சூர்ப்பணகைப் படலம்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
சூர்ப்பணகைப் படலம்
(சூர்ப்பணகையின் செய்தியைக் கூறும் பகுதியாகும். பஞ்சவடியில் சூர்ப்பணகை இராமனைக் கண்டு அவன் மேல் ஆசை கொண்டு அதனால் அவள் அடைந்த துன்பத்தைக் கூறுவது இப்படலம். சூர்ப்பம் ஸ்ரீநகம் எனப் பிரித்து முறம் போன்ற நகம் உள்ளவள் என்று பொருள் கூறுவர். சூர்ப்பம் எனில் இரத்தம் நிறைந்த கலம். அதனைக் கொண்டு யாகம் முதலிய நற்செயல்களைக் கெடுப்பவள். நகா எனில் கெடுப்பவள் என்று பொருள். அரக்கர்கள் முனிவர்களின் யாகத்தின் தூய்மையைக் கெடுக்க இரத்தம் இறைச்சி முதலியவற்றைச் சொரிவர். இவ்வாறு யாகத்தை அழிப்பவளாக சூர்ப்பணகையின் பெயர்ப் பொருள் காண்பர் சிலர்.
இப்படலத்தைப் பஞ்சவடிப் படலம் என்றும், சூர்ப்பநகி மூக்கரி படலம் என்றும் இரண்டாகக் கொள்வர். வேறு சிலர் இவ்விரண்டின் இடையில் சூர்ப்பணகைப் படலம் என ஒன்றை சேர்த்து மூன்றாகவும் கொள்வர்.
சூர்ப்பணகை பிரமனின் மகளாகிய புலத்திய முனிவரின் மகனாம் விசிரவசுவுக்கும் அவரின் இரண்டாம் மனைவியாம் கேகசிக்கும் பிறந்த மகள். இவளுடைய அண்ணன்மார் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர். தம்பி விபிஷணன். இவள் கணவன் காலகேயரைச் சார்ந்த வித்யுச்சிகுவன்.
இராவணன் காலகேயருடன் போரிட்ட போது வித்யுச்சிகுவன் கொல்லப்பட்டான். கணவனை இழந்த சூர்ப்பணகை இராவணனிடம் முறையிட அவளுக்கெனத் தண்டகாருணியப் பகுதியில் ஓர் அரசுண்டாக்கி அதில் அவள் சிறப்புடன் இருக்கக் கூறித் தூசனைச் சேனாதிபதியாக்கி ஒரு பெரும் படையையும் அவளுக்குத் துணையாக்கினான். தன் தாய் மாமன் மகனாம் கரனையும் அவளுக்குத் துணையாக்கி அவள் விருப்பப்படி இருக்குமாறு செய்தான்.
அதனால் அங்குக் குடியிருந்து அங்குள்ள மக்களை வருத்தி இன்புற்று வந்தாள் சூர்ப்பணகை. அப்போது அவள் பஞ்சவடியில் சீதை இலக்குவருடன் வாழ்ந்த இராமனின் திருமேனி அழகைக் கண்டு பெருங்காமம் கொண்டு, அழகிய பெண் வடிவெடுத்து அவனிடம் சென்று தன்னைக் கூடுமாறு வேண்டினாள். அதற்கு இராமன் உடன்படாது பலவாறு மறுத்தான். அவ்வாறு தன்னை இராமன் மறுத்ததற்குக் காரணம் அவன் மனைவி பேரழகு படைத்தவளாய் இருப்பதுதான் என எண்ணிச் சீதையை வஞ்சனையாக எடுத்து மறைத்து வைத்தால் இராமனுடன் கூடி வாழ முடியும் என நம்பினாள். மறுநாள் காலையில் இராமன் வெளியே சென்ற போது சீதையைக் கவரத் தொடர்ந்து சென்றாள். இலக்குவன் அதைக் கண்டு வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி மூக்கு, காது முலை ஆகிய உறுப்புகளை அறுத்து விட்டான். பெண் கொலை பாவம் என அவளைக் கொல்லாது விட்டான். பேரோலமிட்டுச் சூர்ப்பணகை இராமனிடம் தன்னை மணம் செய்ய வேண்டினாள் அல்லது இராமன் தன் தம்பிக்காவது தன்னை மணமுடிக்குமாறு வேண்டினாள். அதனால் சற்றும் பயன் பெறாமல் அவர்களால் விரட்டப்பட்டாள். இவ்வாறு ஏமாற்றமுற்ற சூர்ப்பணகை அவர்களை அழிக்கக் கரனுடன் வருவதாக அச்சுறுத்திச் சென்றாள். இதுவே இப் படலச் செய்தி.
