பம்பைப் படலம்

bookmark

கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

பம்பைப் படலம்

(இராமபிரானும் இலக்குவனும் பம்பை என்னும் பொய்கையை அடைந்து, அங்குள்ள காட்சிகளைக் காணும் செய்திகளைக் கூறுவதால் இப்படலம் 'பம்பைப் படலம்' எனப்பட்டது. பம்பை என்பது மானிடர் ஆக்காத ஒரு பெரிய பொய்கை. அது கிட்கிந்தை நகரத்திற்கு அருகில் இரலை என்னும் குன்றின்கீழ் அமைந்துள்ளது. இனிய நீர்நிலையாய்ப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாய்ப் பம்பை விளங்கிற்று. அங்குள்ள மலர்கள், பறவைகள், மீன்கள், களிறுகள் முதலிய இயற்கைக் காட்சிகளைக் கண்ட இராமபிரான் சீதையின் நினைவால் வருந்தினான். பின்னர் இலக்குவன் வேண்டுகோளுக்கு இணங்கிப் பம்பையில் நீராடி மாலை வழிபாடுகளைச் செய்தான். அன்றிரவு இருவரும் அங்கே தங்கி, அடுத்த நாள் காலை சீதையைத் தேடிச் சென்றனர்.)

பம்பை ஓர் அழகான இயற்கையாக அமைந்த பொய்கை. அப்பொய்கையை இராமலக்ஷ்மணர் அடைந்த பொழுது, வசந்த காலம் துவங்கியது. அந்தப் பொய்கையில் தாமரை முதலிய பூக்கள் பூத்திருந்தன. யானைகள் வந்து அந்தப் பொய்கையில் குளித்த பின்னரும் அந்த நீர் தெள்ளத் தெளிவாக காணப்பட்டது. மேலும் இனிய நீருடன் விளங்கிய அந்தப் பொய்கையில் அங்கங்கே பேடைகள் சூழ அரசவண்ணம் இனிதாக விளையாடிக் கொண்டு இருந்தது.

நல்ல கவிகள் செய்த நூல் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க ஆழ்ந்த கருத்தைக் கொண்டு இருந்தாலும் பொருளைச் சந்தேகம் இல்லாமல் விளங்க வைத்தல் போல,அது ஆழத்துடன் காணப்பட்டாலும் தெளிந்த நீர் நிறைந்து அழகாக இருந்தது.

மேலும் அது கீழுள்ள பொருள்களை எல்லாம் நன்கு காட்டுகின்ற மிகத் தெளிந்த நீருடையதாக இருந்தாலும் , தாமரை முதலிய நீர்க் கொடியின் பச்சிலைகள் இடையிடையே பரவி மறைந்திருந்ததால் அதன் தெளிவு முழுதுமாகத் தெரியவில்லை. எப்படி நல்லறிவு தான் மாசற்றதாய் இருந்தாலும், ராஜஸ தாமஸ குணங்கள் இடையிடையே தோன்றி மயக்குவதால் மாசடைந்து தன் நிலை தோன்றாதிருக்கிறதோ, அது போலவே அது காணப்பட்டது.

அன்னங்கள் அந்தப் பொய்கையின் கரைக்கு வந்தன.' தங்களால் ஸ்ரீ இராம்பிரானுக்குச் சீதையைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாவிட்டாலும், அவருக்கு அப்பிராட்டியின் நடை யழகையாவது காட்டுவோம்' என்பது போல, அவைகள் கரையிலே இங்கும் அங்குமாக உலவின.

அந்தப் பொய்கையின் கரையிலே நின்றுள்ள மரங்களில் கொக்குகள் உட்கார்ந்து தம் சிறகை உலர்த்திக் கொண்டு இருந்தன. அவைகளின் நிழல்கள் பொய்கை நீரில் கண்ணாடியில் தோன்றுவது போலத் தெளிவாகத் தோன்ற, அந்த நிழல்களைக் கண்டு நீரிலுள்ள மீன்கள் யாவும் தம்மைத் தின்பதற்க்கே கொக்குகள் நீரில் மூழ்கியுள்ளன என்று அஞ்சி,அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டு இருந்தன.

