அங்கதன் தூதுப் படலம்

யுத்தகாண்டம்
இராம-இராவண யுத்தத்தை விளக்குவதனால் இது யுத்த காண்டம் என வழங்கப்பட்டது. பண்டைக்காலப் போர்முறைகள் மிகுதியாக இதனுள் விளக்கப்பட்டுள்ளன. தாக்கும் முறை, படைகளின் அணிவகுப்பு, போருக்குரிய அறங்கள் முதலியவை அவற்றுள் அடங்கும். யுத்தகாண்டம் நாற்பத்து இரண்டு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
அங்கதன் தூதுப் படலம்
(வானர சேனை, இலங்கை மாநகரை வளைத்துக் கொண்டு, இராமன் ஆணைக்குக் காத்து நிற்கிறது. அறத்தின் மூர்த்தியாகிய இராமபிரான் அப்போது நிகழ இருக்கும் அழிவுக்கு அஞ்சி, இராவணனிடம் இன்னும் ஒருமுறை தூதனுப்பி அவன் கருத்தறியத் துணிகிறான். விபீஷணன் முதலியோர் இசையவும், இலக்ஷ்மணன் எதிர்ப்பு தெரிவிக்கவும். தூதுவிடல் அரச குலத்தின் நீதி. அது மரபே என்று அங்கதனைத் தூதாக அனுப்பப் பெருமான் திருவுள்ளம் முடிவெடுக்கிறது. மகிழ்ந்த அங்கதன் இலங்கையுட் புகுந்து, இராவணன் சபை அடைந்து தன்னை அறிவிக்கின்றான். வாலியின் மகன் என அறிந்த இராவணன் தன்பால் அங்கதனை ஈர்க்க முயன்று தோற்கிறான். அவன், தேவியை விடுதற்கு இசையான்; ஆவியை விடுதற்கு ஆயத்தமாகி விட்டான் என்று தூதுரைத்து மீண்ட அங்கதன் இராமபிரானுக்கு அறிவிக்கின்றான். இப்படலத்தில் இராவணன், அங்கதன் உரையாடல் அழகு பட அமைந்துள்ளது)
ஸ்ரீ இராமரின் வானர சேனை இலங்கையில் முற்றுகையைத் துவக்கி இருந்தது. எலியைப் பாம்பு சுற்றுவது போல, வானரர்களின் பெரும் சேனை இலங்கையின் மதில்களை சூழ்ந்து இருந்தது. ஸ்ரீ இராமரோ, இலங்கேஸ்வரனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்.ஆனால், அவனோ வரவில்லை. அப்போது, தனக்காக உயிரையும் கொடுக்கக் காத்திருக்கும் லட்சக்கணக்கான வானர வீரர்களை ஸ்ரீ இராமர் நோக்கினார். அக்கணமே அவரது மனதினில்," எனக்கும், இராவணனுக்கும் நடக்க இருக்கும் இந்த யுத்தத்தில் இங்கு நிற்கும் ஒன்றும் அறியாத அப்பாவி வானர வீரர்கள் சாக வேண்டுமா? இது சுயநல எண்ணம் அல்லவா?" என்று சிந்தித்தார்.
உடனே விபீஷணனை அழைத்தார், விபீஷணனும் அவ்விடம் இராமரின் அழைப்பை ஏற்று வந்தான். அப்போது ஸ்ரீ இராமர் அவனிடம் ,"விபீஷணா! எனக்கும் இராவணனுக்கும் இடையில் யுத்தம் தொடங்கினால், அதில் எண்ணற்ற அப்பாவி வானரர்கள் பலி ஆகக் கூடும். அதற்கு நான் காரணம் ஆக விரும்பவில்லை. அதனால், கடைசியாக இப்போது ஒரு தூதுவனை இராவணனிடம் அனுப்பி,' இப்போதாவது சீதையை விட்டு விட்டால், நீ உயிர் பிழைக்கலாம். இல்லையேல், உனக்கு மரணம் சம்பவிக்கும்!' என்று சொல்லச் செய்வோம். அது கேட்டும் இராவணன் ஒப்பவில்லை என்றால், அவனுடன் போர் செய்வது ஒன்றே மார்க்கம். இதையே, நானும் ஆலோசித்து உள்ளேன். இப்படிச் செய்வதே அறமாகும். இதுவே அரச நீதியும் ஆகும். இதில் உனது கருத்து என்ன?" என்றார்.
