இராவணன் தேர் ஏறு படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
இராவணன் தேர் ஏறு படலம்
(இராவணன் இராமனோடு போர் புரியத் தேர்மீது ஏறியதைக் கூறும் பகுதி ஆகும். அதனாலேயே இராவணன் தேர் ஏறு படலம் எனப் படுகிறது)
அத்தாணி மண்டபத்திற்குச் சென்ற இராவணன், மகோதரனை வரவழைத்து அவனிடம்," எஞ்சிய சேனைகளைத் திரண்டு போருக்கு வருமாறு முரசு அறையச் செய்வாய்!" என்று கட்டளை பிறப்பித்தான்.
போர் முரசு கேட்டவுடனே, இது காரும் போருக்குச் செல்லாமல் இலங்கையிலே தங்கி இருந்த ஆயிரத்து நானூறு கோடி அரக்கர் கூட்டம் சேனையாய்த் திரண்டது. அந்தச் சேனைக்கு இராவணன் நம்பிக்கை அளித்து அவர்களை போர்களத்துக்கு வருமாறு வற்புறுத்தினான். அதன் படி, முதலில் வர மறுத்த அரக்கர் சேனை இராவணன் மீது கொண்ட பயத்தினால் பிறகு போர்க்களம் புகுவதற்கு சம்மதித்தது. அவ்வாறு, இராவணன் திரட்டியப் பெரும் படையில் யானைகளும், குதிரைகளும் கணக்கில் அடங்காது.
பிறகு ஒருவழியாக அரக்கர் சேனையை எப்படியோ திரட்டிய இராவணன், கடைசி ஒருமுறையாக ஈசனை வழிபட்டான். பிறகு போர்கோலம் புகுந்தான், வாள், வில், மழு என அனைத்து ஆயுதங்களையும் உடன் எடுத்துக் கொண்டான். அக்கணம் இராவணனின் மனைவியான மண்டோதரி வருத்தம் தோய்ந்த முகத்துடன் இராவணனுக்கு ஆரத்தி எடுத்து வழி அனுப்பிவைத்தாள். அவ்வாறு மண்டோதரி இராவணனுக்கு ஆரத்தி எடுக்கும் பொழுது அசுப சகுனங்கள் பல கண்டாள். அதனால் மனம் கலங்கி கண்களில் இருந்து கண்ணீர் தாரை, தாரையாக வெளியேற இராவணனை வழி அனுப்பிவைத்தாள்.
அக்கணம் போர்கோலம் பூண்ட இராவணன், மூவுலகத்தவரும் ஏறினாலும் உச்சிபூவின் அளவே சுமையாகத் தோன்றும் பெருமை வாய்ந்த தனது தேரை உடனே வரவழைத்தான். இராவணன் வர வழைத்த அந்தத் தேரிலே ஆயிரம் குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன. அவற்றில் சில, முன்னாளில் பாற்கடலைக் கடையும் போது கிடைத்தவை. அத்தேர் எல்லா இடங்களிலும் செல்லும் தன்மை கொண்டது. எண்ணற்ற நவ ரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்டது. அதில், அனைத்து தேவர்களாலும் அளிக்கப் பட்ட அனைத்து விதமான ஆயுதங்களும் காணப்பட்டன.
அப்படிப்பட்ட அந்தத் தேரை முறைப்படி இராவணன் பூஜை செய்து, பிறகு அளவிடுதற்க்கும் நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாத அருமையான பெரும் செல்வத்தை மற்றவர்களுக்குத் தானம் வழங்கினான். கடைசியாக அத்தேரை வணங்கி விட்டு அதன் மேல் ஏறினான். லக்ஷ்மணன் உயிர் பெற்றதால் மனந்தேறி நின்ற இந்திரன் முதலான தேவர்கள் அதுகண்டு, அறிவு சோர்ந்து மயங்கித் திகைத்தார்கள். ஐம்புலன்களையும் அடக்கி நிற்கும் முனிவர்களும் வேறே தாம் செய்வதற்கு ஒரு காரியமும் இல்லாமையால், உலகமெல்லாம் வருந்தத் தாம் அஞ்சினார்கள்.
தேரில் ஏறி நின்ற இராவணன்," நான் போர் செய்யத் தொடங்குவதனால், ஜானகி வயிற்றைக் கைகளினால் பிசைந்து கொண்டு நெடிய துன்பத்தில் மூழ்க வேண்டும். இல்லையேல், மயனுடைய மகளாகிய மண்டோதரி அப்படிப்பட்ட நிலைக்கு ஆளாக வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை இன்றைக்கு நான் செய்வேன்!" என்று சபதமிட்டான்.
பின்பு அவ்வாறு சபதமிட்ட இராவணன் சூரியன் நடுநடுங்கும் படியும், பூமி இடம் பெயரும் படியும் தனது தோள்களை தட்டிப் பேர் ஆரவராம் செய்தான். பின்பு தனது கொடிய வில்லை நாணேற்றி பெரும் ஒலியை ஏற்படும் படிச் செய்தான். அதனால் தெய்வ மகளிர் அச்சம் கொண்டு அலறினார்கள். தங்களது மங்கள நாணை தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள்.
இராவணன் தனது தேரை புறப்படச் செய்தான். சிறிது நேரத்திலேயே வானர வீரர்கள் நிலை கெட்டு ஓடும் படியாக போர்களத்தை அடைந்தான். அக்கணம், இயற்கையும் அஞ்சும் படியாக கடல்கள் அஞ்சி சலித்தது, சூரியன் தன்னை காரிருள் கொண்ட மேகத்திற்குள் மறைத்துக் கொண்டான், அப்போது இயற்கைக்கு மாறான இடி ஓசை எழுந்தது. வானில் நின்ற தேவர்களும் சற்றே கலக்கம் அடைந்தார்கள். இந்தக் காட்சிகளை எல்லாம் சுக்ரீவன் முதலான அனைத்து வானர வீரர்களும் கண்டார்கள். அதனால், ஏற்கனவே அவர்கள் மனதிற்குள் புகுந்து இருந்த பயம் இன்னும் அதிகமானது.
உடனே விபீஷணன் விரைந்து சென்று ஸ்ரீ இராமபிரானை வணங்கி," வெற்றியை எப்பொழுதும் தனதாக்கிக் கொள்பவரே! இராவணன் தனது சேனையோடு புறப்பட்டு போருக்கு வந்து விட்டான். அரக்கர் சேனையின் முன்னணி முந்தி வந்து விட்டது. நமது சேனை அதைப் பார்த்து நடுங்கி அச்சத்தில் தவிக்கிறது. அமரர்களும் அஞ்சி வானில் இருந்து கீழே விழுந்து, மூட்டையைப் பிரித்துக் கொட்டிய நெல்லிக் கனி போலச் சிதறினார்கள்!" என்று தெரிவித்தான்.