மராமரப் படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
மராமரப் படலம்
இராமபிரான் ஏழு மராமரங்களை ஓர் அம்பால் துளைத்த செய்தியைக் கூறுவதால் இது மராமரப்படலம் எனப் பெயர் பெற்றது. சுக்கிரீவன் இராமனை அழைத்துச் சென்று ஏழு மராமரங்களுள் ஒன்றை அம்பொன்றால் எய்யுமாறு வேண்டினான். மராமரங்கள் அகலத்தில் அதிகம் பருத்தும், வானம் அளவு உயர்வும் கொண்டு விளங்கின. இராமன் மரங்களின் அருகில்சென்று, வில்லில் நாணேற்றி, அம்பு தொடுக்க, அஃது ஏழு மரங்களையும் துளைத்து இராமனிடம் திரும்பியது. சுக்கிரீவன் மகிழ்ந்து இராமனைப் போற்ற, வானர வீரர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இராமனின் வில்லாற்றலை இப்படலத்தின் மூலம் அறியலாம்.
சுக்கிரீவன் சொன்ன அந்த மரா மரங்களைக் கண்டார் இராமபிரான். அவைகள் ஏழும் ஊழிக் காலங்கள் மாறினாலும் நிலை மாறாதவை; எல்லாவுலகங்களும் அழிந்து போகும் காலத்திலும் விழுந்து விடாதவை; சூரிய சந்திரரும் அதன் உச்சியைக் காண முடியாதபடி உயர்ந்து வளர்ந்து இருந்தன. இன்னும் சொல்லப்போனால் நவக்கிரகங்களும் தங்களின் கொம்புகளில் பூத்த மலராகக் காட்சி அளிக்கும் படி அந்த ஏழு மராமரங்களும் மிக வளர்ச்சி உடையவையாகக் காணப்பட்டது.
காற்றே அந்த மரங்களை வலுவாக வந்து அசைத்தாலும் அவைகளின் அதிக நறுமணமுள்ள மலர்களும்; காய்களும், கனிகளும் பூமியின் எந்த இடத்திலும் விழாமல், ஆரவாரம் செய்து பாய்கின்ற ஆகாச கங்கையில் விழுந்து அதன் வழியே சென்று அலை புரளும் கடலில் சேர்கின்ற தன்மை பெற்றவை; மகா மேரு மலையைக் காட்டிலும் அந்த மரங்கள் பருத்தவை. வயிரம் பாய்ந்த கட்டை என்பார்களே, அதற்கு உதாரணம் என்றால் அந்த மரங்களைச் சொல்லலாம். பூமியைத் தாங்குகின்ற ஆதிஷேசனின் வெண்மையான படத்தைக் கிழித்துக் கொண்டு கீழே ஊன்றிச் சென்ற வேர்களைக் கொண்டவை.
அப்படிப்பட்ட மராமரங்களின் அருகே சென்ற ஸ்ரீ ராமபிரான் தேவர்களும், மற்றுமுள்ளோரும், பிராணிகளும் பயப்படம் அளவில் நாணேற்றித் தனது விரலினால் நாணில் ஒலி செய்தார். அந்த நாணின் ஒலியானது எல்லா உலகங்களிலும் எதிர் ஒலித்தது. இலங்கை வரை அந்த ஒலியின் சத்தம் கேட்டது. அது கண்ட அரக்கர்கள், "இது என்ன மேகங்கள் இல்லாமலே இடியின் ஓசை எழுகிறதே" என்று திகைத்தனர். அந்த பிரளயகாலத்து ஒலி போன்ற இருந்த ஸ்ரீ ராமனின் நாண் ஒலி கேட்டு அனுமான், சுக்கிரீவன் உட்பட அனைத்து வானரர்களும் திகைத்தனர். இன்னும் சில வானரர்கள் பயந்து ஓடிப் போய் ஒளிந்து கொண்டனர்.
அந்த வில்லின் நாணின் ஒலியை வைத்தே, இராமபிரானுக்கு அந்த மரா மரங்களை பிளப்பது லேசான காரியம் என்பதை அறிந்து கொண்டார் சுக்கிரீவன். பிறகு தசரத மைந்தர் ஸ்ரீ ராமர் அந்த வில்லில் நாணேற்றி அம்பைத் தொடுத்தார். அந்த இராம பாணம், சுக்கிரீவன் சொன்னபடி அந்த ஒரு மரத்தை மட்டும் அல்ல, அங்கு வரிசையாக நின்று இருந்த ஏழு மரங்களையும் ஒரே நேரத்தில் ஊடுருவிப் பிளந்தது. பிறகு அந்த பாணம் மீண்டும் ஸ்ரீ ராமனிடமனே தனது வேலையை இனிதே முடித்துத் திரும்பி வந்தது. ராமபிரானும் அந்த பாணத்தை ஏற்றுக் கொண்டார்.
இராமனின் ஆற்றலைக் கண்ட ஹனுமான், சுக்கிரீவன் உட்பட அனைத்து வானரங்களும் கூத்தாடினார்கள். மேலும், சுக்கிரீவன் ஸ்ரீ ராமரிடம், தான் அவரது ஆற்றலை சோதிக்க நினைத்ததற்காக மன்னிப்பு வேண்டினான். அத்துடன் சுக்கிரீவன் ஸ்ரீ ராமரைப் பலவாறு புகழ்ந்தான். அத்துடன் அவன் தன் துக்கம் இனி சந்தோஷமாக மாறும் என்பதை முழுவதுமாக நம்பி உணர்ந்தான். வானர வீரர்கள் மறுபுறம் 'வாலியைக் கொல்லும் யமனைப் பெற்று விட்டோம்" என்று எண்ணி, எண்ணி மகிழ்ந்தார்கள்.
அப்போது....
ருசியமூக பர்வதத்தில் துந்துபி என்னும் அசுரனின் உலர்ந்த உடம்பெலும்புக் கூடு கிடப்பதைக் கண்டார் இராமபிரான்! அந்த எலும்புக் கூடு அதிக இரத்தப் பசை வற்றிப் போயிருந்தாலும், அண்ட கோளங்களும் உலகங்கள் யாவும் பிரளய காலத்தில் வெந்ததைப் போன்றும், மலையின் மேலே ஒரு மலையிருப்பதைப் போலவும் காணப்பட்டது.
அதனைக் கண்ட ஐயன், "தென்திசைப் பாலனான எமன் ஏறிச் செல்லும் எருமைக் கடாவோ இது? திக்கஜங்கள் போன்ற யானை இறந்து கிடந்தது தானோ?" என்று சந்தேகித்தார். பிறகு சுக்கிரீவனை நோக்கி, "வானர அரசனே! இதோ, இங்கே ஒரு மலைபோல் கிடக்கும் இது என்ன? இதனைப் பற்றி எனக்கு நீ சொல்வாயாக!" என்று கேட்டார் இராமபிரான்!
ஸ்ரீ ராமபிரானின் கேள்விக்கு உடனே சுக்கிரீவன் பதில் சொல்லத் தொடங்கினான்.