காப்பியப் போக்கில் நல்லதோர் திருப்பம் ஏற்படும் வலுவான கட்டமிது. முன்னர் இராமன் முடியிழக்கக் கைகேயி என்ற பெண் காரணமானது போன்று, இப்போது மனைவியைப் பறி கொடுக்க மற்றோர் பெண் காரணமாவதை மிகச் சிறந்த முறையில் காட்டும் படலம் இது. இராமன் சூர்ப்பணகை உரையாடல்கம்ப நாடகம்என்ற பெயரமைவதற்குத் தக்க சான்றாக அமைந்துள்ளது. சூர்ப்பணகையின் வடிவ மாற்றம், எண்ணப்போக்கு, உரையாடும் திறம், ஆசைப்பட்டவனை அடையாததால் அடையும் ஏமாற்ற நிலை, புலம்பும் பெற்றி, உறுப்பிழந்த நிலையில் இடும் ஓலம் உதவிக்கு அழைக்கும் அவலம், மீண்டும், மீண்டும் தான் கொண்ட முயற்சியில் தளராமை, ஏதும் பயனற்ற நிலையில் சினத்தீ பொங்க அழிவுக்கு வழி காணல் ஆகியவை இப்படலத்தின் சிறப்புக்குச் சான்றாம். காப்பியத் திருப்பத்திற்கு நல்லதோர் அடித்தளமாக அமைகிறது இப்பகுதி எனலாம்)
பஞ்சவடியை அடைந்த ராமலக்ஷ்மணர் மற்றும் சீதாதேவி ஆகிய அம்மூவரும் சலசலக்கும் கோதாவரி நீரைக் கண்டனர். கோதாவரி நதி ஓடுவதால் அந்த இடமே செழிப்புடன் காணப்பட்டது. அந்த நதியில் உள்ள தாமரை மலர்களில் ஆணும் பெண்ணுமாக தங்கியிருக்கும் சக்கரவாகப் பறவைகளைப் பார்த்தார் இராமர். அந்த ஆற்றங்கரையில் இருந்த மணற் குன்றுகளை நோக்கினால் சீதை. அவற்றைப் போன்ற இராமரின் உயர்ந்த தோள்கள் சீதையின் ஞாபகத்துக்கு வந்தது. இராமரும், சீதையும் அந்நதியின் அருகில் உல்லாசமாகச் சஞ்சரித்தார்கள். அங்கு இருந்த அன்னப் பறவைகளின் நடையையும், சீதையின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ந்தார் இராமபிரான். மறுபுறம், சீதையும், கம்பீரமாக நடக்கும் யானையின் அழகை, இராமபிரானின் நடையுடன் ஒப்பிட்டு மகிழ்ந்தாள்.
இவ்வாறு அன்று பகல் பொழுதை பஞ்சவடிவில் சந்தோசித்துக் களித்த சீதையும், இராமனும், தம்பி லக்ஷ்மணன் உதவியுடன் பர்ண சாலையை அங்கு அமைத்துக் கொண்டு, அந்த இடத்திலேயே மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினார்கள்.
அவ்வாறு வாழ்ந்து வரும் நாளில்....
