கிஷ்கிந்தைப் படலம்

கிட்கிந்தா காண்டம்
சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.
கிஷ்கிந்தைப் படலம்
(கிஷ்கிந்தை நகரில் நடந்த செய்திகளைக் கூறுவதால் இப்பெயர் பெற்றது. குறித்த காலத்தில் சுக்கிரீவன் வராமையால் இராமன் சினந்து இலக்குவனை அனுப்புகிறான். கிஷ்கிந்தைக்கு இலக்குவன் வந்ததைச் சுக்கிரீவனுக்குத் தெரிவிக்கின்றார்கள்; ஆனால் சுக்கிரீவனோ மது மயக்கத்தில் உள்ளான். என்ன செய்வது என்று திகைத்த அங்கதன் அனுமன் ஆகிய இருவரும் தாரையின் கோயிலை அடைந்து அவளிடம் பேசுகின்றார்கள். வாயிலைத் தாளிட்டுக் குரங்குகள் போருக்கு ஆயத்தமான நிலையறிந்த இலக்குவன் கதவுகளை உடைத்தெறிகின்றான். அனுமன் கூறியபடியே தாரை இலக்குவன் முன்னாக வருகிறாள்; மகளிரைப் பார்க்க அஞ்சும் இலக்குவனிடம் தாரை பேசுகின்றாள்; தாரையைக் கண்ட இலக்குவன் தன்னைப் பெற்றத் தாயாரை அப்போது நினைந்து உருக தாரை அவனது சினத்தைத் ஒருவழியாகத் தணிவிக்கின்றாள். பின்னர் அனுமன் இலக்குவனுக்குச் சமாதானம் கூறுகின்றான்; சினம் தணிந்த இலக்குவனும் அனுமனோடு சுக்கிரீவனைக் காணச் செல்லுகின்றான். சுக்கிரீவன் இலக்குவனைப் பார்த்ததும், தான் மதுவுண்டு மயங்கிக் கிடந்தமைக்கு வருந்துகின்றான். அதனால் இலக்குவனது சீற்றமும் தணிகிறது. அவனது மாளிகை சென்ற இலக்குவன் அரியணையில் அமராமல் கல்தரையில் அமர்கின்றான். பின் அனுமனைச் 'சேனையுடன் வருக' என ஏவிய சுக்கிரீவன் இராமனைக் காணச் செல்ல, இராமனும் சுக்கிரீவனது நலன் விசாரிக்கின்றான் .தன் பிழைக்கு வருந்திய சுக்கிரீவனது குற்றம் நீக்கி இராமன் பாராட்டுகிறான். அனுமன் சேனையுடன் வருவான் என இராமனிடம் சொன்ன சுக்கிரீவனையும், அங்கதனையும் அனுப்பிவிட்டு இராமன் தன் தம்பியுடன் தங்கியிருக்கிறான். இது போன்ற செய்திகளை இந்தப் படலத்தில் நாம் காணலாம்)
ஐப்பசித் திங்கள் போய் கார்த்திகை வந்தது. ஆனால், நான்கு மாதங்கள் முடிந்தும் கூட சுக்கிரீவன் தான் சொன்னபடி படைகளுடன் ஸ்ரீ ராமனைக் காண வரவில்லை. ஸ்ரீ ராமர் பொறுத்துப் பார்த்தார். பிறகு அவரது பொறுமை எல்லையைத் தாண்டவே அதீத கோபம் கொண்டு சுக்கிரீவனின் நிலையை அறிய தம்பி லக்ஷ்மணனை அழைத்து," தம்பி லக்ஷ்மணா நான்கு மாதங்கள் கடந்தும் சுக்கிரீவன் சொன்னபடி வரவில்லை. அவன் நம்மால் அரசு பெற்றவன். ஆனால்,இன்றோ அவன், நாம் அவனுக்கு செய்த உதவியையும் மறந்துவிட்டான் நம்மையும் மறந்துவிட்டான். இறுதியில் அவன் தனது தர்மத்தையும் மறந்து விட்டான். அவனிடம் செல், அவன் வாக்குத் தவறினான் என்று அறிந்தால். ரகு குலத்தில் பிறந்த நாம் அவனுக்குத் தக்க பாடம் புகட்டுவோம். இல்லை, அவனது இந்தத் தடுமாற்றத்துக்கு வேறு ஏதேனும் நியாயமான காரணம் இருந்தால் அதனை அறிந்து வந்து என்னிடம் சொல்" என்றார்.
