வருணனை வழி வேண்டு படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
வருணனை வழி வேண்டு படலம்
(இராமபிரான் கடலைக் கடந்து இலங்கை செல்வதற்குரிய வழிபற்றி - விபீஷணனுடன் சிந்திக்கலானான். கடலரசனான வருணனை வழி வேண்டினால் தருவான் என விபீஷணன் கூறியபடி, வருண மந்திரம் ஜெபித்திருந்ததும், அதற்கு வருணன் வாராமையால் இராமபிரான் சினம் கொண்டு கடலின் மேல் அம்பு விடுதலும், இராமபிரான் பிரமாஸ்த்திரம் ஏவ, அதனால் கடல் பட்டபாடும். அதனால் நிகழ்ந்த மாறுபாடுகளும் விவரிக்கப்படுவதுடன் பிறகு பயத்தால் வருணன் தோன்றிப் பணிவுரை பகர்தலும் அப்போது இராமபிரானை வருணன் அடைக்கலம் வேண்டுதலும் இராமபிரான் சினம் தணிந்து காலந்தாழ்த்தமைக்குக் காரணம் கேட்டறிதலும் அம்புக்கு இலக்கு யாதெனக் கேட்க வருணன் கூறுதலும் இராமன் அம்பு அவுணர்களை அழித்தலும் இராமபிரான் வழி வேண்ட, வருணன் சேதுகட்டச் சொல்லுதலும் இராமபிரான் சேது கட்டப் பணித்தலும் இப்படலத்துள் கூறப்படும் செய்திகளாகும்)
இலங்கையின் அமைப்பையும், இராவணனது துணை வலிமையையும், அவனது ஆற்றலையும், இலங்கையில் அனுமன் செய்த வீரச் செயல்களையும் விபீஷணனிடம் இருந்து கேட்டறிந்த இராமபிரான், மீண்டும் அவனை நோக்கி," பேர் அறிவு கொண்டவனே! நாம் இலங்கைக்கு சென்று இராவணனை வெற்றி கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முதலில் எதிரே தடையாக இருக்கின்ற இந்தப் பெரிய கடலை, நாமும் நமது பெரும் சேனையும் கடக்க வேண்டும். அதற்கு நீ கூறும் மார்க்கம் என்ன?" என்று கேட்டார்.
உடனே அது கேட்ட விபீஷணன்," ஐயனே! இந்தக் கடலை கடப்பது ஒன்றும் சுலபமான காரியம் இல்லை, ஆனால் அதே சமயத்தில் முடிந்தால், முயலாதது என்று ஒன்றும் இந்த உலகத்தில் இல்லை. மேலும், என்னைப் பொறுத்த மட்டில், இந்தக் கடலை கடக்க ஒரே வழி, வருண மந்திரத்தை சொல்லி, வருணனை நோக்கி தியானம் செய்வதே. அவ்வாறு வருண தேவனின் கிருபை நமக்குக் கிடைத்தால் இந்தக் கடலை எளிதில் தாண்டி விடலாம்" என்றான்.
இராமபிரானும் அதற்கு இசைந்தார், " அக்கணமே! வருணனை நோக்கித் தவம் செய்ய சில தருப்பைப் புற்களை பரப்பி சயன கோலத்தில் (படுத்தபடி) கிடந்தார். ஏழு நாட்கள் வருண தேவனை பசி, தாகம் போன்ற அனைத்து உணர்வுகளையும் துறந்து தியானம் செய்தார். ஆனால், ஏழு நாட்கள் கடந்தும் வருணன் வரவில்லை. இது கண்ட ஸ்ரீ இராமர் தியானம் களைந்து கோபம் கொண்டார்.
