நகர் நீங்கு படலம் - 1875
1875.
தாயரும், கிளைஞரும், சார்ந்துளார்களும்,
சேயரும், அணியரும், சிறந்த மாதரும்,
காய் எரி உற்றனர் அனைய கவ்வையர்;
வாயிலும் முன்றிலும் மறைய மொய்த்தனர்.
தாயரும் - தாய்மார்களும்; கிளைஞரும் - உறவினர்களும்;
சார்ந்துளார்களும் - சார்ந்து பற்றுக்கோடாய் எண்ணித்
தங்கியுள்ளவர்களும்; சேயரும்அணியரும்- சேய்மையிலும் அண்மையிலும்
உள்ளாரும்; சிறந்த மாதரும் - அழகிற்சிறந்த மகளிரும்; காய் எரி
உற்றனர் அனைய - சீறும் நெருப்பில் விழுந்தாற்போன்ற; கவ்வையர் -
துன்பமுற்று; வாயிலும் முன்றிலும் மறைய - அரண்மனைவாயிலும்
முற்றமும் மறையும்படி; மொய்த்தனர் - நெருங்கினார்கள்.
கவ்வை - அரற்றுதலுக்கு ஏதுவாகிய பெருந்துன்பம். 180