சூர்ப்பணகை என்னும் பெயர் கொண்ட அரக்கி இராமபிரான் தங்கி இருந்த ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள். அவள் உடன் பிறந்தே உயிர் பறிக்கும் வியாதியைப் போன்றவள். செம்பட்ட மயிராலான கூந்தலைக் கொண்டவள். மூன்று உலகத்திலும் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஒரே சமயத்தில் கெடுதலையும், அழிவையும் தரக்கூடியவள். நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் செல்லக்கூடிய வரத்தைப் பெற்றவள். சகோதரன் ராவணனின் தயவால் தண்டகாரிணியம் முதல் பஞ்சவடி வரையில் உள்ள பெரும் கானகத்தை ஆள்பவள். கூனியை விடக் கெடுபுத்திக் கொண்டவள்.
இப்படிப் பட்ட சூர்ப்பணகை, இராமபிரானைப் பார்த்தாள். அப்படிப் பார்த்தவள் இராமபிரானின் சௌந்தரியமான ரூபத்தைக் கண்டு, அவள் மிகவும் வியப்பு கொண்டு," இவன் மன்மதனோ? மன்மதன் என்றால் அவனுக்கு வடிவம் கிடையாதே. பிறகு, இவன் இந்திரனோ? ஆனால், இந்திரனுக்கு உடம்பு முழுதும் ஆயிரம் கண்கள் இருக்குமே. இவனுக்கோ இரண்டு கண்கள் தானே உள்ளது. பிறகு இவன் சிவபெருமானாக இருப்பானோ? அப்படி சிவனின் ரூபம் என்றால் மூன்று கண்களைக் கொண்டு இருக்க வேண்டுமே. ஆனால், இவனுக்கு மூன்றாவது கண் இல்லையே!
ஒருவேளை, இவன் திருமாலாக இருப்பானோ? அப்படிப்பார்த்தாலும், திருமாலுக்கு நான்கு தோள்கள் இருக்கும். ஆனால், இவனுக்கோ இரண்டு தோள்கள் தானே உள்ளன. பிறகு இவன் யாராக இருக்கக் கூடும் என்று யோசித்தவள், இந்த சுந்தர புருஷன் யாராக இருந்தாலும் சரி, ஆனால் மன்மதனைக் காட்டிலும் அழகுடையவன் என்பது மட்டும் உறுதி" என்று சூர்ப்பணகை அவளுக்குள் சொல்லிக் கொண்டாள்.
பிறகு அந்த அரக்கியான சூர்ப்பணகை மீண்டும் இராமபிரானைப் பார்த்தாள். அச்சமயத்தில் அவரை உச்சி முதல் பாதம் வரை, அணு, அணுவாக ரசிக்கத் தொடங்கினாள். அவ்வாறு பார்த்த அவள், ராமபிரானின் ஒளிரும் தோள்களைக் கண்டு," சூரியனின் கிரணங்கள் கூட இவனது தோளின் ஒளியைக் கண்டு கூசி நிற்கும்" என்றாள்.
பிறகு, ராமனின் முழு மேனி அழகைக் கண்டும்" இவன் கைகள் மத யானையின் பலத்தைக் கொண்டு உள்ளது. இவனது மார்புகள் எத்தனை பறந்து அழகாகக் காணப்படுகிறது. இவன் முகத்தைக் கண்ட புலவனும், வர்ணிக்க வார்த்தைகள் இன்றி தவிப்பான். உதடுகளின் நிறமோ பவளக் கல்லின் நிறத்தில் உள்ளது" என்றெல்லாம் வர்ணிக்கத் தொடங்கினாள்.
இராமபிரானின் அந்த அதி சுந்தர ரூபத்தில் மயங்கிய சூர்ப்பணகை அவர் மேல் கொண்ட தவறான காம இச்சையினால் அறிவிழந்து போனாள். உடனே, அடுத்த கணம் இராமபிரானுக்கு எதிரில் தான் போய் நிற்பதற்கான வழியைத் தேடினாள்.
கடைசியாக கோரப் பற்களும், பெருத்த வயிறும், கரிய தேகமும், செம்மட்டை முடியும் கொண்ட அந்த அரக்கி சூர்ப்பணகை," இவன் என்னைக் கொடிய அரக்கி என்று எண்ணித் தள்ளி விடாதபடி, நான் சிறந்த கட்டழகியின் வடிவம் கொண்டு செல்ல வேண்டும்" என்று தீர்மானித்தாள்.