"இத்தனை நாட்களாக தவம் இருந்தும் வராத வருணன் இனிமேலும் வர வேண்டாம். லக்ஷ்மணா! எனது பாணங்களையும், வில்லையும் கொண்டு வா. உடனே யாம் இந்தக் கடலை வற்ற வைத்து வெறும் தரையில் எமது சேனைகளுடன் நடந்து செல்வோம்" என்று பெரும் கோபத்துடன் கூறினார். அதன் படி லக்ஷ்மணனும் ஸ்ரீ இராமபிரானின் அம்புகள் கொண்ட அம்புராத்துணியையும், வில்லையும் கொண்டு வந்து கொடுத்தான். அப்போது ஸ்ரீ இராமர் தனது அந்த வில்லை வாங்கிக் கொண்டு, அதன் நாணியை இலேசாகச் சுண்டி விட்டார். அக்கணத்தில் பேரொளி எழுந்தது.அப்பேரொளி பதினான்கு உலகங்களையும் நிரப்பியது. அதுவரையில் ஊடல் கொண்டிருந்த பார்வதி அஞ்சி சிவபெருமானைத் தழுவிக் கொள்ள, அவள் ஊடலும் நீங்கிற்று. ஸ்ரீ இராமபிரான் பின்னர் வில்லில் நாணேற்றி கடலை நோக்கி வருணனை எச்சரிக்கும் விதமாக தனது முதல் அம்பைத் தொடுத்தார்.
அந்த முதல் அம்பு கடலை சென்று அடைந்த மறுகணமே, அக்கடல் கொந்தளிக்கத் தொடங்கியது. அப்போது கடலில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் திசை தெரியாது பிரளயம் தான் வந்து விட்டது போல எனக் கருதி இங்கும், அங்குமாக ஓடின. அப்போதும் அவ்விடத்தில் வருணன் பிரசன்னம் ஆகவில்லை. அதனால் அதிகக் கோபம் கொண்ட இராமபிரான்," இதனால் உண்டாகும் துன்பத்தைப் பற்றி நான் இப்போது நினைக்கப் போவதில்லை இனி, வருணனை இங்கே விரைந்து வரச் செய்வேன்!" என்று சொல்லி, சீற்றத்துடன் வில்லில் நாணேற்றி பிரமாஸ்த்திரத்தைத் தொடுக்கத் தொடங்கினார்.
அதுகண்ட தேவர்கள் அனைவரும் அச்சம் கொண்டனர். அப்போது மேகக் கூட்டகள் பேரொளி செய்தன. எங்கோ இருந்த வருணன், அப்போது தனது வாய் உலர்ந்து போய் கதறத் தொடங்கினான். அதனால், உலகத்தில் உள்ள நதிகள் யாவும் தூர்ந்து போயின. சிவனது சடை முடியில் ஆதிநாள் தொட்டு இனிது தங்கியிருப்பவளான கங்கையும் வெப்பம் தாங்காது துடித்தாள். பிரமனது கமண்டல நீரும் குறு, குறு வென்று கொதித்தது.
உலகங்கள் யாவையும் படைத்து, பின் அவைகளைத் தன்னிடத்திலே சேர்த்துக் கொள்பவனான திருமாலின் அம்சமான ஸ்ரீ இராமரை, அந்த வருணன் உணர்ந்து கொள்ளவில்லை. பெருமானின் கடும் கோபத்தைக் கண்டும் வர எண்ணம் கொள்ளாமல் தாமதித்த வருணனை விட, அவரிடம் மாறுபாடு கொண்டவர் அரக்கராவாரோ?
அக்கணம் நீர் என்னும் பூதத்தைத் தவிர, மற்ற பூதங்களாகிய நிலம், தீ, காற்று, வானம் என்பவை," தானே தன்னந்தனியே எண்ணமிட்டுத் தனக்குள்ளே உலகங்கள் யாவையும் படைத்த பரம் பொருள் கோபம் கொண்டு விட்டான். இந்த வருணனுடைய நடத்தையால் நமக்குக் கேடு வருமே! இனி, நாம் எப்படிப் பிழைக்கப் போகிறோம்?" என்று சொல்லி நீருக்குத் தெய்வமான வருணனை திட்டத் தொடங்கின.
