அநுமப் படலம்

bookmark

கிட்கிந்தா காண்டம்

சீதையைப் பிரிந்த இராம இலக்குவர்கள் தேடியலைந்தனர். வழியில் கிட்கிந்தை எனும் வானரங்கள் ஆளும் நாட்டைச் சென்று சேர்ந்தனர். அங்கே அனுமன், சுக்கிரீவன் ஆகியோரின் நட்பைப் பெற்றனர். பிறகு சுக்கிரீவனின் சகோதரனான வாலியைக் கொன்று கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பை சுக்கிரீவனுக்கு அளித்தனர். அதனால் இது கிட்கிந்தா காண்டம் எனப்படுகிறது. கிட்கிந்தா காண்டம் பதினேழு படலங்களைக் கொண்டுள்ளது.

அநுமப் படலம்

(அனுமன் இராமனைச் சந்தித்த வரலாற்றைக் கூறுவது அனுமப்படலமாகும். இராமலக்குவர் வருவதைக் கண்ட சுக்கிரீவன் அஞ்சி ஓடி ஒளிந்தான். அனுமன் அவனுக்குத் தேறுதல் வார்த்தைகள் கூறி, மாணவ வடிவம் கொண்டு, இராமலக்குவரை அணுகி மறைந்து நின்று, அவர்கள் நிலையை உய்த்துணர்ந்தான். 'இவர்களே தருமம்' என்று துணிந்ததும் அவர்களை அடைந்து சுக்கிரீவனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் உரைக்க, இலக்குவனும் தங்கள் நிலையை உரைத்தான். அனுமன் தன் பேருருவைக் காட்ட, இராமன் அனுமனைப்பற்றி இலக்குவனிடம் வியந்து பேசினான். சுக்கிரீவனை அழைத்துவர அனுமன் விடை பெற்றுச் சென்றான்.)
சீதையை தேடிச் சென்ற இராமலக்ஷ்மணர் ருசியமூக பருவதத்தை சவரியின் சொல்படி அடைந்தனர். உடனே அப்பருவதத்தின் மீது ஏற, அந்த மலையின் அடிவாரத்தை அடைந்தனர். அந்த சமயத்தில் சுக்கிரீவன் அவர்களைக் கண்டான். அவர்களது கைகளில் உள்ள வில்லைக் கண்ட சுக்கிரீவன், " இவர்கள் மர உரி தரித்து சாதுக்கள் போல இருந்தாலும், கைகளில் வில்லும்,அம்புராத் தூணியில் பாணங்களையும், கூடவே வாளையும் கொண்டு இருக்கிறார்களே! இவர்கள் என்னைப் பிடிக்க வந்த வாலியின் ஆட்களோ?" என்று மனதுக்குள் கூறி சந்தேகம் அடைந்தான். அந்த சந்தேகத்தின் காரணமாக பயம் அவனைப் பற்றியது. அலறினான். உடனே, தப்பிக்க வேண்டி வழக்கம் போல அந்த மலையின் குகைக்குள் வேகமாய் சென்று ஒளிந்து கொண்டான்.
இதே சமயம் வாலி,சுக்கிரீவன், அநுமன் இவர்களைப் பற்றி சிறிது அறிவோம் வாருங்கள்.
வாலி வாலில் வலிமையுள்ளவன். அவனது பிறப்பே சற்று வித்தியாசமானது தான். 'இங்கு வருபவர் யாவரும் பெண் வடிவம் அடைக' என்று சபிக்கப்பட்டு இருந்த இடத்திற்க்குச் சென்றான் ருக்ஷரஜஸ் என்னும் பெயர் கொண்ட வானரராஜன். உடனே அவன் அழகிய பெண் வடிவத்தை அடைந்தான். அப்போது அவனது அழகைக் கண்டு காமம் கொண்டான் இந்திரன். உடனே பெண்ணாக மாறிய ருக்ஷரஜஸ் உடன் இந்திரன் இணைய அப்போதே வாலி பிறந்தான். மற்றும் ஒரு புறம் அதே பெண் வடிவம் கொண்ட ருக்ஷரஜஸ் சூரியனைக் கண்டு காமுற்றான். அவனது அழகைக் கண்டு சூரியதேவனும் அவனுடன் இனைய சுக்கிரீவன் பிறந்தான். அதாவது வாலிக்கும்,சுக்கிரீவனுக்கும் தாய் ஒருவர் தான், ஆனால் தந்தை வேறு. இது அவர்களுக்கே வெகு காலம் தெரியாது. பிறகு ஒரு முறை அவர்கள் ஒற்றுமையைக் கண்டு கலகம் செய்ய நினைத்த நாரதர், அவர்களுக்கு அந்த உண்மையை எடுத்து உரைத்தார்.
