இலங்கை காண் படலத்தின் பாடல்கள்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இலங்கை காண் படலம்
(இராமபிரான் சுவேல மலையின் உச்சி மீது, தன் பரிவாரங்களுடன் ஏறிநின்று, இலங்கை மாநகரைக் கண்ணுறுகின்றான். அம்மாநகரின் அழகும் பொலிவும், வளமும், வாழ்வும் பெருமானின் நெஞ்சை வியக்க வைக்கின்றன. வியப்பில் எழுந்த உரைகள், லக்ஷ்மணனுக்கு கூறுவதாய் அமைந்து அழகிய வர்ணனைக் கவிதைகளாய் இப்படலத்தில் வடிவம் பெற்றுள்ளன)
சுகசாரணர் வேவு பார்த்து வந்து சொன்ன செய்திகளைக் கேட்ட இராவணன், சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். பின்பு நீண்ட பெருமூச்சுடன் தனக்கு முன்னாள் நின்று கொண்டு இருந்த சேனைக் காவலனை நோக்கினான். " சேனைக் காவலனே! அந்த மனிதர்கள் கடலில் அணை கட்டி விரைவில் நமது ஊருக்கு வந்து சேர்ந்தார்கள். இதனை நினைக்கும் போது, அவர்களுடன் போர் செய்வதன்றி, நமக்கு வேறாக எண்ணிச் செய்யத் தக்க ஒரு செயல் உண்டோ?" என்று கேட்டான்.
"மன்னர் மன்னவா! நாம் சீதையை இராமன்பால் விடுவதற்கில்லை. அப்படிச் செய்தால் நம்மைக் கோழைகள் என்பர் உலகத்தவர். அதுபோல, ஒரு வேளை பகைவர்கள் சமாதானம் செய்ய முற்பட்டாலும் அதற்கும் உமது தம்பி ஒத்துக் கொள்ள மாட்டார். மாறாக, அந்தப் பகைவர்களைத் தூண்டி விடுவார். அப்போது தானே, அவருக்கு இலங்கையின் ராஜ்ஜியம் கிடைக்கும். அதனால், நாம் இனி செய்யவேண்டியவற்றை மிகவும் ஆலோசித்துச் செய்வது நல்லது. நமது கடற் கரையின் எல்லையில் பகைவர்கள் காலடி எடுத்து வைத்து உள்ளார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்த நாளிலேயே அவர்களைக் கொன்று போட்டு இருக்க வேண்டும். ஆனால், நாமோ அதனைச் செய்யாமல் இன்று வரையில் ஆலோசனை செய்து காலத்தைக் கழிப்பதால் என்ன பயன்? எனினும், நமது இடம் தேடியே பகைவர்கள் வந்து இருப்பதிலும், ஒரு நன்மை உண்டு. நாம் வீணாக எதிரிகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. ஒட்டு மொத்தமாக, இலங்கைக்கு வந்த நம் பகைவர்களை இலங்கையிலேயே வைத்து முடித்து விடலாம். அந்தக் காட்டுக் குரங்குகளால் நம்மை சமாளிக்கத் தான் முடியுமோ? நமது அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளமாகும். நமது சேனைகள் முழுவதையும் அழிக்க, மும்மூர்த்திகளே சித்தம் கொண்டாலும், அதற்கு அவர்களும் கூட நூறு பிரளயங்களை ஏற்படுத்த வேண்டும். அப்போதும் கூட நாம் அழிய மாட்டோம். அப்படி இருக்க வானர சேனை எம்மாத்திரம்? மேலும், இலங்கேஸ்வரா உமக்கு இராமனைப் போன்ற மனிதர்களையும், காட்டுக் குரங்குகளையும் ஜெயிக்க சேனை தான் தேவையோ? நீர் போய் உமது பத்து தலைகளையும் வழிய இருபது தோள்களையும் அவர்கள் முன் காட்டி நின்றாலே போதும். அந்த வானர சேனை சிங்கத்தைக் கண்ட நாய்கள் போல சிதறி ஓடும்" என்று இராவணன் மகிழும் படி எடுத்து உரைத்தான் சேனைக் காவலன்.
