ஜடாயு காண் படலம்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
ஜடாயு காண் படலம்
( இப்படலம் அகத்தியன் ஆசிரமத்தில் இருந்து பஞ்சவடிக்குச் செல்லும் வழியில் கழுகு ராஜனாம் ஜடாயுவைக் கண்டு அவர் நட்பைப் பெற்ற செய்தியைக் கூறும் படலம் . ஜடாயு , இராமன் முதலிய மூவரையும் கண்ட செய்தியைக் கூறுவது என்றும் கொள்ளலாம். ஜடாயு என்ற சொல்லுக்குப் பல மயிர்கள் சேர்த்துத் திரித்த சடை போன்ற வாழ்நாளைக் கொண்டவன் என்பது பொருள். இறகில் உயிரை உடையவன் என்றும், சடையை உடையவன் என்றும் கூறுவர். இவர் அருணனின் மகன். சம்பாதியின் தம்பி, தயரதனின் தமையன் முறை ஆதல்
பற்றி இவர்க்கு வைணவ மரபில்பெரியவுடையார்என்ற பெயர் உளது. இப்படலத்திற்குச் ஜடாயுப் படலம் என்ற பெயரும் சில சுவடிகளில் காணப் பெறும்.
இங்கு இராமன் முதலானோர் ஜடாயுவைக் காண்கின்றனர். ஜடாயுவின் தோற்றப் பொலிவு விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளது. முதலில் இராமலக்குவர் ஜடாயுவின் பேருருவைக் கண்டு அரக்கனோ என ஐயுற்றனர். அவர்களைப் போன்றே இராமலக்குவரை யார் எனச் சடாயு அறிய இயலாமல் அவர்களையே வினவி அறிகிறார். தயரதன் மறைவை அறிந்து சடாயு வருந்துகிறார். பின் அவர்களிடம் தம் வரலாற்றைக் கூறுகின்றார். தயரதன் பிரிவால் தானும் உயிர்விடத் துணிந்து பின் அதைத் தவிர்க்கிறார். அவர்கள் காட்டிற்கு வந்த வரலாற்றை அறிகிறார். இராமனின் பண்பைப் பெரிதும் பாராட்டுகிறார். அவர்கள் பஞ்சவடிக்குச் செல்லும் விருப்பை அறிந்து ஜடாயு அவ்விடத்தில் அவர்களைச் சேர்ப்பிக்கிறார்.
காட்டு வாழ்க்கையில் முதலில் அரக்கர்களின் தடையை வென்று சரபங்கர் சாலையை அடைந்த பின் தண்டகாரணிய முனிவர்களைக் காக்க முற்படும்போது அகத்தியரிடம் படைக்கலம் பெற்றது போலக் கழுகின் வேந்தனின் உதவியை இராமன் பெறுகிறான்)
அகத்திய முனிவரின் ஆசிரமத்தை விட்டுப் புறப்பட்ட இராம லக்ஷ்மணரும், சீதையும் பலகாத தூரம் கடந்து சென்றார்கள். அப்படி அவர்கள் செல்லும் போது கழுகுகளுக்கு அரசனாகிய ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயு தன் சிறகுகளை விரித்துக் கொண்டு அப்பொழுது ஒரு மலை உச்சியில் தங்கியிருந்தான். அவனுடைய சிறகுகள் சூரியனின் கிரணங்களைப் போல ஒளிவீசின. அவன் மந்திர மலையைப் போலவும் காட்சி அளித்தான். மேலும், அவன் செந்நிறக் கால்களைக் கொண்டு இருந்தான், அந்தக் கால்களின் நிறம் அவனது உடலுக்கே அழகை சேர்த்தது. அவன் பரிசுத்தமும், மிக்க கல்வியும், தெளிந்த கேள்வியும் உடையவன். அதிக தூரத்தில் உள்ளவற்றையும் காணும் சிறிய கண்களை உடையவன். அவன் கொடிய அரக்கர்களைக் கொன்று கூற்றுவனுக்கு இரையாக்கி, அவன் ஜாதி வழக்கப்படி அவர்களது உடலை கொத்தித் தின்னும் காரணத்தால், அவனது மூக்கு ஐராவத யானையின் அங்குசம் போலக் கூர்மையாக விளங்கியது. மேலும் அருணனின் புதல்வனான ஜடாயு மிக்க புகழையும், நீண்ட ஆயுளையும் கொண்டவன்.
