திருவடி சூட்டு படலம்

அயோத்தியா காண்டம்
இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
திருவடி சூட்டு படலம்
(இராமனைக் காட்டிலிருந்து அயோத்திக்கு அழைத்து வந்து அரசன் ஆக்குவேன்'என்று சொல்லிப் பரதன், தேவிமார்கள், அரசச் சுற்றத்தினர், நகரத்தவர்கள் ஆகியோருடன் கங்கையைக் கடந்து சென்று இராமனைக் கண்டு அழைக்கிறான். அவன் மறுக்கவே அவனது திருவடி நிலைகளை வேண்டிப் பெற்றுத் தன் தலைக்கணியாகச் சூட்டிக்கொள்கிறான். அயோத்தி அரசுக்குத் திருவடியைச் சூட்டுகிறான் ஆதலின், திருவடி சூட்டுப் படலம் எனப்பெற்றது.
பரதன் தன் முடியில் திருவடியைச் சூட்டிக் கொளும் படலம் என்பதினும், அயோத்திக்கு இராமபிரான் திருவடியைச் சூட்டுகிற படலம் என்பதும் சிறப்புடையது. பரதன் பரத்துவாச முனிவனைக் காணுதலும், அவன் வந்த செய்தி கேட்டு மனம் மகிழ்தலும், அனைவரும் அங்கே விருந்து அயர்தலும், பரதன் காய், கனி உண்டு வெறுநிலத் துறங்கலும், மீண்டும்புறப்பட்டுச் சித்திரக்கூடத்தைச் சேர்தலும், பரதன் வருகையை இலக்குவன் ஐயுற்றுச் சீற்றம் அடைதலும், போர்கோலம் பூண்ட இலக்குவனை மறுத்து இராமன் தெளிவித்தலும், தன்னை அணுகியபரதன் திருமேனி நிலை கண்டு அவன் நிலையை இராமன் இலக்குவனுக்குக் காட்டுதலும், இலக்குவன் நெஞ்சழிந்து வருந்தலும், தந்தை இறந்தமை கேட்டு இராமன் புலம்பலும், வஷிஸ்டன் தேற்றுதலும், இராமன் தந்தைக்கு நீர்க்கடன் செய்தலும், பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து புலம்பலும், தந்தை தயரதன் இறந்தமை செய்தியை இராமன் மூலம் அறிந்த சீதை வருந்தலும், அவள் நீராடி இராமனை அடைதலும், தாயார்களையும் இராமன் சந்தித்து வருந்தலும், மறுநாற் யாவரும் 'சூழ்ந்திருக்க இராமன் பரதனை விரதவேடம்' பூண்டமை பற்றி வினாவலும், பரதன் இராமனே அரசனாக வேண்டும் என்ற தன் கருத்தை விளக்கி உரைத்தலும், பரதன் வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தலும், பரதனை அரசாள இராமன் ஆணையிடலும், பரதனைத் தடுத்து வஷிஸ்டன் இராமனிடம் அரசேற்க மொழிதலும், அதனையும் இராமன் மறுத்தலும், பரதன் காடுறைவதாகக் கூறலும், அவ்வளவில் இமையவல் பரதனை நாடாளவேண்டும் என மொழிதலும், பின்னர் வேறு செயலின்றிப் பரதன் இராமனது திருவடிநிலைகளை வேண்டிப்பெற்று 'மீளுதலும், நந்திக் கிராமத்தில் இராமன் திருவடிநிலை அரசுசெலுத்த விரத தவவேடத்துடன் புலன்களை அவித்துப் பரதன் இருத்தலும், இராமன் சீதையோடும் இலக்குவனோடும் தென்திசை வழிக்கொண்டு சேறலும் இப்படலக் செய்திகள் ஆகும்.)
பரத்துவாச முனிவர் பரதன் உட்பட அவனுடன் வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார். தன்னை வரவேற்ற முனிவரைப் பரதன் தனது தந்தையைப் போலவே கருதி தாழ்ந்து பணிந்து கொண்டான். அம்முனிவரும் பரதனின் வணக்கத்தை ஏற்று அவனுக்கு வாழ்த்துக்கள் பல கூறினார். பின்பு அவனை நோக்கி," ஐயனே ! நீ பெற்ற இராஜியத்தை ஆளாமல் இப்படித் தவக் கோலம் கொண்டு இங்கு வரக் காரணம் என்ன?" என்று அவனைப் பார்த்துக் கேட்டார் பரத்துவாச முனிவர்.
