
கங்கைப் படலத்தின் படல்கள்

அயோத்தியா காண்டம்
இராமன் அயோத்திக்கு அரசனாக முடிசூடத் தேர்ந்தெடுக்கப்படுவதிலிருந்து அயோத்தியா காண்டம் தொடங்குகிறது. இதனால் இதற்கு அயோத்தியா காண்டம் என்று பெயர். அயோத்தியா காண்டம் பதின்மூன்று படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
கங்கை காண் படலம்
பரதன் கங்கைக் கரையை அடைதல்
பூவிரி பொலன் கழல், பொரு இல் தானையான்,
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇ,
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட, கங்கை எய்தினான்.
கங்கையை சென்று சேர்ந்த சேனையின் மிகுதியும் சிறப்பும்
எண்ண அருஞ் சுரும்பு தம் இனத்துக்கு அல்லது,
கண் அகன் பெரும் புனல் கங்கை எங்கணும்
அண்ணல் வெங் கரி மதத்து அருவி பாய்தலால்,
உண்ணவும், குடையவும், உரித்து அன்று ஆயதே.
அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்,
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே.
பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையே மடுத்தது, அக் கங்கை வெள்ளமே.
கான் தலை நண்ணிய காளைபின் படர்
தோன்றலை, அவ் வழித் தொடர்ந்து சென்றன-
ஆன்றவர் உணர்த்திய அக்குரோணிகள்
மூன்று பத்து ஆயிரத்து இரட்டி முற்றுமே.
பரதன் சேனையுடன் வருதல் கண்ட குகனின் ஐயமும் சீற்றமும்
அப் படை கங்கையை அடைந்த ஆயிடை,
'துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை
ஒப்புடை அண்ணலோடு உடற்றவே கொலாம்
இப் படை எடுத்தது?' என்று, எடுத்த சீற்றத்தான்.
குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான் -
நகை மிக, கண்கள் தீ நாற, நாசியில்
புகை உற, குனிப்புறும் புருவப் போர்விலான்.
மை உற உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன் தான்
ஐ-ஐந் நூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான்.
கட்டிய சுரிகையன், கடித்த வாயினன்,
வெட்டிய மொழியினன், விழிக்கும் தீயினன்,
கொட்டிய துடியினன், குறிக்கும் கொம்பினன்,
'கிட்டியது அமர்' எனக் கிளரும் தோளினான்.
'எலி எலாம் இப் படை; அரவம், யான்' என,
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான் -
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே.
மருங்கு அடை தென் கரை வந்து தோன்றினான் -
ஒருங்கு அடை நெடும் படை ஒல்லென் ஆர்ப்பினோடு
அருங் கடையுகம் தனில், அசனி மா மழை
கருங் கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே.
தன் சேனைக்கு குகன் இட்ட கட்டளை
தோன்றிய புளிஞரை நோக்கி, 'சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென், என் உயிர்த் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம்' என்றான்.
'துடி எறி; நெறிகளும், துறையும், சுற்றுற
ஒடியெறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி, பட' எனா, பெயர்த்தும் கூறுவான்:
குகனின் வீர உரை
'அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே!
செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், "நாய்க்குகன்" என்று, எனை ஓதாரோ?
'ஆழ நெடுந் திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?
"தோழமை" என்று, அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
"ஏழைமை வேடன் இறந்திலன்" என்று எனை ஏசாரோ?
"முன்னவன்" என்று நினைந்திலன்; 'மொய் புலி அன்னான் ஓர்
பின்னவன் நின்றனன்" என்றிலன்; அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது? இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில், வேடர் விடும் சரம் வாயாவோ?
'பாவமும் நின்ற பெரும் பழியும், பகை நண்போடும்,
ஏவமும், என்பவை மண் உலகு ஆள்பவர் எண்ணாரோ?
ஆவது போக, என் ஆர் உயிர்த் தோழமை தந்தான்மேல்
போவது, சேனையும் ஆர் உயிரும் கொடு போய் அன்றோ?
'அருந் தவம் என் துணை ஆள, இவன் புவி ஆள்வானோ?