இராமர் அவ்வாறு சொல்லவும், விபீஷணன் மகிழ்ச்சியுடன் அதற்கு ஒப்புதல் தெரிவித்து. ஸ்ரீ இராமரின் செயலைப் புகழ்ந்தான்.அதுபோல, அனுமான் மற்றும் சுக்கிரீவனும் ஸ்ரீ இராமரின் அந்த விருப்பத்தை ஏற்றனர். ஆனால், லக்ஷ்மணன் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இராமபிரானிடம் " அண்ணலே! பகைவரிடத்தில் இறங்குவது தவறான செயலாகும். நாம் இவ்வளவு தூரம் வந்த பிறகும், பகைவருடன் சமாதனம் பேச தூதுவர்களை அனுப்பினால், அது நம்மை அவர்கள் கோழைகள் என்று நினைக்க இடம் தரும். தவிர என்னைப் பொறுத்தவரையில் இராவணன் போன்றோரை எந்த நிலையிலும் நாம் மன்னித்து விடுதல் கூடாது. அவன் அதற்குத் தகுதி இல்லாதவன். அந்த துஷ்டன் தேவர்களுக்கு துன்பத்தை அளித்தவன்; பிராட்டியை சிறையில் அடைத்து துன்புறுத்தியவன், தேவேந்திரனின் செல்வத்தைக் கவர்ந்தவன், சொந்த அண்ணன் என்று கூட பார்க்காமல் குபேரனை அடித்துத் துரத்திய கொடியவன், எல்லாவற்றிற்கும் மேலாக, நமது தந்தையாகிய ஜடாயுவை கொன்று சிரித்தவன். ஒருவேளை, தாங்கள் அனுப்பிய தூதினால் இராவணன் பயந்து பிராட்டியை ஒப்படைக்க சம்மதித்தால், தாங்கள் அந்த அரக்கனை மன்னித்து விடுவீர்கள். அவ்வாறு நடந்துவிட்டால், பிறகு தாங்கள் தண்டகாரண்யத்தில் "அரக்கர்களை அழிப்பதாக" முனிவர்களுக்கு அளித்த வாக்கு என்னாகும்? அதுபோல விபீஷணனை இலங்கையின் அரசனாக்குவேன் என்று சொன்ன வாக்கு என்னாகும்?. எனவே இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது இராவணன் மீது போர் தொடுப்பதே இப்போதைக்கு நம்மிடம் உள்ள ஒரே சிறந்த யுக்தி" என்றான்.
லக்ஷ்மணன் கூறியதைக் கேட்டதும் மகாவீரரான ஸ்ரீ இராமர் புன்னகை செய்து, லக்ஷ்மணனிடம்," அருமைத் தம்பியே! இராவணன் செய்த கொடிய செயல்களையும், முன்பு அரக்கர்களை அழிப்பதாக நான் முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கையும், அதுபோல பின்னாளில் விபீஷணனுக்கு இலங்கை அரசைத் தருவேன், என்று சொன்ன அந்த வாக்கையும் நான் மறக்கவில்லை.ஒரு போதும் அதனை நான் மறக்கவும் மாட்டேன்.தவிர, எந்தக் கோணத்தில் பார்த்தாலும், கடைசியில் எப்படியும் நடக்கப் போவது நீ கூறிய அந்தக் கொடிய போர் தான். ஆயினும் அசுர குருவான சுக்கிராச்சாரியாரும், தேவ குருவான பிரகஸ்பதியும் கையாண்டு சொன்ன இராஜ நீதி, இது தான். ஒரு சத்துருவுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து பிறகு, வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் போரை அறிவிக்க வேண்டும். அதன்படி , நாமும் அந்த வழியில் செல்வது தானே முறை! அதனை விட்டு, நாம் ஒன்றை பின்பற்றுவது நீதியோ?அதனால், நீ கோபத்தை விடு.மேலும், தம்பி யுத்தம் உனது ஆசைப் படி இறுதியில் நடப்பது நிச்சயம்" என்றார்.