முனிவர் கூறிய மொழி கேட்டு, பரதன் அளவற்றக் கோபம் கொண்டான். அவன் கண்கள் தீயை உமிழ்ந்தது. பின்பு அம்முனிவரை நோக்கி," நியாய அநியாயங்களை உணர்ந்த முனிவர் பெருமானே! நீர் இப்படிக் கேட்கலாமா? இது முறையாகுமா? முத்தவன் ஒருவன் இருக்க இளையவன் அரசை ஆள்வது சரியோ? நீவீர் சொல்லி அருளும்" என்று சற்று கோபத்துடன் வினவினான். பின்பு சற்றே கோபம் தணிந்தவனாய் மீண்டும் அம்முனிவரிடத்தில்," இராமபிரானையே இராஜ்ஜியத்தை ஆளும் படி வேண்டிக் கொள்ள வந்தேன். ஒருகால் அவர் ஒத்துக் கொள்ளாவிட்டால் அவருடனேயே வனத்தில் வாழ்வேன்!" என்று, தான் வந்த காரணத்தையும், தனது நிலையையும் அவருக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கினான்.
அது கேட்ட, பரத்துவாச முனிவர் உட்பட அங்கிருந்த அனைத்து முனிவர் பெருமக்களும் பரதனின் பெருந்தன்மையைக் கண்டு பாராட்டினார்கள். பின்பு பரதன் உட்பட அவனது பரிவாரங்கள் அனைத்தையும் தமது பர்ணசாலைக்கு அழைத்துச் சென்றார் பரத்துவாச முனிவர். பிறகு பரதனின் பெரும் சேனைக்கு விருந்து படைக்கச் சித்தம் கொண்டு, தனது தவ வலிமையால் அவ்விடத்தில் ஒரு சுவர்க்க லோகத்தையே உருவாக்கினார் அம்முனிவர் பெருமான். உடனே அழகிய தேவ கன்னிகைகள் தோன்றினார்கள். அங்கிருந்த அனைவரும் மறுபிறப்பெடுத்து சுவர்க்க லோகத்தை அடைந்தவர் போல,முன்பு இருந்த தம்முடைய வாழ்க்கையெல்லாம் மறந்து பெருங்களிப்பில் மூழ்கினார்கள்.
விண்ணுலக மாதர்கள், அங்கு வந்திருந்த அனைவரையும் உபசரித்தார்கள். சந்திரமண்டலம் போல விளங்குகின்ற தமது மாளிகைகளுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவ்வாறு தாங்கள் அழைத்துச் சென்ற ஆடவர்களுக்கு வாசனைப் பொடியை உடம்பில் நன்றாகத் தேய்த்தார்கள். குளிர்ந்த ஆகாய கங்கையின் நீரினால் குளிப்பாட்டினார்கள். பூப்போன்ற மெல்லிய பட்டாடைகளை எல்லாம் அவர்களுக்கு உடுத்தினார்கள். செம்பொன் ஆபரணங்களை அவர்களுக்கு அணிவித்து மகிழ்ந்தார்கள்.
நற்சுவை மிக்க உணவை உண்ணச் செய்தார்கள். தேவர்களை உபசரிப்பது போலவே அந்த ஆடவர்களையும் உபசரித்து மகிழ்ந்தார்கள். மேலும், அத்தெய்வப் பெண்கள் தோழிகளும் வேலைக்காரிகளும் போலத் தங்கள் கட்டளையைக் கேட்டு அதன்படிச் செய்ய, பரதனுடன் வந்த பெண்கள் எல்லோரும் தேவமகளிருக்கு உண்டான செல்வத்தை அனுபவித்தார்கள். அச்சமயம் அந்திப் பொழுதும் மெல்ல வந்து சேர்ந்தது. தென்றல் காற்று மெல்ல மனம் வீசத் தொடங்கியது. பரதனைத் தவிர அனைவரும் அந்த தேவ மகளிரால் தங்களுக்கு ஏற்பட்ட இன்பத்தை அனுபவித்தார்கள்.
ஆனால், மறுபுறம் பரதனோ அண்ணனைப் பிரிந்த துயரத்தில் மூழ்கிக் கிடந்தான். புழுதி படிந்த வெறுந்தரையில் படுத்தான். தேவ கன்னிகைகள் தந்த அறுசுவை உணவை வெறுத்து ஒதுக்கினான், பழங்களையும், கிழங்குகளையும்,காய் கனிகளையும் உயிர் வாழப் போதுமான அளவே உண்டான். அதனால், அவனது தேகம் மெலிந்து காணப்பட்டது.
