சம்புமாலிவதைப் படலம்

சுந்தர காண்டம்
கம்பராமாயணத்துள் மிகவும் போற்றக்கூடிய பகுதியாக விளங்குவது சுந்தர காண்டமாகும். இங்கு சுந்தரன் என்று குறிக்கப் பெறுபவன் அனுமன் ஆவான். சொல்லின் செல்வன் என்று கம்பர் அனுமனது பெருமையை விளக்குகிறார். இராமனைப் பிரிந்த சீதைக்கும், சீதையைப் பிரிந்த இராமனுக்கும் இடையில் பிள்ளையைப் போலத் தூது சென்று அவர்தம் உள்ளக்கருத்தை உள்ளபடி உரைத்தபாங்கினாலேயே இதற்குச் சுந்தர காண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. சுந்தரம் என்றால் அழகு என்று பொருள். இன்றும் கணவன்-மனைவி ஆகிய தம்பதியரிடையே ஏற்படும் உளவேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு சுந்தர காண்டம் படிப்பது வழக்கமாக உள்ளது. சுந்தரகாண்டம் பதினான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது
சம்புமாலிவதைப் படலம்
(அனுமனைப் பற்றிக் கொணருமாறு இராவணன் சம்புமாலி என்பவனுக்கு ஆணையிட்டான். ஆணையை ஏற்றுச் சென்று போரிட்ட சம்புமாலியின் வதையைப் பற்றிக் கூறுவது இந்தப் படலம்)
இராவணன் பிறப்பித்த ஆணைப்படி, தனது பலவகையான சேனைகளையும் உடன் அழைத்துக் கொண்டு சம்புமாலி அனுமனை சிறை பிடிக்கச் சென்றான்.
அந்த சேனைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, கடற்கரை மணலின் துகள்கள் போலவும், வானில் மின்னும் நக்ஷத்திரங்களின் எண்ணிக்கை போலவும் அவர்கள் காணப்பட்டனர். அதில் தேர்ப்படைகளும், யானைப் படைகளும், குதிரைப்படைகளும் காணப்பட்டன. அது தவிர, தோமரம், கூர்வாள், கூர்வேல், தண்டு, எழு, கப்பணம், வில் மற்றும் அம்புகள் எனப் பல்வேறு விதமான கொடிய ஆயுதங்களைத் தாங்கிய காலாட்படைகளும் என நான்கு வகை சேனைகளும் இருந்தன. அப்படை சென்ற வேகத்தில் பூமியில் இருந்து புறப்பட்ட பெரும் புழுதிப் படலம் வான் மண்டலத்தை மறைத்தது.
அந்தச் சேனை ஆரவாரம் செய்தும், பல் வகை வாத்தியங்களை ஒலிக்கவும், சங்குகள் முழங்கவும், யானைகள் பல பிளரவும் அசோகவனம் அடைந்து அனுமனைச் சூழ்ந்து நின்றது. அப்படைகளைக் கண்ட மாத்திரத்தில் அனுமனும் பெரும் ஆரவாரம் செய்தான். பூமியும், மலைகளும் பிளவுபடவும், கடல்கள் நிலை கலங்கவும் அவன் தனது தோள்களைத் தட்டினான்.
மாருதியின் பேராற்றலைக் கண்டு சம்புமாலியுடன் போருக்குப் புறப்பட்டு வந்த அரக்கர்கள் பயத்தால் கடல் போல் ஆரவாரித்து, தமது சுற்றத்தாருடைய பிண மலைகளின் மேல் இடறி விழுந்தார்கள், இருந்தாலும் சம்புமாலி தனது வீரம் மிகுந்தப் பேச்சாற்றலால், அந்தப் படை வீரர்களைத் தேற்றினான். அவர்களை வரிசைபடுத்திப் போருக்கு ஆயத்தம் செய்தான். அது கண்ட அனுமனும் உத்வேகத்துடன் போருக்குத் தயார் ஆனான்.
ஒரு வழியாகப் போரும் தொடங்கிற்று!
அரக்கர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தபடி அனுமனின் மீது தங்கள் கைகளில் உள்ள ஆயுதங்களை வீசி எறிந்தனர். ஆனால், அந்த ஆயுதங்கள் அனுமனுக்கு எந்தவித சேதத்தையும் உண்டு பண்ணவில்லை. அவைகளை மிகவும் அலட்சியமாகப் தமது கைகள் கொண்டு பிடித்து, ஒடித்து எறிந்தான் அனுமான். ஆனால், அரக்கர்களோ விடாமால் சாரை, சாரையாக அனுமனின் மீது பாணங்களைத் தொடுக்கக், கோபம் கொண்ட அனுமான், அங்கு விழுந்து இருந்த ஒரு தங்க மாளிகையின் பெரிய தூணை எடுத்துக் கொண்டான். பிறகு, அரக்கர்களின் கூட்டத்துக்குள் புகுந்து, ஸ்ரீ மகாவிஷ்ணுவின் சக்கரம் போல சுழன்று, சுழன்று அவர்களைத் தாக்கினான். அதனால், அரக்கர்களின் நால்வகைப் படைகளும் அழிந்தன.