அத்தகைய அழகும் சிறப்பும் மிக்க பம்பைப் பொய்கையைத் தம்பி லக்ஷ்மணனோடு வந்து சேர்ந்த ஸ்ரீ ராமர், அங்கே காணப்பட்ட இளமையான அன்னப் பறவைகளையும், தாமரை மலர்களையும், பிறவற்றையும் கண்டார்! அவற்றைப் பார்த்தவுடன், தம்மிடத்தில் இருந்து பிரிந்து போன இளந்தளிர் போன்ற மேனி கொண்ட சீதையின் நினைவு வர, நெஞ்சுருகி அவர் வருந்தினார். அந்த வருத்தம் மேலும் மேலும் அதிகமாக, அவர் இறுதியில் வாய்விட்டே புலம்பத் தொடங்கினார்:-

" அழகிய ரூபம் கொண்ட அன்னப் பறவைகளே, என் மனையாள் சீதை உடன் இல்லை என்பதால், என் முன் இவ்வாறு அழகாக நடப்பதாக நினைத்து நடந்து காட்டுகின்றீர்களா. உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனது சீதை நடையில் உங்களை காட்டிலும் அழகாக நடப்பவள். நான் இதுவரையில் சீதையை ஒரு நாள் கூடப் பிரிந்ததில்லை. ஆனால், இன்றோ நான் அவளைப் பிரிந்து ஆறாத துயரத்தில் இருக்கிறேன். ஒரு வேளை, எனக்கு ஆறுதல் சொல்லத் தான் அன்னப் பறவைகளான நீங்கள் கூட்டமாக என்னை நோக்கி வருகை தருகின்றீர்களா?" என்றார் இராமபிரான்.

பிறகு ஓடுகின்ற பம்பையைப் பார்த்துப்," பொய்கையே! தேவாமிருதம் போன்றவள் எனது சீதை. அவளுடைய கண், வாய், முகம், காது, வயிற்று மடிப்பு, கணைக்கால், புறங்கால் ஆகிய உறுப்புகளை உன்னிடத்திலே பார்க்கிறேன். அவைகள் வழிய அரக்கன் சீதையை கவர்ந்து செல்லும் போது கீழே சிந்தியவைகளோ? நீ சொல்வாயாக!" என்று கூறிப் புலம்பினார்.

இவ்வாறாக மனைவி சீதையைப் பிரிந்ததால் ஏற்பட்ட மன வருத்தத்தால் புலம்பித் தவித்த இராமர், நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றினார். கொன்றை மரங்கள் ஓங்கி வளர்ந்து மலர்கள் சொரிந்து நிற்கும் அப்பொய்கையின் கரையிலே இங்கும் அங்கும் உலாவினார். அப்படி உலாவிக் கொண்டு இருந்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென்று நின்றார். தடாகத்தை நோக்கினார்." ஏ, இரக்கம் இல்லாத பொய்கையே! நான் இப்படி அழிந்து கொண்டு இருக்கிறேன். அதனைக் கண்டு நீ ஒரு வார்த்தையும் எனக்கு ஆறுதலாகச் சொல்லாமல் இருப்பாய் போலும்!" என்று சொல்லி வருந்தினார்.

அப்போது பொய்கைக் கரையிலே ஆணும் பெண்ணுமாக யானைகள் வந்து நின்றன. அவைகளில் ஆண் யானைகள் தங்கள் துதிக்கையால் பொய்கையின் நீரை உறிஞ்சி, அதனைப் பெண்யானையின் வாயில் ஊட்டின. அக்காட்சியை இராமர் கண்டார். அதனைக் கண்ட மாத்திரத்தில் அளவு கடந்த துயரத்தால் வருத்தி,' தனக்கு இப்படி விளையாடுவதற்கு இல்லையே!' என்று நினைத்துத் திகைத்து நின்றார்.