இப்படியிருக்க அயோத்தியின் சேனைகள் மற்றும் மக்கள் அனைவரும் பரத்துவாச முனிவரின் புண்ணிய பலன் காரணமாக அந்த இரவை களிப்புடன் கழித்தார்கள். பொழுதும் விடிந்தது, சுவர்க்க லோகம் மறைய, சூரியனின் ஒளிக் கற்றைகள் பூவி மீது படிந்தன. பரதனுடன் வந்த சேனையில் உள்ள அனைவரும் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். உதய பொழுது பிறந்ததும் பரதனும் மற்றவர்களும் பரத்துவாச முனிவரிடமும் மற்ற முனிவர்களிடமும் விடை பெற்று, மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்ந்து பாலைவனத்தை அடைந்தார்கள்.
அப்பொழுது யானைகள் சொரிந்த மதநீர் பெருகிப் புழுதி மண்ணைச் சேராக்க, அந்தப் பாலைவனம் குளிர்ச்சிப் பொருந்தியதாக மாறிற்று. மேலும், உடன் வந்த மன்னர்களின் வெண்குடை நிழலால், அப்பாளைவனமே பந்தல் போட்டது போல குளிரத் தொடங்கியது. முன்பு இராமபிரான் காடு சென்ற போது அந்த வனம் மழைக்குறி தோன்றி இனிய வழியானது போல, இப்பொழுதும் பட்டமரம் தளிர்த்து அவர்கள் செல்லும் வழி இனியதாயிற்று. அதனால், அந்த ஒட்டுமொத்த சேனைகளும் அப்பாளைவனத்தை மருத நிலத்தைக் கடப்பது போல மிகச்சுலபமாக கடந்து சென்று சித்திரக் கூட பருவதத்தை அடைந்தது.
சித்திரக் கூட மலையில் அண்ணனின் சேவையில் ஈடுபட்டு இருந்த லக்ஷ்மணன் தீடீர் என்று தனது காதுகள் கொண்டு பெரும் ஆரவாரத்தைக் கேட்டான். வான் மீது எழுந்த தூளிப் படலத்தையும் கண்டான். ஏதோ பெரும் சேனை வந்து கொண்டு இருப்பதை தெரிந்து கொண்டு. "வருவது யாராக இருக்கும்?" என்று சிந்தித்து சித்திரக் கூடத்தின் உயரமான மலை உச்சிகளில் இருந்தபடி கீழே நோக்க, பரதன் ,சத்துருக்கனன் உட்பட அயோத்தியின் பெரும் சேனை ஆரவாரத்துடன் வருவதைக் கண்டான்.
"எங்கே அண்ணன் இராமன் பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்து அயோத்தியின் ராஜ்யத்தை மீட்டுக் கொண்டு விடுவானோ? என்ற எண்ணத்தில் அண்ணன் இராமபிரானை காட்டில் வைத்துக் கொல்லவே இந்தப் பரதன் பெரும் படையுடன் வருகிறான். இவன் தாய் செய்த கொடுமைகள் போதாது என்று , மகனும் அதே வழியில் அண்ணனுக்குத் தொல்லை கொடுக்கவே வருகிறான்" என்று மனதுக்குள் கூறிக்கொண்டு, இந்த செய்தியைத் தெரிவிக்க இராமபிரானை நோக்கி விரைந்தான் லக்ஷ்மணன்.
இவ்வாறாக இராமபிரானை சென்று அடைந்த லக்ஷ்மணன் அவரைப் பார்த்து,"அண்ணா! தங்களின் பெருந்தன்மையைப் பரதன் சிறிதும் மதிக்கவில்லை. அதனால் தான் அயோத்தி நகரத்தில் இருந்து பெரும் சேனையை திரட்டிக் கொண்டு தங்களை போர் தொடுத்துக் கொல்லும் நோக்கில் விரைந்து வந்து கொண்டு இருக்கிறான்" என்று கூறினான்.