மறுபுறம் அனுமனைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்,கேசரி என்ற வானர ராஜனும் அவனது மனைவி அஞ்சனையும் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். அவர்களது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவ பெருமான் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற அவர்கள் முன் தோன்றி," உங்களுக்கு பலசாலியான ஒரு புத்திரன் வெகு சீக்கிரத்தில் எனது ருத்திர அம்சமாகவே வானர ரூபம் கொண்டு பிறப்பான். அவன் அரக்கர்களை ஒழித்து , பூமியில் தர்மத்தை நிலை நிறுத்துவான்" என்று கூறி மறைந்தார். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர் அந்த வானரத் தம்பதியினர். காலம் கனிந்தது, சிவபெருமான் தனது ஆன்ம ரூபத்தின் ஒரு பகுதியை வாயுதேவனிடம் கொடுத்து " வாயு தேவா! இதனை அஞ்சனையின் கருப்பையில் சேர்த்து விடு" என்று கட்டளையிட்டார். வாயுதேவன் அந்த ஜோதியை ஒரு சிறு குழந்தையாகவே பாவித்து பத்திரமாக எடுத்துச் சென்று அஞ்சனையின் வயிற்றில் சேர்த்தார். அப்படி வாயு தேவரின் அருளால் தோன்றிய சிவனின் ருத்திராம்சம் தான் அனுமான்.வேறு வகையில் சொல்ல வேண்டும் என்றால் ஹரியாகிய இராமனுக்கு உதவ எண்ணி, ஹரன் எடுத்த அவதாரம் தான் இந்த அனுமான்.
இவ்வாறாக ஹனுமான் பிறப்பெடுத்து சூரியனிடம் கல்வி கற்றார். அப்போது, சூரிய தேவனிடம் குரு தக்ஷணை செலுத்த வேண்டிய நேரம் வந்த போது. சூரியன் குரு தட்சணையாக " ஹனுமான் எனது மகன் சுக்கிரீவனுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்பாயாக, அதுவே நீ எனக்குத் தரும் குரு தட்சணை" என்று கட்டளையிட்டார். அதன் படி சுக்கிரீவனுக்குப் பாதுகாப்பாக அனுமான் எப்போதும் அவன் உடன் இருந்தார்.
அன்றைய தினமும் அப்படித் தான், ருசியமூக பர்வதத்தில் இராமபிரானைக் கண்ட சுக்கிரீவன், முதலில் அவ்விஷயத்தை ஹனுமனிடம் ஓடிப் போய் சொன்னான். அவன் கூறிய செய்தியை கேட்டு அவன் உட்பட, உடன் இருந்த அணைத்து வானர வீரர்களும் கதிகலங்கினர். அச்சமயம்,ஹனுமான் சுக்கிரீவனையும் மற்ற வானரங்களையும் அறுதல் படுத்தினார். பிறகு, தானே உண்மையை அறிய குகைக்கு வெளியே வந்தார். இராம லக்ஷ்மணர்களைக் கண்டார். அந்தக் கணத்தில்," இவர்களைப் பார்த்தால் வாலியின் கட்டளையை ஏற்று வந்தவர்கள் போலத் தோன்றவில்லையே! ஏதோ ஒரு அறிய பொருளை தொலைத்து விட்டு, அது காணாத சோகத்தில் தளர்ந்து வருவது போலத் தோன்றுகிறதே. அப்படி என்ன பொருளைத் தான் இவர்கள் தொலைத்து இருப்பார்கள்?" என்று தனது ஞானத்தால் உள்ளதை உள்ளபடி அறிந்து கொண்டார் ஹனுமான்.