தன்னுடன் வந்த படைகள் அனைத்தும் அனுமானால் நொடிப் பொழுதில் அழிந்ததை பார்த்த சம்புமாலி மிகவும் கோபம் கொண்டான். அதன் காரணமாக அவனது கண்கள் நெருப்பைக் கக்கின. மதம் கொண்ட யானைப் போல, அனுமானுடன் மிக உக்கிரமாகப் போர் செய்யத் தொடங்கினான். பல கோடி அம்புகளை அனுமன் மீது சம்புமாலி தொடுத்தான். அவைகளை அனுமன் தனது கைகளில் வைத்து இருந்த அந்த மாளிகையின் தங்கத் தூண் கொண்டே அழித்தான். அது கண்டு சம்புமாலி சக்தி வாய்ந்த அஸ்திரம் ஒன்றைப் பிரயோகிக்க அது அனுமனின் கைகளில் இருந்த அந்த தங்கத் தூணை தூள், தூளாக ஆக்கியது. அது கண்டு அனுமன், சம்புமாலியின் போர்த் திறனை பாராட்டினான். எனினும்," இனியும் சம்புமாலியை உயிருடன் விடுவது சரியல்ல" என்று முடிவு செய்தான் அனுமான். உடனே பாய்ந்து சென்று அவனது தேரை உடைத்து, அதில் இருந்த தேரோட்டியையும் கொன்று, சம்புமாலியின் கைகளில் இருந்த வில்லையும் பிடுங்கி நறுக்கென்று ஒடித்து எறிந்தான். இந்தச் சம்பவங்கள் யாவும் நொடிப் பொழுதில் நடந்து முடிந்தது.
ஆயுதங்கள் இன்றி சம்புமாலி, தனது கைகள் கொண்டே அனுமனுடன் யுத்தம் செய்ய, அனுமானும் அரக்கானாகவே இருந்தாலும் நிராயுத பாணியை ஆயுதம் கொண்டு தாக்க விரும்பாமல், மல்யுத்தம் செய்தான். இருவரும் கடுமையாக நிலத்திலும், ஆகாயத்திலும் எனப் பல இடங்களில் வெகு நேரம் போர் செய்தார்கள். இறுதியில் அனுமன் சம்புமாலியின் தலையில் ஓங்கி அடிக்க, அந்த ஒரு அடியில் அவனது கபாலம் உடைந்து துடி, துடித்து இறந்தான் சம்புமாலி.
ஒரு பக்கமாக மறைந்து நின்று போரைப் பார்த்துக் கொண்டு இருந்த பருவத் தேவர்கள், அனுமனால் சம்புமாலி கொல்லப்பட்டதைக் கண்டார்கள். அதனால், பெரும் அச்சம் கொண்டு இராவணனிடம் ஓடிச் சென்று சம்புமாலி கொல்லப்பட்ட செய்தியை பயத்துடன் சொன்னார்கள். சம்புமாலி அனுமனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இராவணன். கோபத்தின் உச்சகட்டத்தை அடைந்தான். தானே சென்று அனுமனை ஒழித்துக் கட்ட, தனது சிம்மாசனம் விட்டு எழுந்தான் இராவணன். இராவணனின் மனக் கருத்தை அறிந்து கொண்ட அவனைச் சுற்றி இருந்த பஞ்ச சேனாபதிகள், இராவணனை தடுத்து நிறுத்தி, அவனை நோக்கி, "வேந்தே! தாங்கள் சிலந்தியைப் பிடித்துத் தின்னும் அற்பக் குரங்குடன் போர் புரிவது சரியோ? அப்படிச் செய்தால் தங்களிடம் தோற்று ஓடிய தேவர்களும், அஷ்டதிக் பாலகர்களும், திசை யானைகளும், தங்களால் முன்பு அசைக்கப் பட்ட கைலாய மலையும், மும்மூர்த்திகளும் கூட உங்களைக் கண்டு பரிகசிக்க மாட்டார்களோ? தாங்கள் இதுவரையில் வலிமை இல்லாத அரக்கர் கூட்டத்தை அனுப்பி அந்தக் குரங்குடன் போர் செய்யச் செய்தீர்கள். அதனால் தான் நாம் அனைவரும் இப்போது தோல்வியை கண்டு வருந்துகிறோம். நீங்கள், இப்போது எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள். நாங்கள் அந்தக் குரங்கை உங்களிடத்தில் உயிருடனோ இல்லைப் பிணமாகவோ பிடித்துக் கொண்டு வந்து நிறுத்திகிறோம்" என்றனர்.
பஞ்ச சேனாபதிகள் ஐவரும் சொன்ன வார்த்தையைக் கேட்ட இராவணன் கர்வம் கொண்டு மிகவும் மகிழ்ந்து அவர்களை நோக்கி ,"வீரத்தின் விளை நிலங்களே, பல யுத்தத்தில் உங்களின் போர் திறனை நான் கண்டுள்ளேன். உடனே செல்லுங்கள், அக்குரங்கைப் பெரும்பாலும் உயிருடன் இழுத்து வர முயற்சி செய்யுங்கள். நமது அரக்க குழந்தைகளுக்கு பொழுது போக்க பயன்படும்" என்றான்.
இராவணனின் ஆணையை ஏற்ற பஞ்சசேனாபதிகள் அனுமனைப் பிடிக்கப் பெரும் படையைத் திரட்டிப் போனார்கள்.