பின்பு லக்ஷ்மணன் இடையில் உடைவாளையும், பாதத்தில் வீரக்கழலையும் கட்டிக் கொண்டான். அத்துடன், பல அம்புகளைக் கொண்ட அம்பறாத் துணியையும் கட்டிக் கொண்டான் போர்க்கவசத்தை உடம்பில் பூட்டிக் கொண்டான். கையில் வில் ஏந்தியபடி அண்ணன் இராமபிரானின் கால்களைத் தொட்டு வணங்கி ,"அண்ணா! கவலை கொள்ள வேண்டாம். பரதனையும், அவனுடைய பெரும் சேனையையும் நான் ஒருவனே அழிக்கின்றேன், பாருங்கள்! யானைகளையும், குதிரைகளையும், மனிதர்களையும் நான் ஒருவனே கொன்று குவித்து இரத்த ஆறு பலவற்றை உண்டாக்குகின்றேன், பாருங்கள்! என் வில்லில் இருந்து புறப்படும் அம்புகள் ஒவ்வொன்றும், அவர்கள் மார்பின் கவசத்தைப் பிளந்து ஊடுருவிச் செல்லப் போவதைப் பாருங்கள். தேர்த் தட்டில் என்னால் கொள்ளப்பட்டு இறந்து வீழ்ந்த வீரர்களின் கையிலுள்ள கேடயங்களை எடுத்துப் பேய்கள் தாளமிட்ட வண்ணம் கூத்தாடும் படிச் செய்யப் போகின்றேன். அதனையும் தாங்கள் பாருங்கள்! அந்தச் சேனை அழிந்து வானுலகம் போகப் போவதைப் பாருங்கள்.எனது கணைகளில் இருந்து பரதன் தப்பிக்க முடியாது, மாதேவி கோசலைக்குத் துரோகம் இழைத்த அந்தக் கொடும் பாவியான கைகேயியிக்கு புத்திர சோகத்தை நான் ஏற்படுத்துவேன். அண்ணா, திரிபுரத்தை எரித்தழித்த சிவபெருமான் போல, இந்தச் சேனையை இக்கணமே அழித்து விளங்குவேன்!"என்று முழங்கினான் லக்ஷ்மணன்.
லக்ஷ்மணனின் வீராவேச வார்த்தைகளைக் கேட்டார் இராமர். அவனுடைய கோபத்தை உடனே தணிக்க விரும்பினார். பிறகு அவனைப் பார்த்து மெல்லப் புன்னகைத்த வண்ணம்," லக்ஷ்மணா,நீ கோபம் கொண்டு புறப்பட்டால் உன்னை யார் தான் தடுத்து நிறுத்த முடியும்?,ஆனால் அதே சமயத்தில் நான் சொல்வதையும் நீ கேட்டுத் தான் ஆக வேண்டும். அது யாதெனில், நமது குலத்தில் பிறந்த யாருமே தர்மத்தை மீறியது கிடையாது. அதிலும், பரதன் தரும சாஸ்திரங்களை நன்கு கற்றவன். அவன் ஒரு போதும் அதர்ம காரியங்களை துணிந்தும் செய்ய மாட்டான். உன்னை விட பரதனை நான் நன்கு அறிந்தவன், அவன் இங்கு வரும் நோக்கம், என்னை அழைத்து ராஜ்யத்தை கொடுப்பதற்காகவே.நீயும், இன்னும் சற்று நேரத்தில் எனது இன்னொரு தம்பியின் பெரும் தன்மையைப் பார்ப்பாய்" என்றார்.
அது கேட்ட லக்ஷ்மணன் சினம் தணியும் வேளையில், பரதனும் சித்திரக்கூட மலையின் அடிவாரத்தை அடைந்தான். அச்சமயம் தனது சேனைகளை சற்று தூரத்திலேயே நிறுத்தி வைத்து விட்டு. ராஜ மாதாக்களுடன் ,சுமந்திரர், வஷிஸ்டர் பின் தொடர இராமபிரானைக் காண விரைந்தான்.
பிறகு இராமபிரானைக் கண்ட மாத்திரத்தில் அழுத படி ஓடி வந்து அவரைக் கட்டி அனைத்துக் கொண்டான். அவனால் பேசக் கூட முடியவில்லை. மரவுரி தரித்து, இளைத்த உடலுடன்,பரிதாபமான முகத்துடன் வந்த பரதனை, இராமபிரான் தாய் மகனை தேற்றுவது போலத் தேற்றினார். பிறகு லக்ஷ்மணனை பார்த்து " தம்பி லக்ஷ்மணா பரதனின் போர் கோலத்தைப் பார்" என்று கேலிப் புன்னகை செய்தார்.
பரதனின் உண்மை எண்ணத்தை அறிந்த லக்ஷ்மணன் , தான் முன்பு சொன்ன வேறுபாடான வார்த்தைகளைக் கேட்டு மனம் கலங்கினான். மறுபுறம் பரதன் அண்ணனை வணங்கி,அண்ணனின் நிலைக்குத் தான் தானே காரணம் என்று அவரது கால்களைப் பிடித்துக் கொண்டு கதறி அழுது கொண்டு இருந்தான். பிறகு, பரதனை தேற்ற இராமபிரான் பலதரப்பட்ட ஆறுதல் வார்த்தைகளைக் கூறி, தான் பரதனைத் தவறாக ஏதும் நினைக்கவில்லை என்று அவனைத் தேற்றினார். பின் தந்தை தசரதரின் உடல்நலத்தை விசாரித்த போது, பரதன் ," அண்ணா! தங்களின் பிரிவென்ற நோயினாலும், என் தாய் கைகேயி என்ற யமனாலும், இந்த உலகத்தில் சத்தியத்தை நிலை நிறுத்தி விட்டு நமது தந்தை காலமானார்" என்ற விவரத்தை இராமபெருமானிடம் கண்ணீர் மல்க, நா தழு, தழுக்க தெரிவித்தான் பரதன்.