பின்னர் ஸ்ரீ இராமர், அங்கு கூடி இருந்த சுக்கிரீவன், விபீஷணன், அனுமன் உட்பட அவையோர்கள் அனைவரையும் பார்த்து,"இந்த முறை இராவணனிடம் நாம் அவசியம் ஒரு தூதுவனை அனுப்ப வேண்டும். ஆனால், அது அனுமானாக இருத்தல் கூடாது. காரணம், இந்த முறையும் நாம் அனுமனையே அனுப்பினால், நமது படையில் அவனைத் தவிர சிறந்த வீரர்கள் வேறு யாரும் இல்லை என்ற எண்ணத்தை இராவணன் வளர்த்துக் கொள்வான். அது நம் எல்லோரையும் இழிவு படுத்தி விடும். அதனால், இந்த முறை வீரர்களுள் சிறந்த அங்கதனை நாம் தூது அனுப்புவோம்" என்றார்.
ஸ்ரீ இராமரின் கருத்தை எல்லோரும் " நல்லது. அவ்வாறே செய்வோம்" என்று கூறி அங்கீகரித்தார்கள்.
அனைவரது ஒப்புதல் கிடைத்ததும் இராமபிரான் அங்கதனை அழைத்து வரச் சொன்னார். அதன் படியே அங்கதனும் வந்தான். அப்போது அங்கதனிடம்," நல்ல குணங்களைத் தன்னகத்தே கொண்ட மாவீரனே! நீ பகைவரிடத்திலே போய், நான் சொல்வதை அவர்கள் நன்கு உணரும்படிச் சொல்லிவிட்டுத் திரும்பி வருவாயாக!" என்றார்.
அது கேட்ட அங்கதன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அதனால், அவனது மலை போன்ற தோள்கள் பருத்துப் பூரித்தன. அதே மகிழ்ச்சி கொண்ட முகத்துடன் இராமபிரானைப் பார்த்து," ஐயனே! நான் சென்று அந்த இராவணனுக்குச் சொல்ல வேண்டிய செய்தி யாது?" என்று கேட்டான்.
"சீதையை விட்டு விட்டு உனது உயிரைப் பெற்றுப் போவது, உனக்கு நன்மை தருவதா? இல்லை, உனது பத்துத் தலைகளும் இராமபிரான் தமது அம்புகளினால் துண்டம், துண்டமாக அறுத்துத் தள்ளுமாறு போர்க் களத்தைச் சேர்வது, உனக்கு நன்மையைத் தருவதா? இந்த இரண்டில் உனக்கு ஏற்ற ஒன்றையே துணிந்து சொல்வாயாக!" என்று இராவணனிடம் கூறுவாயாக. மேலும், அவனிடம் நீ," சீதையை விடுவதற்கு விருப்பம் இல்லாவிட்டால், நலமாக உனது ஊருக்குள்ளேயே நீ பதுங்கி வசித்து ஒதுங்கி வாழவும் வேண்டி இருக்கும். அது அரச தர்மத்திற்கு ஏற்ற வழி இல்லை. சுத்த வீரர்களுக்கு அது தகுதியும் இல்லை. ஆண்மையும் ஆகாது. வீர குணத்துக்குத் தக்க பெருமையும் ஆகாது! எமது மார்பிலே உனது அம்புகள் பதியுமாறு வில்லேந்தி அம்பு தொடுப்பதற்கு உனக்கு வலிமை இருக்குமானால், இப்படிப் பதுங்கி வாழாமல் உனது நகருக்கு வெளியே வந்து எமது எதிரே நின்று, எம்மோடு போர் செய்வாய்!" என்றும் அவனுக்குத் தெரிவிப்பாய்!' என்று இராமர் அங்கதனிடம் இராவணனுக்குத் தூதாகச் சொல்ல வேண்டிய வார்த்தைகளைக் கூறினார்.
