இராமனுக்கு அரசுரிமை மறுக்கப்பட்டு கானகம் சென்று வாழும்நிலை ஏற்பட்டது. இக்கானக வாழ்வைக் குறித்து எழுவதனால் இது ஆரணிய காண்டம் எனப்பட்டது. ஆரணியம் என்றால் கானகம் (வனம், காடு) எனப் பொருள்படும். ஆரணிய காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டுள்ளது.
ஓதுங்கால், அப் பல் பொருள் முற்றுற்று, ஒருவாத
வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடை வீயாய்;
மாதங்கம் தின்று உய்ந்து இவ் வனத்தின்தலை வாழும்
பூதம் கொல்லப் பொன்றுதிஎன்னின், பொருள் உண்டோ ?
கேட்டார் கொள்ளார்; கண்டவர் பேணார்; கிளர் போரில்
தோட்டார் கோதைச் சோர் குழல்தன்னைத் துவளாமல்
மீட்டான் என்னும் பேர் இசை கொள்ளான், செரு வெல்ல
மாட்டான், மாண்டான்" என்றலின்மேலும் வசை உண்டோ ?
பூதத்தின் கையொடு வாயைத் துணிப்பதே கருமம் எனல்
தணிக்கும் தன்மைத்து அன்று எனின், இன்று இத் தகை வாளால்,-
கணிக்கும் தன்மைத்து அன்று, விடத்தின் கனல் பூதம்-
பிணிக்கும் கையும், பெய் பில வாயும் பிழையாமல்
துணிக்கும் வண்ணம் காணுதி; துன்பம் துற என்றான்.
என்னா முன்னே, செல்லும் இளங்கோ, இறையோற்கு
முன்னே செல்லும்; முன்னவன், அன்னானினும் முந்த,
தன் நேர் இலாத தம்பி தடுப்பான்; பிறர் இல்லை
அன்னோ! கண்டார் உம்பரும் வெய்துற்று அழுதாரால்.
கவந்தனை எதிர்த்து இராம இலக்குவர் போர் புரிதல்
இனையர் ஆகிய இருவரும், முகத்து இரு கண்போல்,
கனையும் வார் கழல் வீரர் சென்று அணுகலும், கவந்தன்,
வினையின் எய்திய வீரர் நீர் யாவர்கொல்? என்ன,
நினையும் நெஞ்சினர், இமைத்திலர்; உருத்தனர், நின்றார்.
அழிந்துளார் அலர்; இகழ்ந்தனர் என்னை என்று அழன்றான்;
பொழிந்த கோபத்தன்; புதுப் பொறி மயிர்ப்புறம் பொடிப்ப,
விழுங்குவேன் என வீங்கலும், விண் உற, வீரர்,
எழுந்த தோள்களை வாள்களால் அரிந்தனர், இட்டார்.
கைகள் அற்று வெங் குருதி ஆறு ஒழுகிய கவந்தன்
மெய்யின், மேற்கோடு கிழக்கு உறுப் பெரு நதி விரவும்,
சைய மா நெடுந் தாழ் வரைத் தனி வரைதன்னோடு
ஐயம் நீங்கிய, பேர் எழில் உவமையன் ஆனான்.
கவந்தன் முன்னை உருப் பெற்று, விண் உற நிமிர்தல்
ஆளும் நாயகன் அம் கையின் தீண்டிய அதனால்,
மூளும் சாபத்தின் முந்திய தீவினை முடித்தான்;
தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா
நீளம் நீங்கிய பறவையின், விண் உற நிமிர்ந்தான்.
விண்ணில் நின்றவன், விரிஞ்சனே முதலினர் யார்க்கும்
கண்ணில் நின்றவன் இவன் எனக் கருத்துற உணர்ந்தான்;
எண் இல் அன்னவன் குணங்களை, வாய் திறந்து, இசைத்தான்;
புண்ணியம் பயக்கின்றுழி அரியது எப் பொருளே?
இராமனைத் துதித்தல்
ஈன்றவனோ எப் பொருளும்? எல்லை தீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர் தவத்தின் தனிப் பயனோ?
மூன்று கவடு ஆய் முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அரு வினையேன் சாபத் துயர் துடைத்தாய்!
மூலமே இல்லா முதல்வனே! நீ முயலும்
கோலமோ, யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால்;
ஆலமோ? ஆலின் அடையோ? அடைக் கிடந்த
பாலனோ? வேலைப் பரப்போ? பகராயே!
காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி,
பூண்பாய்போல் நிற்றியால், யாது ஒன்றும் பூணாதாய்,
மாண்பால் உலகை வயிற்று ஒளித்து வாங்குதியால்;
ஆண்பாலோ? பெண்பாலோ? அப்பாலோ? எப்பாலோ?