புண்ணில் சுடுவேல் நுழைத்தது போல, தந்தை இறந்த செய்தியை கேட்டதும் இராமர் மிகுந்த வருத்தம் அடைந்தார். பின்பு தந்தை இறந்த சோகத்தை நினைத்து," உம்மைக் கொன்ற பின்பு நான் தான் இந்த உலகத்தை ஆள்வேனோ?. நீர் என்னை நினைத்து இறக்க, உமது மரணத்திற்கு நானும் ஒரு காரணம் ஆகிவிட்டேனே? இதன் மூலம் எந்தப் பிள்ளையும் செய்யாத பாவத்தை நான் எனது தலையில் சுமக்கும் படி ஆகிவிட்டதே! நந்தா விளக்கே! தயா நிலையே! எந்தையே!" என்றெல்லாம் புலம்பத் தொடங்கினார் ஸ்ரீ ராம பிரான்.
ராம பிரானின் புலம்பலைக் கண்ட வஷிஸ்டர் பெருமான் அவரிடம்," ராமா நீ சாதாரண மனிதர்களைப் போல அழலாமா? நீ அனைத்தையும் கற்றவன் ஆயிற்றே! எல்லாம் அறிந்தவன் ஆயிற்றே! ஜனனமும், மரணமும் இயற்கையின் பொது விதி, இந்த இரு கரையை தொட்டபடி ஓடும் கால நதி தான் மரணம். இதில் இருந்து யார் தான் தப்பி உள்ளார்கள்? மும்மூர்த்திகளே ஆனாலும், பூமிக்கு வந்த பிறகு காலம் விரிக்கும் வலையில் இருந்து தப்பித்துக் கொள்ளத் தான் முடியுமோ?. இவ்வளவு ஏன்? பஞ்ச பூதங்களுக்கும் கூட ஒரு நாள் அழிவு உண்டு. மேலும், நீர்க்குமிழி போன்று நிலையில்லாதது இந்த உடம்பு. உன் தந்தையின் உடல் தான் அழிந்தே தவிர அவரது ஆன்மா இன்னும் இறக்கவில்லை. அதனால் நீ சாதாரண மனிதன் போல அழுதுத் துடிக்காமல், தந்தைக்கு செய்ய வேண்டிய கருமங்களை செய்யத் தொடங்கு. அவருக்கு மூத்த மகனாக முக்தியைக் கொடு. உமது கைகளால் உமது தந்தையின் பாவாத்தைப் போக்கிச் சுத்தம் செய்யக் கூடிய தர்ப்பண நீரைச் சொரிவீர்! கண்ணீர் சிந்துவதால் ஒரு பயனும் இல்லை. "என்று ஆறுதல் தெரிவித்து உண்மை நிலையை எடுத்துரைத்தார்.
வசிஷ்ட முனிவரின் சொல்படி, கங்கை நீரில் இறங்கிய இராமர் தந்தைக்கு செய்ய வேண்டிய கருமங்கள் அனைத்தையும் முறைப்படி செய்தார். வஷிஸ்டர் பெருமானே வேத முறைப்படி அக்கரும காரியங்களை நடத்தி வைத்தார். தசரதரின் ஆன்மா, வானுலகில் நின்றபடி இராமபிரானை வாழ்த்தியதை வஷிஸ்டர் தனது ஞானக்கண்களால் அறிந்து கொண்டு மகிழ்ந்தார்.