ஒரு பெரிய மலையே பூமியில் அழுந்தும் படி அமர்ந்திருந்த ஜடாயுவின் அருகில் வந்தார்கள் இராம லக்ஷ்மணர். ஜடாயுவின் தோற்றத்தைப் பார்த்த ராம, லக்ஷ்மணர் ," இவன் மாறுவேடத்தில் நம்மை வஞ்சம் தீர்க்க வந்து இருக்கும் அரக்கனாக இருக்க வேண்டும். இல்லையேல், மிக்க வலிமையுடைய கருடனாவான்!" என்று எண்ணியபடி, அவனையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
மறுபுறம் ஜடாயுவும் இராம, லக்ஷ்மணரைப் பார்த்து," சடாமுடி கொண்டிருக்கும் இவர்கள் முனிவர்களோ? அப்படியென்றால், இவர்கள் கைகளில் வில்லேந்தி இருக்கின்றார்களே! ஆதலால், இவர்கள் தேவர்களோ? இந்திரன் முதலிய தேவர்கள் எப்பொழுதும் எந்த வடிவத்தில் இருந்தாலும் என்னால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு விட முடியும். மும்மூர்த்திகளும் கூட எனது பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. மன்மதனையும் கூட நான் கண்டுள்ளேன். ஆனால், இந்த வில்லாளிகள் மன்மதனைக் காட்டிலும் அதிக வசீகரத் தன்மை கொண்டு உள்ளார்களே! அதுவும் அருகில் இவர்களுடன் வரும் பெண் திருமகள் போல அல்லவா விளங்குகிறாள்! அதேசமயத்தில், இவர்கள் அசப்பில் எனது நண்பனான தசரதனைப் போலவும் உள்ளார்களே" என்றெல்லாம் மனதுக்குள் சொல்லிக் கொண்டான் ஜடாயு.
பின்னர் அவர்களிடமே கேட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவன் இராம, லக்ஷ்மணர் அருகில் வந்தான். பின்னர் அவர்களைப் பார்த்து " நீங்கள் யார்?" என்று கேட்டான். அதற்கு சத்தியமே பேசும் இராமலக்ஷ்மணர் தங்களைப் பற்றி ஒளிக்காமல்," நாங்கள் தசரதர் பெற்ற மைந்தர்கள்" என்று கூறினார்கள். அது கேட்ட ஜடாயு மகிழ்ந்து ஆனந்தத்தில் ," சக்கரவர்த்தி நலம் தானே?" என்று கேட்டான்.
அப்போது இராமபிரான் தந்தை தசரதர் மாண்ட செய்தியை ஜடாயுவுக்குத் தெரிவித்தான். அது கேட்ட ஜடாயு அதிர்ச்சியில் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான். அது கண்ட இராமலக்ஷ்மணர் கீழே விழுந்த ஜடாயுவை பரிவுடன் எடுத்து தங்கள் கண்ணீர் கொண்டு நீராட்ட மயக்கம் தெளிந்தான் ஜடாயு, பிறகு தனது இனிய நண்பன் தசரதன் இறந்ததை எண்ணி புலம்பித் தவித்தான். பிறகு இராமனை நோக்கி," எனக்கும் தசரதருக்கும் உடல் தான் வேறு, எங்கள் உயிர் ஒன்று தான், அப்படிப் பட்ட ஒரு ஆத்ம நண்பனை இழந்து விட்ட நான் இனி உயிரோடு இருந்து என்ன செய்யப் போகிறேன். அதனால் நானும் நெருப்பில் குதித்து உயிர் துறக்கப் போகிறேன்" என்றான்.