ஆதிப் பிரமனும் நீ; ஆதிப் பரமனும் நீ!
ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ!
"சோதிச் சுடர்ப் பிழம்பு நீ!" என்று சொல்லுகின்ற
வேதம் உரைசெய்தால், வெள்காரோ வேறு உள்ளார்?
எண் திசையும் திண் சுவரா, ஏழ் ஏழ் நிலை வகுத்த
அண்டப் பெருங் கோயிற்கு எல்லாம் அழகுடைய
மண்டலங்கள் மூன்றின்மேல், என்றும் மலராத
புண்டரிக மோட்டின் பொகுட்டே புரை; அம்மா!
மண்பால்-அமரர் வரம்பு ஆரும் காணாத
எண்பால் உயர்ந்த, எரி ஓங்கும் நல் வேள்வி
உண்பாய் நீ; ஊட்டுவாய் நீ; இரண்டும் ஒக்கின்ற
பண்பு ஆர் அறிவார்? பகராய், பரமேட்டி!
நிற்கும் நெடு நீத்த நீரில் முளைத்தெழுந்த
மொக்குளே போல, முரண் இற்ற அண்டங்கள்
ஒக்க உயர்ந்து, உன்னுளே தோன்றி ஒளிக்கின்ற
பக்கம் அறிதற்கு எளிதோ? பரம்பரனே!
நின் செய்கை கண்டு நினைந்தனவோ, நீள் மறைகள்?
உன் செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ?
என் செய்தேன் முன்னம்? மறம் செய்கை எய்தினார்-
பின் செல்வது இல்லாப் பெருஞ் செல்வம் நீ தந்தாய்!
மாயப் பிறவி மயல் நீக்கி மாசு இலாக்
காயத்தை நல்கி, துயரின் கரை ஏற்றி,
பேய் ஒத்தேன் பேதைப் பிணக்கு அறுத்த எம் பெருமான்!
நாய் ஒத்தேன்; என்ன நலன் இழைத்தேன் நான்? என்றான்.
எதிரில் நின்றவனை இலக்குவன் நீ யார் என வினவல்
என்று, ஆங்கு, இனிது இயம்பி, இன்று அறியக் கூறுவெனேல்,
ஒன்றாது, தேவர் உறுதிக்கு என உன்னா,
தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனைய தன்மையன் ஆய்,
நின்றானைக் கண்டான்,-நெறி நின்றார் நேர் நின்றான்.
பாராய் இளையவனே! பட்ட இவன், வேறே ஓர்
பேராளன் தானாய், ஒளி ஓங்கும் பெற்றியனாய்,
நேர், ஆகாயத்தின் மிசை நிற்கின்றான்; நீ இவனை
ஆராய்! என, அவனும், ஆர்கொலோ நீ? என்றான்.
தனுவின் வரலாறு
சந்தப் பூண் அலங்கல் வீர! தனு எனும் நாமத்தேன்; ஓர்
கந்தர்ப்பன்; சாபத்தால், இக் கடைப்படு பிறவி கண்டேன்;
வந்துற்றீர் மலர்க்கை தீண்ட, முன்னுடை வடிவம் பெற்றேன்,
எந்தைக்கும் எந்தை நீர்; யான் இசைப்பது கேண்மின் என்றான்.
தனு சவரியை அடைந்து சுக்கிரீவன் நட்பைப் பெறுமாறு கூறல்
கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்
இணை இலாள்தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்;
புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது; அன்னதேபோல்,
துணை இலாதவருக்கு இன்னா, பகைப் புலம் தொலைத்து நீக்கல்.
பழிப்பு அறு நிலைமை ஆண்மை பகர்வது என்? பதும பீடத்து
உழிப் பெருந்தகைமை சான்ற அந்தணன் உயிர்த்த எல்லாம்
அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும், அறிதிர் அன்றே,
ஒழிப்ப அருந் திறல் பல் பூத கணத்தொடும் உறையும் உண்மை?
ஆயது செய்கை என்பது, அறத் துறை நெறியின் எண்ணி,
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்ந்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி.
கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின் ஈண்ட,
வெதிர் பொரும் தோளினானை நாடுதல் விழுமிது என்றான்,
அதிர் கழல் வீரர்தாமும், அன்னதே அமைவது ஆனார்.
மதங்கன் இருக்கை சேர்தல்
ஆனபின், தொழுது வாழ்த்தி, அந்தரத்து அவனும் போனான்;
மானவக் குமரர் தாமும் அத் திசை வழிக் கொண்டு ஏகி,
கானமும் மலையும் நீங்கி, கங்குல் வந்து இறுக்கும் காலை,
யானையின் இருக்கை அன்ன, மதங்கனது இருக்கை சேர்ந்தார்.