அவ்வாறு ஒரு முடிவை அந்த அரக்கி எடுத்த மாத்திரத்தில், உடனே திருமகள் மந்திரத்தை தியானித்து, அதன் மகிமையால் சிறந்த பெண் வடிவம் கொண்டாள். அந்த வடிவத்துடன் அன்ன நடை நடந்து, சலங்கை ஒலி கேட்க, மல்லிகையின் வாசம் வீச இராமபிரானின் அருகில் சென்றாள்.
அழகிய பெண்ணின் ரூபத்தை எடுத்த சூர்ப்பணகயைப் பார்த்து "இப்படிப்பட்ட அழகி யார்? இவள் தேவலோகத்துக் கன்னியோ!" என்று வியந்தார் ராமபிரான். பிற்பாடு மிக நெருக்கமாக சூர்ப்பணகை தன்னை நோக்கி வரும் போது, தன்னை அவள் தீண்டிவிடாதபடி சற்றே அவளை விட்டு விலகி நின்றார் இராமபிரான். பின்பு அவளைப் பார்த்து," நீ யார் பெண்ணே? எந்த ஊரை சேர்ந்தவள் நீ? இந்த அடர்ந்த வனத்தில் உனக்கு என்ன வேலை?" என்று கேட்டார்.
அதற்கு," நான் பிரமனின் புத்திரரான புலஸ்தியப் பிரஜாபதியினுடைய குமாரராகிய விச்சிரவசு முனிவரின் மகள். திரிபுரம் எரித்த சிவனுடைய நண்பனான குபேரனின் தங்கை. அதுபோல, கைலாச மலையையே ஆட்டிவித்த ராவணனின் தங்கை. என் பெயர் காமவல்லி!" என்று தன்னை பற்றித் தெரிவித்துக் கொண்டாள் சூர்ப்பணகை.
அந்த வார்த்தைகளில் இருந்து, "இவள் இராவணின் தங்கை என்றால் நிச்சயம் இவளும் அரக்கி தான்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் ராமபிரான். பின்னர் அவளிடம்," நீ அரக்கி தானே, பிறகு இவ்வளவு சௌந்தர்யமான ரூபத்தை எப்படிக் கொண்டாய்? மேலும் நீ மூவுலகையும் ஆளும் ராவணனின் தங்கை என்றால், நீ பிறகு ஏன் பணிப்பெண்கள் சூழ வராமல், இப்படித் தனியாக இங்கு வந்துள்ளாய்" என்று கேட்டார் ஸ்ரீ ராமர்.
அதற்கு சூர்ப்பணகை, "நான் வஞ்சக குணம் உள்ள அரக்கர்களுடன் வாழ்வதை விட்டு, நல்ல உள்ளம் கொண்டு தேவர்களைத் தொழுது வரமாக இந்த உருவத்தை அடைந்தேன். அது மட்டும் அல்லாமல், மன்மதன் போல இருக்கும் உன்னை இப்போது கண்டு. எனது அடக்க முடியாத காம இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக, எனக்கு தூது செல்ல தோழிமார்கள் வேறு யாரும் இல்லாத காரணத்தால் நானே உன்னிடம் வந்துள்ளேன். அது, ஒருவகையில் உனது அதிர்ஷ்டம் தான். ஆகவே, உமது ஸ்பரிசத்தால் அவிந்து கொண்டு இருக்கும் எனது உடலை கட்டியணைத்துக் கொள்" என்றாள் சூர்ப்பணகை.
அது கேட்ட இராமர்," இவள் நாணம் இல்லாத கீழ்மகள்!" என்பதை உணர்ந்து கொண்டு மேற்கொண்டு அவளிடம் பேச விரும்பாமல் மௌனம் காத்தார்.