தசரதருக்குச் செய்ய வேண்டிய கரும காரியங்கள் அனைத்தையும் முடித்து விட்டு சீதையிடம் இந்த விவரத்தைத் தெரிவிக்க இராமபிரான் தன்னை தனது மந்திர்கள், முனிவர்கள், மற்றவர்கள் தொடர சீதையின் பர்ண சாலைக்கு சென்றார். அப்போது அவருடன் வந்த பரதன், பர்ணசாலையில் தனித்திருந்த சீதையைப் பார்த்தான். தலைகளால் பர்ணசாலை அமைக்கப்பட்டு இருப்பதையும் கண்டான். அது கண்ட அவன் மனதில் சொல்ல முடியாத துயரம் எழுந்தது. உடனே சீதையின் திருவடிகளில் விழுந்து அழுதான். தம்பியின் அழுகையைக் கண்ட இராமபிரான் வெகுவாக பரதனைத் தேற்றினார். பின்னர் சீதையிடம் " சீதை, உன்னுடைய மாமனார் என்னுடைய பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மாண்டார்" என்ற செய்தியைத் தெரிவித்தார் . இராமபிரானின் அந்த வார்த்தைகளைக் கேட்டு சீதை ஆறாத துயரம் கொண்டாள். அழுதால், துடித்தாள். அருகில் இருந்த முனிவர்களின் தருமபத்தினிகள் அனைவரும் வந்து சீதையை தேற்றினார்கள்.
பின்பு சுமந்திரர் இராமபிரானின் தாய்மார்களான கோசலை, கைகேயி, மற்றும் சுமித்திரையை அழைத்து வந்தார். அவர்களது கோலத்தைக் கண்ட ராமபிரானும், சீதையும் மனம் கலங்கி அழுதனர். அக்காட்சியைக் கண்ட அனைவரும் துன்பக் கடலில் விழுந்து மனமுருகி வருந்தினார்கள். அக்காட்சியைக் காணப் பொறுக்காமல் சூரிய பகவான் கூட அவசர அவசரமாக ஓடி மறைந்தான்.
மறுநாள்... அரசர்கள், முனிவர்கள், தாய்மார்கள், படைவீரர், தம்பியர் என அனைவரும் சூழ்ந்து இருக்க இராமபிரான் தம்பி பரதனைப் பார்த்து,"பரதா! அயோத்தியின் சக்கரவர்த்தி இறந்து விட்டார். இனி அவர் இடத்தில் இருந்து, அவரது கட்டளைப்படி அரசை நீ தான் ஆளவேண்டும். அப்படி இருக்க ஏன் இந்தத் தவக் கோலத்தை ஏற்றுக் கொண்டாய்?" என்று கேட்டார்.
இராமரின் அந்தக் கேள்வி மேலும் பரதனை சங்கடப்படுத்தியது, உடனே அண்ணன் இராமனிடம்," பெரியோர்கள் ஏற்காத வரங்களால் நமது தந்தையைக் கொன்றாள் கைகேயி. தங்களுக்கும் பொருந்தாத இந்த நிலையை ஏற்படுத்தித் தந்தாள். அவள் பெற்ற புதல்வன் நான். ஆகையால் பாவியான எனக்கு இந்தத் தவக் கோலம் யோசித்துப் பார்த்தால் ஏற்புடையது தான். மேலும், மூத்தவரனா தாங்கள் தவம் புரிய, இளையவனான நான் அரசை ஆள்வேனோ?அது முறையோ?அரசாண்ட தந்தையாரும், அந்த அரசாட்சிக்கு உடைய மூத்த மைந்தரும் இல்லாத சமயத்தில் நான் இடையில் சென்று ஆட்சியை ஏற்பது, சோர்கின்ற சமயம் பார்த்து அரசு கவரும் பகைவனின் செயல் ஆகிவிடாதோ? அதனால் எந்தையே! தங்கள் தந்தை செய்த தீமையும், எனது தாய் செய்த தீமையும் நீங்கும் படி, தாங்கள் அயோத்திக்குத் திருமப் வந்து அரசாட்சி செய்வீராக!" என்று தனது மனக்கருத்தை இராமனின் முன், முன் வைத்தான் பரதன்.
அது கேட்ட இராமபிரான்," இந்த உலகத்தில் பெரியவர்கள் நம்மைப் பெற்றத் தாய், தந்தையர்கள் தான். அப்படிப்பட்ட தாய் தந்தையரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தான் வன வாசத்தை மகிழ்ச்சியுடன் நான் ஏற்றுக் கொண்டேன். பிள்ளைகள், தாய் தந்தையருக்குப் பெருமையை தேடித் தருதல் வேண்டும். அதனை விட்டுப் பழிப்பைத் தேடித்தருவது முறையாகுமா?. ஒரு வேளை நீ சொல்கின்றபடி, நான் அரசை ஏற்றால் எனது ஆருயிர் தந்தையின் வாக்கு என்னாகும்? அவர் பொய் பேசியதைப் போல ஆகாதா? பிறகு அவர் நரகத்தில் அல்லவா போய் சேருவார்? அந்தப் பாவத்தை வேறு நான் சுமக்க வேண்டுமா? அதனால் நான் ராஜ்யத்தை ஏற்பது தகாது. அதலால், அயோத்தியை நீயே ஆள்வாயாக!.நான் தந்தையின் வாக்குப் படி பதினான்கு வருடங்கள் கானகத்தில் தவம் செய்து நிச்சயம் அயோத்தியை திரும்புவேன். அதனால் நீ கவலைப்படாதே, அதுவரை ராஜ்ஜியம் ஆளும் தருமத்தை செய்" என்று பரதனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஸ்ரீ ராமர்.
