ஜடாயு காண் படலத்தின் பாடல்கள்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
சடாயு காண்படலம்
கழுகின் வேந்தன் சடாயுவை காணல்
ஒருவரை ஒருவர் ஐயுறல்
'யார்?' எனச் சடாயு வினவல்
தயரதன் மைந்தர் என அறிந்த சடாயு மகிழ்தல்
தயரதன் மறைவு அறிந்த சடாயுவின் துயரம்
சடாயு இறக்கத் துணிதல்
ஆண்டு அவன் ஈது உரைசெய்ய, அஞ்சலித்த மலர்க்கையார் அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறை முறையின் நிறை மலர்க்கண் மொய்த்த நீரார்,-
பூண்ட பெரும் புகழ் நிறுவி; தம் பொருட்டால் பொன்னுலகம் புக்க தாதை,
மீண்டனன்வந்தான்அவனைக்கண்டனரே ஒத்தனர்-அவ்விலங்கல்தோளார்.
மருவ இனிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி, 'மக்காள்! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர்; உடல் இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும், தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம்; பீழை பாராது,
எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல்,இத் துயரம் மறவேன்' என்றான்.
சடாயுவை இராம இலக்குவர் தடுத்தல்
'உய்விடத்து உதவற்கு உரியானும், தன்
மெய் விடக் கருதாது, விண் ஏறினான்;
இவ் இடத்தினில், எம்பெருமாஅன்! எமைக்
கைவிடின், பினை யார் களைகண் உளார்?
'"தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர்
வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை
நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்!'
என்று சொல்ல, இருந்து அழி நெஞ்சினன்,
நின்ற வீரரை நோக்கி நினைந்தவன்,
'"அன்று அது" என்னின், அயோத்தியின், ஐயன்மீர்
சென்றபின் அவற் சேர்குவென் யான்' என்றான்.
சடாயு இராம இலக்குவர் வனம் புகுந்த காரணத்தை வினாவுதல்
'வேந்தன் விண் அடைந்தான் எனின், வீரர் நீர்
ஏந்து ஞாலம் இனிது அளியாது, இவண்
போந்தது என்னை? புகுந்த என்? புந்தி போய்க்
காந்துகின்றது, கட்டுரையீர்' என்றான்.
'தேவர், தானவர், திண் திறல் நாகர், வேறு
ஏவர் ஆக, இடர் இழைத்தார் எனின்-
பூ அராவு பொலங் கதிர் வேலினீர்!-
சாவர் ஆக்கி, தருவென் அரசு' என்றான்.
தாதை கூறலும், தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன்; அவனும், தன் சிற்றவை-
மாதரால் வந்த செய்கை, வரம்பு இலா
ஓத வேலை, ஒழிவு இன்று உணர்த்தினான்.
இராமனை சடாயு போற்றுதல்
'உந்தை உண்மையன் ஆக்கி, உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர் வல்லார்?' எனா,
அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி, மோந்து, பொழிந்த கண்ணீரினன்,
'வல்லை மைந்த!' அம் மன்னையும் என்னையும்
எல்லை இல் புகழ் எய்துவித்தாய்' என்றான்.
சடாயு சீதையைப் பற்றி வினவி அறிதல்
பின்னரும், அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்;
'மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல்
இன்னள் என்ன இயம்புதியால்' என்றான்.
அல் இறுத்தன தாடகை ஆதியா,
வில் இறுத்தது இடை என, மேலைநாள்
புல் இறுத்தது யாவும் புகன்று, தன்
சொல் இறுத்தனன் - தோன்றல்பின் தோன்றினான்.
பஞ்சவடியில் தங்க உள்ளதை இராமன் உரைத்தல்
கேட்டு உவந்தனன், கேழ் கிளர் மௌலியான்;
'தோட்டு அலங்கலினீர்! துறந்தீர், வள
நாட்டின்; நீவிரும் நல்நுதல்தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்குவென் யான்' என்றான்.
'இறைவ! எண்ணி, அகத்தியன் ஈந்துளது,
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு குழல்; அச் சூழல் புக்கு
உறைதும்' என்றனன் -உள்ளத்து உறைகுவான்.
மூவரும் பஞ்சவடி சேர்தல்
'பெரிதும் நன்று; அப் பெருந் துறை வைகி, நீர்
புரிதிர் மா தவம்; போதுமின்; யான் அது
தெரிவுறுத்துவென்' என்று, அவர், திண் சிறை
விரியும் நீழலில் செல்ல, விண் சென்றனன்.
ஆய சூழல் அறிய உணர்த்திய
தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான்
போய பின்னை, பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார்
வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை,
ஏற்பச் சிந்தனையிட்டு,-அவ் அரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் -சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான்.
'தக்கன் நனி வயிற்று உதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத் தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக்கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக்கருங்கண்திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்தமைவயிறு வாய்த்தாள்.
தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள்.
மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறுமுதல் பெரும் பறவை தம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழை எனும் அக்கொடி பயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம்.
வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் சுதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும்மாது இளைஈந்தாள்,செலசரம் ஆகியபலவும்,தெரிக்குங்காலை.
'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கந்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதி முறையே, இவை அனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென் தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே.
என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார்.