இராமபிரான் அவ்வாறு திகைத்து வருந்தி நின்ற போது...

சூரியனும் அவரது சோகத்தைக் காணப் பொறுக்காமல் அஸ்தமனமானான். லக்ஷ்மணன் அதைக் கண்டதும், சூரியாஸ்தமனத்தில் செய்ய வேண்டிய கடமைகளை இராமருக்கு உணர்த்த விரும்பினான். எனவே, அவன் அண்ணலை நோக்கி," அண்ணலே! பொழுது போய் விட்டது. ஆகையால் தாங்கள் இந்தப் பொய்கையின் பெருமையுள்ள தீர்த்தத்திலே நீராடி, தங்களுடைய புகழ் எல்லா உலகத்திலும் ஓங்கி வளர்வது போல, முன்பு வளர்ந்தருளிய திரிவிக்கிரமனாகிய ஸ்ரீ மந் நாராயணனின் திருவடி வணங்குவீராக!" என்று விண்ணப்பம் செய்தான்.

அது கேட்ட இராமபிரான் அந்தப் பொய்கையில் நீராடினார். அதனால் சற்றே தன் துயர் மறந்தார். அதே சமயம் அவர் நீராடியதால்,விரக தாபத்தால் அவர் மேனி கொண்ட வெப்பம் அனைத்தையும் அந்தப் பொய்கை ஏற்று, கொல்லன் உலையிற் காய்ச்சிய இரும்பைத் தோய்த்த நீர் போலக் கொதித்தது.

பிறகு ஸ்ரீ ராமபிரான் வேதங்கள் கூறிய புனித முறைப்படி அப்பொய்கையில் அர்க்ய தீர்த்தத்தை திருமாலின் திருவடிகளில் சமர்ப்பித்து , சந்தியா வந்தனஞ் செய்து, முனிபுங்கவர் தங்கி இருக்கும் ஒரு சோலைக்குச் சென்று, அதன் ஒரு பக்கத்தில் தங்கினார்.

ஒருவாறு அன்றைய மாலைப் பொழுது மெல்ல நகரத் தொடங்கியது. சந்திரன் வானிலே எழுந்தான். அது கண்ட பறவைகள் அனைத்தும் தத்தமது கூடுகளுக்கு சென்று தங்கின. மிருகங்கள் தங்களின் கொடுஞ் செயல்களை நிறுத்திக் கொண்டன; கிளிகள் பேசாமல் இருந்தன; குயில் கூவாமல் அடங்கியது, தெளிந்த தடாகங்கள் தூங்கின,நாகலோகத்தில் இருக்கும் பாம்புகள் கூட தூங்கின. இன்னும் சொல்லப் போனால் பூமியில் உள்ள அனைத்து வகை ஜீவ ராசிகளும் உறங்கிவிட்டன. இரண்டே ஜீவன்கள் மட்டும், வேதனையின் உருவமாக அன்று இரவு அவ்விடத்தில் உறக்கமின்றி தவித்தன. அந்த ஜீவன்கள் தான் இராமபிரானும், இளையபெருமாள் லக்ஷ்மணனும்.

அன்று இரவும் இராமபிரான் சீதையை நினைத்து உறங்காமல் தவித்தார். ஒரு வழியாக அடுத்த நாள் பொழுதும் விடிந்தது. சூரிய கிரணங்களால் இருள் தேவி ஓடி மறைந்தாள். சக்கரவர்த்திக் குமாரர்களும் பொழுது விடிந்ததை அறிந்து அன்றைய நாளும் சீதையைத் தேடிக் கொண்டு காடுகளையும், மலைகளையும் விரைவாகக் கடந்து ருசியமூகப் பருவதத்தை அடைந்தார்கள்.