ஸ்ரீ ராமனின் ஆணையை ஏற்று தம்பி லக்ஷ்மணனும் கிஷ்கிந்தைக்கு விரைந்தான். அண்ணனின் நிலையை எண்ணிய அவன் வருந்தும் அதே நேரத்தில் சுக்கிரீவனின் அலட்சியப் போக்கை நினைத்துக் கோபம் கொண்டான். அதனால் அவனது கண்கள் சிவந்தன. அவனது கோபத்தைக் கண்டு கூற்றுவனும் அஞ்சி நடுங்கினான். கோபத்துடன் வந்து கொண்டு இருந்த லக்ஷ்மணனை வானர வீரர்கள் கண்டனர். லக்ஷ்மணனைக் கண்ட மாத்திரத்தில் பயம் கொண்டனர். என்ன செய்வது என்றே தெரியாமல் திகைத்தனர். வானர குலம் அழியப்போகிறதோ என்று பதறினர். உடனே வானர வீரர்களில் சிலர் லக்ஷ்மணன் கோபத்துடன் வரும் செய்தியை அங்கதனுக்குத் தெரிவித்தனர். அவனும் லக்ஷ்மணன் கோபமாக வந்து கொண்டு இருப்பதை கண்டுகொண்டான். உடனே இந்தச் செய்தியை சுக்கிரீவனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து சுக்கிரீவனின் மாளிகைக்கு உடனே புறப்பட்டான் அங்கதன். அப்போது சுக்கிரீவன் தனது மாளிகையில் கள்ளுண்டு மலர் படுக்கையில் அழகிகள் சூழ்ந்து பணிவிடை செய்தபடி சுய நினைவு இன்றி மயங்கிய நிலையில் கிடந்தான்.
எனினும், வானர குலத்தின் நலனுக்காக லக்ஷ்மணன் கோபத்துடன் கிஷ்கிந்தைக்கு வந்து கொண்டு இருக்கும் செய்தியை சுக்கிரீவனிடம் சொன்னான் அங்கதன். ஆனால்,மது மயக்கத்தில் இருந்த சுக்கிரீவனோ அங்கதன் கூறிய செய்தியை காதில் வாங்க வில்லை. அங்கதனோ, பல முறை சுக்கிரீவனிடத்தில் லக்ஷ்மணன் கோபத்துடன் நகருக்குள் வந்து கொண்டு இருக்கும் செய்தியைக் கூறியும் சுக்கிரீவன் தனது சுய நினைவுக்கு வரவில்லை. இனி என்ன செய்ய? என்று கைகளைப் பிசைந்தபடி அங்கதன் புத்தி கூர்மை மிக்க அனுமானிடம் சென்று இவ்விஷயத்தைக் கூறினான். அது கேட்ட அனுமான், மறுமொழியாக அங்கதனிடம்,உனது தாய் தாரை சென்று லக்ஷ்மணனுடன் பேசுதல் இச்சமயம் நலம் தரும் என்று கூற. இருவரும் தாரையின் மாளிகைக்கு சென்றனர்.
