திருமுடி சூட்டு படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
திருமுடி சூட்டு படலம்
(இராமபிரான் இலங்கையிலிருந்து மீண்டு அயோத்தியை அடைந்து திருமகுடம் தரித்துக் கொண்டதைக் கூறும் படலம் இது. திருவபிடேகப் படலம் எனவும் பிரதிகளில் இது காணப்படுகிறது)
நந்திகிராமத்தை அடைந்த ஸ்ரீ இராமபிரான் தம்பிகளுடன் சடாமுடி போக்கி, சரயு நதியிலே நீராடினார். அவர்களுக்கு ஒப்பனைச் செய்வோர் தேவர்களும் மகிழும் படி அலங்காரம் செய்தார்கள். பின்னர் ஸ்ரீ இராமர் அயோத்தியைக்குச் செல்ல, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேரிலே ஏறினார். பரதன் அத்தேருக்கு சாரதி ஆனான். லக்ஷ்மணன் ஸ்ரீ இராமருக்குக் குடை பிடித்தான். சத்துருக்கன் சாமரை வீசினான்.
தேர், அயோத்தியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அக்கணம் சுக்கிரீவனும், அங்கதனும், வானர சேனையுடன் அனுமனும், விபீஷணனும், அவனுடன் மனித வடிவம் கொண்ட அரக்கர்களும், மற்றும் சிங்களம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், திராவிடம், கலிங்கம், வங்கம், கனகம், மகதம், கடாரம், கௌடம் ஆகிய நாடுகளை சேர்ந்த அரசர்களும் ஸ்ரீ இராமபிரானை பின் தொடர்ந்து அயோத்தியை நோக்கித் தங்கள், தங்கள் பரிவாரங்களுடன் சென்றார்கள்.
விமானம் போன்ற மற்றும் ஒரு தேரிலே சீதாபிராட்டி ஏறிக் கொண்டு சென்றார்கள். பிராட்டியைச் சூழ்ந்து தேவர்களின் அருளால் மனித வடிவம் கொண்ட வானர மகளிர் யானைகள் மீதும், குதிரைகள் மீதும் ஏறித் தொடர்ந்தனர். அப்போது வழி எங்கும் தேவர்கள் மலர் தூவி மகிழ்ந்தனர். ஸ்ரீ இராமர் வருவதைக் கண்ட அயோத்தியின் விலங்குகள் கூட சந்தோஷத்தில் ஆரவாரித்து மகிழ்ந்தன.
அப்போது ஸ்ரீ இராமர் ஏறிய தேர் அயோத்தியை அடைந்தது. தேரில் இருந்து இறங்கிய ஸ்ரீ இராமர், முதலில் தனது தாய்மார்களை வணங்கி பின்னர் திருமாலின் கோயிலுக்குச் சென்று. அங்கே குடி கொண்டு உள்ள, சூரிய வம்சத்தின் குலதெய்வமான ஸ்ரீ ரங்கநாதனை வணங்கினார். அதன்பின் மீண்டும் வசிஷ்ட மாமுனிவரை வணங்கினார்.
அப்போது ஸ்ரீ இராமனைக் கண்ட நகர மாதர்கள், அவரைக் கண்ட சந்தோஷத்தால் உடல் பூரித்துப் போனார்கள். ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இராமரைக் கண்ட மாத்திரத்தில் அயோத்தியில் வாழும் மக்கள் தலை, கால் புரியாமல் தவித்தனர். அதனால், பெண்களின் ஆடையை, ஆண்கள் உடுத்திக் கொண்டார்கள். அதுபோல, நகர மாந்தர்கள் உடுத்தும் ஆடையை தேவர்கள் உடுத்திக் கொண்டார்கள். சிலர், ஸ்ரீ இராமனை விரைந்து சென்று காண வேண்டும் என்ற ஆசையால், தங்களையே, தங்களுக்கு அடையாளம் தெரியாதபடி அலங்காரத்தை அதிகமாக செய்து கொண்டார்கள்.அதனால், பிறரின் நகைப்புக்கு ஆளானார்கள். அக்கணம், அயோத்தியில் ஏற்பட்ட மக்கள் வெள்ளத்தால், தேவர்களும், மனிதர்களும் ஒருவரை, ஒருவர் உரசிக் கொண்டு சென்றார்கள். அதனால், தேவர்களின் கழுத்தை அலங்கரித்த மாலைகளில் உள்ள பாரிஜாத மலர்களின் வாசம், மனிதர்கள் மேல் வீசியது. அதுபோல, மனிதர்களின் குளிர்ந்த நறுமணம் தேவர்களின் உடம்பிலும் படிந்தது.