அக்கணம் நெருப்பும், புகையும் மேன் மேலும் எழுவதால் தனது கண்களால் எதையும் பார்க்க முடியாதவனாய் வருணன், நீர் மல்கும் கண்களுடனும், அன்பால் உருகுகின்ற நெஞ்சத்துடனும், அச்சத்துடன் தொழுகின்ற கையுமாக, துதிக்கின்ற சொல்லுமாக இராமபிரான் எதிரே வந்து தோன்றினான்!
"ஐயனே! எம்பெருமானே! ஜகந்நாதா! நெடுங்கடலின் கோடியில் நான் நின்று கொண்டு இருந்தேன். ஆதலால், நீர் என்னை நினைத்த செயலை அறியாதவனானேன்!" என்றான் வருணன்.ஸ்ரீ இராமரோ வருணின் அந்தச் சொற்களால் மேலும் கோபம் கொண்டார்.
அதனால், மீண்டும் இராமபிரானை நோக்கி வருணன்," உலகம் அனைத்துக்கும் தலைவரே! நீரே கோபிக்கலாமோ? உமது திருவடிகளைத் தவிர எனக்கு வேறு என்ன துணை இருக்கிறது? அப்படிப்பட்ட நான் உம்மை எதிர்க்கக் கூடுமோ? வேதங்கள் கூறுகின்ற பரம் பொருளே! ஆழியும் நீரே ! அனலும் நீரே! மற்ற பூதங்களும் நீரே! அப்படிப் பட்ட உம்மை அடியேன் மறப்பேனோ? இந்த உலகத்தையே காக்கும் வல்லமை கொண்ட தங்களால் செய்ய முடியாத காரியம் தான் உண்டோ? இறைவனாகிய உம்மை நீரே உணரமாட்டீர். அப்படியிருக்க, நாய் போன்ற கடைபட்டவனான நான் எப்படி உம்மை நன்கு உணர்ந்து கொள்வேன்? சிறியோர் செயலை பெரியோர் பொறுத்தலே கடன். நீரே எனக்குச் சரண். எனது குற்றத்தைப் பொறுத்துக் காத்தருள்வீர்!" என்று சொல்லி, அவரது திருவடித் தாமரைகளை வணங்கி எழுந்தான்.
அபயம் வேண்டிய வருணனது வார்த்தைகளால் இராமபிரான் தமது சினம் தணிந்தார். பின்பு வருணனைப் பார்த்து," யாம் சினம் தணிந்தோம். அஞ்சாதே ! உனக்கு அபயம் அருளினோம். யாம் உன்னை வணங்கி இறங்கியும் நீ வராமல் இருந்த காரணம் என்ன? இதை எல்லோரும் அறியும் படி எமக்குச் சொல்க!" என்று கேட்டார்.
உடனே வருணன்," எம்பெருமானே! சீதா பிராட்டியை இராவணன் தூக்கிச் சென்றதை உமது வாய் மொழியால் தான் அறிந்தேன். இச்செய்தியை எனக்குத் தேவர்கள் சொல்லவே இல்லை! மேலும், நீர் எனக்கு இட்ட கட்டளையை நான் அறியவில்லை. நான் அப்போது ஏழாவது கடலில் உள்ள மீன்கள் தமக்குள் போர் செய்ய அதனை நான் விளக்கச் சென்று இருந்தேன்!" என்றான்.