வாலியின் மனைவியும், அங்கதனின் தாயுமான தாரையை வணங்கிய அனுமான் கோபத்துடன் லக்ஷ்மணன் கிஷ்கிந்தைக்குள் வந்து கொண்டு இருக்கும் செய்தியையும் அத்துடன் நடந்த விவரங்கள் அனைத்தையும் முழுமையாகக் கூறினான் , அது கேட்ட தாரை சுக்கிரீவனின் செயல்களை நினைத்து வருந்தினாள். அத்துடன் அனுமனைப் பார்த்து,"செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்து விடவேண்டியது. அதே சமயத்தில், அதனால் வரும் கேடுகளை எண்ணியும் புலம்ப வேண்டியது. இது போன்ற செயல்களை எப்போது தான் நிறுத்தப் போகின்றீர்கள்.அதிலும், ஏனைய பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால், செய் நன்றி மறத்தல் பாவத்திலும் பெரிய பாவமாகும்.அதனை எவ்வாறு செய்யத் துணிந்தான் தம்பி சுக்கிரீவன். அவன் வாக்களித்த படி நடந்து இருந்தால் இந்தப் பிரச்சனை எல்லாம் வந்திருக்குமா? செய் நன்றி மறந்தீர்கள் அதனால் சத்தியம் தவறினீர்கள் இப்போது அந்தப் பாவம் தான் லக்ஷ்மணன் ரூபம் எடுத்து வாயில் கதவை தட்டிக் கொண்டு இருக்கிறது. மேலும், அந்த லக்ஷ்மணனைத் தடுக்க யாரால் தான் முடியும்? தேவர்களாலும் அவரது கோபத்துக்கு வேலி போட முடியாதே அப்படி இருக்கும் போது அனுமான் நான் மட்டும் என்ன செய்ய?" என்றாள்.
தாரையின் வார்த்தைகளைக் கேட்ட அனுமான், " தாயே! தாங்கள் வானரர்களின் நலம் கருதி சுக்கிரீவ ராஜனின் அரண்மனை வாயிற்கதவை இளையபெருமாள் உட்புகாதவாறு தடுத்துக் கொண்டு நிற்பீராக! அப்படிச் செய்தால் இளைய பெருமாளின் மனக் கருத்தை நாம் அறியக் கூடும், தர்ம சிந்தனைகளை உடைய அப்பெருமான் தாங்கள் நிற்கும் வழியைக் கண்டவுடன் அதனை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார். அதனால்,உங்களைத் தாண்டி சுக்கிரீவனை அடைய மாட்டார். சுக்கிரீவனும் உயரி பிழைப்பான். மேலும், தான் வந்த காரியத்தையும் வாய் விட்டுச் சொல்வார் இளைய பெருமாள். இதுவே நாம் இப்போது செய்யத் தகுந்த தந்திரம்" என்றான் அனுமன்.
அனுமனின் வார்த்தைகளைக் கேட்ட தாரை, "ஆயிரம் இருந்தாலும் சுக்கிரீவன் நமக்கும் தம்பி போன்றவன் தான் அவனை காப்பாற்ற வேண்டும்" என்று எண்ணிக் கொண்டு உடனே லக்ஷ்மணன் வருவதற்குள் சுக்கிரீவன் இருக்கும் அறையின் வாயில் கதவை அடைந்தாள். அங்கு அனுமான் கூறிய யோசனையின் படி, அந்த வாயிலை அடைத்தது போல நின்று கொண்டாள்.
இது இப்படி இருக்க, லக்ஷ்மணனின் கோபத்தைக் கண்ட வானர சேனைகள். தங்களது பாதுகாப்பை உறுதி செய்யவும். மேற்கொண்டு லக்ஷ்மணனைத் தடுக்கவும், கோட்டையின் வாயிலை உட்புறமாக மூடி.பெரிய, பெரிய பாறைகளை அடுக்கி வைத்து அதன் மூலம் கோட்டையின் கதவுக்கு முட்டுக் கொடுத்தனர்.அத்துடன் சில வானரங்கள் மரங்களையும் ஆங்காங்கே முட்டுக் கொடுத்து வைத்தனர். அதனால், கோட்டையின் வாயில் கதவை அசைக்கக் கூட முடியாமல் போனது. அத்துடன், லக்ஷ்மணனின் ஆற்றலை அறிந்த வானரங்கள். "அப்படியே, இதையும் மீறி லக்ஷ்மணன் கோட்டைக் கதவை உடைத்து வந்து விட்டால் என்ன செய்ய" என்று யோசித்தனர். உடனே அப்படி அவன் உள்ளே நுழைந்தால், அவனை அடிக்க எண்ணி மரங்களையும், பாறைகளையும் தயாரக எடுத்து வைத்துக் கொண்டு கோட்டையின் மதில் சுவர் அருகே நின்று கொண்டனர்.