ராமபிரானின் மௌனத்தைக் கண்ட சூர்ப்பணகை மேலும் தொடர்ந்தாள்," ஆண்களில் சிறந்தவனே, நீ இங்கு இருப்பது தெரியாததால், நான் ஆங்காங்கு முனிவர்களுக்குப் பணிவிடை செய்து பொழுதை போக்கிக் கொண்டு இருந்தேன். அதனால் எனது பெண்மையும், இளமையும் வீணாகிக் கொண்டு இருந்தது. நீ இங்கு இருப்பதை முன்னமே நான் அறிந்து இருந்தால், அப்போதே வந்து உன்னைக் கூடி மன்மத கலையை உனக்கு சொல்லிக் கொடுத்து இருப்பேன்" என்றாள் சூர்ப்பணகை.
அது கேட்ட இராமபிரான், அவள் நற்குணம் சிறிதும் இல்லாமல் தீக்குணம் பெரிதும் உடையவள் என்று நிச்சயித்து, அவளைத் தக்க காரணம் சொல்லி மறுத்து அனுப்பி விட எண்ணினார்.அந்த எண்ணத்துடன், "பெண்ணே! நான் க்ஷத்திரியன், நீயோ ஒரு அந்தணனின் மகள். அதனால் சாதி முறைப்படி உன்னை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. நீ போய் விடு" என்றார்.
உடனே சூர்ப்பணகை," எனது தந்தை அந்தணனாயினும், எனது தாய் அரசகுலத்தவள். ஆதலால், அவளிடத்தில் பிறந்த என்னை நீ மணம் செய்யத் தடையில்லை. மேலும் நான் சாலகடங்கடராக்ஷஸர் மரபில் உதித்தவள், என்னை நீ கூடாது விட்டால் நிச்சயம் இறந்து போவேன்!" என்றாள்.
அதற்கு இராமபிரான், நீ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் என்னால் உன்னை ஒருபோதும் மணக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். அப்போது சீதாபிராட்டி பர்ணசாலையில் இருந்து புறப்பட்டு இராமபிரான் அருகில் வந்து நின்றாள். சீதையின் பேரழகையும், தேஜஸையும் கண்டாள் சூர்ப்பணகை. சீதையை அவள் கண்ட மாத்திரத்தில்," இராஜகுமாரனாகிய இவன் அருமையான தனது மனையாளைக் கொடிய இக்காட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கமாட்டான். ஆதாலால், இவள் இவன் மனைவியாய் இருக்கமாட்டாள். அதே சமயத்தில் இப்படிப் பட்ட பேரழகைக் கொண்டவளை இப்போது தான் இந்த அகண்ட வனத்தில் முதல் முறையாகக் காண்கிறேன், அதனால் இவள் ஒரு தேவ கன்னிகை போல, மேலும், நம்மைப் போலவே இந்த வாலிபனின் அழகால் கவரப்பட்டு, இங்கு வந்து இருக்கிறாள். அதனால், இவள் இந்த வாலிபனை அடைய நாம் விடக்கூடாது" என்று மனதில் சிந்தித்தாள்.
பிறகு, ராமனை நோக்கி," வாலிபனே, இவளை நம்பாதே! வீரனே இதோ நமது இருவருக்கும் இடையில் வந்து இருக்கும் இந்த அழகு நங்கை மாய கலைகளில் வல்லவள். இப்படிப் பட்ட அழகு மனிதர்களுக்கு இல்லை. இவள் மாயக்காரி, இவளது இப்போதைய வடிவம் உண்மையானது இல்லை. இன்னும் சொல்லப் போனால் இவள் நல்லவள் என்று எண்ணுதலே நல்லதில்லை. ஆகவே, இந்த நங்கையை இப்போதே எங்காவது துரத்தி விடு" என்று ஜானகியை சுட்டிக் காட்டிக் கூறினாள் சூர்ப்பணகை.
அது கேட்ட இராமபிரான் மனதிற்குள் நகைத்துக் கொண்டு பரிகாசமாக," மின்னலைப் போல விளங்குபவளே! உனது அறிவு நன்றாக வேலை செய்கிறது. உன்னையும் கூட வஞ்சிக்க இந்த உலகத்தில் யாரேனும் உள்ளார்களா?" என்றார்.