தான் பரிவாரங்களுடன் சென்று அழைத்தால், அண்ணன் நிச்சயம் வருவார் என்று தான் கொண்டு இருந்த நம்பிக்கை இப்படி நொறுங்கி விட்டதை எண்ணி வஷிஸ்டர் பெருமானை கண்ணீர் மல்கப் பார்த்தான் பரதன். பரதனின் அப் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவராக வஷிஸ்டர் , இராமனை நோக்கி," இராமா, ஒப்பற்ற சூரிய குலத்தில் பிறந்தவன் நீ, சூரிய குலத்தில் இது வரையில் எந்த ஒரு அரசரும் முறை தவறியது கிடையாது. ஆதலால், நீர் முத்தவராய்ப் பிறந்தும் அரசு புரியமாட்டேன் என்று கூறுவது முறை ஆகாது. மேலும், குற்றமில்லா கல்விகளைக் கற்பித்த ஆசிரியரே எல்லோரையும் விட மேம்பட்டவர் என்று தர்மம் தெரிந்த அனைவரும் கூறுவர். அவ்வகையில் உனக்குக் கல்வியை கற்பித்த குருவாகிய நான் சொல்கிறேன், இப்போதே நீ பரதனுடன் புறப்பட்டு இராஜியத்தை ஆள்வாயாக " என்று கட்டளையிட்டார் அம் மாமுனிவர்.
வஷிஸ்டர் பெருமானின் சொல்லைக் கேட்டுக் கொண்டு இருந்த இராமபிரான் வசிஷ்டரிடம் மறுமொழியாக,"முனிவருள் தலை சிறந்தவரே, தங்கள் வார்த்தையை மறுப்பதாக நினைக்க வேண்டாம் வேதங்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தான் வகைபடுத்திக் கூறுகின்றன. அதன்படி மாதா கைகேயி வரம் கேட்க, தந்தை கொடுக்க கானகம் வந்தவன் நான். அதனால், நீங்கள் சொல்லும் தருமப்படிப் பார்த்தாலும் எனது முடிவு தான் சரி. அதனால், அவர்களின் கட்டளைப்படி நான் கானகத்தில் பதினான்கு வருடத்தைக் கழிப்பதே முறை" என்று கூறினார் இராமபிரான்.
இது கேட்ட வஷிஸ்டர் இராமனின் கூற்றில் இருந்த நியாயத்தை அறிந்து வாயடைத்துப் போனார். அவரால் ஏதும் பேச முடியாதபடி மௌனத்தில் ஆழ்ந்தார். பரதன் வஷிஸ்டர் பெருமானின் அந்த நிலையைக் கண்டு இனி நாம் பேச என்ன இருக்கிறது என்று எண்ணியபடி அண்ணன் இராமனிடம்," சரி, எப்படியானால் என்ன! இராஜியத்தை ஆள்பவர் ஆளட்டும். ஆனால், நான் முடிவெடுத்து விட்டேன் அண்ணன் இராமனுடன் நானும் தொடர்ந்து செல்லப் போகிறேன். இதுவே எனது முடிவு" என்று உறுதிபடக் கூறினான்.
இது கேட்ட அனைவரும் திகைக்க, இந்த உரையாடல்களை எல்லாம் வானுலகில் இருந்தபடி கேட்டுக் கொண்டு இருந்த தேவர்கள்," பரதன் பிடிவாதமாக நாடு செல்ல மறுத்துவிட்டால், அயோத்தியை பாழாகி விடும். அதே சமயம், பரதன் இராமனை அழைத்துக் கொண்டு போய் விட்டால் இராவண சம்ஹாரம், உட்பட மற்றும் பல அரக்கர்களின் சம்ஹாரம் நடக்காமல் போய்விடும். அப்படி நடந்தால் இராமபிரான் பூவியில் அவதரித்த நோக்கமே வீணாகி விடுமே" என்று நினைத்தனர். நினைத்த கணம் அவ்விடம் தோன்றினார்கள்.