இவற்றை எல்லாம் கண்ட லக்ஷ்மணன் தனது வலிமையை அறியாத வானரர்களின் அறியாமையை நினைத்து புன்னகைத்து கொண்டான். கோட்டையின் வாயிலை நெருங்கிய அவன் தனது ஒரே பலம் கொண்ட ஒரே மிதியால் கோட்டையின் வாயில் கதவை நொறிக்கினான்.உடனே அந்தப் பெரிய வாயிற் கதவும், அதன் உட்பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பாறைகளும், அந்த வாயிலைச் சார்ந்த பாதுகாப்பாக உள்ள பெரிய மதிலும் அந்தக் கணத்தில் பத்து யோசனை தூரம் சிதறி ஓடி அழிந்தன!
அந்தக் காட்சியைக் கண்ட வானரர்கள் "இன்றோடு நமது குலம் அழிந்தது போலும்" என்று கூச்சலிட்டு ஓடிச் சிதறினார்கள். சிதறிய அந்த வானரக் கூட்டம் காடுகள், மலைகள் என அனைத்து இடத்திற்கும் சென்று மறைந்து கொண்டன. மாவீரன் லக்ஷ்மணன் நகரத்தினுள் வெறிச்சோடிக் கிடக்கும் ராஜ வீதி வழியாக நடந்தான். சுக்கிரீவன் மாளிகைக்குள் சென்று அவன் உறங்கிக் கொண்டு இருக்கும் அறையை அடைந்தான். சுக்கிரீவனைப் பாதுகாக்க தாரை அங்கு ஏற்கனவே வந்து தனது பணிப்பெண்களுடன் நின்றுகொண்டாள். அவள் லக்ஷ்மணன் உள்ளே செல்லாதவாறு அவனது வழியை மறைத்தாள். அத்துடன் மற்ற வானரப் பெண்களும் லக்ஷ்மணனை சூழ்ந்து கொண்டனர். வானர மகளீர் தன்னை சூழ்ந்து இருப்பதைக் கண்டு லக்ஷ்மணன் சற்று நேரம் திகைத்தான். மறுகணமே அவனது திகைப்பு நீங்கியது. ஆனால், இப்போது அவனிடம் கூச்சம் குடி கொண்டு விட்டது. அவன் அந்த வானர மகளீரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இட்டகால் இட்டபடி அப்படியே நின்று விட்டான்.
மாமிமார்கள் கூட்டத்தின் நடுவே வந்தவன் போலக் கூச்சத்துடன் தலை குனிந்து வில்லேந்தி நின்ற லக்ஷ்மணனை ஏறெடுத்துப் பார்க்காத தாரை அதே கூச்சத்துடன் அவனிடம்," பெரும் வீரரே, தாங்கள் இவ்விடம் வந்தது நாங்கள் செய்த பாக்கியம் தான். ஆனால், உமது கோபத்தைக் கண்ட வானரர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களது பயம் நீங்க, இந்த நகரத்தில் மீண்டும் அமைதி நிலவ தாங்கள் வந்த காரணத்தைக் தயை கூர்ந்து தெளிவாகக் கூறுங்கள். எங்களிடம் உள்ளத் தவறுகளை நாங்கள் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்றாள்.
தாரையின் வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன் சற்றே கோபம் தணிந்தான், பின்பு தாரையைக் கண்ட லக்ஷ்மணனுக்குத் தனது தாய்மார்களின் ஞாபகம் வரவே. சற்றே கண்கலங்கிய படி தாரையிடம் ," தாயே, நான்கு மாதங்கள் கழித்து சுக்கிரீவன் ஸ்ரீ ராமனுக்கு உதவ தனது பரிவாரங்களுடன் வருவதாக வாக்களித்தான். ஆனால்,நான்கு மாதங்கள் கடந்தும் சுக்கிரீவன் வரவில்லை. எனது அண்ணன் ஸ்ரீ ராமர், சுக்கிரீவன் இப்படி நடந்து கொண்டதற்கு என்ன காரணம்? என்று விசாரித்து அவனது மன நிலையை அறிந்து வரும்படி பணித்தார்" என்றான்.