மறுபுறம் சீதை அந்த அரக்கியின் பேச்சைக் கேட்டுப் பயந்து இராமரை இன்னும் நெருங்கி வந்தாள். அது கண்ட அக்கொடிய சூர்ப்பணகை," ஏ, ராக்ஷஸ குலத்தில் பிறந்த பெண்ணே! நானும் இவனும் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டு இருக்கையில், நீ நடுவிலே ஏன் வந்தாய்? இதற்கு என்ன காரணம்?" என்று சொல்லி அதட்டினாள்.
இதனால் சீதை மேலும் அதிகமாகப் பயந்தாள். இராமபிரானைத் தழுவிக் கொண்டாள். சீதையின் உணர்வுகளை புரிந்து கொண்ட இராமபிரான்," அரக்கரோடு விளையாட்டுத் தொடங்கினாலும் அதுவும் தீங்காய் முடியும்" என்பதை உணர்ந்தார். பின்னர் சூர்ப்பணகையைப் பார்த்து," ஏ, அரக்கி துன்பம் தரும் படியான காரியங்களை செய்யாமல் இங்கு இருந்து ஓடி விடு" என்றார்.
ஆனால், சூர்ப்பணகையோ," மும்மூர்த்திகளும் எனது அழகில் மயங்கித் தவிக்கும் போது, நான் உன்னை தேடி வந்ததால் என்னை இந்த அரக்கியின் பொருட்டு அலட்சியம் செய்கிறாயோ?" என்றாள். மேலும் ராமபிரான் எவ்வளவு சொல்லியும் அந்த அரக்கி அவ்விடம் விட்டுப் போக மறுத்தாள். அதனால், இனி அக்கொடிய அரக்கியுடன் பேசிப் பிரயோஜனம் இல்லை என்ற முடிவுக்கு வந்த இராமர். சீதையை அழைத்துக் கொண்டு தானே அவ்விடம் விட்டுப் புறப்பட்டார்.
"இப்படி சக்கரவர்த்தித் திருமகன் என்னை அலட்சியம் செய்து விட்டுப் போய்விட்டானே" என்று புலம்பிய சூர்ப்பணகை." நான் அந்த அழகனை அடையாமல் விடப்போவது இல்லை. என்னால் அந்த அழகனை அடைய முடியாதபடி அவனுடன் இருந்த அந்த அழகியையும் நான் கடத்திச் செல்லத் தாயார்" என்று மனதில் கூறிக் கொண்டாள் அக்கொடிய அரக்கி. அவளது செய்கையைப் பார்க்கப் பிடிக்காமல் சூரியனும் மறைந்து விட. சூர்ப்பணகை தனது இருப்பிடம் சென்றாள்.
இராமபிரானைக் கண்டதில் இருந்து அவளால் அந்த இரவைக் கூட நிம்மதியாகக் கழிக்க முடியவில்லை. இராமனின் மீது அவள் கொண்ட காமம் அளவு கடந்து போக, அவளது உடல் அதீத வெப்பம் அடைந்தது. அதன் காரணமாக தனது உடலை குளிர்ந்த நீர் மற்றும் பனிக்கட்டிகளில் நனைத்துக் கொண்டாள். அப்போது ராமனது திருமேனியின் உருவெளித் தோற்றம் தோன்ற, எதற்கும் வெட்கப்படாத சூர்ப்பணகை முதன் முதலாக அன்று தான் வெட்கப்பட்டாள். பிறகு உடனே அந்த உருவெளித் தோற்றம் மறைந்ததும். தாங்க முடியாத துயரத்தில் தவித்தாள். அப்பொழுது அடுத்த நாள் இராமனை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று எண்ணினாள்.
மேலும் அவள்," அந்த வாலிபனுடன் இருக்கும் அந்த அழகு நங்கை, நிச்சயம் அவனது மனைவியாகத் தான் இருக்க முடியும். மேலும் அவ்வளவு அழகான பெண் அவனது அருகில் இருப்பதால் தான் என்னை அவன் ஏற்க மறுக்கிறான். அதனால், அவனுடன் இருக்கும் அந்தக் கட்டழகு நங்கையை நாம் நாளை போய் கவர்ந்து, எங்காவது மறைத்து வைத்துக் கொண்டாள், அந்த வாலிபன் அவனது அன்பு மனைவியின் பொருட்டு என்னுடன் கூடியே ஆக வேண்டும்" என்று மனதிற்குள் திட்டம் தீட்டினாள்.
