சவரி பிறப்பு நீங்கு படலம்

ஆரணிய காண்டம்
இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
சவரி பிறப்பு நீங்கு படலம்
இராமபிரான் கபந்தன் என்னும் தனு காட்டிய வழியில் மதங்கரின் ஆசிரமத்தை அடைந்தார். மதங்கரின் ஆசிரமத்தை சுற்றி ரம்மியமான சூழ்நிலை காணப்பட்டது. இராமர், அங்கு சவரியைக் கண்டார். அச்சமயம் அவள் வழக்கம் போல ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருந்தாள். ராமபிரான் தம்பி லக்ஷ்மணன் தொடர சவரியின் அருகில் சென்றார். அவளிடம், "தாங்கள் யாதொரு துன்பமும் இல்லாமல் நலமாக உள்ளீர்களா?" என்று அன்புடன் விசாரித்தார்.
இராமபிரானின் குரலைக் கேட்ட சவரி, ஒரு தாய் வெகு நாட்களுக்கு முன் தான் துலைத்த குழந்தை திரும்பக் கிடைத்தது போல கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிய பாசத்துடன் இராமபிரானைப் பார்த்தாள். பிறகு மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தாள். தான் சேமித்து வைத்தப் பழங்களை எல்லாம் இராமபிரனுக்குக் கொடுத்தாள். அதனை இராமபிரான் உண்பதைப் பார்த்து ரசித்தாள்.
திடீரென சபரிக்கு,"தான் கொடுத்த பழங்கள் நன்றாக உள்ளதா?" என்ற சந்தேகம் பிறக்க. சில பழங்களைத் தான் கடித்து, அதில் அதிக சுவை உள்ள பழங்களை மட்டும் இராமபிரனுக்குக் கொடுத்து மகிழ்ந்தாள். இராமபிரானும் சவரி கடித்துக் கொடுத்த பழங்களை வாங்கி உண்டார். இது கண்ட லக்ஷ்மணன்,"அண்ணா, இவை எச்சல் பழங்கள்" என்று இராமர் காதுகளில் முணுமுணுத்தான். அதற்கு இராமபிரான் லக்ஷ்மணனிடம்,"தம்பி நீ வெளித்தோற்றமாக பார்க்கிறாய் அதனால் தான் அதில் எச்சல் உள்ளது உனக்குத் தெரிகிறது. நானோ, சவரி என் மீது வைத்து இருக்கும் பேரன்பைப் பார்க்கிறேன் அதனால் எனக்கு ஏதும் தோன்றவில்லை" என்றார். பிறகு லக்ஷ்மணனிடமும், சவரி தான் கடித்துச் சுவைத்து இருந்த சில நல்ல பழங்களை அவன் உண்பதற்கு பாசத்துடன் கொடுத்தாள். சவரியின் மனம் நோகாதவாறு அந்தப் பழங்களைப் பெற்றுக் கொண்ட லக்ஷ்மணன். அவள் பார்க்காத நேரத்தில் "எச்சில் பழங்கள் எனக்கு வேண்டாம்" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு தூக்கி எரிந்து விட்டு, தான் அவைகளை உண்டது போல காண்பித்துக் கொண்டான்.
பிறகு இராமபிரான் அந்தப் பழங்களை உண்டு முடித்தார். பின்பு அவள் இராமபிரானை தனது குடிலில் இளைப்பாறச் செய்தார். ஸ்ரீ ராமரும் வந்த களைப்பு நீங்க சற்றே அக்குடிலில் ஓய்வு எடுத்தார். அப்போது அன்புடன் சவரி அவருக்குப் பணி விடைகளைச் செய்தாள். பின்னர் இராமபிரானிடம்,"எந்தையே! உங்களைப் பார்க்க நான் பல காலங்கள் தவம் கிடந்தேன். மும்மூர்த்திகளும், தேவேந்திரனும் என்னிடத்தில் சிறிது காலத்துக்கு முன்பு வந்து 'சவரி உனது குற்றமற்றத் தவம் நிறைவடையப் போகும் நேரம் நெருங்கி விட்டது. கூடிய சீக்கிரத்தில் இராமபிரான் உன்னைப் பார்க்க இங்கு எழுந்தருளப் போகிறார். அவ்வாறு ஸ்ரீ ராமர் வந்தவுடன் அவருக்கு உனது விருப்பம் நிறைவேற தக்க உபசாரங்களை செய்து விட்டு சுவர்க்கலோகத்துக்கு வருவாயாக' என்றனர். அவ்வாறே தற்போது தாமும் எழுந்து அருளியதால், அந்த தேவ வாக்கின் படி எனது தவம் இன்று நிறைவேறிவிட்டது" என்றாள்.
இராமபிரான் சவரியை நோக்கி,"தாயே! எங்களது வருத்தம் பொருந்திய வழி நடைத் துன்பத்தை நீ செய்த உபசாரத்தால் தீர்த்தாய். உன் புகழ் வாழ்வாயாக!" என்றார்.
சவரி பிறகு அவர்களுக்கு, சுக்கிரீவன் வாழும் ருசியமூக மலையின் கொடிய வழியை விளக்கிக் கூறினாள். அவைகளை மிகுந்த அக்கறையுடன் கேட்டுக் கொண்டார்கள் அவர்கள்.
கடைசியாக சவரி, மெய் வருந்திச் செய்து பெற்ற தவத்தின் பயனால், தனது உடம்பைவிட்டு நீங்கி முத்தியுலகம் சென்று சேர்ந்தாள்!
அச்செயலைப் பார்த்து நின்ற இராமலக்ஷ்மணர் ஆச்சர்யம் அடைந்தார்கள். பிறகு, அவர்கள் அங்கு இருந்து புறப்பட்டு, சவரியால் கூறப்பட்ட பெரிய காட்டு வழியில் போனார்கள். குளிர்ந்துள்ள காடுகளையும், மலைகளையும் கடந்து சென்று, இறுதியில் அவர்கள் பம்பை என்னும் பொய்கையை அடைந்தார்கள்.