அணி வகுப்புப் படலத்தின் பாடல்கள்

bookmark

யுத்தகாண்டம்

இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

அணி வகுப்புப் படலம்

 
இராவணன் மானத்தால் வருந்தி படுக்கையில் சயனித்திருத்தல்
 
 
மானத்தான் ஊன்றப்பட்ட மருமத்தான், வதனம் எல்லாம்
கூனல் தாமரையின் தோன்ற, வான் தொடும் கோயில் புக்கான்,
பானத்தான் அல்லன்; தெய்வப் பாடலான் அல்லன்; ஆடல்
தானத்தான் அல்லன்; மெல்லென் சயனத்தான்; உரையும் தாரான்.
 
 
வை எயிற்றாலும், நேரா மணி இழந்து இரங்கலாலும்,
பையுயிர்த்து அயரும் பேழ் வாய்ப் பல் தலைப் பரப்பினாலும்,
மெய்யனை, திரையின் வேலை மென் மலர்ப் பள்ளி ஆன
ஐயனை, பிரிந்து வைகும் அனந்தனே - அரக்கர் வேந்தன். 
 
 
சார்த்தூலன் என்ற ஒற்றனின் வரவை வாயில் காவலர் இராவணனுக்கு உரைத்தல்
 
 
தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில் காப்பான்,
"சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தெரித்தி நீ" என்று
ஏயவன் எய்தினான் என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான்.
 
 
இராவணனது வினாவும், சார்த்தூலன் மறுமொழியும்
 
 
அழை என, எய்தி, பாதம் வணங்கிய அறிஞன் தன்னை,
பிழை அற அறிந்த எல்லாம் உரைத்தி என்று அரக்கன் பேச,
முழை உறு சீயம் அன்னான் முகத்தினால் அகத்தை நோக்கி,
குழையுறு மெய்யன், பைய, வரன்முறை கூறலுற்றான்: 
 
 
வீரிய! விரைவின் எய்தி, பதினெழு வெள்ளத்தோடும்,
மாருதி, மேலை வாயில் உழிஞைமேல் வருவதானான்;
ஆரியன், அமைந்த வெள்ளம் அத்தனையோடும், வெற்றிச்
சூரியன் மகனைத் தன்னைப் பிரியலன் நிற்கச் சொன்னான். 
 
 
அன்றியும், பதினேழ் வெள்ளத்து அரியொடும் அரசன் மைந்தன்,
தென் திசை வாயில் செய்யும் செரு எலாம் செய்வதானான்;
ஒன்று பத்து ஆறு வெள்ளத்து அரியொடும் துணைவரோடும்
நின்றனன், நீலன் என்பான், குண திசை வாயில் நெற்றி. 
 
 
இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு, இரண்டு வெள்ளம்
வெம்பு வெஞ் சேனைக்கு எல்லாம் உணவு தந்து உழலவிட்டான்;
உம்பியை, வாயில்தோறும் நிலை தெரிந்து உணர்த்தச் சொன்னான்:
தம்பியும் தானும் நிற்பதாயினான்; சமைவு ஈது என்றான். 
 

 
இம் முறை அரக்கர் கோமான் அணி வகுத்து, இலங்கை மூதூர்,
மும் மதில் நின்ற தானை நிற்க, மூதமைச்சரோடும்
விம்முறு சேனை வெள்ளத் தலைவர்க்கு விடையும் நல்கி,
கம்மெனக் கமழும் வாச மலர் அணை கருகச் சேர்ந்தான்.