தேவர்களையும் மனிதர்களையும் அவரவர்களின் மனைவியர்கள் அப்போது கண்டதும், பிற பெண்களைக் கூடியதால் தமது கணவன் மார்களுக்கு இம்மனம் ஏற்பட்டது என்று எண்ணினார்கள். அத்துடன் அமையாது அம்மணம் அப்பெண்களின் நாசியிலே மிகுதியாக நுழைய, அவர்கள் தமது கணவர்களோடு ஊடல் கொண்டார்கள்!
சிறந்த அந்தச் சமயத்தில் ஸ்ரீ இராமர் பரதனை அன்புடன் நோக்கி," தம்பி! விபீஷணனுக்கும் சுக்கிரீவனுக்கும் மற்றவர்களுக்கும் நமது அரண்மனையில் உள்ள சிறப்பை எல்லாம் சுற்றிக் காட்டுவாய்!" என்று கட்டளை பிறப்பித்தார்.
அதன் படி பரதன், விபீஷணனையும், சுக்கிரீவனையும் அழைத்துக் கொண்டு சென்று தனது சூரிய குல அரசர்கள் வசித்த மாளிகையை சுற்றிக் காட்டினான். அப்போது மாளிகையின் பெரும் பான்மையான பகுதிகள் தங்கத்தாலும், வைர, வைடூரியத்தாலும் அலங்கரிக்க பட்டு ஒளி வீசி அற்புத வேலைப்பாடுகளுடன் இருந்ததால், அது கண்ட விபீஷணனும், சுக்கிரீவனும் அதிக ஆச்சர்யம் அடைந்தார்கள். அந்த ஆச்சர்யத்தால் திகைத்து நின்றார்கள்.
திருமாலின் திருமார்பிலே ஒளிவிடுகின்ற கௌத்துப மணியைப் போல விளங்குகின்ற அந்த மாளிகைப் பார்த்த அவர்கள், அதன் வரலாற்றை பரதனிடம் வினவினார்கள். அதற்குப் பரதன்," முன்பு இரவி குலத்திலே தோன்றிய இட்சுவாகு மன்னன் செய்த சிறந்த தவத்தினாலே, பிரமதேவன் உவந்து அன்போடு இந்த மாளிகையை அவனுக்குக் கொடுத்தான். இம்மாளிகை திருமகள் வாழும் இடமாகும்!" என்று மாளிகையின் வரலாற்றை அவர்களுக்குத் தெரிவித்தான்.
அதுகேட்டு அவர்கள்," இம்மாளிகை எங்களால் புகழக் கூடிய இயல்புடையதோ?" என்று சொல்லி, அம்மாளிகைக் கொண்டாடிக் கைகூப்பித் தொழுதார்கள்.
பிறகு, அவர்கள் அந்த மாளிகையை விட்டு நீங்கி, பரதனுடன் வேறோர் மண்டபத்துக்குச் சென்றார்கள். தாங்கள் சென்று கண்ட அந்த மண்டபத்தின் சிறப்புக்களை எல்லாம் எண்ணி அவர்கள் மகிழ்ந்தார்கள். அப்போது சுக்கிரீவன் பரதனிடம்," தூயவரே! பெருமானின் முடிசூட்டு விழாவுக்காகக் காப்பு நாணை அணிவதற்குத் தகுந்த நல்ல நாளை ஆராயாமல் சும்மா இருப்பது ஏன்?" என்று கேட்டான்.
உடனே பரதன்," ஏழு கடல்களில் உள்ள புண்ணிய நீர்களும், மற்றுமுள்ள பெரிய நதிகளில் உள்ள புண்ணிய நீர்களும் குறைவற இங்கே வந்து சேர வேண்டும் அல்லவா! அதுவே தாமதத்திற்க்குக் காரணம் " என்றான்.