உடனே அங்கதன் ஸ்ரீ இராமரைப் பார்த்து," பெருமானே! தாங்கள் சொன்னபடியே நான் அந்த துஷ்ட இராவணனுக்கு செய்தி பகிர்கிறேன். நல் புத்தியும் உரைக்கிறேன் . மேலும், அனுமானுக்கு அடுத்து எதிரிகளின் சபைக்கு போய், திரும்பும் அளவுக்குத் திறம் மிக்க வீரன் நானே என்று என்னை அழைத்து இந்தப் பொன்னான பணியை எமக்கு அளித்தீர்கள் அல்லவா? அதற்கு உங்களுக்குக் கோடானு, கோடி நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறி ஸ்ரீ இராமரிடம் தாழ் வணங்கி ஆசியும், விடையும் ஒருங்கே பெற்று சிங்கம் ஒன்று வீறு கொண்டு புறப்பட்டது போல இராவணனின் மாளிகையை அடைந்தான்.
அச்சமயம், இராவணன் சபையில் தனது மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தான். அவ்விடம் வந்து சேர்ந்தான் அங்கதன். அங்கு, அங்கதனைக் கண்ட அரக்க வீரர்கள் சிலர், அவனை அனுமன் என்று நினைத்து ," ஒதுங்குங்கள், ஒதுங்குங்கள் முன்பு இலங்கையை எரித்து, எண்ணற்ற அரக்கர்களை மரணக் குழியில் தள்ளிய அந்த வீரக் குரங்கு வந்து விட்டது" என்று பயந்து அலறிக் கொண்டே நகர்ந்தனர். அரக்கர்களின், அந்த பயம் கண்டு இராவணனே சற்று நேரம் அவமானத்தால் தலை குனிந்தான்.
அப்போது இராவணனின் வலிமை மிக்க உடல் அமைப்பைக் கண்ட அங்கதன்," நாமும், நமது வானர சேனையும், கடலில் சேது அமைத்து இலங்கைக்கு வந்து சேர்ந்து பாசறை அமைத்தது எல்லாம் ஒரு பெரிய செயலே அல்ல. ஆனால், இவன் போன்ற ஒரு அரக்கனுடன் சரி சமமாக போர் செய்து அதில் வீர மரணம் அடைந்தாலும், அது மிகப் பெரிய விஷயம் தான். இவனது தோள் வலிமைகளைப் பார்க்கும் போது, அதனை உடைத்து எறியும் வல்லமை ஸ்ரீ இராமரின் பாணங்களுக்குத் தான் உண்டு என்பது நன்றாகத் தெரிகிறது " எனத் தனக்குள் கூறிக் கொண்டான். பிறகு மீண்டும் அங்கதன்," இப்படிப் பட்ட பலம் மிக்க அரக்கனுடன் சண்டையிட்டு மகுடத்தில் இருந்து மணிகளைப் பெயர்த்து எடுத்த வந்து ஸ்ரீ இராமரிடம் கொடுத்த எனது சிறிய தந்தையான சுக்கிரீவர் பெரும் பலசாலி தான்" என்று தனக்குள் மீண்டும் சொல்லிக் கொண்டான்.
பிறகு அங்கதன் சிங்கம் போல அரியாசனத்தில் அமர்ந்து இருந்த இரவாணனை நெருங்கி வந்து நின்றான். தன்னை நெருங்கி வந்து நின்ற அங்கதனைக் கண்ட இராவணனின் கண்களில் இருந்து தீப் பொறி பறந்தது.அந்தக் கோபத்துடனேயே அங்கதனை நோக்கி," அற்பக் குரங்கே! யாரடா நீ? இங்கு வந்த காரணம் தான் என்ன? ஒருவேளை சாவதற்குத் தான் இங்கு வந்து இருக்கின்றாயோ ?" என்று அதட்டினான்.