மருந்துஎனின் அன்று உயிர், வண் புகழ் கொண்டு, பின் மாயேனோ?
பொருந்திய கேண்மை உகந்தவர்தம்மொடு போகாதே
இருந்தது நன்று, கழிக்குவென், என் கடன் இன்றோடே.
'தும்பியும் மாவும் மிடைந்த பெரும் படை சூழ்வு ஆரும்,
வம்பு இயல் தார் இவர் வாள் வலி கங்கை கடந்து அன்றோ?
வெம்பிய வேடர் உளீர்! துறை ஓடம் விலக்கீரோ?
நம்பி முன்னே, இனி நாம் உயிர் மாய்வது நன்று அன்றோ?
'போன படைத் தலை வீரர்தமக்கு இரை போதா இச்
சேனை கிடக்கிடு; தேவர் வரின், சிலை மா மேகம்
சோனை பட, குடர் சூறை பட, சுடர் வாளோடும்
தானை பட, தனி யானை பட, திரள் சாயேனோ?
'நின்ற கொடைக் கை என் அன்பன் உடுக்க நெடுஞ் சீரை
அன்று கொடுத்தவள் மைந்தர் பலத்தை, என் அம்பாலே
கொன்று குவித்த நிணம்கொள் பிணக் குவை கொண்டு ஓடி,
துன்று திரைக் கடல், கங்கை மடுத்து இடை தூராதோ?
'"ஆடு கொடிப் படை சாடி, அறத்தவரே ஆள
வேடு கொடுத்தது, பார்" எனும் இப் புகழ் மேவீரோ?
நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி, எடுத்தது காணீரோ?
'"மா முனிவர்க்கு உறவாகி வனத்திடையே வாழும்
கோ முனியத் தகும்" என்று, மனத்து இறை கொள்ளாதே,
ஏ முனை உற்றிடில், ஏழு கடற் படை என்றாலும்,
ஆ முனையின் சிறு கூழ் என இப்பொழுது ஆகாதோ?
என்பன சொல்லி, இரும்பு அன மேனியர் ஏனோர்முன்,
வன் பணை வில்லினன், மல் உயர் தோளினன், வாள் வீரற்கு
அன்பனும், நின்றனன்; நின்றது கண்டு, அரிஏறு அன்ன
முன்பனில் வந்து, மொழிந்தனன், மூரிய தேர் வல்லான்:
குகனைப் பற்றி சுமந்திரன் பரதனுக்கு உரைத்தல்
'கங்கை இரு கரை உடையான்; கணக்கு இறந்த நாவாயான்;
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர்த் துணைவன்; உயர் தோளான்;
வெங்கரியின் ஏறு அனையான்; வில் பிடித்த வேலையினான்;
கொங்கு அலரும் நறுந் தண் தார்க் குகன் என்னும் குறி உடையான்.
'கல் காணும் திண்மையான்; கரை காணாக் காதலான்;
அற்கு ஆணி கண்டனைய அழகு அமைந்த மேனியான்;-
மல் காணும் திரு நெடுந் தோள் மழை காணும் மணி நிறத்தாய்!-
'நிற் காணும் உள்ளத்தான், நெறி எதிர் நின்றனன்' என்றான்.
வந்து எதிரே விழுந்தவனும் வணங்கினான்; வணங்காமுன்,
சந்த நெடுந் திரள் புயத்தான் தழுவினான்; தழுவியபின்,
இந்த இடர் வடிவுடன் நீ எங்கு எழுந்தாய்-இமையோர் தம்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியாய்!
ஏறினர் இளவலோடு, இரங்கு நெஞ்சு கொண்டு
ஊறிய தாயரும் உரிய சுற்றமும்;
பேறு உள பெரு நதி நீங்கி, பெட்பொடும்
கூறு தென் கரையிடைக் குழீஇய போதிலே.
தன் அன தம்பியும், தாயர் மூவரும்,
சொன்ன தேர் வலவனும், தூய தோழனும்,
துன்னியர் ஏறலும், துழா துடுப்பு எனும்
நல்நயக் காலினால் நடத்தல் மேயினான்.