தாரை உடனே லக்ஷ்மணனிடம்," லக்ஷ்மணா! நான் சொல்வதைக் கேளுங்கள். சுக்கிரீவன், தான் கொடுத்த வாக்கை மறக்கவில்லை. அரக்கர்களை எதிர்க்கக் கடல் போன்ற சேனையை தாயார் செய்து வருகிறான். உலகத்தில் உள்ள அனைத்து வானர சேனைகளையும் திரட்டிக் கொண்டு வர நாற்புறமும் தூதுவர்களை ஏற்கனவே அனுப்பி உள்ளான். அந்தத் தூதர்களும் பெரும் படையை திரட்டிக் கொண்டு ஓர் இரு நாளில் வந்து விடுவார்கள். மொத்தப் படைகளையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமரை போய் சந்திக்கலாம் என்று நினைத்து இருந்தான். அதுவே அவனது தாமதத்துக்குக் காரணம். நான் சொல்வது அனைத்தும் சத்திய வாக்கு" என்றாள்.
தாரையின் வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணன் சற்றே கொஞ்சம் கோபம் தணிந்தான். அப்போது அனுமன், அவரை நெருங்கி வணங்கினான். அனுமனைக் கண்ட லக்ஷ்மணன் மீண்டும் கோபம் கொண்டான் பிறகு அனுமனிடம் ," அனுமனே! கல்வியறிவு சான்ற நீயும் முன்பு நடந்த நிகழ்ச்சிகளை மறந்துவிட்டாயோ?" என்று கேட்டான். அதற்கு அனுமன்,"எந்தையே! அடியேன் சொல்வதைக் கேட்டருள்வீராக. தாயையும், தந்தையையும், குருவையும், அந்தணர்களையும் கொலை செய்வதால் வரும் பாவத்தை விடப் பெரிய பாவம் செய் நன்றி மறப்பதும், கொடுத்த வாக்கை மீறுவதும். அப்படிப் பட்ட பாவத்தை வானரர்களான நாங்கள் செய்வோமா? ஸ்ரீ ராமபிரான் சுக்கிரீவனுக்கு ராஜ்யத்தை மட்டும் அல்ல, அவனது மனைவியையும் மீட்டுக் கொடுத்தவர் அல்லவா? அவரது உதவியை அவன் மறப்பானோ? அப்படியே ஒரு பேச்சுக்கே, அதை அவன் மறந்தாலும், சுக்கிரீவனுக்கும் ஸ்ரீ ராமருக்கும் நட்பை ஏற்படுத்திய நான் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பேனோ? நடந்ததை தாய் தாரை தங்களிடம் சொன்னார்கள் அல்லவா?அவை அனைத்தும் சத்தியம். வெகு விரைவில் பெரும் வானர சேனையை தூதர்கள் திரட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். எங்களை நம்புங்கள். வானரர்கள் வாக்குத் தவற மாட்டோம்" என்று விளக்கம் அளித்தார்.
அனுமனின் விளக்கங்களைக் கேட்ட லக்ஷ்மணன் மேலும் சினம் தணிந்தான்.' உண்மையில் சுக்கிரீவன் நம்மை ஏமாற்ற நினைக்கவும் இல்லை. அவமதிக்க நினைக்கவும் இல்லை. இராமபிரானின் கட்டளையை மீறும் எண்ணமும் அவனுக்கு இல்லை. அரச செல்வங்களை, வாழ்க்கையில் முதன் முதலாக அவன் அனுபவிப்பதால் அதில் அவன் மயங்கி மறந்த நிகழ்ச்சியே இது!' என்ற முடிவுக்கு வந்தான். அதனால் அவன் கோபம் இன்னும் சற்றுத் தணிந்தது.
ஹனுமானின் வார்த்திகளைக் கேட்டு நம்பிக்கை கொண்ட லக்ஷ்மணன் அண்ணனிடம் விஷயத்தைக் கூற சித்தம் கொண்டான். அப்போது அங்கு வந்த அங்கதன் லக்ஷ்மணனை வணங்கி," பெருமானே! எனக்காக சற்றே பொறுங்கள். நான் எனது தந்தை சுக்கிரீவனிடம் தாங்கள் வந்த விஷயத்தை தெரிவித்து விட்டு வருகிறேன்" என்று கூறி சுக்கிரீவனின் அறைக்குச் சென்றான். தாரையும் தான் வந்த நோக்கம் நல்ல படியாக நிறைவு பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள். பின் அவளும் தோழிகள் தொடர தனது இருப்பிடம் சென்றாள்.