வாலியின் மைந்தன், இராவணனது பேச்சைக் கேட்டு தனது ஒளியுள்ள பற்கள் வெளியே தெரியும் படியாகச் சிரித்தான். பின்பு இராவணனைப் பார்த்து," பஞ்ச பூதங்களுக்கு நாயகரும், நீரினால் சூழப்பட்ட இந்த பூமிக்கு நாயகரும், இந்தப் பூமியில் தோன்றி இருக்கும் சீதா பிராட்டியின் நாயகரும், உலகத்தில் வெவ்வேறாக வழங்குகின்ற தெய்வங்களுக்கெல்லாம் நாயகரும், நீ ஓதுகின்ற வேதத்தின் நாயருமாக நிற்கின்ற இராமபிரான் உன்னிடத்தில் அனுப்பிய தூதுவன் நான்! அவர் உன்னிடம் சொல்லுமாறு கட்டளையிட்டு அனுப்பியுள்ள சொற்களைச் சொல்லும் பொருட்டு, நான் இங்கு வந்தேன்!" என்று, தான் வந்த காரணத்தை அங்கதன் கூறினான்.
அங்கதன் இவ்வாறு கூறியதைக் கேட்ட இராவணன் கேலியாகச் சிரித்தான். பிறகு அங்கதனைப் பார்த்து," உனது தலைவன் சிவபெருமானோ? இல்லை, திருமாலோ? அல்லது பிரமன் தானோ? இம்மூவரையும் அன்றி, குரங்குகளை எல்லாம் சேர்த்து ஒரு சேனையாக்கிக் கொண்டு குட்டை போல இருக்கின்ற கடலை அணைகட்டிக் கடந்து, அதனால் தன்னைப் பெரும் வீரனாக எண்ணிக் கொண்டான் போலும் அந்த இராமன்? அதனால்,' இப்போதாவது இராவணன் இரக்கங் கொள்வானாகில் அறிந்துவா!' என்று சொல்லி, உன்னை என்னிடத்தில் அனுப்பி வைத்தானோ? அப்படி அனுப்பிய அற்ப மனிதனாகிய அவனோ, உலக நாயகனாவான்?" என்று சொல்லி, மேலும் பரிகாசமாகச் சிரித்தான் இராவணன்.
மீண்டும் இராவணன் அங்கதனிடம்," அரியும் அரனுமே எனது நகரினுள் வருவதற்கு அஞ்சி உட்புகாதிருக்கின்றனர். தேவர்களின் தன்மையே அவ்வாறு இருக்கையில், ஒரு மனிதனுக்குத் தூதுவனாய் வந்து, அவன் சொன்ன செய்தியை மனத்தில் சிறிதும் அச்சமில்லாமல் என்னிடம் சொன்னாய். இராமனின் தூதனாக வந்த நீ யார்?" என்று வினவினான்.
அதற்கு அங்கதன், "முற்காலத்தில் இராவணன் என்று தன்னைச் சொல்லிக் கொண்ட ஒருவனை தனது வாலில் தொங்கும்படி அவனது அழகிய தோள்களுடனே சுற்றிக் கட்டி, யானைகள் உலவுகின்ற நான்கு திசைகளிலும் உள்ள மலைகளிலே எளிதாகப் பாய்ந்து திரிந்தவனும், தேவர்களுக்காக பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற்றவனும், இந்திரனது புதல்வனுமான வாலியின் குமாரனாவேன் நான்!" என்று தான் யார் என்பதை அங்கதன் இராவணனுக்குத் தெரிவித்தான்.