பிறகு மீண்டும் உண்மையை முழுவதுமாக கண்டறிய தானே சுக்கிரீவனுக்கு ஒற்றனாய் தனது இயற்கை வடிவத்தை விட்டு, பிரமசாரி வடிவுடன் இராம லக்ஷ்மணரை நெருங்கினார், அவர்கள் அருகில் செல்ல, செல்ல ஹனுமார் மனதில்," இவ்வளவு தேஜஸான ஒரு முகத்தை நான் இதுவரையில் யாரிடமும் கண்டதில்லையே. ஒரு வேளை இவர்கள் சாக்ஷாத் அந்த மும்மூர்த்திகளாக இருப்பார்களோ? இல்லையே... மும்மூர்த்திகள் என்று பார்த்தால், அவர்கள் மூன்று பேர் அல்லவா ? இவர்கள் வருவது இரண்டு பேர் தானே? கம்பீரத்தில் இவ்விருவரும் அந்த இந்திரனையே வீழ்த்தும் படி இருப்பதால். இவர்களில் ஒருவரை கூட இந்திரன் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் துணிவும் பெரிய வாயும் கொண்ட காட்டு யானைகள் கூட இவர்கள் அருகில் தனது கன்றைக் கண்டது போல அன்புடன் நிற்கிறதே. புலிகளும் தங்கள் கொடுமை குறைய, சாந்தமாய் இவர்கள் பின்னே தொடர்ந்து ஆசையுடன் வருகின்றனவே!. மேலும்,இவர்களிடத்திலே எந்த ஒரு வன விலங்குகளும் கோபம் கொள்ளவில்லையே! மயில் போன்ற பறவைகள் கூட இவர்கள் மேல் படும் வெய்யிலை பொறுக்க முடியாமல் தோகையை விரித்து நிழல் தருகின்றனவே! இவர்களது பாதம் பட்டவுடன் சுடுகின்ற பாறைகள் கூட மலர் போல குளிர்ச்சி அடைந்து மென்மையானதே! இக்காரணத்தால் ஒரு வேளை இவர்கள் தரும தேவர்களாக இருப்பார்களோ? இல்லை, இவர்களுள் ஒருவர் அந்த மகா விஷ்ணுவோ? இவர்கள் மீது எனது உள்ளத்தில் ஒரு வித அன்பு பெருக்கெடுத்து ஓடுகிறதே! இவர்கள் மீது எனக்கு ஏற்பட்ட அன்பின் காரணத்தால் எனது எலும்பும் கரைகின்றதே. எனது மனதில் தோன்றும் அந்த எல்லை இல்லாத அன்புக்குக் காரணம் தான் என்ன? நான் அதனை அறிய முடியாதவனாக இருக்கிறேனே!" " என்றெல்லாம் எண்ணிக் கொண்டார்.
நல்வழியில் எப்போதுமே தனது மனதைச் செலுத்துகின்ற அனுமன் இவ்வாறெல்லாம் எண்ணி முடித்தவன், கடைசியாக அவர்கள் காணும் படி, அவர்களின் எதிரிலே போய் நின்றான். அவர்களைப் பக்திப் பரவசத்துடன் நோக்கி," வர வேண்டும்!...வர வேண்டும்!...உங்கள் வரவு துன்பம் தராத நல்வரவாகட்டும்!" என்று வரவேற்றான்.
தங்களை வரவேற்ற அனுமனைக் கண்டார்கள் இராமலக்ஷ்மணர்கள். கருணா மூர்த்தியான இராமபிரான் உடனே அவனைப் பார்த்து," நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார்.
பிறகு சத்தியத்தையே பேசக்கூடிய அனுமான்," நான் கேசரி மற்றும் அஞ்சனையின் மகன் அனுமான் என்னும் நாமம் கொண்டவன், சூரிய தேவனின் மகன் சுக்கிரீவனின் நண்பன் நான். தனது அண்ணன், வாலியின் மீது கொண்ட பயத்தால், பாதுகாப்புத் தேடி சுக்கிரீவன் இந்த ருசியமூக பர்வதத்தில் ஒளிந்து இருக்கிறான். அவனுக்கு நானும் இன்னும் சில வானர வீரர்களும் துணையாக நின்று வாலியிடம் இருந்து அவனைக் காப்பாற்றி வருகிறோம் அந்த சுக்கிரீவன் தங்களது தோற்றம் கண்டு அச்சம் அடைந்ததால், உங்களைப் பற்றிய உண்மை நிலையை அறிய நான் இங்கு வந்தேன்! தயை செய்து கூறி அருளவும் தாங்கள் இருவரும் யார்? என்ன நோக்கத்துக்காக இங்கு வந்தீர்கள்?" என்றார்.
ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு அவன் மீது நம்பிக்கை கொண்ட இராமபிரான். கண்களில் கருணை பிறக்க அனுமனைப் பார்த்து," அனுமனே! சொல்லின் செல்வனே! நீ கூறிய சுக்கிரீவன் தற்பொழுது எங்கு இருக்கிறான்? அவனைப் பார்க்கவே நாங்கள் இங்கு வந்தோம். வழியில் உன்னைக் கண்டோம். உன்னால் யாவும் அறிந்தோம். சன்மார்கத்தில் செல்கின்ற உள்ளம் கொண்ட சுக்கிரீவனை இப்போது எங்களுக்குக் காண்பிப்பாயாக!" என்றார்.
அதற்கு ஹனுமான்," மதிப்பிர்க்குரியவரே! தங்களது முகத்தில் நான் காணும் தெய்வீக ஒளியை இதற்கு முன் எவரிடத்திலும் கண்டதில்லை. நீங்கள் சாதாரண புருஷர் இல்லை என்பதை உங்களது முகம் எனக்குக் காண்பிக்கிறது. இருந்தாலும், பெரியீர்! தங்களைப் பற்றி எங்கள் கூட்டத்துக்குத் தலைவனான சுக்கிரீவனுக்கு என்னவென்று சொல்லுவேன்? தாங்கள் சொல்லுங்கள்!" என்று கூறி விட்டு அவர்களைப் பார்த்தான்.