பரதன் உட்பட தேவர்களைக் கண்ட அனைவரும் வணங்கிப் பணிந்தார்கள். பிறகு பரதனிடம் தேவர்கள்," பரதா, இராமனைப் புரிந்து கொள் அவர் தந்தையின் சொல்லைக் காக்க நினைக்கிறார். எனவே , அவர் பதினான்கு வருடம் காடு செல்வதே சரி. நீ, தந்தையின் சொல்படி அந்தப் பதினான்கு ஆண்டுகள் ராஜ்யத்தை ஆளப் புறப்படு. இராமன் பதினான்கு ஆண்டுகள் முடிந்து வந்து உன்னிடம் இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்வான். இப்போது தேவர்களாகிய எங்களது வாக்கை மதித்து இவ்விடம் விட்டுப் புறப்படு" என்றார்கள்.
பிறகு ராமபிரானும் தம்பி பரதனை நோக்கி," தேவ வாக்கு பொய்க்காது பரதா, அது நீதியும் கொண்டது. அவர்களே வந்து சொல்லிவிட்டார்கள். இனி என்ன? நீ செல் நான் பதினான்கு வருடங்கள் கழித்து வந்து உன்னிடம் இருந்து, தேவர்கள் கொடுத்தத் தீர்ப்பின் படியே இராஜிய பாரத்தைப் பெற்றுக் கொள்கிறேன்" என்றார்.
அது கேட்ட பரதன்," அண்ணா! நீங்கள் பதினான்கு வருடங்கள் கழித்து, ஒரு நாள் கூட தாமதிக்காமல் வந்து இராஜியத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நாள் தாமதித்தாலும், பிறகு நான் அக்கினியில் இறங்கி உயிர் நீப்பேன்" என்றான்.
பரதனின் மனவுறுதியையும், பாசத்தையும் கண்ட ஸ்ரீ ராமர் உள்ளம் நெகிழ்ந்தார். பிறகு பரதனிடம்," நீ கொண்ட வாக்கின் படியே நடக்கட்டும் பரதா. நான் வாக்கு அளிக்கிறேன், பதினான்கு வருடங்கள் கழித்து நான் ஒரு நாள் கூட தாமதிக்காமல் அயோத்தியை வந்து சேருவேன், உன்னிடம் இருந்து ராஜியத்தைப் பெற்றுக் கொள்வேன் " என்றார்.
பிறகு பரதன் ராமபிரானை பிரிந்து செல்ல மனம் இல்லாமல் மீண்டும் தவித்தான். அவரை விட்டுத் தான் மட்டும் அயோத்தியைக்குத் திரும்பிகின்றோமே என்று நினைத்துத் துன்பம் அடைந்தான். அத்துன்பத்துடன் மீண்டும் இராமபிரானை நோக்கி," ஐயனே! தங்களுடைய பாதுகைகளை அன்புடன் கொடுத்தருள்வீர்!" என்று வேண்டினான். இராமபிரானும், தம்பியின் விருப்பப்படியே அவனுக்கு எல்லாவுலக இன்பங்களையும் கொடுத்து அருளக் கூடிய தமது இரண்டு திருவடிகளையும் கொடுத்தார்.
புழுதி படிந்த அழகு மேனி கொண்ட பரதன் அழுத கண்களுடன் அந்தப் பாதுகைகளை வாங்கித் தனது தலை மேல் வைத்துக்கொண்டான். பின்பு எல்லை இல்லாத துன்பத்துடன் திரும்பிச் சென்றான். அப்படிச் சென்ற பரதனைத் தொடர்ந்து அவனது பரிவாரங்களும் சென்றன. ஆனால், அப்படிச் சென்ற பரதன் அயோத்தியைக்கு செல்லாமல் முனிவர்கள் வாழும் பகுதியான நந்திக்கிராமத்தை அடைந்தான். அங்கேயே தங்கினான். அங்கே இராமபிரானின் பாதுகைகளை அரியணையில் ஏற்றி வைத்தான். அந்தப் பாதுகைகள் செங்கோலை முறைப்படிச் செலுத்த, பரதன் இரவும் பகலும் நீர் வழியும் கண்களோடு, மனத்தினால் ஐம்பொறிகளையும் அடக்கி அங்கேயே தங்கினான்.
மறுபுறம் " சுற்றத்தவர், நண்பர் முதலிய அனைவரும் அறிந்த இந்த இடத்திலேயே இன்னமும் நாம் இருந்தால், மீண்டும் அவர்கள் அடிக்கடி வந்து நம்மை நகருக்கு வரும்படி வற்புறுத்தக் கூடும்" என்று எண்ணினார் இராமபிரான். உடனே அந்த இடத்தை விட்டு இளையபெருமாளையும் சீதாபிராட்டியையும் அழைத்துக் கொண்டு தென் திசை நோக்கி நடக்கத் தொடங்கினார்!