அது கேட்டு இராவணன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு இப்போது நல்லதொரு வாய்ப்பு கிடைத்து இருப்பதாக நினைத்தான். எப்படியாவது அங்கதனை தனது பேச்சு வல்லமையால் இராமனிடம் இருந்து பிரித்து விடத் துணிந்தான். அதன் படி அங்கதனை சுற்றித் தந்து வார்த்தை ஜாலம் என்னும் வலையைப் பின்னத் தொடங்கினான். அதன் முதல் படியாக இராவணன் அங்கதனை பார்த்து," குழந்தாய்! ... அங்கதா!... உனது தந்தையான வாலியுடன் அக்கினி சாட்சியாக நான் நட்பு கொண்டவன். அவன் ஒரு மாபெரும் வீரன் ஆயிற்றே! அவனது மகனாக இருந்து கொண்டு நீ போயும், போயும் ஒரு மனிதனுக்குத் தூதுவனாக இங்கு வரலாமா? மேலும், அந்த இராமன் யார் உனது தந்தையை வஞ்சகமாகக் கொன்ற கொலைகாரன் ஆயிற்றே! உனக்குக் கிடைக்க வேண்டிய அரச பதவியை சுக்கிரீவனுக்கு பறித்துக் கொடுத்தவன் ஆயிற்றே. அவனுக்கா நீ சேவகம் செய்கிறாய்? இது மிகவும் தவறான செயல் கண்ணே! நீ செய்த இந்தச் செயலால் உலகம் உன்னை பழிக்கக் கூடும். அதனால் இப்போதே உண்மையை உணர்ந்தவனாக, என்னுடன் சேர்ந்து விடு. நான் உனக்குக் கிஷ்கிந்தையின் ராஜ்யத்தை மீட்டுத் தந்து, உன்னை உலகத்தில் உள்ள அனைத்து வானரர்களுக்கும் அரசனாக்குகிறேன்" என்றான்.
இராவணன் அப்படிச் சொல்லவும் அங்கதன் மிகுந்த கோபம் கொண்டான் , அதே சமயத்தில் இராவணன் கொண்ட முட்டாள் தனமான எண்ணத்தை நினைத்து இலங்கையே அதிரும் படியாகச் சிரிக்கவும் செய்தான். பின்பு இராவணனைப் பார்த்து," இராவணா! இந்த இலங்கையில் உள்ள அனைவருக்கும் மரணமே விளையப் போகின்றது. இதனை முன்பே தமது நுண்ணறிவால் உணர்ந்து கொண்ட உமது தம்பி விபீஷணர், உன்னை விட்டுப் பிரிந்து எங்களிடம் வந்து இப்போது சேர்ந்து கொண்டார். கண்கூடாக இதனைக் கண்டும் நீ இப்படிப் பிதற்றுகிராயே ! தூதனாக வந்த நான் பகைவனாகிய உன் வார்த்தைக்கு வசப்பட்டு ஆசையினால் வேறுபட்டேனானால், இதனால் பெரியோர்கள் சொல்லும் பழியும், பாவமும் அல்லவா என்னை வந்து சேரும். மேலும், நீ கொடுத்துத் தான் நான் இராஜியத்தை ஆள வேண்டும் என்பதில்லை. எனது சிறிய தந்தை சுக்கிரீவரிடம் கேட்டாலே போதும், அடுத்த கணம் அங்கதா " இதோ எடுத்துக் கொள் மகனே" என்று கொடுத்து விடுவார் நீ சொன்ன அந்த அற்ப ராஜியத்தை.அதை விடுத்து, உன்னிடத்தில் இருந்து நான் எனது அந்த அரசைப் பெறுவேனோ? அப்படிப் பெற்றால், நாயிடம் இருந்து சிங்கம் அரசைப் பெற்றுக் கொள்வதற்குச் சமமாகும்!" என்று சொல்லிச் சிரித்தான்.
அக்கணத்தில் அங்கதனின் வார்த்தையைக் கேட்ட இராவணன் சீற்றத்துடன்," இவனைக் கொன்றே தீருவேன்" என்று சொல்லிக் கொண்டு சிம்மாசனம் விட்டு எழுந்தான். பிறகு "போயும், போயும் ஒரு குரங்கிடம் நமது வீரத்தைக் காட்டலாமா?" என்று நினைத்து சமாதானம் ஆனான். பிறகு அங்கதனிடம்," சாகப் போகின்ற மனிதர்களை நம்பி சாகத் துடிப்பவனே! நீ வந்த காரியத்தை சுருங்கச் சொல்!" என்று கேட்டான்.