ஹனுமான் சொன்னதைக் கேட்ட இராமபிரான் லக்ஷ்மணனைப் சூசகமாக பார்க்க, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்ட லக்ஷ்மணன் ஹனுமானிடம்," சொல்லின் செல்வரே! சூரிய குலத்திலே தோன்றி புகழுடம் வாழ்ந்தவர் தசரத சக்கரவர்த்தி. அவர் சம்பரன் போன்ற கொடிய அரக்கர்களைக் கொன்ற மாவீரர். அவர் வைவஸ்வத மனு, மாந்தாதா, சிபி, ககுஸ்தன், சகரன், பகீரதன் ஆகியோர் பரம்பரையில் வந்தவர். அவருக்கு இணையானவர்கள் இது வரையில் இந்த உலகத்தில் எவரும் இல்லை. அயோத்தியை ஆண்டவர்.
அப்படிப்பட்ட தசரதச் சக்கரவர்த்தியின் முதல் மைந்தர் தான் எனது அண்ணன் ஸ்ரீ ராமர், தனக்கே உரிய ராஜ்யத்தை தனது சிற்றன்னையின் சதியால், தனது தம்பியான பரதனுக்கு மன மகிழ்ச்சியுடன் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, லக்ஷ்மணனாகிய நான் பின் தொடர மனைவி சீதையுடன் கானகம் வந்தார். அவ்வாறு வந்த இடத்தில் எனது தாய் போன்ற சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து சென்ற இராவணனின் சதியால், நாங்கள் இப்போது பிராட்டியை இழந்து அவர்களைத் தேடி அலைந்து வருகிறோம்" என்று சுருக்கமாகக் கூறி முடித்தான்.
இது கேட்ட ஹனுமான் ஸ்ரீ ராமனின் நிலையை மனதில் எண்ணி துக்கம் கொண்டவராக, ஸ்ரீ ராமரை அவரது திருவடி தொட்டு வணங்கினார். தமது பாதம் தொட்டு வணங்கிய அனுமனிடம்," தாங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள் ஹனுமானே! பிராமண பிரம்மச்சாரியான தாங்கள் என்னைப் போன்ற க்ஷத்திரியனை வணங்குதல் முறையா?" என்றார்.
அது கேட்ட ஹனுமான்," உலகத்தை ஆள்பவரே! தாங்கள் மனித ஜாதி. நானோ பிறப்பால் ஒரு வானரன். எனவே, அஃறினைப் பொருளில் சேர்ந்த நான் உயர்திணையாகிய தங்களை வணங்குதல் குற்றமாகாது!" என்றான்.
மேற்கண்ட வார்த்தைகளுடன் சமாதானம் அடைய விரும்பாத அனுமான், தனது உண்மையான ரூபத்தை விஸ்வரூபமாக இராமலக்ஷ்மணர்கள் முன் எடுத்துக் காட்டினார். ஸ்ரீ ராமர் அப்போது பேருருவம் எடுத்த அனுமனின் முகத்தைக் காணவில்லை. உலகை மூவடியால் அளந்த அவராலேயே மாருதியின் முகத்தைக் காண முடியவில்லை என்றால், ஸ்ரீ ஹனுமானின் மகிமையை நம்மால் தான் கூற முடியுமா?
தம் எதிரே அனுமனின் நிஜ ரூபத்தைக் கண்ட ஸ்ரீ ராமர், தம்பி லக்ஷ்மணனிடம்," ஆருயிர்த் தம்பியே! உலகத்தில் உள்ள அனைத்து நல்வினைகளும் ஒரு ரூபம் எடுத்தது போல நமது கண் முன்னே நிற்கும் இந்தச் சிறந்த அனுமனைப் பார்த்த நாம் இன்று முதல் நமது துன்பத்தில் இருந்து விடுபட்டோம். அது மட்டும் அல்ல, இப்படிப்பட்ட மாவீரன் சுக்கிரீவனின் கட்டளைக்குப் பணிகிறான் என்றாள், அந்த சுக்கிரீவன் எவ்வளவு பெருமையைப் பெற்று இருக்க வேண்டும்?" என்றார்.
இதனைக் கேட்ட ஹனுமான் முகம் மலர,மனம் குளிர இராமலக்ஷ்மணரைப் பார்த்து," ஐயன்மீர்! நான் சென்று சுக்கிரீவனை அழைத்து வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே சிறிது நேரம் இருங்கள்!" என்று சொல்லி, அவர்களின் அனுமதி பெற்று திரும்பி விரைந்து நடந்தான்.
அவ்வாறே ஹனுமான் சென்ற திசையை ஆவலுடன் பார்த்த படி இருந்தனர் இராமலக்ஷ்மணர்கள்.