நகர் நீங்கு படலம் - 1876
இராமன் சீதையிடம் செல்லல் (1877-1878)
1876.
இரைத்தனர், இரைத்து
எழுந்து ஏங்கி, எங்கணும்,
திரைப் பெருங் கடல் எனத்
தொடர்ந்து பின் செல,
உரைப்பதை உணர்கிலன்,
ஒழிப்பது ஒர்கிலன்,
வரைப் புயத்து அண்ணல் தன்
மனையை நோக்கினான்.
(அனைவரும் )இரைத்தனர் - அழுதனர்; இரைத்து எழுந்து
ஏங்கி - அமுது மெல்ல எழுந்து புலம்பி; எங்கணும்- எவ்விடத்தும்;
திரைப்பெருங்கடல் என- அலை வீசுகின்ற பெருங்கடல் (தொடர்வது)
போல; தொடர்ந்து பின் செல -(இராமனைப்)பின்பற்றித் தொடர்ந்து
செல்ல; வரைப்புயத்து அண்ணல் - மலைபோன்றதோளைஉடைய
தலைவனாகிய இராமன்; உரைப்பதை உணர்கிலன் -(அவர்களுக்கு)
ஆறுதல்சொல்வதை அறியாமலும்; ஒழிப்பது ஓர்கிலன் -(அவர்களை)
வராமல் தடுப்பதுபற்றிஆராயாமலும்; தன் மனையை நோக்கினான்- தன்
இல்லத்தை நோக்கிச் சென்றான்.
பின்பற்றி வருவாரைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறி அகற்ற
இயலாமல் இராமன் தன் மனைக்குச் சென்றான் என்பதாம். ‘உரைப்பதை’
என்பதற்கு அவர்கள்புலம்பிக் கூறுவதை உணராதவனாய் என உரைப்பினும்
அமையும். 181