அதனைக் கேட்ட அரசகுமாரர்கள் இருவரும் கண்களில் கண்ணீர் பெருக," எங்களைக் காத்து அருள வேண்டிய எங்கள் தந்தை தனது வாக்கை காப்பற்றுவதர்க்காக வானுலகம் சென்று விட்டார். இப்போது தந்தையின் ஸ்தானத்தில் தாங்கள் கிடைத்து உள்ளீர்கள் என்று மகிழ்ந்தோம். ஆனால் தாங்களும் இப்போது எங்களை விட்டுப் போவதாகக் சொல்கின்றீர்களே இது நியாயமா? எங்களை உங்கள் பிள்ளைகளாக நினைத்து, எங்களுடனேயே இருக்கக் கூடாதா? தாய், தந்தையரை விட்டுப் பிரிந்த எங்கள் துயரும் இதனால் குறையும் அல்லவா?" என்று மிகவும் வருத்திக் கேட்டனர்.
இது கேட்ட ஜடாயு, ஓடி வந்து அந்த அரசகுமாரர்களைக் கட்டிக் கொண்டார். பிறகு அவர்களைப் பார்த்து," எனக்கு இனிமேல் நீங்கள் தான் பிள்ளைகள். உங்களுக்கு எதுவும் நேராமல் இந்த வனத்தில் தேவைப்பட்டால் எனது உயிரையும் கொடுத்து நான் பாதுகாப்பேன். கவலைப் படாதீர்கள்" என்று தன்னுடைய இரண்டு சிறகுகளாலும் இராமலக்ஷ்மணர்களை நன்றாய்த் தழுவிக் கொண்டார். பின்னர் இராமபிரான் வன வாசம் வந்த காரணத்தைக் கேட்க. லக்ஷ்மணன், அனைத்து விவரங்களையும் அவரிடம் கூறினான். கைகேயி செய்த சூழ்ச்சியையும், ராமர் தற்பொழுது படும் துன்பத்தையும் கேள்விப்பட்டு வருந்தினார் ஜடாயு. பின்னர் அரச குமாரர்கள் இருவரும் ஜடாயுவைப் பற்றிக் கேட்க. ஜடாயு, தன்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
"புத்திரர்களே, பிரஜாபதி தட்சனுக்கு ஐம்பது பெண்கள் புத்திரிகளாகப் பிறந்தனர். அதில் பதிமூன்று பெண்களை காசியபர் மணந்து கொண்டார். அப்பெண்கள் இயற்கைக்கு மாறு பட்டவர்கள். அப்பெண்களிடம் தான் அனைத்துவகை உயிரினங்களும் தோன்றினர். அரக்கர்களும், தேவர்களும் கூட திதி, அதிதி என்ற தட்சனின் அந்த மகள்களிடம் இருந்து தான் பிறந்தனர். அதே தட்சனின் மகளான விநதைக்கு அருணன் என்ற மகன் பிறக்க, அவன் அரம்பையைக் கூட நானும், அண்ணன் சம்பாதியும் பிறந்தோம். எங்களது தந்தையைப் போலவே எங்களால் மூன்று உலகங்களும் சுற்றித் திரிய முடியும்" என்று தனது கதையை கூறி முடித்தார் ஜடாயு. பின்னர் ராமபிரானிடம்," புத்திரனே, இப்போது நீர் எங்கு சென்று கொண்டு இருக்கின்றீர்" என்று கேட்க.
ராமபிரான், தம்பி லக்ஷ்மணன் மற்றும் சீதை பின் தொடர பஞ்சவடிக்கு செல்லும் விவரத்தைக் கூறினார். அது கேட்ட ஜடாயு," தந்தைக்கு நிகராக நான் இருக்கும் போது, இந்தக் கானகத்தில் தாங்கள் அனைவரும் நடந்து செல்லலாமா? என் மீது ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை அவ்விடம் சேர்க்கிறேன்" என்று கூறினார்.
பின்பு பெரிய ரூபம் எடுத்து, தசரத குமாரர்களையும்,சீதா தேவியையும் அவ்விடம் கொண்டு சேர்த்தார் ஜடாயு. போகும் வழியில் சீதா தேவியையும் பற்றித் தெரிந்து கொண்டு, ராமர் சீதையை மணந்த விவரத்தையும் கேட்டு ஆனந்தம் கொண்டார்.
இவ்வாறு ஜடாயு அம்மூவரையும் பஞ்சவடியில் சேர்த்த பிறகு. அவர்களைக் கண்ட திருப்தியில் அவர்களிடம் இருந்து மிகவும் களிப்புடன் விடைப் பெற்றுச் சென்றார்.