சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

bookmark

ஆரணிய காண்டம்

இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.

சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்

(சரபங்க முனிவர் இராமன் திருவருளால் மானிடப் பிறவி நீங்கி வீடு பேறெய்திய நிகழ்ச்சியைக் கூறும் சிறிய பிரிவு இது. சரபங்கன் என்ற பெயர் மன்மதன் எய்தும் காம பாணங்களைத் தோல்வியுறச் செய்தவன் என்ற பொருள் கொண்டது. மேலும், வெகுளி மயக்கம் ஆகியவற்றையும் ஒழித்தவன் என்பதும் இதனால் உணரப் பெறும்.

விராதனின் சாபம் தீர்ந்தபின் இராமன் முதலியோர் சரபங்கனின் ஆசிரமம் நோக்கிச்சென்றனர். வழியில் பிரமனின் ஆணையால் சரபங்கனைச் சத்தியலோகம் அழைத்துச் செல்லவந்திருந்த இந்திரன் இராமனைத் துதித்துச் சென்றான். பின்னர் இராமன் சரபங்க முனிவனிடம் சேர்ந்தான். இராமனின் சேவைக்காக எதிர்நோக்கி இருந்த அம்முனிவன் அவனைப் பணிந்து அவன் எதிரில் தீப்புகுந்து வானுலகம் அடைந்தான். அது பற்றிச் சொல்லும் படலம் இது)

ஆதவனின் கொடிய கதிர்கள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அந்திப் பொழுதும் மெல்ல வந்து சேர்ந்தது .ஸ்ரீ ராம பிரான் தபோவனத்தை விட்டு சீதையோடும், தம்பி லக்ஷ்மணனோடும் புறப்பட்டு சரபங்க முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார்கள். இயற்கை எழில் சூழ்ந்த அந்த ஆசிரமத்தை இவர்கள் மூவரும் சென்று சேரும் சமயம். சரபங்க முனிவரைக் காண ஆயிரம் கண்களுடைய இந்திரன் வந்திருந்தான்.

இந்திரன் தேவலோகத்தின் அரசன், நூறு அசுவமேக யாகத்தை செய்து தற்பொழுது இந்திரப் பதவியை வகிப்பவன். நான்கு தந்தங்கள் கொண்ட ஐராவதம் என்னும் யானையையும், வஜ்ராயுதம் என்னும் ஆயுதத்தையும் கொண்டவன். தனது அழகினால் ஊர்வசி முதலான தெய்வப் பெண்களின் கண் பார்வையைத் தன் மேல் கொண்டவன். அத்தகைய சிறப்புகள் கொண்ட இந்திரன் சரபங்கரின் முன்னே செல்ல, அவனைக் கண்டு அவரும் எதிர்கொண்டு வந்து தக்க மரியாதைகளுடன் வரவேற்றார்.

பிறகு இந்திரனிடம் தனது ஆசிரமம் வந்த காரணத்தைக் கேட்டார் சரபங்க முனிவர். அது கேட்ட இந்திரன்," தவக் கொழுந்தே! உம்முடைய தவத்தின் சிறப்பை பிரமதேவராலும் உணர்ந்து சொல்ல முடியாது. அவர் உம்மைத் தம் உலகத்துக்கு வரும் படி அழைத்தார். ஆதலால் இப்போதே வருவீராக! மேலும் உம்மை பிரம்ம லோகம் அழைத்துச் செல்லவே யாமும் பிரம்ம தேவனின் ஆணைப்படி இங்கு வந்துள்ளோம்" என்று இந்திரன் தான் வந்த காரணத்தை சரபங்க முனிவரிடத்தில் தெரிவித்து நின்றான்.

அதுகேட்ட சரபங்க முனிவர்," தேவேந்திரா ! எனக்கு பிரம்ம தேவனின் சத்திய லோகத்தை அடைய விருப்பம் இல்லை. நான், அதைக் காட்டிலும் புண்ணிய பலன்களை அடைய விரும்புகிறேன். பிரம்மனின் சத்திய லோகம் சென்றவர்கள், தங்களது புண்ணிய பலன் முடிந்ததும் மீண்டும் ஜெனனம் எடுப்பார்கள். அதனால்,நான் அதையும் காட்டிலும் புனித இடமான பரமபதத்தை அடைய விரும்புகிறேன். அதற்காகத் தான், இன்னும் நான் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.