பிறகு சுக்கிரீவனின் அறைக்குச் சென்ற அங்கதன், சுக்கிரீவனை மயக்கத்தில் இருந்து தெளியச் செய்து லக்ஷ்மணன் சினம் கொண்டு வந்ததையும், அவன் வந்த காரணத்தையும், பிறகு கிஷ்கிந்தையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் சுக்கிரீவனிடம் தெரிவித்தான். அது கேட்ட சுக்கிரீவன் அங்கதனை நோக்கி," அங்தா! எனது மகனே நீ ஏன் லக்ஷ்மணன் வந்த போதே என்னை எழுப்பவில்லை?" என்றான்.
அது கேட்ட அங்கதன், " தந்தையே நான் தங்களை எழுப்பப் பெறும் முயற்ச்சிகள் செய்தேன். ஆனால், தாங்களோ கள் குடித்து மயங்கிக் கிடந்தீர்கள்" என்றான். அது கேட்ட சுக்கிரீவன் தன்னைத் தான் நொந்து கொண்டான். தான் செய்த காரியத்தை நினைத்து வெட்கம் அடைந்தான். அனுமான், தாரை, போன்றோர்கள் இல்லாவிட்டால் இந்நேரம் என்ன நடந்து இருக்கும் என்பதை நினைத்த போது சுக்கிரீவன் மனம் பதைபதைத்தது. பின்னர் சுக்கிரீவன் அங்கதனிடம்," நல்ல வேளை, இளைய பெருமாள் லக்ஷ்மணன் இந்த நிலையில் என்னைக் கண்டு இருந்தால் என்ன நினைத்து இருப்பார். இந்நேரம் பற்றி எரிகிற வீட்டை நெய் கொண்டு அணைத்த கதையாக அல்லவா போயிருக்கும்! நஞ்சு, உண்டவரின் உடம்பை மட்டுமே அழிக்கும். மதுவோ குடித்தவரின் உடலோடு உயிரையும் தீக்கதியில் சேர்க்கும்! மது குடிப்பதால் கெடுதி வரும் என்று பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். இப்போது அதனை எனது அனுபவத்தின் மூலமாக நான் நேரிலேயே உணர்ந்து கொண்டேன். இனி எனது வாழ்க்கையில் ஒரு நாளும், நான் கள்ளை எனது கைகள் கொண்டு தொடமாட்டேன். இது சத்தியம்" என்றான்.
பிறகு மீண்டும் அங்கதனைப் பார்த்து," மகனே! லக்ஷ்மனணனை நானே சென்று வரவேற்கிறேன்" என்று கூறி உடனே புறப்பட்டான்.
லக்ஷ்மணன் தங்களை அழிக்க வரவில்லை என்பதை உணர்ந்த வானரங்கள் மீண்டும் கிஷ்கிந்தை நகரத்துக்குத் திரும்பி மகிழ்ந்தன. அத்துடன் லக்ஷ்மணனை வரவேற்கவும் ஏற்பாடுகள் நடந்தது.அவனுக்கு உபசாரம் செய்ய சந்தனக் குழம்பை வீதிகளில் தெளித்தார்கள். அகிற் புகையை பரப்பினார்கள். தங்கள் வீட்டு வாயில்களை தோரணம் கொண்டு அழகு படுத்தினார்கள். மறுபுறம் சுக்கிரீவனும் பூரண கும்ப மரியாதை அளித்து லக்ஷ்மணனை அன்புடன் வரவேற்றான். அச்சமயம் பேரிகைகள் முழங்கின. முனிவர்கள் வேதங்களைச் சொன்னார்கள்.