"வருணா! இந்தச் செய்தி இருக்கட்டும்! நாண் ஏற்றிய பாணத்தை என்னால் மீண்டும் திரும்பப் பெற இயலாது. அது எனது ரகு குல வழக்கமும் இல்லை. இனி, எமது அம்புக்கு இலக்காகாமல் நீ காட்டும் வழி என்ன?" என்று, சட்டென்று அவனைக் கேட்டார் இராமர்." நல்லது! நானும் உலகமும் துன்பம் தீர்ந்தோம். உமக்கு நான் வழி காட்டுகின்றேன். மருகாந்தாரம் தீவில் நூறு கோடி கொடிய அவுணர்கள் வசிக்கின்றார்கள். அவர்கள் திண்பதால் உலகத்தில் உள்ள பிராணி வர்க்கங்கள் பல ஒழிந்தன. அத்துடன், எனக்கும் அவர்கள் தீங்கு புரிகின்றார்கள். அவர்கள் அழியும் படியாக உமது கொடிய அம்பை அவர்கள் மேல் செலுத்தி அருள வேண்டும்!" என்று பணிவுடன் வேண்டினான் வருணன் .
அந்தக் கணத்தில் இராமபிரான் அந்த அவுணர்கள் மேல் அம்பு தொடுத்தார். தொடுத்த அம்பு விரைந்து சென்று மருகாந்தாரம் தீவில் வசித்து வந்த அவுணர்களை எல்லாம் கொன்று விட்டு ஸ்ரீ இராமபிரானிடத்திலேயே திரும்பவும் வந்து சேர்ந்தது.
அவுணரை அழித்த இராமபிரான்," வருணனே! நீ என்னிடம் அபயம் கேட்டு வந்ததால், யாம் உன்மேல் கொண்டு இருந்த சீற்றம் தணிந்தோம். உனது பொருட்டு மருகாந்தாரத்து அவுணர்களையும் கொன்று அழித்தோம்; ' கடல் ஒன்று இருப்பதால் பகைவரால் நம்மை என்ன செய்ய முடியும்?" என்ற இறுமாப்பில் உள்ளனர் இராவணன் தலைமையிலான அரக்கர்கள். அவர்களது இறுமாப்பு அழியும் படியாக நாம் சேனையுடன் இலங்கைக்குச் செல்ல வழி தருக!" என்று மீண்டும் வருணனிடம் கேட்டார்.
"ஐயனே! உமது எண்ணப்படி சொல்கிறேன், ஏழு உலகத்தையும் எப்படி அளவிட முடியாதோ! அவ்வாரே ஒருவராலும் இந்தக் கடலின் ஆழத்தை அளவிட முடியாது. நான் நீர் வற்றி நீங்குவதானால் அதற்கு எல்லை இல்லாத காலம் பிடிக்கும். அவ்வளவு காலம் தாமதித்தால் உமது வானர சேனை சோர்ந்துவிடும். மேலும், நான் நீர் வற்றிப் போனால், என்னிடத்திலே வாழும் கணக்கற்ற பிராணிகள் அனைத்தும் அழிந்து விடும். ஆதலால், நான் இன்னொரு உபாயத்தை சொல்கிறேன் அது யாதெனில், என் தலை மீது சேது (பாலம்) ஒன்றைக் கட்டுங்கள், அதன் மேல் ஏறி, நீரும் உமது பெரும் சேனையும் இலங்கையை அடைந்து விடலாம்" என்று சொன்னான்.
இராமபிரான் வருணனின் அந்த முடிவை ஏற்றுக் கொண்டார். உடனே வானரத் தலைவன் சுக்கிரீவனைப் பார்த்து," துணைவர்களே! வருணன் சொல்வதும் சரியே. அவன் நீர் வற்றிப் போனால், அவனுடைய பெருமை அழிந்து போகும். அதனால் மற்ற நான்கு பூதங்களும் எளிமைப் படும். எனவே, அவனது விருப்பப்படியே அவனது தலை மீது சேதுவைக் கட்டுங்கள்!" என்று, தமது துணைவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு இராமபிரான், தமது இருப்பிடத்துக்குச் சென்றார். பிறகு வருணபகவானும் ஸ்ரீ இராமரிடம் விடை பெற்று தனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.