அப்போது முனிவரின் ஆசிரம வாயிலை அடைந்த ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை வெளியில் நின்று கொண்டு இருந்த நான்கு தந்தங்கள் கொண்ட வெண்ணிற யானையைக் கண்டார்கள். உள்ளே முனிவரின் ஆசிரமத்தில் அதீத ஒளிக் கிரணத்தையும், பேச்சுக் குரலையும் கேட்டனர். அப்போதே, அவர்கள் முனிவரின் ஆசிரமத்திற்கு இந்திரன் தான் வந்து உள்ளான் என்று ஊகித்துக் கொண்டார்கள்.

ஸ்ரீ ராமர் அதனால் ஒரு முடிவுக்கு வந்தார். தம் மனைவியையும், தம்பியையும் முனிவர் வாழும் சோலைக்கு வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, பெருமிதம் காம்பீரியம் வலிமை என்ற பண்புகள் நடையிலே தோன்ற இராமபிரானே முனிவரின் அந்த ஆசிரமத்துக்குள் சென்றார்.

அப்பொழுது அவருக்கு எதிரே சரபங்கமுனிவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு இருந்த இந்திரன் தனது ஆயிரம் கண்களைக் கொண்டு இராமபிரானைப் பார்த்தான். பிறகு, அங்கு வந்த ஸ்ரீ ராமரையும் வணங்கிப் போற்றித் துதித்து, தனது லோகமான சுவர்கத்திற்க்குச் சென்றான் இந்திரன்.

பிறகு, இராமபிரானைக் கண்ட சரபங்க முனிவர் அவரை மிகவும் அன்புடன் வரவேற்றார். அப்பொழுது இராமபிரான் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். அது கண்ட சரபங்க முனிவர், தான் பெற்ற பாக்கியத்தை நினைத்து மகிழ்ந்தபடி ராமபிரானை வாழ்த்தினார். பிறகு சரபங்க முனிவரின் வேண்டுதல் படி சீதையையும், தம்பி லக்ஷ்மணனையும் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார் இராமபிரான்.

சரபங்க முனிவரின் வேண்டுதலுக்கு இணங்க, அன்றைய பொழுதை தனது தம்பி மற்றும் தரும பத்தினியுடன் அவரது ஆசிரமத்திலேயே கழித்தார் ராமபிரான். அடுத்த நாள் காலை விடிந்தது, ஆதவன் தனது செங்கதிர்களை உலகத்தில் பரப்பத் தொடங்கிய நேரம். சரபங்க முனிவர் அதிகாலையிலேயே எழுந்து, ஓமத் தீயை வளர்த்தார். அது கண்ட இராமபிரான் அவரிடம் அது பற்றி வினவ, அதற்கு சரபங்க முனிவர்," ஐயனே! எனக்கு விடை கொடுப்பீராக! நான் இப்போது மோட்சத்தை அடைய அக்கினிப் பிரவேசம் செய்யப் போகிறேன். எனக்கு அதற்கு அருள் புரிய வேண்டுகிறேன்" என்றார்.

அதுகேட்ட இராமபிரான்," முனிவர் பெருமானே! நான் வந்திருக்கும் இந்தச் சமயத்தில் இக்காரியத்தை செய்வதற்குக் காரணம் என்ன?" என்று மேலும் கேட்டார்.

அதற்கு சரபங்க முனிவர், " நான் சத்திய லோகத்தை அடையும் வாய்ப்பை அடைந்தும், நான் அதனை மறுத்தேன். அதற்குக் காரணம், நீர் இவ்விடம் எழுந்தருளுவீர் என்னும் நிச்சயமான எண்ணத்துடன் நான் காத்திருந்தது தான். அதன் படி, விஷ்ணு அவதாரமான நீரும் இவ்விடம் எழுந்தருளினீர். உமது வரவால் இன்று எனது வினைகளும் கழிந்தன. இனி இங்கே எனக்கு ஒரு காரியமும் இல்லை!" என்றார் சரபங்க முனிவர்.

பின்பு, முனிவர் தாம் அதுவரை செய்த தவப்பயனை எல்லாம் ஸ்ரீ ராமனின் பாதத்தில் சமர்பித்தார். இராமபிரான் அத்தவப்பயனை எல்லாம் அங்கீகரித்ததும், அம்முனிவர் பரமபதம் அடைய விரும்பி மந்திர விதியுடனே எறியும் அக்கினியில் ஒமஞ்செய்து பிரமமேத அக்கினியில் தம் மனைவியுடன் புகுந்து, பரமபதம் சென்று சேர்ந்தார்!