சுக்கிரீவனை முதலில் கண்ட லக்ஷ்மணன் மிகுந்த கோபம் கொண்டான். ஆயினும் தரும சிந்தனையால் அந்தக் கோபத்தை அவனே தணித்துக் கொண்டு அமைதியாக நின்று இருந்தான். அச்சமயம் சுக்கிரீவன் லக்ஷ்மணனை வரவேற்று ஆரத் தழுவிக் கொண்டான். பிறகு தனது பரிவாரங்கள் பின் தொடர சுக்கிரீவன் லக்ஷ்மணனை அழைத்துக் கொண்டு அரண்மனை மாளிகைக்குள் சென்றான். அப்போது லக்ஷ்மணனிடம் சுக்கிரீவன் அங்கே தயாராகப் போடப் பட்டு இருந்த தங்க சிம்மாசனத்தில் அமரும் படி வேண்டினான். உடனே அதற்கு லக்ஷ்மணன்," ஸ்ரீ ராமன் தரையிலே அமர்ந்திருக்க, அவரது தம்பியாகிய நான் இந்த சிம்மாசனத்தில் அமர்வது எனக்குத் தகுதியோ" என்றான். அவ்வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவன் மிகவும் வருத்தம் அடைந்தான். அந்த வருத்தத்தால் அவனது கண்கள் கலங்கியது. பிறகு, லக்ஷ்மணன் தரையில் அமர்ந்தான். அக்காட்சியைக் கண்ட சபையில் இருந்த அனைவரும் லக்ஷ்மணன், அண்ணன் ராமன் மீது வைத்து இருக்கும் பக்தியை நினைத்து மெய் சிலிர்த்தனர், என்றாலும் அதில் லக்ஷ்மணனின் நிலை கண்டு வருந்தியவர்கள் பலர்.
பிற்பாடு சுக்கிரீவன் மெல்லப் பேசத் தொடங்கினான்." ஐயனே! வராத விருந்தினராகத் தாங்கள் இங்கு வந்து உள்ளீர்கள். எனவே, தாங்கள் விதிமுறைப்படி நீராடி, எங்கள் இல்லத்தில் இன்சுவை உணவை விருந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்வீரானால், நாங்கள் எல்லோரும் இப்போது நல் வாழ்க்கை பெற்றவர்களாவோம்!" என்றான்.
"சூரியமைந்தனே! உலகத்தில் யாருமே விருந்துண்ண விரும்புவார்கள். எனினும், துன்பத்தால் அவர்கள் வருந்திக் கொண்டு இருக்கையில் தேவ லோகத்தில் இருந்து அமிர்தத்தையே கொண்டு வந்து கொடுத்தாலும், அவர்களால் அதனை ஒருபோதும் உண்ண இயலாது. அதனால் துன்பமும், பழியும் எமது வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்க, நீ தரும் இன்சுவை உணவை எம்மால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? நீ சீதா பிராட்டியைத் தேடிக் கண்டு பிடித்துக் கொடுத்தாய் எனில் நாங்கள் அமிர்தத்தையே உண்ட பலனை அடைவோம்.எங்களுக்கு, வேறு துன்பங்களும் இல்லாமல் போகும். அது மட்டும் அல்ல, அண்ணனைக் காண நான் காய், கனிகளை வனத்தில் தேடி எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டுச் செல்ல வேண்டும்" என்றான்.
லக்ஷ்மணன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுக்கிரீவன் மீண்டும் தான் செய்த தவறை நினைத்து மிகவும் வருந்தினான். அந்த வருத்தத்துடன் லக்ஷ்மணனைக் கண்டு," மனு வம்சத்தில் பிறந்த இராமபிரான் துன்பத்தில் காலத்தைக் கடத்திய வேளையில் நாங்கள் இன்புற்று இருந்தது எவ்வளவு பெரிய தவறு என்று என்னை எனது மனசாட்சி கொன்று வருகிறது. அதற்குப் பரிகாரமாக விரைவில் ஒரு வானர சேனையை தாயார் செய்து இராமபிரானைக் காண நான் விரைவில் வருவேன்" என்றான்.