உடனே அங்கதன்," நீ இராமபிரானிடத்தில் மிகவும் பிழை புரிந்து இருக்கிறாய். ஆயினும், அவர் இன்னும் உன்னிடத்தில் தமது கருணையை நீங்காது வைத்து இருக்கிறார். அப்பெருமான் இன்று என்னை அழைத்து, நீ போய்த் தன்னுடைய குலத்தை எல்லாம் அழியச் செய்யும் பாவியும், போர் புரிவதற்கு அச்சம் கொண்டு அரண்மனைக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டு இருக்கின்றவனுமான இராவணனை நெருங்கி," தேவியை விட்டு விடுக. அப்படிச் செய்ய விருப்பம் இல்லாவிட்டால், போர்க்களத்தில் வந்து எம்மோடு போர் செய்து தனது இனிய உயிரை விட்டு விடுக! என்று சொல்வாய்' என்று சொன்னார். மேலும் அவர்,' இராவணன் உண்மையில் வலிமை படைத்தவனாக இருப்பானானால் தனக்குப் பாட்டி முறையான தாடகையை நான் கொன்ற போது அதனைக் கேள்விப் பட்டதுமே என்னுடம் போருக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படி வரவில்லையே. அதன் பிறகு இராவணனின் மாமனான சுபாகுவைக் கொன்றேன் அப்போதும் அவன் அது கேள்விப் பட்டு போருக்கு வரவில்லையே. அதுவும் இருக்கட்டும், அவனது சகோதரியான சூர்ப்பணகையின் உறுப்புக்களை எனது தம்பியான லக்ஷ்மணன் அறுத்தான் , அது கேள்விப் பட்டு அப்போதும் கூட இராவணன் போருக்கு வரவில்லையே. பிறகு, நான் கரன், தூஷணன் போன்ற கொடிய அரக்கர்களையும் அவனுடன் வந்த இராவணனின் பெரும் அரக்கர் சேனையையும் அழித்தேன். அப்போதும் கூட இராவணன் என்னுடன் போருக்கு வரவில்லையே. பிறகு இராவணன் வஞ்சனையாக சீதையை கவர்ந்து சென்றான். எப்போது அவன் அப்படி என்னைப் பழி வாங்க சீதையை கொண்டு சென்றானோ, அப்போதே அவன் கோழைத்தனமும், கள்ளத்தனமும் ஒருங்கே பெற்றவன் என்று விளங்குகிறது அல்லவா? அவனுக்கு வீரம் இருந்து இருந்தால் என்னுடன் அல்லவா போர் புரிந்து இருக்கவேண்டும்? சரி,அவனே அதனை ஒரு வீரச் செயல் என்று எண்ணி அமர்ந்து இருந்தாலும். எனது தூதுவனாக அனுமான் வந்து சீதையை கண்டு விட்டு, இலங்கையை எரித்து விட்டுப் போனானே, அப்போது இந்த இராவணன் எங்கு போனான்? அப்போதும் கூட அவன் என் மீது போர் தொடுக்க வில்லையே. அன்று ஒரு நாள் சுக்கிரீவன், இராவணனின் மகுடத்தை பங்கம் செய்த போதும் கூட. அவன் என்னுடைய நண்பன் என்று என் மீது போர் தொடுத்து இருக்க வேண்டும் அல்லவா? அப்போதும் இராவணன் போர் செய்ய வெளிவரவில்லையே. இப்போதோ, வானரப் படை இலங்கையின் மதில்களை சூழ்ந்து போருக்குத் தயாராக உள்ளது. இப்போதும் கூட அந்த இராவணன் போருக்கு வரவில்லையே. ஆக மொத்தத்தில் இதுவரையில் அவன் என்னுடன் போருக்கு வராதாது அவனது கோழைத் தனத்தை அல்லாவா காட்டுகிறது? அவன் என்ன பெண்ணின் சாயல் கொண்டவனோ? இவ்வளவு பயம் உள்ளவன் எதற்கு சீதையை சிறை பிடித்துச் செல்ல வேண்டும்? ஆக மொத்தத்தில் கோபப் பட வேண்டிய காலத்தில் எல்லாம் கோபம் கொள்ளாதவன், இனியுமா என்னுடன் போருக்கு வரப் போகிறான்?" என்று என்னிடம் கூறி , உனது மனக் கருத்தை அறிந்து வருமாறு என்னிடம் கட்டளை பிறப்பித்து அனுப்பினார். நானும் அதன் படியே இங்கு வந்தேன். இராவணா! இராமபிரான் கூறிய இவ்விரண்டில் உனக்குத் தக்க செயல் ஒன்றை நன்கு ஆராய்ந்து துணிந்து சொல்வாய். நீ இறவாமல் நீடூழி காலம் வாழ வேண்டும் என்று நன்மையான செயலைப் பார்ப்பாயானால், பிராட்டியைப் பெருமானிடத்திலே கொண்டு வந்து விட்டு அப்பெருமானை வணங்கி வாழ்வு பெறுவாய். சுற்றத்தாருடன் இறந்து போவதற்கு நிச்சயித்தாயானால், அரண்மனையை விட்டு என்னுடனே வெளியே போருக்குப் புறப்பட்டு வா! வீணாகக் கோழையைப் போல் உள்ளேயே பதுங்கி இருக்காதே" என்று கூறினான்.