அக்கணமே சுக்கிரீவன் அனுமனை நோக்கினான். அந்தக் கணத்தில் அந்தப் புண்ணிய நீர்களை எல்லாம் கொண்டு வருவதற்காக, அனுமன் விரைந்து கடல் சூழ்ந்த பூமியையெல்லாம் கடந்து சென்றான்.
மாருதி சென்ற பின் பரதன்," வசிஷ்ட முனிவரையும் அந்தணர்களையும் அழைத்து வருக!" என்று சொல்லி சுமந்திரனை அனுப்பினான்.
சுமந்திரன் விரைந்து போய் வசிஷ்டருக்குச் செய்தியைக் கூறினான். அவர் உடனே புறப்பட்டு வந்தார். எல்லோரும் எழுந்து துதித்து அவரது திருவடிகளை வணங்கி நின்றார்கள். அவருக்குப் பொன்னாசனத்தைச் சுட்டிக் காட்டி, அதில் அமருமாறு அவரைப் பணிவுடன் வேண்டினான் பரதன். முனிவர் அதில் அமர்ந்தார்.
பரதன் அவரை நோக்கி," முனிவர் பெருமானே! எமது தமையனார் முடிசூடும் பொருட்டு காப்புநாணை அணிவதற்கு உரிய நாளைச் சொல்லி அருள்வீர்!" என்று வேண்டினான்.
அப்போது முனிவர்," ஸ்ரீ இராமபிரான் காப்புநாண் பூணுவதற்கு நாளையே சிறந்த நல்ல நாள் ஆகும்" என்றார்.
பிறகு, அது கேட்டு சந்தோஷம் அடைந்த பரதன்," முனிவரே! எனில், நாளையே குறித்து விடுங்கள்" என்றான். பிறகு பரதன் மேற்கொண்டு முனிவரிடம்," ஐயனே! அப்படியே அண்ணன் ஸ்ரீ இராமனுக்கு முடி சூடவும் ஒரு நல்ல நாளைப் பார்த்து சொல்லவும்" என்றான். அதன் படியே, முனிவரும், ஸ்ரீ இராமருக்கு முடிசூட்டுவதற்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துச் சொன்னார்.
அக்கணமே, அயோத்தியில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். உடனே ஸ்ரீ இராமருக்கான முடி சூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் விரைந்து செய்யப் பட்டன. அப்போது வசிஷ்ட மாமுனிவருடன் பரதனும், சுக்கிரீவனும், விபீஷணனும், ஜாம்பவானும், அங்கதனும் மற்றுமுள்ள வீரர்கள் யாவரும் சென்று, இராமரைத் தொழுது," ஐயனே! உமக்கு நாளை முடிசூட்டு விழாவாகும்!" என்று தெரிவித்தார்கள்.
அதனை கேட்டு ஸ்ரீ இராமர் மகிழவும் இல்லை,அதற்காக வருந்தவும் இல்லை. மறுபுறம், ஸ்ரீ இராமரின் முடி சூட்டு விழாவுக்கான நாள் முரசு கொட்டி, அயோத்தியின் தெருக்களில் வள்ளுவனால் அறிவிக்கப் பட்ட மாத்திரத்தில், அயோத்தி மக்கள் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தார்கள். மேலும், ஸ்ரீ இராமர் முடி சூட இருப்பதைக் கேள்விப் பட்ட மாத்திரத்தில் சிவனும் பார்வதியும், பிரமனும் சரஸ்வதியும் , மற்றும் தேவர்கள், கின்னரர்கள், கந்தர்வர்கள், கிம்புருஷர்கள், என அனைவரும் அயோத்தியை வந்து அடைந்தார்கள்.
அப்போது பிரமன், அசுரர்களின் கட்டடக் கலைஞனான மயனிடம், ஸ்ரீ இராமரின் முடி சூட்டு விழாவுக்காக உடனே ஒரு அழகிய மண்டபத்தை உருவாக்கித் தருமாறு கேட்டான். அதன் படி மயனும், ஒரு அற்புதமான மண்டபத்தை, தேவர்களும் கண்டு வியக்கும் படியாக , ஸ்ரீ இராமர் முடி சூடுவதற்கு என்று அமைத்துத் தந்தான்.
