்கு
வந்ததே ஒரு நல்ல சேதிதானே?

எனக்கென்ன பிறந்தநாள் பரிசு தருவீர்கள்?

பொறுத்திருந்து பார்.

சூரியன் தாம்பூலம் போட்டு வெளியேறத்
தயாரானபோது -

அவள் கன்னத்திலும் காதுகளிலும் சுட்டுவிரல்
கோலமிட்டு எழுப்பினான்

தமிழ். உனக்கென்ன பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்ன பரிசு தருவீர்கள்? அவள் விழிக்காமல்
புரண்டபடி வினவினாள்.

இதோ.

அவள் விழித்துப் பார்த்தாள்.

அவன் கையில் - அரை டம்ளர் தண்ணீர்.

நேற்றுப் பருகாமல் வைத்திருந்த அவன் பங்கு.

அவள் உணர்ச்சிவசமானாள்.. பரவசப்பட்டுப்
பாய்ந்தெழுந்து அவன் தோள்கட்டினாள்.

அந்த வேகத்தில் தவறி விழுந்து டம்ளர்
உருண்டது, தண்ணீர் சிதறியது.