அப்போது மாலியவான் குறுக்கிட்டு இராவணனை நோக்கி," இராவணா! உனக்கு எது நல்லதோ, அதைத் தான் உனக்கு இப்போது சொல்லப் போகிறேன். நம்மிடம் போர் செய்ய வந்துள்ளவர் மனிதர்கள் அல்ல, நான் கேள்விப்பட்டவரையில் அவர்கள் கடவுளே. ஆம், இராமனாக வந்து இருப்பது நமது குலத்தின் விரோதியான சாக்ஷாத் அந்த விஷ்ணு. லக்ஷ்மணனாக உடன் வந்து இருப்பது அந்த விஷ்ணுவின் பாம்புப் படுக்கையான ஆதிசேஷன். மேலும், இலங்கையை எரித்த அந்த அனுமான் சிவனின் ருத்திர அவதாரம். வாலியின் குமாரனான அங்கதனை இந்திரனின் அவதாரம் என்கின்றனர். நீலனை அக்கினி தேவனின் அவதாரம் என்கிறார்கள். இவை யாவும் என்னக்குக் கிடைத்த நம்பகமான செய்திகள் தான். மேலும், அந்த இராமனின் மனைவி சீதை லக்ஷ்மியின் அவதாரம். அவன் நம்மை வேருடன் அழிக்கும் நோக்கத்தில் தான் கானகம் வந்து உள்ளான். இதுவும் கூட தேவர்களின் திட்டம் தானாம்! அதனால், எல்லாமே பேசி வைத்தபடி ஒரு திட்டத்தின் படி தான் நடக்கிறது. நம்மை சுற்றி சதி வலை பின்னப் பட்டு வருகிறது. இராவணா! விழித்துக் கொள், திருமாலால் ஏற்கனவே நமது அரக்கர் குலம் பல இன்னல்களை அனுபவித்து அழிந்து உள்ளது. அதுபோல, இப்போது உன்னை அழிக்கத் தான் அந்தத் திருமால் மானிட ரூபம் எடுத்து வந்து உள்ளான். மொத்தத்தில், நாம் இப்போது சந்திக்க இருக்கும் பகைவர்கள் சாமானியர்கள் இல்லை. அதனால், அரக்கர் குலம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் இப்போதே சீதையை தக்க மரியாதையுடன் இராமனிடம் கொண்டு போய் விட்டு விடு " என்று சொன்னான்.
மாலியவானின் வார்த்தைகளைக் கேட்ட இராவணன் கேலி தோன்றச் சிரித்தான். அவன் பின்பு , மாலியவானை எள்ளல் தோன்றப் பார்த்து," நீ பலவாறு அந்த இராமனைப் பற்றிச் சொன்னாய். அவைகள் எல்லாம் இருக்கட்டும். அந்தக் காட்டுக் குரங்குகளையோ, அன்றாட என்னைக் கண்டு நடுங்கும் அந்தக் கோழை தேவர்களின் அவதாரம் என்றாய். அதையும் கூட நான் பொறுத்துக் கொள்வேன். ஆனால், அந்த இராமனின் கைகளால் நான் சாவேன் என்பது போல சொல்கிறாயே! நன்றாக உள்ளது நீ சொல்வது! மாய வித்தைகளில் கை தேர்ந்த நீயெல்லாம் அரக்கர்களில் முத்தவன் என்று சொல்லாதே! போ!... அந்தப் பேதை மனிதர்களுடன் குரங்குகளும், கரடிகளும் மட்டும் அல்ல இன்னும் காட்டில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளும் சேரட்டும். ஆனால், அவை அனைத்தும் இந்த இராவணன் முன்னாலும் எனது அரக்கர் சேனையின் முன்னாலும், எனது வர தவங்கள் மற்றும் ஆயுதங்களின் முன்னாலும் எம்மாத்திரம்? ஒருவேளை, உனக்கு அப்படியும் பயமாக இருந்தால், நீயும் அந்த விபீஷணனைப் போல இராமனின் திருவடியை வருடி நில்" என்று கோபத்துடன் கூறி முடித்தான்.
