
கோலம்காண் படலம்

பாலகாண்டம்
பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
கோலம் காண் படலம்
(சீதைக்குத் தோழியர் மணக்கோலஞ்செய்து கண்டு மகிழ்வது கூறம் பகுதி. மணமண்டபத்திற்குச் சீதையை அழைத்து வருமாறு வஷிஸ்டர் ஜனகனை வேண்டினார். ஜனகர் தாதியர்க்கு அச்செய்தியை தெரிவித்தார். சீதைக்குத் தாதியர் அமிழ்தினைச் சுவை செய்வது போல் அழகினுக்கு அழகு செய்து பாதாதிகேசமாக அணிகள் பூட்டி. மணமண்டபத்திற்கு அழைத்து வந்தனர். தசரதனும் முனிவர் இருவரும் தவிர. அத்தனை பேர் கரங்களும் சீதையைத் தெய்வமெனக் கருதிச் சிரமேல் குவிந்தன. கன்னிமாடத்தருகே கண்ட காதற் காட்சிக்குரியவரே என இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் அறிந்து ஐயம் நீங்கி அகம் பூரித்தனர். திருமணநாள் நாளைஎனக்குறித்த பிறகு தத்தம் இருப்பிடங்களை அனைவரும் அடைந்தனர்.)
வசிஷ்ட மாமுனிவர் சீதையை அழைத்து வருமாறு ஜனகரிடம் கூற. ஜனகர் பணிப்பெண்கள் மூலம் தாதியர்க்கு இந்தச் செய்தியை தெரிவித்தார். அதனைக் கேட்ட தோழியர்கள் சீதையை அலங்கரிக்கத் தொடங்கினார்கள். அவளுடைய கரிய நீண்ட கூந்தலை வாசனை எண்ணெய் தடவி, அழகாக சீவி, மணி மணியாகப் பின்னி முடித்து, அதில் அழகிய வாசனை மலர்களை சூடி, பின்பு முன் நெற்றியின் வகிட்டின் முனையில் சுட்டியும் பூட்டும் ஆகிய நகைகளை அணிவித்தார்கள். காதுகளில் இரத்தினக் குழையும்,கழுத்துக்கு நக்ஷத்திர ஒளிக்கு நிகரான முத்து வடத்தையும், ஆபரணங்களையும், கைகளுக்கு கடகங்களையும் அணிவித்தார்கள். அது போன்று அவள் பாதங்களுக்கு அழகிய சிலம்பையும் அணிவித்தார்கள். கண்களுக்கு மை தீட்டினார்கள். மூன்றாம் பிறை போன்ற நெற்றிக்கு திலகம் இட்டார்கள். மேனியெங்கும் பலவகை பூக்கள் கொண்டு அலங்கரித்தார்கள்.
இவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சீதையின் அழகு சாட்ஷாத் அந்த மகாலக்ஷிமியின் பேரழகைக் காட்டிலும் சிறந்து விளங்கியது. அவளுடைய அழகைக் கண்ட தோழிமார்கள், எங்கே அவளுக்கு கண்ணேறு பட்டு விடுமோ என்று எண்ணி, நெய் தீபத்தால் அவளுக்கு திருஷ்டி சுற்றினார்கள். வானத்து மகளிர் கூட சீதையின் பேரழகைக் கண்டு வியந்தார்கள். தங்களுக்கு அத்தகைய அழகு கிடைக்கவில்லையே என்று வருந்தினார்கள்.
அலங்காரமும், மற்ற காரியங்களும் இனிதே முடிந்தது. தோழிமார்கள் மெல்ல சீதையை அழைத்துச் சென்றார்கள். சீதையும் தனக்கே உரிய அன்ன நடையுடன், மையிட்ட கண்கள் பூமியைப் பார்க்க தோழிகளுடன் சென்றாள். மண்டபத்தில் நுழைந்த, அவளுடைய பரிசுத்தமான அழகைக் கண்டு ஆண்கள் அனைவரும் வியந்தனர். பெண்களோ திகைப்படைந்தார்கள். அப்படி திகைப்படைந்தவர்கள் வானவர்கள் போல கண் கொட்டாது, சீதையின் அழகால் எழுதி வைத்த சித்திரமாக அசைவற்று இருந்தனர்.