அக்கணம் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வருவதர்க்குச் சென்ற அனுமன், புண்ணிய நீருடன் திரும்பி வந்தான். அதனை பல நாட்டு மன்னர்களும் தங்கள், தங்கள் பட்டத்து யானைகளின் மீது ஏற்றி ஸ்ரீ இராமரின் முடி சூட்டு மண்டபத்திற்குக் கொண்டு வந்தார்கள். அத்துடன் மாணிக்கப் பலகையையும் வைரத்தால் இழைத்த கால்களும் கொண்டு ஆணிப் பொன்னால் செய்யப்பட பீடத்தைக் கொண்டு வந்து, மயன் கட்டிய பளிங்கு மாடத்தில் வைத்தார்கள். இராமபிரான் சீதையுடன் சென்று அப்பீடத்தில் அமர்ந்தார். அக்கணம், சங்குகள் முழங்கவும், வேதங்களின் ஒலி விண்ணை முட்டவும், மத்தளங்கள் ஒலிக்கவும், இந்திரன் தலைமையில் எண்ணற்ற தேவர்களும், ஈசனும், பிரமனும் தனித்தனியாக வந்து ஸ்ரீ இராமரை நீராட்டி மகிழ்ந்தார்கள்.
"முன்பு திருமாலின் திருவடிகளைப் பிரமதேவன் கழுவியதால் தோன்றிய கங்கையைச் சிவபெருமான் தனது சடா முடியில் ஏற்றான். இப்போது ஸ்ரீ இராமபிரானை நீராட்டிய நீரினால் உண்டான வெள்ளத்தை, அந்தச் சிவபெருமான் எங்கே ஏற்று வாழ்வான்?" என்று, அக்காட்சியைக் கண்டு புலவர்கள் எல்லோரும் கூறினார்கள்.
நீராடி முடித்து சீதையோடு இராமபிரான் இருந்த அந்த அழகிய காட்சியைக் கண்டவர்கள் எல்லோரும் பிறப்பு என்கின்ற பிணிகள் தீரப் பெற்றார்கள்!
முடி சூட்டு விழா சடங்குகளுக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் மாதவர்கள் கூற, சுமந்திரன் அமைச்சர்களோடு விரைவில் கொண்டு வந்து சேர்த்தான். எல்லாப் பொருள்களும் வந்தது, முன்னே செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் வஷிஸ்டர் இனிது செய்து முடித்தார். சீதாபிராட்டியுடன் ஸ்ரீ இராமர் சிங்காசனத்தில், ராஜ சிங்கம் போல அமர்ந்தார். அக்கணம் ஸ்ரீ இராமருக்கு அருகில் அங்கதன் உடைவாள் கொண்டு நிற்கவும், பரதன் வெண்கொற்றக் குடை பிடிக்கவும், லக்ஷ்மணனும் சத்துருக்கனும் வெண்சாமரை வீசவும், திருமகள் வசிக்கின்ற திருவெண்ணெய் நல்லூர்க்கு மன்னனான சடையப்ப வள்ளலின் குலத்து முன்னோர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்கவும், அதனை வாங்கி வசிஷ்ட முனிவர் ஸ்ரீ இராமபிரானுக்குச் சூட்டினார். சிறந்த நன்னாளில், நல் முகூர்த்தத்தில் மூவுலகும் துள்ளிக் களிக்க, பிரகஸ்பதியையும் சுக்கிராச்சாரியாரையும் போன்ற புரோகிதர்கள் விதித்த முறைப்படியே மகுடத்தைச் சூடிய இராமர், மிகப் பொலிவோடு திருமாலைப் போலவே அப்போது தோன்றினார்!
மூவுலகத்தவர்களும் தாமே முடி சூட்டிக் கொண்டது போல, இராமபிரான் முடி சூட்டிக் கொண்டதைக் கண்டு மகிழ்ந்து, தமது துன்பம் தீர்ந்தார்கள்.
தமது பட்டாிஷேகம் முடிந்ததும் இராமர் பரதனுக்கு இளவரசு பட்டம் கட்டி, அவனைத் தமது செங்கோலை நடத்துமாறு கட்டளை பிறப்பித்து, அளவற்ற போகங்களை நாளும் அனுபவித்து களித்தார்!