மறுபடியும் அவனை நோக்கி அங்கதன்," எல்லா உலகத்தவரையும் வென்று பெரும் வலிமை படைத்தவன் என்று சொல்லிக் கொண்டு திரிகின்ற நீ, பகைவர் உனது நகரத்தை அடைந்து தம்மோடு போருக்கு வரும்படி உன்னை அரை கூவி அழைக்கவும், போருக்குச் செல்லாமல் பதுங்கி மறைந்து இருக்கின்றாயே. உனக்கு இதை விட இழுக்கு உண்டாக்குவது வேறு உண்டோ?" என்றான்.
அவ்வாறு அங்கதன் கூறிய அந்த வார்த்தைகளைக் கேட்டு இராவணன் மிகுந்த கோபம் கொண்டான். அந்தக் கோபத்துடனேயே," இந்தத் தூதுவனைப் பிடியுங்கள்! பிடித்து விரைவாக நீண்ட பூமியில் மோதி அடியுங்கள்!" என்று சொல்லி, நான்கு பலசாலியான அரக்கர்களுக்குக் கட்டளை பிறப்பித்து அனுப்பினான்.
இராவணனது கட்டளைப்படி அந்த நான்கு அரக்கர்களும் அங்கதனைச் சூழ்ந்து பற்றிக் கொண்டார்கள். ஒரு கணம் தான் அவர்களின் பிடியில் சிக்குண்டு கிடந்தான் அங்கதன். மறுகணம் அவன் தன்னைப் பிடித்துக் கொண்ட அந்த நான்கு வீரர்களையும் தூக்கிக் கொண்டு உயரப் பாய்ந்து கோபுர வாயிலுக்குச் சென்று நின்றான். அங்கே அவர்களின் தலைகளை முறித்துப் போட்டு, அவர்களைக் கீழே எறிந்து தனது காலால் மிதித்துக் கூழாகத் தேய்த்தான். பின்பு , அங்குள்ள வீரர்களைப் பார்த்து அங்கதன்," இராமபாணம் உங்கள் மீது பாய்ந்து உயிரைப் பறிக்கும் முன்பு, நீங்கள் எல்லோரும் பாதுகாப்பை யடையும் படி அப்பால் ஓடிப் போய் விடுங்கள்!" என்று சொல்லி விட்டு, அங்கிருந்து இராமபிரானுள்ள இடத்துக்குச் சென்றான். அவ்வாறு, வான் வழியாகச் சென்ற அங்கதன், சந்திரன் வானில் இருந்து இறங்கியது என்று கண்டோர் கருதும் படி இறங்கி வந்து, இராமபிரானுடைய திருவடிகளில் வணங்கினான்.
தன்னை வணங்கி நின்ற அங்கதனைக் கண்டவுடன் ஸ்ரீ இராமர் அவனைத் தனது தாமரை போன்ற அழகிய கைகாளால் தூக்கி விட்டு," அன்பு கொண்ட அங்கதா! தூது சென்று கொண்டு வந்த செய்தியைக் கூறுவாயாக" என்று கேட்டார்.