இராமபிரானோ வெளிப் பார்வைக்கு மகிழ்ச்சியுடன் காணப்பட்டாலும், நெஞ்சில் "வில்லை முறித்ததால் தமக்குக் கிடைத்தவள் நம்மால் கன்னிமாடத்தில் கண்டு விரும்பப் பட்டவளோ? வேறோருத்தியோ? "என்று பலவாறு சந்தேகப்பட்ட வருந்திக் கொண்டு இருந்தார். அன்று கன்னி மாடத்தில் கண்ட அந்தக் கட்டழகி தான் இந்த சீதை என்று அறிந்ததும், மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
முனிவர் பிரானாகிய வஷிஸ்டர் பெருமான் ஞானப் பார்வை கொண்டவர், அவருக்கு ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்றும் சீதை மஹாலக்ஷ்மியின் ஸ்வருபம் என்பதும் நன்கு தெரியும். ஆதலால் அவர், இந்தத் திருமணத்தைக் காண்பது, தான் முற்பிறவியில் செய்த புண்ணியம் எனக் கருதினார். சீதையைக் கண்ட தசரதச் சக்கரவர்த்தி, "எல்லாச் செல்வங்களையும் பெற்று இருந்தாலும், இந்த நற்குணச் செல்வியை மருமகளாகப் பெற்ற பிறகே எல்லாச் செல்வமும் தம் வயமாகும்" என்று நினைத்தார். அந்த நினைப்பு அவருக்குப் பூரிப்பைத் தந்தது.
தசரதர் முதலியவரும் முனிவர் பெரு மக்களையும் தவிர, மற்றவர்கள் எல்லோரும் சீதையை தெய்வமெனக் கருதி கை கூப்பி தொழுது கொண்டார்கள். எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்த சீதை, தனது தந்தையான ஜனக மகாராஜாவின் அருகில் சென்று நின்றாள். சீதையின் அழகைக் கண்ட விசுவாமித்திரர் "இந்த பேரழகியை மணக்க இராமன் மேரு மலை போன்ற ஒருவில்லை என்ன? ஏழு மலைகளையும் கூட முறிக்க மாட்டானோ?" என்று வியப்புடன் எண்ணினார்.
சீதையும், அன்று கன்னி மாடத்தில் யார் என்றே அறியாமல், தாம் காதல் கொண்ட அந்த நபர் தான் ஸ்ரீ ராமர் என்று இப்போது முனிவர் பெருமான்கள் மூலம் அறிந்ததும் தனது ஐயங்களை விட்டுப் பெரு மகிழ்ச்சி அடைந்தாள். ஆதவன் கண்ட பனி போல அன்று முதல் அவளது துயரமும் இவ்விஷயமாய் நீங்கிப் போயிற்று.
பிறகு, தலை குனிந்து தன் கை வளையல்களைச் சரிபடுத்துவது போன்று பாவனை செய்த வண்ணம், மெல்ல இராமபிரானைக் கடைக் கண்ணால் பார்த்தாள். பிறகு தனது எண்ணம் போலவே எல்லாம் நடப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள் சீதை.
உலகத்தில் ஒவ்வொரு ஆண் பெண்ணின் கலியாணமும் அவ்விருவருடைய சுற்றத்தார் நண்பர் முதலிய சிலருக்கே மகிழ்ச்சி தரும். ஆனால், சீதா ராமன் விவாகம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இறுதியாக தசரத சக்கரவர்த்தி விசுவாமித்திரரிடம்," முனிவர் பெருமானே! இத் தெய்வ மகளான ஜானகியின் திருமண நாளைத் தாங்கள் சொல்லி அருள்க!" என்று வேண்டினார். "தசரத வேந்தே, கல்யாணத்துக்கு ஏற்ற நாள் நாளைய தினமே, அதனால் நாளைக்கே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்று தசரதருக்குப் பதில் உரைத்தார் விசுவாமித்திரர்.
பின்பு, தசரதர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தம் மாளிகைக்குச் சென்றார். மற்ற அரசர்களும் மண்டபத்தை விட்டு வெளியேறி தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றார்கள். எல்லோரும் சென்றதைக் கண்ட சூரியன் தனக்குரிய இடத்துக்கு செல்லக் கருதியது போல, அவனும் பொன் மயமான மேரு கிரியிலே சென்று மறைந்தான்.