அவ்வாறு அவள் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில், பொழுதும் விடியத் தொடங்கியது. அதனால், அவள் தீட்டிய திட்டத்தை உடனே நிறைவேற்ற சீதாராமன் தங்கி இருந்த பர்ணசாலைக்கு வந்தாள். அவள் வந்த நேரம் ராமபிரான் கோதாவரி ஆற்றில் இறங்கி சந்தியாவந்தனம் செய்து கொண்டு இருந்தார். அதனைக் கண்ட சூர்ப்பணகை, இனி நம்மைத் தடுப்பது யார்? என்று துணிச்சலுடன் குடிலுக்குள் தனியாக இருந்த சீதையைக் கவரச் சென்றாள். அவ்வாறு, குடிலுக்குள் அந்த அரக்கி செல்வதை சற்று தொலைவில் இருந்த இளையபெருமாள் லக்ஷ்மணன் கவனித்து விட்டான்.
கொடிய அரக்கியின் செயலைக் கண்ட லக்ஷ்மணன் நெஞ்சில் கோபம் பொங்கி எழுந்தது. உடனே சூர்ப்பணகை சீதையை நெருங்கும் சமயம், அந்த அரக்கியின் முடியைப் பிடித்து," யாரடி நீ? எனது அண்ணியை நீ என்ன செய்யப் பார்க்கிறாய்?" என்று கத்தினான். பிறகு, வந்தவள் ஒரு அரக்கி என்று தெரிந்து கொண்ட லக்ஷ்மணன், அவள் அரக்கியாக இருந்தாலும் பெண் என்பதால் சூர்ப்பணகையைக் கொள்ளாமல் அடித்து உதைத்தான்.
அதனால் கோபம் கொண்ட அந்த அரக்கி பெரும் பலம் கொண்டு லக்ஷ்மணனை தாக்க, அவன் அவளது மூக்கையும்,காதுகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அறுத்து எறிந்தான். அதன் பிறகே லக்ஷ்மணன் கோபம் தணிந்தான். மறுபுறம் மூக்கையும், காதையும் இழந்த சூர்ப்பணகை வலியால் அலறித் துடித்தாள். அது கேட்டு இராமபிரான், தனது பர்ணசாலைக்கு ஓடி வந்தார். அப்போது சூர்ப்பணகையும் அவ்விடத்தில் மூக்கும், காதும் அறுபட்ட நிலையில் இருக்க, இளைய பெருமாள் லக்ஷ்மணன் நடந்த விவரங்களை அப்படியே இராமபிரானிடம் கூறினார்.
அது கேட்ட இராமபிரான், லக்ஷ்மணன் செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று சொல்ல. அதனால் ஆத்திரம் அடைந்த சூர்ப்பணகை பெருங்குரலில்," கைலாச மலையையே ஆட்டுவித்த எனது அருமை அண்ணா! நீ இந்த நிலவுலகத்தை ஆண்டு கொண்டு இருக்கையில், தவவேடம் பூண்டவர் கையில் வில்லுடன் இங்கே திரிந்து கொண்டு இருப்பதும், உன் தங்கையான என்னை, உறுப்புக்களை வெட்டி மானபங்கம் செய்வதும் உனக்கு சரியோ?நீ தேவர்களை மட்டும் தான் அடக்குவாயோ? எனது இந்தப் பரிதாபமான நிலையைப் பார்க்க வரமாட்டாயோ? இராவணின் வலது கைபோல செயல்படும் கரனே!...தூஷணனே! நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்கள்?. நீங்களாவது வாருங்கள், இந்த அநியாயத்தைக் கேளுங்கள்" என்றெல்லாம் கதறினாள்.