இங்கு சபையில் அரக்கர்களுக்குள் இப்படி ஒரு விவாதம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் இலங்கையில் சீதை இருக்கிறாள் என்ற உணர்வால் நெஞ்சத்திலே மிகுந்த காதல் தூண்டுவதனால், அழகிய அந்த நகரம் முழுவதையும் காண வேண்டும் என்று விரும்பிய இராமன். தனது முக்கியப் பரிவாரங்களுடன் சுவேல மலையின் மீது ஏறி அதன் உச்சிக்குச் சென்றார். அவர் அவ்வாறு நடந்து ஏறிய விதம் சிங்கக் கூட்டத்தில், சிங்களுக்கு எல்லாம் தலைமையில் உள்ள இராஜ சிங்கம் வெற்றி நடை போட்டுப் போவது போல இருந்தது.
அவ்வாறு சுவேல மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்த இராமபிரான், தமது தாமரைக் கண் கொண்டு இலங்கையின் அழகை நன்றாகப் பார்த்தார். மேலும், மேலும் அவர் இலங்கையின் நகரத்தை கண் கொட்டாமல் பார்த்ததால் அதன் அழகில் மிகவும் பூரித்துப் போனார். பிறகு அந்த அழகுக் காட்சிகளை லக்ஷ்மணனிடம் காட்டி மகிழ்ந்தார். அவ்வாறு அவர் மகிழும் பொழுது, லக்ஷ்மணனிடம்," லக்ஷ்மணா! புலவர்கள் அன்றாடம் தங்களது கவிதைகளில் ஒரு நகரத்தின் அழகை எடுத்துச் சொல்ல இந்திரனின் அமராவதிப் பட்டணத்தை உவமையாகக் கூறுவது வழக்கம். ஆனால், நான் சொல்கிறேன் இந்த இலங்கை நகரத்தின் அழகைக் காட்டிலும், அமராவதிப் பட்டணத்தின் அழகு ஒன்றும் பெரியதல்ல. இந்த இலங்கை நகரத்தின் அழகை நல்ல ஓவியனாலும் கூட சித்திரத்தில் தீட்ட முடியுமோ? இங்கு இருக்கும் இரத்தினத் தூண்களைப் பார். அதன் முன்னாள் சூரியனின் ஒளி கூட நிற்கமுடியாது. அதனால் தான் கூசிப் போய் சூரியன் கூட அவ்வப் போது இலங்கை நகரத்தை விட்டு விலகிச் செல்கிறான் போல. அது மட்டும் அல்ல, இந்தக் கண்களைப் பறிக்கும் அளவுக்கு ஒளிவீசும் நவரத்தினத் தூண்களையும் , மாளிகையையும் பார்க்கும் போது வாயுகுமாரன் இங்கே வைத்த தீ இன்னும் எரிகிறது என்று சொல்வது போல் தோன்றுகிறது. இதனை நீயும் காண்பாயாக! இந்த மரகத மாளிகைகளின் அழகிய ஒளியை வான் செல்லும் மேகங்களும் வாங்கிப் பிரதிபளிப்பதைப் பார்.
மேலும், இந்தக் காட்சியைப் பார்! மாளிகைகளின் உச்சியில் நாட்டப்பட்ட இரத்தினக் கம்பங்களில் கட்டியுள்ள பட்டுக் கொடிச்சீலைகள் காற்றால் அசைபவை, மேகமாகிய மாசு நீங்க வானத்தை துடைப்பது போலவும்! இதனையும் பார்! நூல் பிடித்தது போல் ஒரே நேராகவும், பொன்னால் சித்திரத் தொழில் செய்யப்பட்டதும், வரிசையாக இருப்பதும், மணிகள் இளைத்து அழகுடன் விளங்குவதுமான அரக்கர்களின் மாளிகைகள் சுற்றிலும் இருக்கின்ற மணிகள் போலாக, இராவணன் மாளிகை நடுநாயகமாக கடல் அரசனது இரத்தினவாரத்தைப் போலத் தோன்றுவதைப் பார்!" என்று, இலங்கையின் அழகைச் சுட்டிக் காட்டித் தெரிவித்தார்.
இராமபிரான் அப்படிச் சொல்லி முடித்ததும், இலங்கையின் அழகைக் கண்ட அதிசயித்தாள் அவர் வியப்புற்று மேலும் பேச முடியாது நின்றார். அதே சமயம் இராவணன் வானர சேனையின் மிகுதியைக் காணும் பொருட்டு, வான் முட்ட எழுந்துள்ள செம்பொன் கோபுரத்தின் மீது ஏறி நின்றான்!