பிறகு அனுமனை நோக்கி," நீதி மார்கத்தில் தலை சிறந்தவனே! நமது தூதுவர்களால் இனி வரும் வானர சேனையை அழைத்துக் கொண்டு இராமபிரானிடத்தில் வருவாயாக. நான், இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஸ்ரீ ராமரை உடனே சென்று சந்திப்பது தான் முறை. அதனால் நான் முன்னே செல்கிறேன். ஆனால், நீ சேனைகள் வரும் வரையில் இங்கேயே தங்கி அவர்களை வழிகாட்டி அழைத்து வா " என்றான்.
பிறகு அனுமான் சுக்கிரீவனின் கட்டளையை ஏற்றப் பிறகு. சுக்கிரீவன் லக்ஷ்மணனுடன் புறப்பட்டு ஸ்ரீ ராமனின் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இராமனைக் கண்ட சுக்கிரீவன், உடனே அவரது கால்களில் விழுந்து பணிந்தான். ஆனால், இராமபிரானோ அவனிடம் கோபம் கொள்ளாமல் அவனை அன்புடன் அணைத்துக் கொண்டார். பிறகு,தனது அருகிலேயே அமரச் செய்தார். பிறகு அவனிடம் நலம் விசாரித்தார். சுக்கிரவன் அப்போது தான் காலம் தாழ்த்திய செயலை நினைத்து வருத்தம் தெரிவித்தான். ஆனால், இராமபிரானோ சுக்கிரீவனிடத்தில் முன்னைக் காட்டிலும் அன்பாக நடந்து கொண்டார். மேலும் இராமபிரான், சுக்கிரீவனிடத்தில் ," சுக்கிரீவா! நீயும் பரதனைப் போல எனக்கு ஒரு தம்பி தான். அதனால் உனது செயல் மன்னிக்கக் கூடியதே. நடந்தவற்றை நினைத்து வருத்தப்படமால், இனி நடக்கப்போவதைப் பார்ப்போம்" என்றார்.
அதன் பின் மீண்டும் சுக்ரீவனைப் பார்த்து," சுக்கிரீவா! அனுமன் எங்கே?" என்றார்.
அதற்கு சுக்கிரீவன், ஸ்ரீ ராமரிடத்தில்," அனுமன் கடல் போன்ற மாபெரும் சேனையுடன் வருவான்! ஆயிரம் தூதுவர்கள் வானரச் சேனைகளைத் திரட்டிக் கொண்டு வருவதற்கு உலகெங்கும் விரைந்து சென்றார்கள். இதுகாறும் அச்சேனைகள் வந்து சேரவில்லை. அதனால் அவைகளைத் திரட்டிக் கொண்டு வருவதற்காக அனுமன் கிஷ்கிந்தையில் காத்து நிற்கிறான். அச்சேனைகள் வருவதர்க்குக் குறித்த நாளும் நெருங்கிவிட்டது. இன்றைக்கோ அல்லது நாளைக்கோ அந்தச் சேனைகள் முழுவதும் வந்துவிடும்.அவற்றை அழைத்துக் கொண்டு அனுமன் இங்கே வருவான்! இப்போது என்னுடன் ஒன்பதாயிரங்கோடிக் கணக்கான சேனைகள் வந்து இருக்கிறது.இனி வரவேண்டிய அந்தப் பெரிய சேனையும் நாளைக் கண்டிப்பாக வந்துவிடும்.ஆதலால், அச்சேனையும் வந்த பிறகு செய்ய வேண்டிய காரியங்களைக் குறித்துப் பேசுதல் வேண்டும்" என்றான் சுக்கிரீவன்.
சுக்கிரீவனின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமர் இனி சீதையை மீட்டு விடலாம் என்று ஆறுதல் அடைந்தார். சுக்கிரீவனைப் பாராட்டினார். அத்துடன் அவனைப் பார்த்து," சுக்கிரீவா! இன்றைய பகல் பொழுது கழிந்து விட்டது. அதனால், நீ இன்று சென்று நாளைய தினத்தில் படைகளுடன் வருவாயாக" என்று கூறி அவனுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். பிறகு அங்கதனும் இராமபிரானை வணங்கி விடை பெற்றுக் கொண்டான். பிறகு இராமபிரான் லக்ஷ்மணனிடத்தில் கிஷ்கிந்தையில் நடந்த அனைத்து விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார். அப்போது லக்ஷ்மணனின் வீரம் கேள்விப்பட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.