மேலும் இராம, லக்ஷ்மணர்களைப் பார்த்து," நான் இராவணனின் தங்கை சூர்ப்பணகை, என்னை நீங்கள் இந்தக் கோலத்துக்கு ஆளாக்கியதால் என் அண்ணன் உங்களை விடமாட்டார். தேவர்களே, எனது அண்ணனுக்கு பயந்து கப்பம் கட்டுபவர்கள். நீங்கள் எம்மாத்திரம்? எனினும் உங்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பைத் தருகிறேன். ஏ, ஆண்களில் அழகு கொண்டவனே, நீ என்னை மணக்காவிட்டால் என்ன? இதோ வீரம் பொருந்திய உனது தம்பிக்கு உத்தரவு கொடுத்து என்னை திருமணம் செய்து கொள்ளச் சொல். மூக்கும், காதும் இல்லாவிட்டால் தான் என்ன? எனக்குள் இருக்கும் பெண்மை சாகவில்லையே. மேலும்,என்னால் இன்னும் கூட அழகான பெண்ணின் வடிவத்தை எடுக்க முடியும். அதனால், தாமதிக்காதே உனது தம்பிக்கு என்னை திருமணம் செய்து வை. மேலும், இப்பொழுது நீ சொல்வதால் உன் தம்பி என்னை மணக்க ஒரு பாதி சம்மதித்தாலும், மறு பாதி, "மூக்கில்லாத இவளுடன் எப்படி வாழ்வேன்?" என்று சொல்லி மறுக்கலாம்.
அப்படிச் சொல்லும் அவனுக்கு நீ சொல்!தம்பி! இடையில்லாத ஒருத்தியுடன் நான் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றேனே!என்னும் சமாதானத்தைச் சொல்!" என்றாள். சூர்ப்பணகையின் அந்த வாயாடித் தனத்தை கேட்டதும் லக்ஷ்மணனுக்கு இன்னும் கோபம் அதிகமானது.
உடனே தனது கையில் உள்ள வேலாயுதத்தை கடைக் கண்ணால் பார்த்துவிட்டு," அண்ணா! இவளை ஒழிக்காவிட்டால் நம்மை மிகவும் வருத்துவாள். உமது கட்டளை என்ன?" என்றான் இராமபிரானிடம்." ஆம், தம்பி! அதுவே சரி. இனியும் இவள் தூர விலகிப் போகாவிட்டால், உன் விருப்பப்படியே செய்" என்றார் இராமபிரான்.
அது கேட்ட சூர்ப்பணகை "இனியும் இவர்களிடம் கெஞ்சுவது அர்த்தமற்றது" மேலும், தான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கு இருந்தாலும் உயிரை இழக்கவும் நேரும் என்று அஞ்சி, இராம லக்ஷ்மணர்களைப் பார்த்து," எனது அழகான மூக்கும், காதும் உங்களால் வெட்டப்பட்ட நிலையில், உங்களிடம் போய் வாழ்க்கைப் பிச்சை கேட்பேனோ? நான் கூறிய வார்த்தைகள் அனைத்தும், உங்கள் இருவரின் மன ஓட்டத்தை அறிந்து கொள்ளக் கூறியது தான். இப்போது உங்களது மன ஓட்டம் எனக்குப் புரிந்து விட்டது. இனி நான் உங்களை விடப்போவதில்லை. நெருப்பைக் காட்டிலும் கொடுமை கொண்ட கரனை, உங்களுக்கு யமனாகும் படி இப்பொழுதே சென்று அழைத்து வருகிறேன்!" என்று கூறி வானில் பறந்து சென்றாள் சூர்ப்பணகை.
அப்போது வானில் பரந்த சூர்ப்பணகையைப் பார்த்து, "நீ எத்தனை கொடிய அரக்கர்களையும், பெரும் அரக்க சேனையையும் கூட உடன் அழைத்து வா.தசரத குமாரர்களான அண்ணன் ராமனும், லக்ஷ்மணனாகிய நானும் அரக்கர்களை ஒழிக்கத் தான் இவ்விடம் வந்து உள்ளோம்" என்றான் லக்ஷ்மணன். அதையும் கேட்டுக் கொண்டே கோபம் கொண்ட சூர்ப்பணகை வானில் பறந்து மறைந்தாள்.